''வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகப் பயன் அளிக்காது. இந்துக்களுக்குக்கூட அது அதிக பலன் அளிக்கவில்லை. எது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவுமெனில், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உயர்தர கல்வி கற்பதுதான்'' -அம்பேத்கர்.

''.....கணிதம், கணிப்பொறி அறிவியல் போன்ற முதன்மை பாடப் பிரிவுகளில் தலித் மாணவர்கள் மிகமிக சொற்ப அளவில் பெயரளவிற்கே சேர்க்கப்படுகின்றனர். உயர் சாதி மாணவர்கள் ஒதுக்கித்தள்ளும் வரலாறு, விவசாயம் மற்றும் இன்னபிற கடைநிலை பாடப்பிரிவுகளையே தலித் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சூழ்ச்சிகரமாய் அளிக்கிறது. மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விகள் பயில்வதற்கு தலித் மாணவர்கள் தகுதி பெற்றவர்களாகிவிடக்கூடாது என்கிற மனுதர்ம மனோபாவத்துடன் பள்ளி நிர்வாகம் இத்தகைய சமூக அநீதியை சமீப காலங்களில் திட்டமிட்டு இழைத்து வருகிறது'' - ஆதிதிராவிடன் புரட்சிக் கழகம்.

இந்திய சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் தங்களின் சமூக நிலையினை முன்னேற்றிக் கொள்வதற்கு (மேற்கத்திய) கல்வியை கற்றுக் கொண்டு அதன் மூலம் வேலையையும் பொருளாதாரத்தையும் பெறுவதால் சமூக சமத்துவத்தை அடையமுடியும் என்கிற வாதம் இருந்து வருகிறது. இதனால் தலித்துகள் கல்வி கற்பதற்கென அரசாங்கம் கொள்கை அளவில் சில சலுகைகளைக் கொடுத்து வருகிறது. (தலித்தல்லாத மாணவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் தலித் மாணவர்களுக்கு மட்டும்தான் சலுகைகள் வழங்கப்படுவது போன்ற பொய்ப் பிரச்சாரம் இருந்து வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்). சலுகை குறித்த விவாதத்தில் அதனை எதிர்ப்பவர்களும் , ஆதரிப்பவர்களும் உண்டு.

கல்வி தலித் மற்றும் பழங்குடியினரை முன்னேற்றியிருக்கிற அதே சமயம் அது அவர்களின் சொந்த பந்தங்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது என்ற வாதமும் இருக்கிறது. ஆனால் இங்கு எழுப்பப்பட வேண்டிய அடிப்படையான கேள்வி: கல்வியை கற்றல் என்பது வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கே என்றால் வேலை வாய்ப்பினை தருகின்ற கல்வியை தலித்துகளால் கடந்த காலங்களில் எளிதாகப் பெறமுடிந்திருக்கிறதா? இன்று பெறமுடிகிறதா? வேலை வாய்ப்பிற்கான கல்வியை அடைவதிலிருந்து தலித்துகள் தொடர்ந்து விலக்கப்பட்டே வருகின்றனர், அதனைப் பெறுவதற்கு தலித்துகள் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலே நிலவி வருகிறது என்று கட்டுரை விவாதிக்கிறது. கல்வியிலிருந்து விலக்கப்படுவது குறித்த விவாதம் புற உலகில் இல்லாத காரணத்தினால் தலித்துகளின் போராட்டம் தனித்தே நடைபெறுகிறது. எனவே, கல்வியிலிருந்து தலித்துகள் சமூக விலக்கம் செய்யப்படுவது குறித்து விவாதிப்பது அவசியம். தமிழ்நாடு அரசு ஆவண காப்பகம், கள ஆய்வில் பெறப்பட்ட தரவுகள், என்னுடைய சுய அனுபவம் இவையே கட்டுரையில் ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி: பொருளாதார முன்னேற்றத்தின் ஆயுதம்

                காலனிய ஆட்சியாளர்களால் இந்தியாவில் நிறுவப்பட்ட மேற்கத்திய கல்வி முறை இந்து சமூக அமைப்பின் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான ஆயுதமாக இன்றும் இருந்து வருகிறது. கல்வி கற்றல் என்பது முதலில் கற்பவர்களை பண்டைய சாதி சார்ந்த குலத்தொழிலிலிருந்து விடுவிக்கிறது. பண்பாட்டு தளத்தில் அவர்களிடத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிற அதேசமயம் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவுகிறது. அது மட்டுமின்றி கல்வி கற்ற முன்னேறிய பிரிவினரே தலித் விடுதலையில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தலித் இயக்கத் தலைவர்கள் தலித் மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் தலித்துகள் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் உதவியை நாடினர். தலித்துகளுக்கு கல்வி கொடுப்பதே அவர்களை முன்னேற்றுவதற்கான முறை என்றே காலனிய ஆட்சியினர் உணர்ந்திருந்தனர், அவர்களுக்கு கல்வி கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

தியாசபிகல் சொசைட்டி, டிப்ரஸ்டு கிளாஸ் மிஷன், பிரம்ம சாமாஜ், சோசியல் சர்வீஸ் லீக் மற்றும் கிறிஸ்துவ மிஷனரி இயக்கங்கள் தலித்துகளுக்கு தனிப் பள்ளிகள் மூலம் கல்வி கொடுத்திருப்பதனை அறியமுடிகிறது. தலித்துகளும் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியிருப்பதனை சில புள்ளி விவரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடைசி கால் நூற்றாண்டில் சென்னை மாகாணத்தில் பொதுக் கல்வி நிலையங்களில் தலித் மாணவர்களின் எண்ணிக்கை 30,000-இருந்து 1,50,000-ஆக உயர்ந்திருக்கிறது. 1892ம் ஆண்டு தலித் மாணவிகளுக்கென இருந்த 11 பள்ளிகளின் எண்ணிக்கை பின்னர் 100-ஆக உயர்ந்திருப்பதே தலித்துகள் கல்வி கற்பதில் காட்டிய ஆர்வத்தை அறிந்து கொள்ள முடியும்.  

தலித்துகள் அன்று கல்வி கற்பதற்கு மூன்று வழிமுறைகள் இருந்தது: 1. அரசாங்கப் பள்ளி, 2. கிறிஸ்துவ மிஷினரி பள்ளி மற்றும் 3. சொந்தமாக பள்ளிக்கூடம் நிறுவுதல். கிறிஸ்துவ மிஷினரிகள் தலித்துகளுக்கென தனிப் பள்ளிக்கூடங்களை நடத்தியிருக்கின்றனர். சில சமயங்களில் கிறிஸ்துவ மிஷினரிகள் நடத்திய கல்வி நிலையிங்களில் தலித்துகள் சேர்வது கடினமாக இருந்திருக்கிறது. திருநெல்வேலியிலிருக்கும் ஜான்ஸ் கல்லூரியில் அது தொடங்கப்பட்ட ஆரம்ப காலங்களில் பள்ளர் மற்றும் பறையர் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து பயில்வதை நாடார் சாதியினர் எதிர்த்திருப்பதே இதற்கான உதாரணம். தலித்துகள் சொந்தமாக பள்ளிக்கூடம் நிறுவியிருப்பினும் இது அரிதாக நடைபெற்றிருக்கிறது. தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்களை விடுவிப்பதற்கென கிறிஸ்துவ மிஷினரிகள் நிறுவிய கல்வி நிறுவனங்களிலேயே இதுதான் நிலையென்றால் அரசாங்கம் நடத்திய ''பொது''க் கல்வி நிலைலயங்களில் முன்னதைவிடவும் கூடுதலான ஒடுக்குமுறையை சந்தித்தனர் தலித்துகள்.

