எந்த சட்டத்துக்குள்ளும் அடைக்க முடியாமல் அவன் திமிறிக் கொண்டேயிருந்தான். ஒரு பாடகனுக்கென வரையறுக்கப்பட்டிருந்த உன்னத வரைமுறைகள் எதையும் அநாவசியமாக உதறித் தள்ளினான். ஆனாலும் அவன் தொண்டைக்குள் புல்லாங்குழல்களால் கூடு கட்டி ஒரு குயில் நிரந்தரமாக வசித்துக் கொண்டேயிருந்தது.
தமிழக இடதுசாரி மேடைகளை அவன் தன் குரலால் வசியப்படுத்தியிருந்தான். ஒரு வன்முறையாளனைப் போல மேடையேறி, ஒரு குழந்தையைப் போல தன் குரலால் கொஞ்சுவான். முறைப்படி இசைச் கற்க அவன் எடுத்த முயற்சியை மூன்றே நாட்களில் அவனே நிராகரித்தான். யாரும் எளிதில் அணுகிவிட முடியாதபடியான ஒரு முரட்டு பாவனையை பிடிவாதமாய் கடைபிடித்து, அதில் தோற்றுக் கொண்டே இருந்த பச்சைக் குழந்தை சுகந்தன்.
பெருங்காற்றில் உதிர்ந்து போகும் சருகென அவனை நண்பர்கள் துயரத்தோடு எதிர்பார்த்த நிமிடங்களில், அதே மரத்தில் ப்ரவுன் கலரில் துளிர்க்கும் இலையாகி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துவான். மாறி மாறி நடந்த இந்த உயிர்ப்பின் விளையாட்டில் சென்ற வாரம் அவன் தோற்றுப் போனான்.
சினிமா பாடல்களுமின்றி, கிராமிய பாடல்களுமின்றி அவன் தனக்கென 500க்கும் மேற்பட்ட பாடல்களை சேகரித்து வைத்திருந்தான். பணாமன், நவகவி, மகாகவி பாரதி, ரமணன் ஆகியோரின் வரிகளோடு, குவார்ட்டர், குவார்ட்டராய் அவன் காலி செய்த பாட்டில்களும், உறிஞ்சின மீதியாய் சிதறிக் கிடந்த சிகரெட்டுகளுக்கும் மத்தியில் அவன் கரைத்த இரவுகளில் கண்டெடுத்த மெட்டுகளில்தான் நாம் இதுவரை பல இலக்கிய மேடைகளில் கரைந்து, அழுதது, சந்தோஷித்தது எல்லாமும்...
பாடுவதற்கு நல்ல மேடை, சக்தி வாய்ந்த ஒலிபெருக்கி, உடன் வாசிப்பதற்கு சரியான கலைஞர்கள் - இதெல்லாம் அவன் எதிர்பார்த்ததில்லை. சில நண்பர்கள் போதும்; மனதுக்குப் பிடித்த ஒரே ஸ்நேகிதி போதும்; பாடிக் கொண்டே இருப்பான். தன் பாடல்கள் அவர்கள் மீது நடத்தும் வன்முறையை உள்ளூர ரசித்தவனாக அடுத்த பாடலுக்குத் தாவுவான்.
எந்த பெரிய அங்கீகாரத்தையும் யாரிடமிருந்தும் எப்போதும் எதிர்பார்த்ததில்லை. பாடுவதன்றி மற்றதெல்லாம் தன் வேலையில்லை என்பது ஒரு தவம் மாதிரி அவனிடம் தங்கியிருந்தது. எத்தனைப் பெரிய பாராட்டுக்களையும், ஒரு அழுத்தமான கைக்குலுக்கலுக்கு மேல் அனுமதித்தவனில்லை. திரைப்பட மோகம், இசை ஆல்பங்களின் மேல் சாய்வு என்று எதிலும் தன் மனச் சாய்வுக்கு இடமளிக்காத கலைஞன். குரல் விற்றுப் பிழைக்கத் தெரியாத அந்த கலைஞனின் குரலைத் தான் போன வாரம் ஈவிரக்கமின்றி காலம் காவு வாங்கியது.