கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

2008-ல் அமெரிக்காவில் வரிசையாகப் பல நிதி நிறுவனங்கள் சரிந்து விழுந்தன. எண்ணற்ற சிறு சிறு வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு இடையே, பல பெரிய நிறுவனங் களும் சரிந்து விழுந்தன. பியர் ஸ்டெர்ன்ஸ் என்ற பங்குத் தரகு விற்பனை நிறுவனத்தை அரசின் வற்புறுத்தல் காரணமாக ஜேபி மார்கன் வங்கி விலைக்கு வாங்கியது. லெஹ்மன் பிரதர்ஸ் என்ற பங்குத் தரகு நிறுவனம் திவால் ஆனது. மெரில் லிஞ்ச் நிறுவனத்தை பேங்க் ஆஃப் அமெரிக்கா என்ற வங்கி வாங்கியது.

வாக்கோவியா என்ற வங்கியை வெல்ஸ் ஃபார்கோ என்ற வங்கி வாங்கிக்கொண்டது. மார்கன் ஸ்டேன்லி, கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற மிகப்பெரிய முதலீட்டு வங்கிகள், பொதுமக்களிட மிருந்து பணம் பெறக்கூடிய வங்கிகளாக மாறின. ஏ.ஐ.ஜி என்ற அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனம் அப்போது தடுமாற ஆரம்பித்தது, இன்றுவரை சரியாகவில்லை. வீட்டுக் கடன் தரும் ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் ஆகிய இரு நிறுவனங்களிலும் அமெரிக்க அரசு எக்கச்சக்கமான முதலீட்டை உள்ளே கொண்டுவர வேண்டியிருந்தது.

சிடிபேங்க் முதற்கொண்டு அனைத்து நிதி நிறுவனங்களும் அரசிடமிருந்து பல பில்லியன் டாலர்களை உதவிக்காக வாங்கவேண்டியிருந்தது. ஒரு சிலர் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டாலும், அமெரிக்க அரசு செலவிட்ட அனைத்துப் பணமும் அதற்குத் திரும்பக் கிடைக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த நிறுவனம் அந்த நிறுவனத்தை வாங்கியது என்று மேலே வரிசையாகச் சொல்லியிருந்தேன். அதில் என்ன கஷ்டம் என்று நீங்கள் கேட்கலாம். இது எதுவுமே விரும்பி வாங்கப்பட்டவை அல்ல. உங்கள் பக்கத்து வீடு கடனில் தத்தளிக்கிறது. அவர்கள் நடுத்தெருவில் நிற்கவேண்டியதுதான் என்ற நிலை. அப்போது அந்த வீட்டில் வசிப்பவர்கள் சோறு இன்றித் தள்ளாடுவார்கள் அல்லவா? அதை விரும்பாத அரசு, உங்களை வற்புறுத்தி பக்கத்து வீட்டின் சொத்துகளையும் கடன்களையும் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. நீங்கள் மறுக்கமுடியாது. வேண்டுமானால், பக்கத்து வீட்டின் கடன்களை ஏற்பதற்காக அரசு உங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும்.

இதுதான் நடந்தது. இதனால் எல்லாம் அமெரிக்காவின் நிதிப் பிரச்னை முற்றிலுமாக ஓய்ந்துவிடவில்லை. 2008-ல் நிகழ்ந்த பொருளாதார பூகம்பத்தின் அதிர்வுகள் இன்றும் தொடர்கின்றன. இந்தப் பிரச்னை 2008-க்கு வெகு நாள்கள் முன்னதாகவே, 9/11 எனப்படும் அமெரிக்க ரெட்டை கோபுரத்தின் மீதான தீவிரவாதத் தாக்குதலை ஒட்டி ஆரம்பித்தது என்று சொல்லலாம்.

பிரச்னையின் ஆரம்பம் அமெரிக்க வாழ்க்கைமுறையிலும் அவர்களது அரசியலிலும் இருக்கிறது. கடன் வாங்கியாவது பணம் செலவழித்து, விரும்பிய பொருளை வாங்கிக் குவிக்கும் ஒரு ‘அமெரிக்கக் கனவு’ அவர்களுடையது. தன் சக்திக்கு மேற்பட்டு பொருளை நுகரவேண்டும் என்று மக்கள் ஒருபக்கம் விரும்ப, பெரும் நிறுவனங்களோ அதற்கு விளம்பரம், சிறப்புச் சலுகை என்று தூபம் போட்டன. மற்றொரு பக்கம் அரசாங்கமோ, பொருளாதார வளர்ச்சி என்பதே பொதுமக்கள் தம் இஷ்டத்துக்குப் பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஏற்படுவது என்ற எண்ணத்தில், சேமிப்பை ஊக்குவிக்காமல், செலவை ஊக்குவித்தது.

