தலித் மற்றும் பழங்குடி சமூக மாணவர்கள் உலக அளவில் தரம் வாய்ந்த சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பெரும் நிதியை ஒதுக்கி அம்பேத்கர் பெயரில் அற்புதமான திட்டம் ஒன்றை திராவிட மாடல் ஆட்சியில் மு.க. ஸ்டாலின் உருவாக்கி அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். இப்போது இந்த ஆட்சியில் இந்தத் திட்டம் சீர்குலைந்துக் கிடக்கிறது. இது அதிர்ச்சியும் வேதனையும் தரக்கூடிய செய்தியாக இருக்கிறது.

ஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நீதித்துறையாக பெயர் மாற்றம் செய்தார்களே தவிர, தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு எந்த நிதியையும் இந்தத் துறை வழங்கவில்லை. இதுகுறித்து இன்றைய ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு (நவம்பர் 13) விரிவான செய்தியை வெளியிட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 365 மாணவர்களில் 164 மாணவர்கள் மட்டுமே பிரிட்டன், ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் கனடா நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். இன்னும் 201 பேருக்கு சேர்க்கைக்காண நடைமுறைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்களுக்கு பல மாதங்களாக அவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. 165 பேரில் இதுவரை 65 மாணவர்களுக்கு மட்டுமே 19.53 கோடி ரூபாய் பணம் விடுவிக்கப்பட்டிருக்கிறது. இது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்சமூக ஆர்வலர் எ‌.ஞானபிரகாஷ் என்பவர் கேட்டுப் பெற்ற தகவல், ஏழை, எளிய குடும்பங்களிலிருந்து அரசின் உதவித்தொகையை நம்பி உயர்கல்விக் கனவுடன் படிக்க வந்த மாணவர்கள் தங்குவதற்கோ, சாப்பிடுவதற்கோ கட்டணம் செலுத்துவதற்கோ, பணம் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உதவித்தொகை பெறுவதற்கான மாணவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகும் சமூக நீதித்துறை அதிகாரிகள் அலட்சியமாகக் கிடப்பில் போட்டு பரிசீலனையில் இருக்கிறது என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மாணவர்களும் பெற்றோர்களும் குமுறுகிறார்கள் என்று அந்த நாளேடு செய்தி வெளியிட்டிருப்பதோடு பரிதவிக்கும் மாணவர்கள் பெற்றோர்களின் கண்ணீர்ப் பேட்டிகளைப் பதிவு செய்திருக்கிறது. இதுகுறித்து துறைச் செயலாளர் டாக்டர் என். சுப்பையன் அவர்களிடம் கேட்டபோது “அப்படியா, அதை நான் விசாரிக்கிறேன்’’ என்று கூறியதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளியிட்டு இருக்கிறது. எந்த நோக்கத்திற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதோ அது முறியடிக்கப்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மாணவர் பாரதிதாசன் என்பவர் தனது துயரத்தை வெளிப்படையாகப் பதிவிட்டு முதலில் மறுத்த அமைச்சர் வன்னியரசு பிறகு உதவித்தொகையை அனுப்பி வைத்த செய்தி வந்திருக்கிறது.

இதில் மற்றொரு முக்கிய செய்தியையும் குறிப்பிட வேண்டும். கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் அதிகாரிகளைச் சந்தித்து திட்டங்களைப் பற்றி கேட்டறிந்திருக்கிறார். அப்போது நடப்பு ஆண்டுக்கான பட்டியல் பிரிவினருக்கான ஒதுக்கப்பட்ட நிதி ரூ.5903,51 கோடி ரூபாயும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ரூ.349 கோடி ரூபாயும் உரிய பயனாளிகளுக்கு முழுமையாக வழங்கப்பட்டு விட்டது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். (இந்து ஆங்கில நாளேடு ஆக5).

ஏன் இப்படி உண்மைக்கு மாறான தவறான தகவலை முதலமைச்சரிடம் கூற வேண்டும்? தலித் மக்களின் அதிகாரத்திற்காக இந்தத் துறையை ஏற்றிருப்பதாகக் கூறும் அமைச்சர் வன்னியரசு அவர்களின் கவனத்திற்கு இவை எல்லாம் வந்திருக்கிறதா?

இனியாவது இதுகுறித்து பரிதவிக்கும் தலித் மற்றும் பழங்குடி மாணவர்களைக் காப்பாற்ற உரிய விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா?

- விடுதலை இராசேந்திரன்

[இந்தச் செய்தியை தமிழ்நாடு செய்தி விளம்பரத்துறை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் புகார்களை மறுக்கவில்லை]

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.