கல்வி நிலையம் நிறுவுதல், அடிப்படைக் கட்டமைப்பினை உருவாக்குதல், ஆசிரியர் மற்றும் இதர ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல் இவை அரசாங்கத்தின் ''பொது''ப் பணம் மூலம் நிர்வகிக்கப்படுவதையே ''பொது''க் கல்வி நிலையம் என்று பொருள்படும். பொதுக் கல்வி நிலையத்தில் தலித் மாணவர்கள் சேர்ந்து பயில்வதிலிருந்து அவர்கள் விலக்கப்பட்டனர். தலித்துகளுக்கு புழங்கு உரிமையற்ற பகுதியில் பள்ளியை நிறுவுதல், நேரடியாக அனுமதி மறுத்தல், தலித் மாணவர்களுக்கு அனுமதி வழங்கும் பள்ளியை தலித்தல்லாதோர் புறக்கணித்தல், பள்ளிக்குள்ளேயே தலித் மாணவர்களுக்கென தனி வகுப்பறை உருவாக்குதல், அனைத்து சாதி மாணவர்கள் இருக்கும் ஒரே வகுப்பறைக்குள் தலித் மாணவர்களுக்கென தனி இருக்கையை ஒதுக்குதல் போன்ற வடிவங்களில் தலித் மாணவர்கள் சமூக விலக்கம் செய்யப்பட்டனர். இனி, இது குறித்து விரிவாகக் காண்போம்.

புழங்கு உரிமையற்ற வெளி

                குடியிருப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப அன்றி சாதி வாரியாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்து சமூக அமைப்பில் பிராமணர் மற்றும் இதர சாதி இந்துக்களின் வசிப்பிடத்தில் தலித்துகளுக்கான புழங்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது. பிராமணர் மற்றும் இதர சாதி இந்துக்களின் வசிப்பிடத்தின் அருகாமையிலேயே தபால் அலுவலகம், நீதி மன்றம், கல்வி நிலையம் போன்ற நவீன நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த நிறுவனங்களை அணுகுவதிலிருந்து தலித்துகள் விலக்கப்பட்டிருந்தனர். மெட்ராஸ் தொடக்கக் கல்விச் சட்டம் 1920 பிரிவு 40 (2) விதி 8, பள்ளிகள் அனைத்து சாதி மற்றும் சமூகத்தினர் புழங்குவதற்கு ஏற்ற இடத்திலியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கிறது. இருந்த போதிலும், பொதுக் கல்வி நிலையங்கள் தலித்துகளுக்கு புழங்கு உரிமையற்ற பகுதியிலேயே அமைக்கப்பட்டிருந்த காரணத்தினால் தலித் மாணவர்கள் கல்வி நிலையங்களை அணுகுவதிலிருந்தும் கல்வி கற்பதிலிருந்தும் விலக்கப்பட்டிருந்தனர்.

1928-29ஆம் ஆண்டு எடுத்த புள்ளி விவரத்தின்படி 1, 875 ''பொது''ப் பள்ளிகள் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்படும் புவிப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் பத்தாண்டுகளுக்கு மேலான பின்னர், அதாவது 1935-36ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி 891 பள்ளிகளும், 1935-36ம் ஆண்டு புள்ளி விவரப்படி 440 பள்ளிகளும் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்படும் புவிப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்தன. இந்த புள்ளி விவரங்களிலிருந்து தலித்துகள் எந்த அளவிற்கு கல்வி கற்பதிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள இயலும். இதனால் தலித்துகள் கல்வி நிலையங்களை அணுகுவதற்காக முதலில் புழங்கு உரிமைக்கான போராட்டத்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. இதற்கான உதாரணமாக கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் பொதுப் பள்ளியை அணுகுவதற்கு தலித்துகள் அக்ரஹாரத்தை புழங்குவதற்கான போராட்டத்தை நடத்தியதைக் கூறலாம். இதில் தலித் மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் அக்ரஹாரம் வழியாக அழைத்துச் சென்ற பொழுது பிராமணர் மற்றும் இதர சாதி இந்துக்கள் தலித்துகள் மீது வன்முறையை ஏவினர்.

அனுமதி மறுப்பு

                கல்வி கற்கும் செயல்பாட்டிலிருந்து தலித் மாணவர்களை விலக்குவதற்கு சாதி இந்துக்கள் கடைபிடித்து வந்திருக்கின்ற ஒரு வடிவம் பொதுக் கல்வி நிலையங்களில் தலித் மாணவர்களின் சேர்க்கையை வெளிப்படையாக மறுத்தல் ஆகும். தலித் மாணவர்கள் பொதுப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்கிற பொழுது அவர்களை சேர்த்துக் கொள்ள முடியாது என்று அவர்களுக்கு பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டிருக்கிற சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதனைக் காணமுடிகிறது. உதாரணமாக, சேலம் வட்டாட்சி வாரியத்தால் ராக்கிபட்டி மற்றும் எட்டிமாணிக்கம்பட்டி, சங்ககிரி வட்டாட்சியில் இருந்த வட்டாட்சி வாரியப் பள்ளி போன்ற பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்கு அரிதாக சென்ற தலித் சாதியைச் சேர்ந்த ஒரு சிலருக்கு கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, வெள்ளிங்கிரி என்ற தலித் ஒருவர் கோயம்புத்தூர் அரசு கல்லூரிக்கு விண்ணப்பித்த பொழுது அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. அனுமதி மறுத்தல் என்பது ஒரு பொதுவான செயலாக நடைபெற்றிருக்கிறது, இதனால் அனுமதி மறுக்கப்படும் இடங்களில் சேர்க்கைக்கான போராட்டத்தை தலித்துகள் நடத்தியிருப்பதனைக் காணமுடிகிறது. வெள்ளிங்கிரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கல்லூரி முதல்வர் மற்றும் உயர் கல்வி அதிகாரிகளுக்கு முறையிடல் என பல போராட்டங்களுக்குப் பின்னரே அவருக்கு அக்கல்லூரியில் இடம் வழங்கப்பட்டிருக்கிறது.

அனுமதி, புறக்கணிப்பு, தீண்டாமை

                தலித்துகளின் போராட்டங்களுக்குப் பின்னர் தலித் மாணவர்கள் பொதுப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு அனுமதிக்கிற பொழுது அங்கு ஏற்கனவே படித்துவரும் சாதி இந்து மாணவர்கள் அப்பள்ளிகளை புறக்கணித்திருக்கின்றனர். இதற்கான சில உதாரணங்களைக் காண்போம். திருவண்ணாமலை கீழத்தூர் நகராட்சி தொடக்க பகல் பள்ளியில் சேர்வதற்கு சுமார் 50 தலித் மாணவர்கள் வருவதை அறிந்த தலித்தல்லாத மாணவர்கள் அப்பள்ளியை புறக்கணித்தனர். சிதம்பரம் அருகே ÿமுஷ்னம் மேல்நிலை தொடக்கப் பள்ளியில் தலித் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட காரணத்தினால் அப்பள்ளியில் 20 ஏப்ரல் 1933ல் 183-ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 24 ஏப்ரல் 1933 அன்று 21 பேராகக் குறைந்து விட்டது. இந்த எண்ணிக்கை பின்னரே கூடியிருக்கிறது. தலித்துகள் அனுமதிக்கப்படும் பள்ளிகளில் நாங்கள் பயில மாட்டோம் என்ற சாதி இந்துக்களின் நிலைப்பாட்டிற்குள் தலித்துகளை விலக்கம் செய்கின்ற நடவடிக்கை இருப்பதனையே காணமுடிகிறது.