9/11 தாக்குதலை அடுத்து அமெரிக்கப் பொருளாதாரம் தடுமாறும் என்று பயந்த அமெரிக்க மத்திய வங்கி (ஃபெட்) தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான், வட்டி விகிதத்தைக் குறைத்துக்கொண்டே வந்தார். வட்டி குறைந்தால், நீங்கள் வங்கியில் வாங்கும் கடனுக்கு வட்டி குறையும். அதே நேரம் உங்கள் வங்கி வைப்புக்கும் வட்டி குறையும். எனவே பணத்தை வங்கியில் வைத்துப் பூட்டுவதற்குப் பதில், செலவு செய்யலாம் என்று தோன்றும். இல்லாத பணத்தையும் குறைந்த வட்டிக் கடனுக்கு வாங்கிச் செலவு செய்யத் தோன்றும்.

நிறுவனங்கள், தனியார்கள் என அனைவரும் அதைத்தான் செய்தனர். அவர்களுடன் சேர்ந்து அமெரிக்க அரசும் அதே காரியத்தைச் செய்தது. அமெரிக்கா என்ற நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மிக அதிகம். அதாவது அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கும் பொருள்கள் அதிகம்; வெளி நாடுகளுக்கு விற்கும் பொருள்களோ குறைவு. இந்த வித்தியாசத்தை ஈடுகட்ட அமெரிக்க அரசு கடன் பத்திரங்களை (டிரெஷரி பில்) வெளியிடும். இந்தக் கடன் பத்திரங்களை இந்தியா முதற்கொண்டு, சீனா, ரஷ்யா, பிரேசில், அரபு நாடுகள், ஜப்பான் ஆகியவை வாங்கிக் குவிக்கும். ஆக, அமெரிக்க அரசு, உலக நாடுகளிடமிருந்து கடன் வாங்குகிறது; அமெரிக்க மக்கள் அமெரிக்க வங்கிகளிடமிருந்து கடன் வாங்குகிறார்கள். அமெரிக்க நிறுவனங்கள் உலகம் எங்கும் கடன் வாங்குகிறார்கள்.

ஆனால் அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களின் வட்டியை ஆலன் கிரீன்ஸ்பான் குறைத்துக்கொண்டே வந்தார். இதனால் இந்தப் பத்திரங்களை வாங்கிய உலக நாடுகள், உலக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வருமானம் அதிகம் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அமெரிக்க நிதி நிறுவனங்கள் CDO என்ற புதிய நிதிப் பத்திரத்தை உருவாக்க ஆரம்பித்தன. அமெரிக்காவில் வீட்டுக் கடன்கள் என்பது பெரிய பிசினஸ். அனைவரும் சொந்தமாக வீடு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க அரசே வீட்டுக் கடன்களைக் கடுமையாக ஊக்குவித்தது. அப்படி உருவாக்கப்பட்ட வீட்டுக்கடன் நிறுவனங்கள்தான் ஃபேனி மே, பிரெட்டி மேக் ஆகியவை.

