தத்துவம் குறித்தும் தத்துவங்கள் குறித்தும் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் பாமரரும் அறியும் விதத்தில் எழுதப்பட்டவை அபூர்வம். மனித அறிவு தோன்றியக் காலத்திலிருந்து தத்துவவாதிகள் இருபெரும் முகாம்களாய் பிரிந்து வாதிட்டு வந்துள்ளனர். உற்பத்தி சக்திகளும் உற்பத்திக் கருவிகளும் வளர்ச்சியடையாத காலத்தில் கற்பனைவாதக் கட்டுக்கதைகள் தோன்றின. இந்தக் கட்டுக்கதைகள் என்ற மரத்தில் இரண்டு கிளைகள் முளைத்தன. ஒரு கிளை மதமாகவும் இறையியலாகவும் வளர்ச்சி பெற்றது. மற்றொரு கிளை விஞ்ஞானமாக வளர்ந்தது. இரு பிரிவுகளிலும் தத்துவங்கள் உருவாயின. அருணனின் இந்நூல் இறையியல் மற்றும் விஞ்ஞானத் தத்துவங்களை விரிவாக கள ஆய்வு செய்கிறது. கடந்த 2500 ஆண்டுகளாக பூமியில் நிகழ்ந்த தத்துவப் போர்களையும் அந்தப் போராகன் தத்துவங்களையும் வெவ்வேறு தலைப்புகளில் விளக்கிக் கூறியுள்ளார். உலகில் கருத்து முந்தியதா பொருள் முந்தியதா எனும் தத்துவப்போர் நீண்ட நெடுங்காலம் நீடித்தது. பொருளே முந்தியது என்பதையும், அதுவே கருத்து உருவாவதற்கான அடிப்படை என்பதையும் காரல்மார்க்சுதான் விஞ்ஞான ரீதியாக முடிவுக்குக் கொண்டு வந்தார். அதுவே மார்க்சியமாய் மலர்ந்தது.

இதற்கென மார்க்சு 2500 ஆண்டுகாலத் தத்துவஞானங்களைப் பல ஆண்டுகள் பயின்றார். கிரேக்கத் தத்துவஞானத்தையும், ஐரோப்பிய தத்துவஞானத்தையும் அவர் ஆழ்ந்து கற்று விளங்காத கேள்விகளுக்கு விடை கண்டார். கருத்து முதல் வாதத்திற்குள் அமிழ்த்தி வைக்கப்பட்டிருந்த பொருள் முதல்வாதத்தில் மூலக்கூறுகள் அவர் தத்துவஞானக் கடலில் மூழ்கி எடுத்து வந்தார். இறுதியாக ஹெகல் எனும் தத்துவஞானி கருத்தை தலையாகவும் பொருளை உடலாக்கித் தலைகீழாய் தொங்கியவரை மார்க்சு நேராக நிமிர்த்தி வைத்தார்.

பேராசிரியர் அருணன் இந்நூலை தத்துவம், பிரபஞ்சம், இயக்கம், வளர்ச்சி, விதிகள், உணர்வு, கடவுள், மனிதன், ஞானம், களம் என்று பத்துத் தலைப்புகளில் எழுதியுள்ளார். மார்க்சின் இயங்கியல் பொருள் முதல்வாதம் என்கிற நவீனத் தத்துவஞானம் பிறந்த கதையை எளிமையாகவும், அவருக்கே உரித்தான அறிவாற்றலோடும் படைத்துள்ளார். அவர் ஏற்கெனவே தமிழரின் தத்துவமரபு என்ற புகழ்மிக்க நூலை மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதிய பெருமைக்குரியவர். பின்பு ஓஷோவின் தத்துவங்களை ஆய்வு செய்து ஒரு நூலை எழுதினார். தத்துவஞானம் பற்றி அவர் எழுதிய மூன்றாவது நூல் இது. இந்த நூலை எழுதுவதற்கு அவர் ஏராளமான நூல்கலிருந்து தத்துவஞானத் தகவல்களை சேகரித்து வழங்கியுள்ளார்.