சில பள்ளிகளில் தலித்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பினும் அவர்கள் பாகுபாடுதன் நடத்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, ஒரே பள்ளிக்குள் தலித்துகளுக்கென ''தனி'' வகுப்பறைகள், ''தனி'' இருக்கைகள் என்று ''பொது'' மாணவர்களிடத்திலிருந்து தலித் மாணவர்கள் விலக்கப்பட்டிருக்கின்றனர். சிதம்பரே அருகே உள்ள ÿமுஷ்னம் மேல்நிலை தொடக்கப் பள்ளியில் தலித் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பள்ளிக் கட்டிடத்திற்குப் பின் பகுதியில் தலித் மாணவர்களுக்கென தனியான கூடாரம் அமைத்து வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனை பள்ளி ஆய்வு அதிகாரிகள் கண்டித்த பின்னர் தனிக் கூடார முறை கைவிடப்பட்டிருக்கிறது. இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்களை அதே நிலை படிக்கின்ற தலித்தல்லாத மாணவர்களோடு உட்கார வைப்பதற்குப் பதிலாக முதலாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்களோடு உட்கார வைக்கின்ற நடைமுறையும் இருந்திருக்கிறது. மற்ற மாணவர்களிடமிருந்து விலக்கம் செய்து தலித் மாணவர்களை ''தனி''யாக உட்கார வைக்கின்ற வழமைக்கு தீண்டாமையே காரணமாக இருந்திருக்கிறது.

தனிப் பள்ளி முறைக்கு வித்திட்ட சமூக விலக்கம்

மேற்கத்திய கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலந்தொட்டு தலித்துகளை கல்வி கற்பதிலிருந்து விலக்கி வைக்கின்ற செயல் மேற்குறிப்பிட்ட வடிவங்களில் நடைபெற்றிருப்பதனை விவரித்திருக்கிறோம். இந்த சமூக விலக்கலுக்கு எதிரான நடவடிக்கையை காலனிய அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது மேலும், தலித்துகளுக்கு சாதகமான நிலைப்பாட்டினை கோட்பாட்டளவில் எடுத்திருக்கிறது. சாதி அல்லது மதம் அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு மறுக்கின்ற பள்ளியின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும் என்று மெட்ராஸ் ஆரம்பக் கல்வி சட்டம் 1920 அறிவித்திருக்கிறது. பொதுப் பள்ளியில் தலித் மாணவர்கள் இலவசமாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கொள்கையை கடைபிடித்தது. உள்ளாட்சி நிறுவனங்கள் நடத்துகின்ற பள்ளிகள் அல்லது அரசு மாணியம் பெறும் கல்வி நிறுவனங்கள் அரசின் கல்விக் கொள்கையை பின்பற்ற மறுத்தால் அப்பள்ளிகளுக்கு அரசாங்கம் வழங்குகின்ற மாணியம் குறைக்கப்படும் அல்லது மாணியத் தொகை ரத்து செய்யப்படும் என்று நிலைப்பாட்டினையும் அரசாங்கம் எடுத்திருந்தது. மேலும் தலித்துகளை முன்னேற்றுவதற்கென தொழிலாளர் ஆணையர் 1920களில் நியமிக்கப்பட்டிருந்தார்.

தலித்துகளை முன்னேற்றுவதற்கு செய்யப்படுகின்ற பல்வேறு பணிகளில் அவர்களுக்கு கல்வி கொடுக்கின்ற பொறுப்பும் தொழிலாளர் ஆணையருடையதே. தனிப் பள்ளி நடத்துதல், கல்விக்கான நிதி உதவு வழங்குதல், விடுதியை பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்வதும் ஆணையருடையதே. கொள்கை அளவில் தலித்துகளுக்கு ஆதரவான நிலைப்படாட்டினை எடுத்திருந்த போதிலும் நடைமுறையில் காலனிய அரசாங்கம் அதனுடைய கொள்கையினை நடைமுறைப்படுத்தியிருக்கவில்லை. தலித்துகளை கல்வி நிலையங்களில் அனுமதிக்க மறுத்தல், அனுமதித்திருந்தால் பாகுபாட்டுடன் நடத்துதல், அனுமதி மறுப்பு மற்றும் பாகுபாட்டுடன் நடத்துதல் ஆகியவற்றை எதிர்க்கும் கொள்கைகளை நடைமுறைப் படுத்தியிருக்கவில்லை காலனிய அரசாங்கம். விளைவு, தலித்துகள் தங்களுக்கனெ தனியான கல்வி நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கத் தூண்டியிருக்கிறது. சென்னை மாகாண அவையில் தலித்துகளுக்காக நியமிக்கப்பட்ட தலித் பிரதிநிதியான ஏ.எஸ். சகஜானந்தாவின் உரையிலிருந்து தலித் மாணவர்களுக்கான தனி கல்வி நிலையங்களின் கோரிக்கையும் அதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

அவர் இவ்வாறு உரையாற்றியிருக்கிறார்: ''ஒவ்வொரு தாலுக்காகளிலும் ஒவ்வொரு சக்கண்டரி பாடசாலையை ஏற்படுத்த வேண்டும். அதில் படிப்பவர்கட்கு இலவசமாகவே உணவு முதலியன கொடுக்க வேண்டும். இது மிகவும் அவசியம். ஒவ்வொரு ஜில்லாவிலும் அவசியமாக ஆதித் திராவிடர்களுக்கு ஐஸ் கூல்களேற்படல் வேண்டும். தென்னார்காடு ஜில்லாவில் ஆறு லட்சம் ஆதித் திராவிடர்களிருக்கிறார்கள். ஆறு லட்சம் ஜனங்களிலும் ஸ்கூல் பைனல் படித்தவர் ஒருவருமில்லர். இதைவிட எங்கள் துர்ப்பாக்கியத்தைச் சொல்லிக் காட்ட வேண்டாம். இவ்விஷயமாக அரசாங்கத்தாரைக் கேட்டால் எல்லாக் கல்லூரிகளிலும் ஆதித்திராவிட மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. உங்களுக்கெனத் தனிக் கல்லூரிகள் வேண்டாமெனக் கூற முயல்கின்றார்கள். அதற்காக நாங்கள் நன்றி பாராட்டுகிறோம். அந்தச் சட்டத்தைச் செய்கையில் காண்பது அரிதாகவிருக்கிறது. நாங்களே வைதீகம் பாராட்டுமிடங்களிலுள்ள கல்வி சாலைகளுக்குச் சென்று எங்கள் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டால் சட்டத்திற்குப் பயந்து சேர்த்துக் கொள்வார்கள் அல்லது சாக்குபோக்கு சொல்வார்கள். அது விஷயத்தில் அழுத்தமாக நடவடிக்கை எடுத்துக் கொண்டால் பகைமையும் மாணவன் முன்னுக்கு வர முடியாத கஷ்டங்களும் ஏற்படுகின்றன. பலவித சிக்கல்களிருக்கின்றன.

