thirumavelan 303“நான்தான் திராவிடன் என்று நவில்கையில், தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். திராவிடம் ஒரு பயன்மரம். அத்திராவிடப் பயன்மரத்தின் கனிகளைப் பெற்றவர்களுக்கும், பயனை உணர்ந்தவர்களுக்கும் திராவிடம் தேன்போலத் தித்திக்கும். ஆனால் அப்பயன்மரத்தின் நிழலை அனுபவித்துக் கொண்டே அதன் அடிவேரை அசைத்துப் பார்க்க நினைப்பவர்களுக்கோ அது எட்டிக் காயாய்க் கசக்கும்.

திராவிடம் தமிழ்ச்சொல்லா?! தமிழரா, திராவிடரா? திராவிடமா, தமிழ்த்தேசியமா? என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருக்கும் முகநூல் போராளிகளுக்கெல்லாம் முதலுதவி போல வந்திருக்கிறது இந்நூல். “திராவிடம்” என்ற சொல்லை அழிக்க ஆரியமும், போலித் தமிழ்த்தேசியமும் கள்ளக்கூட்டு வைத்துள்ள இன்றைய சூழலில், ‘திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம்’ என்ற தலைப்பே அவர்களுக்குச் சவுக்கடி.

தமிழ் - தமிழன் – தமிழ்நாடு ஆகிய மூன்றுக்காகவும் முக்கால் நூற்றாண்டுக்காலம் எழுதியும் பேசியும் செயல்பட்ட தமிழ்த்தேசியரே தந்தை பெரியார் என்று தொடங்கும் இந்நூல் திராவிட இயக்கத்தினால் விளைந்த பயன்களை ஆயிரக்கணக்கான சான்றுகளில் அள்ளித் தருகிறது.

ஒரு தமிழ்த்தேசியர் எதைப் பேச வேண்டுமோ அவை அனைத்தையும் பேசிய ஒரே தமிழ்த்தேசியர் தந்தை பெரியார் மட்டும்தான் (பக்கம் 10) என்ற வரிகள், இன்று தமிழ்த்தேசியத்திற்கு வரி வரியாகப் பொய்யான பொழிப்புரை எழுதிக் கொண்டிருக்கும் மணியரசன்களை எட்ட நிறுத்துகிறது.

“பொருளாதார உலகமயமாக்கலை எதிர்ப்போர் நாம். ஆனால் பெரியாரிய உலமயமாக்கலை ஆதரிப்போர் நாம்! ஏனென்றால் பெரியாரியம் என்பது ஒரு இனத்துக்கு ஒரு மொழிக்கு ஒரு மாநிலத்துக்கு ஒரு நாட்டுக்கு உரியதல்ல. அதற்குள் அடங்கிவிடக் கூடியதும் அல்ல அது உலகளாவியது. ‘கடவுளை மற; மனிதனை நினை’ என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது (உலகப்பன் கட்டுரை பக்கம் 21) என்கிற வரிகளில் எவ்வளவு உண்மை பொதிந்துள்ளது.

விடுதலை, உண்மை ஆகிய ஏடுகளின் பெருமித வரலாறு இலக்கிய நயத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் கண்ட போராட்டக் களங்கள் உணர்ச்சிப் பெருக்கோடு விவரிக்கப்பட்டுள்ளன. அண்ணா, கலைஞர் என்ற இருபெரும் ஆளுமைகளைப் பற்றிய எழுத்தோவியங்கள், அவர்களை நமது கண்ணின் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.

பேராசிரியர், நாவலர் ஆகியோரைப் பற்றிய புகழாரங்கள் சில பக்கங்கள் என்றால், தினமணி, ஜெயமோகன் புரட்டுகளுக்குப் பதிலடிகள் சில பக்கங்கள்!

“திராவிடம் என்றால் எரிகிறதா?” என்ற கட்டுரை, திராவிட எதிர்ப்பாளர்களுக்குத் தீரா விடம். ‘திராவிடம்’ என்ற சொல் எதற்காகப் பயன்படுகிறது என்றால் குருமூர்த்தி முதல் மாலன் வரை – எச். ராஜாக்கள் முதல் பத்ரிகள் வரை எந்தச் சொல்லைச் சொன்னால் அவர்களுக்கு எரிச்சல் வருகிறதோ அந்தச் சொல் என்பதற்காகவே!’ (பக்கம் 88) என்ற விளக்கம் காலத்தே வெளியிடப்பட்டிருக்கும் கருத்து.

‘திராவிடத்தின் உள்ளடக்கம் தமிழ்த்தேசியமே’ என்ற கட்டுரை ஆகச் சிறந்த ஆய்வுத் தொகுப்பு. கலைஞரின் வெற்றிச் சூத்திரம் 471 என்பதற்கான விளக்கம் படிப்பதற்கு ஆவலைத் தூண்டுவது.

இந்து சமய அறநிலையத்துறை குறித்த கட்டுரையில் தரப்பட்டுள்ளப் புள்ளி விவரங்கள் நம்மை வியக்க வைக்கும். புரட்டர்களையோ வாயடைக்க வைக்கும்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு வெற்றி நடை போடும் மாட்சியை அளக்கிறது ஒரு கட்டுரை! “எந்த அலையையும் இனி மு.க. ஸ்டாலின் என்ற மலை தடுக்கும்!” என்ற வரி நம்பிக்கையை விதைக்கிறது.

“Stalin is more dangerous than Karunanidhi” என்ற வார்த்தைகளைக் கேட்கும் போது காதில் தேன் பாய்கிறது! ‘once more’ என்று கேட்கத் தோன்றுகிறது. திராவிடக் கொள்கையின் வாரிசுகள் எல்லாம் எப்போதும் dangerous தான்!” என்ற வரிகளோடு நிறைவடைகிறது இந்நூல்.

திராவிடர்களுக்குத் தின்னத் தின்னத் திகட்டாத தெள்ளமுது இந்நூல்.

நூலின் பெயர்: திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம்
நூல் ஆசிரியர்: ப.திருமாவேலன்
வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம்,
120, என்.டி.ஆர். தெரு, ரங்கராசபுரம்,
கோடம்பாக்கம், சென்னை - 24.
இணையதளம்: www.karunchattaibooks.com
பக்கங்கள்: 240
விலை: ரூ.230

வெற்றிச்செல்வன்

Pin It