முதலமைச்சர் விஜய் கரூர் பேச்சு ஒரு முதலமைச்சர் தகுதிக்குரிய பேச்சாக இல்லை.மாறாக ஏதோ படை எடுத்து வந்து தமிழ்நாட்டைப் பிடித்து மன்னர் ஆகிவிட்டது போன்ற மனநிலையில் பேசுகிறார். குறிப்பாக கரூர் சம்பவம் குறித்து அவர் உருவாக்கி உள்ள சதி திரைக்கதை வஞ்சகமானது.
ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தார் என்ற ஒரு வரலாற்று நிகழ்வு உண்டு. தீ பற்றியதற்கு காரணம் மன்னர்தான் என்ற குற்றச்சாட்டு வந்த போது அதை மறைக்க கிறிஸ்தவர்கள் மீது பழி போட்டு அவர்களைக் கைது செய்து பழிவாங்கி தன் குற்றத்தை மறைக்கப் பார்த்தார் என்ற வரலாறு தான் இப்போது நினைவுக்கு வருகிறது.
கரூர் கூட்டத்தில் போலீசார் திட்டமிட்டு தன்னை உள்ளே அனுப்பியதாக அவர் பேசுவதும் அந்தக் கூட்டத்திற்கு ஏன் தடை போடவில்லை என்று கேட்பதும் எதிர்மறையான நேர்மையற்ற பழிச்சொற்கள். இவர்களே கேட்டு அனுமதி வாங்கிய கூட்டத்திற்கு காவல்துறை தடை போட வேண்டும் என்று இதுவரை எந்த ஒரு தலைவரும் பேசியதாக வரலாறு இல்லை. அப்படி தடை போட்டு இருந்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு.
"நெரிசல் மிகுந்த மேடை போடப்பட்டிருந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்,அந்தப் பகுதிக்கு முன்பாகவே பேசி விடுங்கள்" என்று காவல்துறை எச்சரித்ததை ஆதவ் அர்ஜுனாவும் அவர்களது சகாக்களும் கேட்க மறுத்து, "ஏற்பாடு செய்த இடத்தில் தான் பேசுவோம்" என்று அடம்பிடித்து பேச வைத்தார்கள். கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்து கொண்டிருக்கும்போதே விஜய் பேசிக் கொண்டே இருந்தார். இது காவல்துறை சதியா அல்லது விஜய் தெரிந்தே நடத்திய சதியா என்று கேட்டால் விஜய் அதற்கு என்ன பதிலைக் கூறுவார்?
விஜய் கட்சிக்கு எதிராக திமுக எந்த ஒரு எதிர் நிலையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.விஜய் கட்சி ஒரு வலிமையான எதிர்ப்பு சக்தி என்பதை திமுக கருதி பார்க்க வில்லை. அதன் காரணமாகவே தேர்தல் களத்தில் தவெக என்ற கட்சியையோ விஜய் பெயரையோ மு.க.ஸ்டாலின் எந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்திலும் உச்சரிக்கவே இல்லை. சொல்லப்போனால் விஜய் கட்சி கூடுதல் ஓட்டுகளை வாங்கினால் ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து அது திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்பதே திமுகவின் தேர்தல் வியூகமாக இருந்தது. இதனால் விஜய் கட்சிக்கு எந்த இடையூறும் அரசுத் தரப்பில் இருந்து செய்யப்படவில்லை என்பதே உண்மை. கரூர் சம்பவத்திற்குப் பிறகும் விஜய் மீது மு.க.ஸ்டாலின் நேரடி குற்றம் சாட்டவில்லை. புஸ்ஸி ஆனந்தையும் விஜயையும் கைது செய்வதற்கான நியாயமான காரணங்கள் இருந்தும் கைது செய்யவில்லை.
அதே கரூர் கூட்டத்தில் பேசிய விஜய் காவல்துறை சிறப்பான ஏற்பாடுகள் செய்ததைப் பாராட்டினார். இப்போது சதித்திட்டம் புரியாமல் பாராட்டியதாக நாடகமாடுகிறார். சதி நடந்தது என்பதற்கு என்ன ஆதாரங்களை ஒரு முதலமைச்சர் என்ற முறையில் அவர் திரட்டி வைத்திருக்கிறார்? அந்த ஆதாரங்களை ஏன் கரூர் கூட்டத்தில் பேசவில்லை?
உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அதற்குப் பின்னால் உண்மைகளை மறைக்க முடியும் என்ற கடந்த கால மன்னர் ஆட்சி திரைப்படக்கதைகளை இப்போது மக்கள் நம்ப மாட்டார்கள்.
- விடுதலை இராசேந்திரன்