இசையுடன் துளியும் தொடர்பற்றவோர் கும்பல்
பாடல்களற்ற உலகில்
பலவந்தமாய் எனை எறிந்துவிட்டிருக்க
அவ்வுலகத்துச் சூன்யம்
முதலில் என் உதடுகளைக் கத்தரிக்கிறது
பிறகு தலையில் தீ வைத்து
எனதுடைகளை உரித்துரித்து அதில்போட்டு
அந்நெருப்பை மேலும் பெரிதாக்கிவிட்டு
சர்ப்பமொன்றை கழுத்தில் சுற்றிக்கொண்டு நின்றவனை
புணரச்சொல்லி வற்புறுத்தி
முதுகுத்தண்டின் முடிவில் ஆணிகளையடித்துத்
துன்புறுத்தியதில்
வலி தாளாது கண் விழிக்கிறேன்.
கனவுலகினுள் நுழையவே முடியாத
எனதுலகப்பாடல்கள் அனைத்தும்
விளையாட்டுப்பொருள் கிடைக்காத கோகுலைப்போல
விசும்பிக்கொண்டிருப்பது
படுக்கையறையின் மங்கியவொளியில்
சோகையாய்த் தெரிகிறது.