உயர்ந்த வகுப்பினராகிய வலிவுள்ளவர்களிடத்தில் நாங்கள் சென்று சண்டையிட்டுக் கொண்டு உள்ளதையுங் கெடுத்துக் கொள்வதைவிட தனியே விரும்புவது நலமாகும். ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்ப்பதால் கஷ்டமுண்டாகுமென்று தோன்றும் இடங்களிலெல்லாம் ஆதித்திராவிடர்கட்குத் தனிப்பாடசாலைகள் அமைத்துக் கொடுத்தால் அது எங்கள் சமூகத்திற்குப் பெரிதும் பயன்படும். எங்கள் சமூகத்திற்கென ஏற்படும் கல்லூரிகளில் கூடுமானால் மற்றைய வகுப்புப் பிள்ளைகளும் சேர்ந்து படிக்கச் சொற்ப உதவி புரிந்தால் உயர் வகுப்பு மாணவர்களும் வந்து சேர்வார்கள். அதன் மூலம் சுலபமாக சமரசம் ஏற்படக்கூடும். தற்போது மகமதிய மாணவர்கட்கு தனிக் கல்லூரிகள் ஏற்படுத்தி நடத்தி வருவதைப் போல் எங்களுக்கும் நடத்திவரக் கேட்டுக்கொள்கிறேன்''. சட்ட ரீதியான அங்கீகாரம் இருந்த போதிலும் தலித் மாணவர்கள் பொதுப் பள்ளியில் பயில்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்பது சகஜானந்தாவின் உரையிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. இதுவே தலித்துகளை தங்களுக்கென தனிக் கல்வி நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கத் தூண்டியிருக்கிறது.

பொதுப் பள்ளியில் தலித்துகள் அனுமதிக்கப்படவில்லை என்றால் அரசாங்கமே தலித்துகளுக்கென தனிப் பள்ளிகளை உருவாக்கியிருக்கிறது. திருவண்ணாமலை நகராட்சிப் பள்ளியில் தலித் மாணவர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தினால் திருவண்ணாமலை நகராட்சி அவையே தலித் மாணவர்களுக்கென தனிப் பள்ளிக்கூடத்தை நிறுவியிருப்பதை இதற்கான உதாரணமாகக் கூறலாம். தலித்துகளும் அவர்களின் சுயமுயற்சியினால் தனிப் பள்ளிக்கூடங்கள் நிறுவியிருக்கின்றனர். விருத்தாச்சலம் வட்டாட்சியைச் சேர்ந்த சத்தியவாடி கிராமம் , திருநெல்வேலி மாவட்டம் திருப்பனிகரிசல்குளம் போன்ற பகுதிகளில் தலித்துகள் நிறுவிய பள்ளிகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எனவே, ''பொது''ப் பள்ளிக்கூடங்களில் தலித்துகளுக்கு சேர்க்கை அனுமதி மறுக்கப்படுவதால் தலித்துகளுக்கென ''தனி''ப்பள்ளிக்கூடம் உருவாகியிருக்கிறது என்பது தெளிவு.

''தனி''ப் பள்ளிக்கூடம் என்ற கோரிக்கையினை அனைத்துத் தலித்துகளும் முன்வைத்திருக்கவில்லை. ''பொது''ப் பள்ளிக்கூடங்களில் தலித்துகள் அனுமதிக்கப்பட வேண்டும், தனிப் பள்ளிக் கூடங்கள் வேண்டாம் என்று போராடிய தலித்துகளும் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆர். வீரையன். இவர் தலித்துகளுக்கென தனிப் பள்ளிக்கூடம் தொடங்குவதனை தொடர்ச்சியா எதிர்த்திருக்கிறார். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பேசப்படுகிற இந்த ஜனநாயகச் சூழலில் ஆதி-திராவிடர்களுக்கென தனிப் பள்ளிக்கூடம் என்ற கொள்கையை அரசாங்கம் அனுமதிக்கிறதா? என்ற கேள்வியை சென்னை மாகாண அவையில் எழுப்பியுள்ளார் வீரையன். இக்கேள்விக்கு கல்வி அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்: ''தனிப் பள்ளிக்கூடம் சேரி மக்களின் கோரிக்கையினால் தொடங்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் ஆணையரின் கட்டுப்பாட்டிற்குக் கீழ்வரும் பல சேரிகளில் தனிப் பள்ளிக் கூடங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தொடக்கக் கல்வி கொடுக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் அதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப் படுகிறது''.

வீரையன் மீண்டும் பின்வரும் கேள்வியை எழுப்பினார்: தனிப் பள்ளி என்பது எப்பொழுதும் ஆதி திராவிடர்களை தனியாக வைத்திருப்பதாக பொருள் கொள்கிறதா? ஆதி திராவிட மாணவர்கள் நகராட்சிப் பள்ளிகளில் அனுமதி கோரும் பொழுது மட்டும் தனிப் பள்ளி என்ற கருத்து நகராட்சி அவையிடமிருந்து தோன்றுகிறது? இதற்கு முன்னர் தோன்றுவதில்லையே ஏன்? இதற்கு கல்வி அமைச்சர் பின்வருமாறு பதிலளித்தார்: ''தனிப் பள்ளி இல்லாதிருப்பதே அரசாங்கத்தின் கொள்கை, ஆனால் அனைத்துப் பொதுப் பள்ளிகளும் அனைத்து மாணவர்களுக்கும் திறக்கப்பட வேண்டும். ஆனால் ஆதி திராவிடர்களிடமிருந்து தங்களுக்கென தனிப் பள்ளி வேண்டும் என்ற சிறப்பு கோரிக்கையை முன்வைத்தால் நாங்கள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்''.

இதனால் வீரையன் பின்வரும் மற்றொரு கேள்வியை இவ்வாறு எழுப்பியுள்ளார்: 300 பேர் வசிக்கின்ற சேரியில் 10 பேர் தனிப் பள்ளி கேட்கிற பொழுது 290 பேரின் உணர்வுகளை புறக்கணிக்க முடியும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? நீங்கள் யாருடையை உணர்விற்கு மதிப்பு கொடுக்க இருக்கிறீர்கள்? 290 பேரின் கோரிக்கையையா? அல்லது 10 பேரின் கோரிக்கையையா? வீரையனின் கேள்விகளிலிருந்து அவர் ''தனி''ப் பள்ளி முறையை கடுமையாக எதிர்த்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. தலித்துகள் முன்வைத்த கோரிக்கையில் தலித் மாணவர்கள் பொதுப் பள்ளிக் கூடங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை விடவும் தனிப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரசாங்கம் கொள்கை அளவில் தனிப் பள்ளி முறையை விரும்பியிருக்கவில்லை எனினும் நடைமுறையில் அது தனிப் பள்ளி முறையையே ஏற்படுத்தியிருக்கிறது. ''தனி''ப் பள்ளி முறை ''பொது''விலிருந்து தலித்துகளை விலக்குவதைத் தவிர வேறொன்றும் இல்லை.