கருத்து முதல்வாதமும் பொருள் முதல்வாதமும் இந்தியாவில் சுமார் 2500 ஆண்டுக்காலம் ஒன்றையன்று எதிர்த்துப் போராடின. இங்கு அவை இரண்டும் ஆத்திகமாகவும் நாத்திகமாகவும் வெப்பட்டன. இறுதிப் போரில் பிராமணியம் ஆளும் வர்க்கத்தினரால் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடப்பட்டது. இதனால் நாத்திகம் நாசுக்கான முறையிலும், படுகொலைப் பேரழிவுகள் மூலமாகவும் அழிக்கப்பட்டது. கடவுளை மறுத்த புத்தரையும், வர்த்தமான மகாவீரரையுமே கடவுளாக்கி அவற்றுக்குள் மூடநம்பிக்கைகளையும் புகுத்தி உருமாற்றினர்.

நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு பெரியார்தான் மீண்டும் நாத்திகக் கொடியை மூர்க்கமாக ஏந்தி நடைபோட்டார். துரதிருஷ்டவசமாக அவரது கருத்துகள் தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் பரவவில்லை. இப்போதும்கூட பெரியாரின் பலகோடி சொத்துக்களைக் கையில் வைத்திருப்பவர்கள்கூட பெரியாரின் கோட்பாடுகளை நாடு முழுவதும் பரப்ப எவ்வித முயற்சியும் செய்யவில்லை. வேறுயாரும் பரப்பிவிடாமல் பெரும் தடைக்கல்லாகவும் நிற்கிறார்கள். தமிழகத்தில் இது ஒரு தரித்திர நிகழ்ச்சி. சரித்திரத்தை முன்கொண்டு செல்லவிடாமல் தடுக்கும் திரு. கி. வீரமணி அவர்கன் செயல் தமிழகத்தின் தரித்திர நிகழ்ச்சியாகும்.

ஆதி மனிதன் பஞ்சபூதங்களைக் கண்டு நடுநடுங்கினான். அவற்றின் முன்னால் தனக்குத் தீங்கு நேராமல் காக்குமாறு மண்டியிட்டுக் கெஞ்சினான். இவ்வாறு இறைஞ்சுவதிலிருந்து இறையியல் பிறந்தது. இயற்கை¬யைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் தத்துவம் பிறந்தது. இறையியல் புனிதப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளையும், தனிமனித உள்ளுணர்வுக் கற்பனைகளையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. தத்துவம் விஞ்ஞான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. மதத்தைப் பின்தள்ளி விஞ்ஞானம் படிப்படியாக வளர்ச்சியடைந்தவிதம் நூலில் விளக்கப்பட்டுள்ளது.

பிரபஞ்சம் பற்றி விஞ்ஞான வளர்ச்சியற்ற காலத்தில் மதங்கன் புனிதநூல்கள் கூறிய கருத்துகளே சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தின. பிரபஞ்சத்தின் சகல பொருட்களும் மனதில் மட்டுமே உள்ளது என்றார் பிஷப் பெர்கீலி. ஆனால் பிரபஞ்சம் சடப்பொருள்களால் ஆனது என்கிறது விஞ்ஞானம். உலகம் பிரம்மத்தால் இயக்கப்படுகிறதே தவிர அது தானே இயங்குவதில்லை என்றனர் கருத்து முதல்வாதிகள். ஆனால் இந்த இயக்க மறுப்பியலை விஞ்ஞானம் தகர்த்தெறிந்துவிட்டது. பிரபஞ்சத்தில் சின்னஞ்சிறு மணல் துகலேயிருந்து பிரம்மாண்டமான சூரியன் வரைக்கும் அனைத்தும் சதாசர்வகாலமும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது; தோன்றி, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து, மீண்டும் தோன்றியே தீருகிறது என்கிறது விஞ்ஞானம். பிரபஞ்சத்தில் இயங்காதது எதுவுமே இல்லை என்ற இயங்கியல் விஞ்ஞானம் நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறையியலின் கண்டுபிடிப்பான “கடவுள்தான் உலகைப் படைத்தார், உயிரினங்களையும், மனிதர்களையும் படைத்தார்’’ என்பதை டார்வினும் இதர விஞ்ஞானிகளும் பொய் என்று நிரூபித்தனர். பிரபஞ்சமும், நட்சத்திரங்களும், பூமியும், கடலும், தாவரங்களும் விலங்கினங்களும் தோன்றிய விதம் பற்றியும், குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது பற்றியும் ஆய்வுகள் வந்தன. பிரட்ரிக் ஏங்கல்சு மனிதக் குரங்கிலிருந்து மனிதனாய் மாறியதில் உழைப்பின் பாத்திரம் குறித்து தனது ஆய்வை வெளியிட்டார்.

