தமிழ்நாட்டுக்கு உரிமையான உயர் சிறப்பு மருத்துவ மேல்படிப்புக்கான (super speciality) 152 இடங்களை ஒன்றிய ஆட்சியிடம் சரணடையச் செய்திருக்கிறது தவெக ஆட்சி; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த அதிர்ச்சியான தகவலை அம்பலப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஜோசப் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் திமுக ஆட்சி சரியான வாதங்களை எடுத்து வைத்தது. இந்த இடங்கள் அகில இந்திய கோட்டாவுக்கு சென்று விடாமல் தடுத்து நிறுத்தியது.

இதை அகில இந்திய கோட்டாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு தனி நபர் தொடர்ந்த வழக்கில் நடந்த விவாதத்தில் த.வெ.க ஆட்சி சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சரண்டர் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்; சரியான உறுதியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை. குறிப்பாக வழக்கு போட்டவர் சுட்டிக்காட்டிய என். எஸ் கார்த்திகேயன் எதிர் தமிழ்நாடு அரசு வழக்கு இந்த வழக்கோடு தொடர்பு இல்லாதது நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் இதை வலிமையாக மறுத்திருக்க வேண்டும் ஏன் மறுக்கவில்லை? அரசின் சார்பில் நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்களாக இருந்துவிடக் கூடாது; இது மிகவும் ஆபத்தானது!

மருத்துவமனையிலேயே பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இவை. இந்தியாவிலேயே சிறப்புமிக்க உயர் மருத்துவர்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு! இதற்காகவே பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டை நோக்கி சிகிச்சைக்கு வருகிறார்கள். இதேபோல்தான் மோடி ஆட்சி மருத்துவ மேல் பட்டப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மறுத்தபோது; தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டப் போராட்டம் நடத்தி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; அனைத்து மாநில பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் அந்த இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்டுத் தந்தார் என்பது வரலாறு!

புதிய ஆட்சி இப்படி ஒரு சமூக அநீதிக்கு துணை போய் இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. மீண்டும் பறிகொடுத்த இடங்களை மீட்டுத் தருவதற்கான முயற்சிகளில் தமிழ்நாடு அரசு இறங்க வேண்டும். தமிழ்நாட்டின் தலைசிறந்த மருத்துவக் கட்டமைப்பை ஒருபோதும் சீர்குலைத்து விடக்கூடாது!

- விடுதலை இராசேந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.