கல்வியிலிருந்து விலக்கம்: இன்றைய நிலை

                இன்றைய காலங்களில் தலித்துகள் கல்வி பெற வேண்டும் என்பதற்காக நிதி உதவி வழங்குதல் உட்பட பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் நடைமுறையில் அவற்றை கல்வி நிலையத்தின் நிர்வாகம் முறையாக அமுல்படுத்துவதில்லை. இங்கு இருக்கின்ற திட்டங்கள் அமுல்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்ற ஆராய்ச்சிக்குள் செல்லவில்லை. எவ்வாறு தலித் மாணவர்கள் உயர் கல்வியில் அறிவியல் பாடப் பிரிவில் படிப்பதிலிருந்து விலக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதை விவாதிப்போம். காரணம் அறிவியல் கல்வி பயில்வது என்பது அத்துறைகளில் படிப்பவர்களை வல்லுநர் தரத்திற்கு உயர்த்துகிறது மேலும் வேலை வாய்ப்பும் எளிதில் கிடைத்துவிடுகிறது. அம்பேத்கர் இதனை மிகத் தெளிவாக பின்வருமாறு கூறியுள்ளார்: ''பொருளாதார நிலையை உயர்த்தும் விஷயத்திலிருந்து நோக்கும்போது, தாழ்த்தப்பட்ட சாதியினருக்குப் பொதுக் கல்வியைவிட தொழில்நுட்பக் கல்வி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெளிவு''.

இந்தியாவில் சில அரசாங்கங்கள் வரலாறு, பொருளாதாரம் போன்ற படிப்புகள் பயனற்றவை என்று அறிவித்ததிலிருந்தும், அத்துறையில் பட்டம் பயின்றவர்கள் வேலை வாய்ப்பினைப் பெறுவது மிகக் கடினமான செயலாக இருந்துவரும் இன்றைய சூழலில் சமூக அறிவியல் பட்டம் என்பது தலித்துகளை பொருளாதாரத்தில் முன்னேற்றுவதற்கு உதவாது. ஆனால் இத்துறைகளை முற்றிலும் புறக்கணிப்பது என்பது தலித் விடுதலைக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதார முன்னேற்றம் நோக்கில் என்ற தலித்துகள் அறிவியல் படிப்பதும், அவர்களின் சமூக விடுதலைக்கான நோக்கில் சமூக அறிவியல் துறையில் கவனம் செலுத்துவதும் தவிர்க்க இயலாத தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கர் அறிவியல் தொழில் நுட்பத்தினை பயில்வதற்கு தலித் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். ஆனால் அத்துறையில் தலித் மாணவர்கள் சேர்வதே இன்று சிக்கலாக இருந்து வருகிறது. எனவே, பதினொராறாம் வகுப்பு, இளநிலை, முதுநிலை இளம் முனைவர், முனைவர், முதுமுனைவர் ஆகிய நிலைகளில் தலித் மாணவர்கள் எவ்வாறு அறிவியல் பாடப் பிரிவிலிருந்து விலக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதைக் காண்போம். இது குறித்து விவாதிப்பதற்கு முன்னர் பள்ளி நிலையில் தலித் மாணவர்களின் சேர்க்கை எந்த பள்ளிகளில் இருக்கிறது, அங்கு இருக்கும் பாகுபாடு என்ன என்பதைக் காண்போம்.

                கிராமப் புறங்களில் இருக்கின்ற தலித்துகள் அவர்கள் வசிக்கின்ற கிராமத்தில் அல்லது பக்கத்து கிராமத்தில் இருக்கின்ற பள்ளியில் படிக்கச் செல்கின்றனர். ஒரு கிராமத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி இவைகள் இருந்தால் தலித் குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளியில் இணைந்து படிக்கின்றனர். சில கிராமங்களில் தலித்துகளுக்கென இருக்கின்ற ஹரிஜன் தொடக்கப் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தலித் குழந்தைகள் படிக்கின்றனர். அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் கூடுதலான கட்டமைப்பு வசதிகள் இருந்த போதிலும் அப்பள்ளிகளில் படிக்க இயலாத சூழலே நிலவுகிறது. திருநெல்வேலி மாவட்டம் செந்தட்டியாபுரம், பந்தப்புளி, ரெட்டியபட்டி மற்றும் பூவன்குறிச்சி ஆகிய கிராமங்களில் கள ஆய்வு நடத்திய போது தலித் குழந்தைகள் படிக்கின்ற அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதின்மையைக் காணமுடிந்தது.

குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதற்கென தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் குறுந்தகடு இயக்குவதற்கான பெட்டி வழங்கப்பட்டிருக்கிறது, ஆனால் அப்பள்ளிகளில் மின்சாரம் இல்லாததால் இப்பொருட்கள் பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பதனை ரெட்டியப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் காணமுடிந்தது. பூவன்குறிச்சி ஹரிஜன் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்றாக இருந்தது இரண்டாக குறைக்கப்பட்டுவிட்டது. மேலும், குழந்தைகள் அமர்ந்து படிப்பதற்கென இருக்கைகள் இல்லை, ஒவ்வொரு வகுப்பிற்கென தனித்தனியான வகுப்பறைகள் இல்லை என்பது உட்பட பல அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதிருப்பதைக் கூறலாம். கற்பதற்குத் தேவையான வசதியின்மை தலித் குழந்தைகளின் கற்றலின் தரத்தில் பாதகமான விளைவினையே ஏற்படுத்தும். இதன் பொருள் என்னவென்றால் தலித் குழந்தைகள் தரமான கல்வி கற்பதிலிருந்து விலக்கப்படுவது என்பது தொடக்கக் கல்வி நிலையிலேயே தொடங்கிவிடுகிறது.

தொடக்கக் கல்வி நிலைக்கு முந்தைய நிலையான பாலர் பள்ளியில் தலித்தல்லாத குழந்தைகளிடமிருந்து தலித் குழந்தைகளைப் பிரித்து வைக்கின்ற பாகுபாட்டு நடைமுறையையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுக் கூறவேண்டும். பாலர் பள்ளியில் குழந்தைகள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தலித்தல்லாத குழந்தைகள் அதிகம் இருக்கின்ற பிரிவில் சொற்ப எண்ணிக்கையிலான தலித் குழந்தைகளும், தலித் குழந்தைகள் அதிகம் இருக்கின்ற பிரிவில் சொற்ப அளவிலான தலித்தல்லாத குழந்தைகளும் என பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை ரெட்டியப்பட்டி மற்றும் பந்தப்புளி ஆகிய ஊர்களில் கள ஆய்வின் போது காணமுடிந்தது. இவ்வாறு பிரித்தல் என்பது மிகச் சமீபத்தில் நடப்பதாக அங்கு பணிபுரியும் பணியாளர்கள் கூறினர். இந்த பிரிவு காலனிய ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் தலித் மாணவர்கள் தலித்தல்லாத மாணவர்களிடத்தில் இருந்து தனியாக பிரித்து வைக்கப்பட்ட சம்பவங்களிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை. சமூக விலக்கம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றை அனுபவித்தல் என்பது தலித் குழந்தைகளுக்கு பாலர் பள்ளியிலிருந்தே தொடங்கிவிடுகிறது. இந்தப் பின்னணியில் பயின்று வரும் தலித் குழந்தைகளே பின்னர் நகரங்களுக்கு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பின்னர் சந்திக்கின்ற சிக்கலைக் காண்போம்.

மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய புள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அவர்கள் பெறுகின்ற மதிப்பெண். பின்னர் அடுத்த திருப்பத்தினை ஏற்படுத்தும் புள்ளி பதினொறாம் வகுப்பில் அவர்கள் சேர்கின்ற பாடப் பிரிவு. தலித் மாணவர்கள் பொதுவாக கணிதம், கணினி, அறிவியல் அல்லாத பாடப் பிரிவுகளான வரலாறு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் பயில்கின்றனர். தலித் மாணவர்களுக்கு வரலாறு மற்றும் விவசாயம் ஆகியவற்றின் மீது மட்டுமே ஆர்வம் இருந்து வருகிறதா? அல்லது கணிதம், கணினி, அறிவியல் ஆகிய தங்களால் படிக்க இயலாது என்ற அச்சமா? ஆர்வமும் அச்சமும் தலித் மாணவர்களிடத்தில் அக உணர்வினால் சுயமாக ஏற்படுவதில்லை அது புற உலகினால் திணிக்கப்படுகிறது. தலித் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் வரலாறு மற்றும் விவசாயம் ஆகிய பிரிவுகளிலும் சொற்ப அளவில் கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளிலும் சேர்த்துக் கொள்கிறது பள்ளி நிர்வாகம். இது எவ்வாறு நிகழ்கிறது என்றால் பள்ளியில் விண்ணப்பிக்க வரும் தலித் மாணவர்களிடத்தில் நீ பெற்றிருக்கும் மதிப்பெண்ணுக்கு கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் இடம் கிடைப்பது அரிது, வரலாறு மற்றும் விவசாயம் ஆகிய பிரிவுகளில் இடம் கிடைக்கும் அதற்கு விண்ணப்பிக்கவும் என்று கூறிவிடுவர் பள்ளி நிர்வாகத்தினார்.

சொற்ப அளவிலான மாணவர்களை கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு அனுமதிப்பர். மேலும், தலித் மாணவர்களிடத்தில் உன்னால் கணிதம் அறிவியல் போன்ற பாடங்களை படிக்க இயலாது, அவை மிகக் கடினமானவை. வரலாறு எளிதானது எனவே அதைப் படி என்று அறிவுரை கூறுவர். இவை அனைத்து தலித் மாணவர்களையும் ஒருங்கிணைத்துக் கூறுவதில்லை, தனித் தனியாகவே கூறுவர். மாணவர்கள் விண்ணப்பிக்கிற பொழுது தனித் தனியாக வருவதும் பள்ளி நிர்வாகத்திற்கு வசதியாக அமைந்து விடுகிறது. கணிதப் பிரிவில் சேர்த்து என்னை டாக்டராக்க வேண்டும் என்பது என்னுடையை தந்தையின் ஆசை. அதற்கு தூய அறிவியல் படித்தால் மருத்துவராகலாம் என்று என்னை அறிவியல் பிரிவிற்கு விண்ணப்பிக்க வைத்தது நாசரேத் மர்காஷியஸ் மேனிநிலைப் பள்ளி நிர்வாகம். தூய அறிவியல் படித்தால் மருத்துவப் படிப்பில் சேர்வது ‘கனவாகவே’ இருக்கும் என்பது அங்கு சென்ற பின்னரே தெரிய வந்தது. நான் அனுபவித்த அதே நிலை இன்றும் நீடிப்பதை அறியமுடிகிறது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட பல்வேறு மதச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளிலும் தலித்துகள் கணிதம், அறிவியல் போன்ற பாடப் பிரிவுகளிலிருந்து திட்டமிட்டே விலக்கப்படுவது இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு கணினிப் பிரிவிற்கு விண்ணப்பிக்கச் சென்ற தலித் மாணவர் ஒருவரிடம் உன்னுடைய மதிப்பெண் அப்பிரிவிற்கு தகுதியற்றது என்றும், கணிதம் மிகக் கடுமையானது அது உன்னால் படிக்க முடியாது என்றும் கூறி அத்தலித் மாணவருக்கு கணினிப் பிரிவில் இடம் தர மறுத்திருக்கிறது திருநெல்வேலியில் உள்ள ஒரு கிறிஸ்துவப் பள்ளி. எனவே, தலித் மாணவர்களின் ஆர்வமும் அச்சமும் பள்ளி நிர்வாகம் என்ற புற உலகு ஏற்படுத்துவதே என்பது தெளிவு. இதனால் சொற்ப எண்ணிக்கையிலான தலித் மாணவர்களே கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவில் தேர்ச்சி பெறுகின்றனர்.

                பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் பட்டப் படிப்பு செல்வது என்பது வாழ்க்கையின் அடுத்தக் கட்ட திருப்பத்தின் புள்ளி. பள்ளி நிலையில் கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் சிலருக்கு மருத்துவம், பொறியியல் போன்ற துறையில் இடம் கிடைக்கிறது. அதில் கிடைக்காதவர்கள் இளநிலையில் அறிவியல் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கின்றனர். அங்கும் அவர்கள் விரும்பும் பாடம் கிடைப்பதில்லை. என்னை மருத்துவராக்கும் என் தந்தையின் கனவு தகர்க்கப்பட்ட போதிலும் விலங்கியில் துறையில் டாக்டர் பட்டம் பெற்றுவிட வேண்டும் எனக்குள் ஆசை இருந்தது. தூய அறிவியல் பாடப் பிரிவில் விலங்கியலை மிக ஆர்வமாக படித்து வந்த நான் பள்ளி அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தேன். நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியில் விலங்கியல் பிரிவில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சென்றேன். கல்லூரி முதல்வர் உன்னுடைய மதிப்பெண்ணுக்கு வரலாறு, பொருளாதாரம் போன்ற பாடப் பிரிவுகளில் இடம் கிடைக்கும், இதில் சேர்வதற்கு தாமதப்படுத்தினால் அதுவும் கிடைக்காது என்று பயமுறுத்தினார். வேறு வழியின்றி நான் வரலாற்று துறையில் சேர்ந்தேன். விலங்கியல் பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்றுவிட வேண்டும் எனது ஆசையும் தகர்க்கப்பட்டது.

என்னுடன் தூய அறிவியல் வகுப்பில் படித்து என்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த தலித்தல்லாத மாணவருக்கு விலங்கியல் பாடப்பிரிவில் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. என்னைவிடக் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த மாணவனுக்கு விலங்கியல் பிரிவில் இடம் வழங்கப்பட்டிருக்கிறது அதிக மதிப்பெண் பெற்றிருந்த எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது ஏன் என்று எனக்குள் இருந்து கொண்டிருந்த கேள்விக்கு கிடைத்த விடை அவர் கிறிஸ்துவ நாடார், சமூகத்தில் உயர்ந்தவர்! நான் தலித், தாழ்த்தப்பட்டவன்!. சாதிய அரசியல் பெரிய அளவிற்கு புரியாதிருந்த எனக்கு அக்கல்லூரியில் தலித் மாணவர்களுக்கு அறிவியல் பாடப்பிரிவுகளில் இடம் வழங்கப்படமாட்டாது என்பது பின்னர்தான் தெரிய வந்தது. மற்றொரு உதாரணத்தையும் இங்கு காண்போம். வணிகவியல் படித்தால் வங்கி வேலைக்குச் செல்வது எளிது என்று நம்பிக்கை இன்றும் இருந்து வருகிறது. பல கல்லூரிகளில் வணிகவியல் மாணவர்கள் தங்களை பிரிவினை ராயல் டிப்பார்ட்மெண்ட் என்ற அழைத்துக் கொள்வார்கள். இன்றும் ஒரு முக்கியத்துவம் இருக்கின்ற வணிகவியல் பிரிவில் சேர்ப்பதில் இருந்தும் தலித் மாணவர்கள் விலக்கப்படுகிறார்கள். ஓரிரு வருடங்களுக்கு முன்னர் (2003) மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் வணிகவியில் துறையில் சேர்வதற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் 890 மதிப்பெண் பெற்றிருந்த தலித் மலையாளி மாணவர் விண்ணப்பித்த பொழுது அவருக்கு இடம் மறுக்கப்பட்டது, அவரைவிட குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த கிறிஸ்துவ நாடார் மாணவருக்கு அதே துறையில் இடம் வழங்கப்பட்டது.

