தமிழ்நாட்டில் நீண்டகாலமாகக் கல்வியில் பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு உரிமை களால் ஒடுக்கப்பட்ட சமுதாயம் வளர்ச்சிப் பெற்று வருவதை சமூகவியலாளர்கள் வியந்து போற்று கிறார்கள். பெரியார் தொடங்கி வைத்த சமூகப் புரட்சியின் பயன் இது. இந்த ஆண்டு பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித் துள்ளனர். பொறியியல் கல்லூரியில் சேர வந்த மொத்த விண்ணப்பங்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 109. இதில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் 49 புள்ளி 27 சதவீதம். அதாவது 70 ஆயிரத்து 519 பிற் படுத்தப்பட்ட மாணவர்கள், பொறியியல் கல்லூரி களில் சேர முன்வந்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோ ருக்கான இடஒதுக்கீடு 30 சதவீதம். இதை விட 19.27 சதவீதம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
அதேபோல் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் 35 ஆயிரத்து 889 பேர் விண்ணப்பித் துள்ளனர். மொத்தம் விண்ணப்பித்தவர்களில் 25 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டைவிட 5 சதவீதம் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், தாழ்த்தப்பட்ட அதாவது ஷெட்யூல்டு பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களே 17 ஆயிரத்து 928 தான். அதாவது 12 புள்ளி 52 சதவீதம். இவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டைவிட சுமார் 6 சதவீதம் பேர் குறைவாகவே விண்ணப்பித் துள்ளனர். பழங்குடி சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட ஒரு சதவீத இடங்களுக்கு 0.33 சதவீதம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடி சமூகத்தினர் கல்வி நிலை பின்னோக்கிப் போவது மிகவும் கவலை யளிக்கக்கூடியதாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தலித் மாணவர்களின் தன்மானமும், சமத்துவமும், சம உரிமையும் அவர்கள் பெறும் உயர் கல்வியில்தான் அடங்கியிருக்கிறது. தமிழ் நாட்டில் இப்படி ஒரு நிலை தொடரவே கூடாது. இந்த ஆபத்தானப் போக்கை தடுத்து நிறுத்துவது எப்படி என்பதை பெரியாரிஸ்டுகளும், அம்பேத்கரிஸ்டு களும், ஆட்சியாளர்களும் கவலையுடன் சிந்தித்து தலித் மாணவர்களின் கல்வித் தடைகளை நீக்கும் முயற்சிகளில் இறங்கியாக வேண்டும்.
‘இதுதாண்டா ராணுவம்’
ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றி தமிழ்நாட்டு மக்கள் 1988 ஆம் ஆண்டிலிருந்தே நன்றாக புரிந்து வைத்துள்ளனர். ஈழத்துக்கு இந்திய ராணுவம் போய் அங்கே மக்களைக் கொன்று குவித்தபோது சென்னை நகரம் ராணுவத்தினரின் ‘இயங்குதளமாக’ செயல்பட்டது. நகரில் ராணுவத்தினரின் அட்டகாசம் கண்டு மக்கள் முகம் சுளித்தனர். மிக மோசமாக வாகன விதிகளை மதிக்காமல் ராணுவத்தினர் ஓட்டுவதும், விபத்துகளும் உயிரிழப்பும் ஏற்படுவதும் இப்போதும் தொடரவே செய்கிறது. சென்னை ராணுவ குடியிருப்பு வளாகத்துக்குள் தில்சன் என்ற 13 வயது ஏழைக் கூலித் தொழிலாளி மகன் காய்பறிப்பதற்கு மரத்தில் ஏறியதற்காக ராணுவ அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியால் ‘மரண தண்டனை’ வழங்கிய நிகழ்ச்சி கடும் கொந்தளிப்பை உருவாக்கி விட்டது. குற்றவாளி ராணுவ அதிகாரியாக இருந்தாலும் சரி; காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உறுதியாக அறிவித்தார். ராம்ராஜ் என்ற உசிலம்பட்டியைச் சார்ந்த ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தகைய ராணுவத்தின் ஆட்சி நடக்கும் வடகிழக்கு மாநிலங்களிலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் மக்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இது ஒரு ‘ஜனநாயக’ நாடு என்பதை ராணுவத்தினர் மறந்தே போய் விட்டார்கள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
உயர் கல்வி: தலித் மாணவர்கள் பின்னடைவு?
- விவரங்கள்
- விடுதலை இராசேந்திரன்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2011