மூளை என்ற சடப் பொருளிலிருந்துதான் சிந்தனை பிறக்கிறது. இதையே மனசு, ஆத்மா என்று கருத்து முதல்வாதிகள் கூறினர். மூளையின் செயல்பாடு கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இதயம் துடிப்பதைப் பார்த்து இதயமே எல்லாம் என்று கருதினர். இதெல்லாம் அன்றிருந்த அறியாமையிலிருந்து வந்தது. இது குறித்து நீட்சே முதல் தத்துவஞானிகள் கருத்துகள் நூலில் ஒபாய்ச்சுகிறது. இவற்றில் இந்தியத் தத்துவஞானிகன் கூற்றுகளும் புத்தர் முதல் விவேகானந்தர், அரவிந்தர் வரை கூறியவைகளும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“மனிதன் மதத்தை உருவாக்குகிறான். மதம் மனிதனை உருவாக்கவில்லை. தன்னை இன்றும் அறியாத அல்லது ஏற்கெனவே தன்னைத் தொலைத்துவிட்ட மனிதனின் சுயஉணர்வே, சுய புகழ்ச்சியே மதம்’’ என்றார் மார்க்சு. தன்னை மெய்வாழ்வில் தொலைத்துவிட்ட மனிதன் மதம் என்ற பொய் வாழ்வில் அதை மீட்க விரும்புகிறான். தான் விரும்பும் நல்வாழ்வு பரலோகத்தில் இருப்பதால் சித்திரித்துக் கொள்கிறான். மெய்யுலகு இதயமற்றதாய் இருக்கிறது. அதனால் இதயத்தைப் பொய்யுலகில் தேடுகிறான். அபின்தரும் போதை போன்றதாயினும் மதத்தை மனிதன் சகித்துக் கொள்கிறான். தேவையிலிருந்துதான் மனிதன் கடவுளைப் படைத்தான். அந்தத் தேவை முடியும்வரை

மனிதன் கடவுளைத் தக்கவைத்துக் கொள்வான் போலும். காரணத்தை அகற்றாமல் காரியத்தை அகற்ற முடியாது.

மனிதர்களின் வாழ்நிலையும் சூழ்நிலையுமே அவர்கன் இருப்பைத் தீர்மானிக்கிறது. சமுதாய இருப்பே அவர்களின் உணர்வைத் தீர்மானிக்கிறது. சமுதாய இருப்பு பொருள் உற்பத்தியை மையமாகக் கொண்டிருக்கிறது.

பழமையை எதிர்த்து புதுமையாகச் சிந்தித்தவர்கள் திருடர்கள் என்று ஆட்சியாளர்களால் பழிக்கப்பட்டு அரசாங்க விரோதிகளாகக் கருதப்பட்டனர். மதபீடங்களால் புதுமைகள் கண்ட தத்துவஞானிகள் பலரும் கொல்லப்பட்டனர். இந்தப் படுபாதகங்களை மீறித்தான் தத்துவமும்

விஞ்ஞானமும் வளர்ந்திருக்கிறது. இயங்கியப் பொருள் முதல்வாதம் என்கிற நவீனத் தத்துவஞானம் எனும் அறிவாயுதத்தைக் கையிலெடுத்துப் பிரயோகிக்கப் புதிய தலைமுறை களமிறங்க வேண்டும். இதன்மூலமே பிற்போக்குத் தத்துவங்களை எதில் வெல்லமுடியும். சமுதாயத் தேரை இன்றும் வேகமாக இழுத்து அடுத்த நிலைக்குக் கொண்டு சேர்க்கலாம் என்று இந்நூல் முடிகிறது.

தத்துவஞானம் பயில விரும்புவோருக்கு இந்நூல் நல்ல திறவுகோலாக இருக்கும்.

தத்துவஞானம்,

அருணன்,

பாரதி புத்தகாலயம்,

சென்னை - 18

பக்கம் - 144, ரூ.50

- எஸ்.ஏ.பி.

Pin It