தலித் மலையாளி மாணவருக்கு வணிகத்துறை மறுக்கப்பட்டது மட்டுமல்ல மாறாக அவருக்கு தமிழ் துறையில் இடம் கொடுத்ததும் ஒருவகையான ஒடுக்குமுறைதான். தலித் மலையாளி மாணவரால் எவ்வாறு தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டத்தைப் படிக்க இயலும்? தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கென இருக்கின்ற ஒரே அரசுக் கல்லூரி திருநெல்வேலியிருக்கும் ராணி அண்ணா கல்லூரியே, இதுவும் பெண்கள் கல்லூரியே. இதானல் தலித் மாணவர்கள் சிறுபான்மையினர் மற்றும் அரசு உதவி பெறுகின்ற கல்லூரியை மட்டுமே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. இக்கல்லூரிகளிலிருந்து தலித் மாணவர்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவியாயிருக்கும் கல்வியிலிருந்து விலக்கப்படுவதன் விளைவினால் தலித் மாணவர்கள் பெரும்பாலானோர் சமூக அறிவியல் துறைகளிலும் சொற்ப எண்ணிக்கையில் அறிவியல் துறைகளிலும் இளநிலை மற்றும் முதுநிலையில் பட்டம் பெறுகின்றனர். இத்தகைய கல்லூரிகள், தலித் மாணவர்களின் முன்னேற்றத்திற்கென பல திட்டங்கள் வகுத்து அதற்கென நிதியும் பல்கலைக் கழக மானியக் குழு வழங்கினாலும் கல்லூரி நிர்வாகம் தலித் மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு செலவிடாமல் போலி பற்றுச் சீட்டு வைத்துக் கொண்டு அப்பணத்தை தவறாக செலவு செய்யப்படுகிறது. மேலும் உயர் கல்வியில் தலித்துகளின் பல்வேறு உரிமைகளையும் பறித்துவிடுவது குறித்து அய். இளங்கோவன் விரித்திருப்பது கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இச்செயல் தலித் மாணவர்கள் கல்வியில் திறமையானவர்களாக வளர்வதை நேரடியாகவே தடுத்துவிடுகிறது.

                ஆராய்ச்சி படிப்பிற்கு அரிதான தலித் மாணவர்களே வருகின்றனர். அவர்களின் பொருளாதாரச் சூழல், ஆராய்ச்சியை நெறிப்படுத்துவதற்கான நெறியாளர் கிடைப்பதில் இருந்து வருகின்ற சிக்கல் தலித் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதிலிருந்து விலக்குகிறது. அறிவியல் புலத்தில் ஆராய்ச்சி முடித்து டாக்டர் பட்டம் பெற்ற தலித்துகளை விரல்விட்டு எண்ணும் அளவிற்கே நிலைமை இருக்கிறது. சமூக அறிவியல் புலத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கின்ற பல தலித்துகளில் நானும் ஒருவன். என்னை டாக்டருக்குப் (மருத்துவர்) படிக்க வைக்க வேண்டும் என்ற என் தந்தையின் கனவு தகர்க்கப்பட்ட போதிலும் போதிலும் நான் டாக்டர் (முனைவர்) பட்டம் பெற்றிருக்கிறேன். ஆனால் இதனைக்கூட கண்டு மகிழ்வதற்கு அவர் இன்று உயிரோடு இல்லை. இப்புலத்தில் பட்டம் பெற்றிருந்த போதிலும் வேலை வாய்ப்பு கிடைப்பது கடினமான ஒன்றாக இருந்து வருகிறது.

சமீபத்தில் நிரப்பப்பட்ட பின்னடைவுப் பணியிடங்களில் தலித்துகளுக்கு கல்லூரி விரிவுரையாளர் பணி கிடைத்திருக்கிறது, வேலை கிடைக்காதவர்களும் இருக்கின்றனர். இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய முக்கியமான சிக்கல் இருக்கிறது. அதாவது, அறிவியல் புலத்திலிருந்து விலக்கப்படுவதல் சமூக அறிவியலில் பட்டம் பெறுகின்ற தலித்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இவர்களில் இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அவர்களின் கல்வித் தகுதிக்குரிய பணி கிடைக்காத காரணத்தினால் நான் அறிந்த தலித்துகள் தமிழ்நாடு அரசாங்கம் நடத்துகின்ற மதுபானக் கடையில் பணி செய்கின்றனர். இதில் சட்டம் படித்த தலித்துகளும் உண்டு. வெறும் பட்டம் அல்லது சட்டம் படிப்பது தலித்துகளுக்கு அதிகம் பயனளிக்காது என்ற அம்பேத்கரின் அன்றைய கணிப்பு மிகச் சரி என்பதற்கு முனைவர் மற்றும் சட்டம் படித்த இன்றைய தலித்துகள் மதுக் கடைகளில் வேலை செய்து வருவது சாட்சியாய் இருக்கிறது.

                ஒரு கல்வி நிலையத்தில் இணைந்து படிப்பது என்பதன் இறுதிக் கட்டம் முதுமுனைவருக்கான ஆராய்ச்சி படிப்பாகும், இதில் நிதி உதவியோடு மட்டுமே ஆராய்ச்சியில் ஈடுபடுவர். பல்கலைக் கழக மானியக் குழுவில் முதுமுனைவர் ஆராய்ச்சிக்கு இரண்டு வகையில் நிதி உதவி வழங்கப்படுகிறது. தலித் மாணவர்கள் சமூக அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கென முதுமுனைவர் ஆராய்ச்சி நிதி வழங்கும் திட்டம் இருக்கிறது. அறிவியல் புலத்தில் மட்டுமே முதுமுனைவர் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கென டாக்டர். கோத்தாரி முதுமுனைவர் ஆராய்ச்சி திட்டம் இருக்கிறது. இதில் அனைத்து சாதியினரும் விண்ணப்பித்து அதன் நிதி உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். தலித் ஒருவர் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தலித்துகளுக்கென இருக்கின்ற திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பினால் முனைவர் பட்டம் பெற்றிருத்தல், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டிருத்தல் ஆகியன தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் கோத்தாரி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை அவர் முனைவர் பட்ட ஆய்வேட்டினை சமர்ப்பித்திருப்பதே போதுமானது. மேலும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிட்டிருக்க வேண்டாம்.

அதாவது அனைத்து சாதியினரும் விண்ணப்பிக்கக்கூடிய கோத்தாரி முதுமுனைவர் ஆராய்ச்சி நிதிக்கு குறைந்த தகுதிகளும், தலித்துகளுக்கான திட்டத்தில் கூடுதலான தகுதிகளும் இருக்க வேண்டும் என்று விதியை ஏற்படுத்தியுள்ளது பல்கலைக் கழக மானியக் குழு. அறிவியல் புலத்தில் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தலித்துகள் விரும்பினால் அவர்கள் கோத்தாரி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலும். ஆனால் எத்தனை தலித் மாணவர்கள் அறிவியலில் முனைவர் பட்டத்தில் ஈடுபட்டு அதற்கான ஆய்வேட்டினை சமர்ப்பித்திருக்கின்றனர் என்றால்? அத்தகைய நபர்களை காண்பது அரிது. சமூக அறிவியல் புலத்தில் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபட தலித்துகள் விரும்பினால் அவர்களால் ஆய்வுப் பட்டம் சமர்ப்பித்ததும் அதில் சேர்வது இயலாது. முனைவர் பட்ட ஆய்வேட்டினை சமர்ப்பித்த பின்னர் அது மதிப்பீடு செய்யப்பட்டு பட்டம் வழங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது அதற்கு மேலான வருடங்கள்கூட ஆகலாம். அது வரை முதுமுனைவர் ஆராய்ச்சி நிதிக்கு விண்ணப்பிக்காமலேயே காத்திருப்பது என்பது ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் தொய்வினை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவு தலித்துகள் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயமே இருக்கிறது.

முடிவுரை

                காலனிய ஆட்சிக் காலத்தில் கல்வி பயில்வது என்பதே வேலை வாய்ப்பிற்க்கான உத்தரவாதத்தினைக் கொடுத்தது. அப்பொழுது சமூக அறிவியல் படித்தால் வேலை கிடைப்பது அரிது என்றோ அல்லது அறிவியல் படித்தால் வேலை கிடைத்துவிடும் என்ற நிலையோ இருந்திருக்கவில்லை. இக்காலத்தில் தலித்துகளை சமூக அறிவியல் புலத்தில் கல்வி கற்பதை திட்டமிட்டே விலக்கினர் சாதி இந்துக்கள். இன்றைய காலங்களில் சமூக அறிவியல் புலத்திற்கான மதிப்பு குறைந்து விட்டது, அறிவியல் புலத்தில் பட்டம் பெற்றால் வேலை வாய்ப்பு கிடைப்பது மிக எளிதாக இருந்து வருகிறது. ஆனால் அறிவியல் புலத்தில் கல்வி கற்பதிலிருந்து தலித்துகளை திட்டமிட்டு விலக்கப்படுகிறார்.

காலனிய ஆட்சிக் காலத்திலும் இன்றும் தலித்துகள் கல்விப் புலத்திலிருந்து விலக்கப்படுவதற்கு இடையில் வேற்றுமை இல்லை. இந்த விலக்குதல் தலித்துகளை பொருளாதாரத்தில் முன்னெறுவதிலிருந்து தடுத்துவிடுகிறது. இதனால் தலித்துகள் மேலும் மேலும் சமுக பண்பாட்டு மற்றும் அரசியல் வெளியிலிருந்து விலக்கப்படுவதற்கே வித்திடும். கோடை விடுமுறைக்குப் பின்னர் கல்வி நிலையங்கள் திறக்கின்ற பொழுது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கட்டாய நன்கொடை என்ற பெயரில் நடைபெறும் கல்வி வணிகத்திற்கு எதிராக கல்வி அமைச்சர் மற்றும் சமூக ஆர்வலர்களின் குரல் கொடுக்கின்றனர், மாணவர் இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. தலித்துகளுக்கு முதலில் அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைத்தல் அதன் பின்னர் கட்டாய நன்கொடை என இரண்டு சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. படிப்பதற்கே இடமே கிடைக்காத பொழுது தலித்துகள் இடம் கிடைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்போராட்டம் அவர்களால் “தனி”த்தே நடத்தப்படுகிறது, “பொது” மக்களின் ஆதரவு அதற்கு இல்லாதிருக்கிறது.

[1] Suma Chitnis, 'Education for Equality:Case of Scheduled Castes in Higher Education', Economic and

 Political Weekly, Vol. VII (August: 1972), pp.1675-1681.

[1] Kusum K Premi, 'Educational for the Scheduled Castes: Role of Protective Discrimination in

 Equalisation', Economic and Political Weekly, Vol. IX (November: 1974), pp.1902-1910.

[1] A. R. Kamat, Education and Social Change amongst the Scheduled Castes and Scheduled Tribes,

 Economic and Political Weekly, (August: 1981), pp.1279-1284.

[1] L. F. Rush brook Williams, India in 1920 (Calcutta: Superintendent Government Printing, 1921), p. 158.

[1] MLCD, 27 January 1932, Vol. LIX, p. 145.

[1] MLCD, 24 February 1930, Vol. LII, p. 31.

[1] MLCD, 28 November, 1938, Vol. VIII, p.85.

[1] K. Ragupathi, The History of Devendrakula Vellalar Movement in Tamil Nadu, 1920-2000, an

 unpublished Ph.D. submitted to Manonmaniam Sundaranar University, Tirunelveli (December: 2007), p. 96-97.

 [1] MLCD, 04 March 1926, Vol. XXVIII, p. 95, 27 November 1928, Vol. XLV, p.183.

[1] MLCD, 26 August 1925, Vol. XXIV, pp.788-789.

[1] காலனிய ஆட்சிக்காலத்தில் பகல் மற்றும் இரவுநேரங்களில் இயங்கும் பள்ளிகள் இருந்தன

[1] MLCD, 06 September 1926, Vol. XXXII, pp. 292-293.

[1] MLCD, 01 November 1933, Vol. LXVIII, p.286.

[1] MLCD, 01 November 1933, Vol. LXVIII, p.286.

[1] MLCD, 04 September 1926, Vol. XXXII, pp. 219-220.

[1] L. F. Rush brook Williams, India in 1921-22 (Calcutta: Superintendent Government Printing, 1922), p.

 218.

[1] MLCD, 28 November, 1938, Vol. VIII, p.85.

[1] MLCD, 25 March 1924, p. 1089, MLCD, 24 February 1930, Vol. LII, p.31.

[1] L. F. Rushbrook Williams, India in 1920 (Calcutta: Superintendent of Government Printing, 1921), p.

 159.

[1] Madras Government and Uplift of Harijans, Harijans, (October: 1934), Vol. II, No. 37, p. 294.

[1] MLCD, 04 March 1927, Vol. XXXIV, pp.256-257.

[1] MLCD, 06 September 1926, Vol. XXXII, pp. 292-293.

[1] MLCD, 14 December 1925, p.26.

[1] தகவல்:பாலசுப்பிரமணியன் , திருப்பனிகரிசல்குலம்.

[1] MLCD, 06 September 1926, Vol. XXXII, pp. 292-293.

[1] Grant of Concession to Harijans (Madras: Government of Madras, 1959), p. 2.

[1] அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி:19 பக்:35&40.

[1] கள ஆய்வு 21 ஜனவரி 2009

[1] துண்டறிக்கை, ஆதிதிராவிடன் புரட்சிக்கழகம், திருநெல்வேலி மாவட்டம்

[1] தகவல்: எட்வின், திருநெல்வேலி 01 ஜூலை 2009

[1] கோ ரகுபதி, அந்தப் பாவிகளை தண்டிப்பாராக, 2006ல் எழுதி முடிக்கப்பட்ட ஆனால் வெளியிடப்பட்டிராத சுய வரலாறு

: பால்ஸி, அருமனை, கன்னியாகுமாரி மாவட்டம், 29 ஜூன் 2009.

 அய். இளங்கோவன் வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே! எங்களிடம் வராதீர்கள், தலித் முரசு

 (பிப்ரவரி: 2009), பக். 18-20.

 

Pin It