வீட்டுக் கடன்கள் பலவகை. கட்டாயமாகக் கையில் பணம் கிடைத்துவிடும் என்ற வகைக் கடன்கள் சில. நல்ல சம்பளம் பெறுபவர்களுக்குக் கொடுக்கப்படும் கடன்கள் இத்தகையவை. ஆனால் இங்கு ஆரம்பித்து நாளடைவில் கடன் பெறத் தகுதியற்ற பலருக்கும் வீட்டுக் கடன்கள் தரப்பட்டன. காரணம் CDO என்ற கருவிதான். அமெரிக்க அரசுக் கடன் பத்திரங்கள் அதிக வட்டி தராத நிலையில், பல்வேறு வீட்டுக் கடன்களைச் சேர்த்து ஒரு குவியலாக்கி, அவற்றிலிருந்து பல துண்டுகளை எடுத்து, அந்தத் துண்டுகளை ‘கடன் பத்திரங்கள்’ என்ற பெயரில் விற்க ஆரம்பித்தனர். நீங்கள் இந்தப் பத்திரம் ஒன்றை வாங்கினீர்கள் என்றால், மாதாமாதம், ஒரு ஆயிரம் பேர் கட்டும் வீட்டுக் கடன் ணிவிமி யிலிருந்து ஒரு பகுதி உங்களுக்கு வந்துவிடும். இது மிகவும் பாதுகாப்பான பத்திரம் என்று கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் சான்றிதழ் வழங்கின. பாதுகாப்பும் அதிகம், வட்டியும் அதிகம் என்பதால் அமெரிக்க நிறுவனங்கள் பலவும் உலக நாடுகள் முதற்கொண்டு பல அமைப்புகளும் இந்தப் பத்திரங்களை வாங்க ஆரம்பித்தன.

ஆனால் விரைவில் இந்தப் பத்திரங்கள் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டது. எல்லா வீட்டுக் கடன்களையும் இப்படிப் பத்திரமாக்கி விற்றுவிட்டால் பிறகு என்ன ஆகும்? மேலும் மேலும் வீட்டுக் கடன்களை உருவாக்கினால்தான் இந்தப் பத்திரங்களை மேலும் உற்பத்தி செய்யலாம்; அவற்றை விற்று லாபம் சம்பாதிக்கலாம். உடனே பல புதிய நிறுவனங்கள் முளைத்தன. அவற்றைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை. தெருவில் போவோர், வருவோருக்கெல்லாம் வீடு வேண்டுமா, கடன் வேண்டுமா என்று கேட்க ஆரம்பித்தார்கள். ஒரு வீடு வைத்திருப்போரை நான்கு வீடுகள் வாங்கச் சொன்னார்கள். இந்தியாவில் ஒரு வீடு வாங்கக் கடன் கேட்டால், வீட்டின் விலையில் 75%-தான் உங்களுக்குக் கடனாகத் தருவார்கள். ஆனால் அமெரிக்காவில் வீட்டின் விலையைப் போல 110% கடன் தருவதாகச் சொன்னார்கள்! ஏனெனில் வீட்டின் விலை வாங்கிய ஒரு வருடத்தில் மேலே ஏறிவிடுகிறதாம்! கடன் பெறுபவர் வேலையில் இருக்கிறாரா, சம்பளம் வாங்குகிறாரா என்றெல்லாம் கவலைப்படாமல் கடன் கொடுக்கப்பட்டது.

இப்படிக் கடன் வாங்கியவர்கள் ஒரு கட்டத்தில் வாங்கிய பணத்தை எல்லாம் செலவழித்துவிட்டு, வீட்டுக் கடனுக்கான மாதாந்திரத் தொகையைக் கட்ட முடியாமல் வீட்டை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரியல் எஸ்டேட் மார்க்கெட் விழுந்தது. ஏகப்பட்ட வீடுகள்; வாங்கத்தான் ஒருவரும் இல்லை. இதனால் CDO பத்திரங்களை வாங்கியவர்களுக்குப் பணம் வருவது நின்றுபோனது. இதனால் அமெரிக்க நிதிச் சந்தை ஆட்டம் கண்டது. அத்துடன் உலக நிதிச் சந்தையுமே ஆட்டம் கண்டது.

இதுதான் சீட்டுக் கட்டு மாளிகை சரிய ஆரம்பித்த நேரம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது இருப்புக் கணக்கைப் பார்க்க ஆரம்பித்தபோது இந்த வீட்டுக்கடன் பத்திரங்களால் பெரும் ஓட்டை இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். பெரும் ஓட்டை என்றால் பல பில்லியன் டாலர். இந்த ஓட்டையை எப்படி அடைப்பது?

இந்தக் குழப்பம் அவர்களை ஆட்கொண்ட செப்டெம்பர் 2008 முதற்கொண்டு தினம் தினம் என்ன நடந்தது என்பதை ஆண்டிரூ ராஸ் சார்கின் அற்புதமாக விளக்குகிறார். கோல்ட்மேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, மெரில் லிஞ்ச், லெஹ்மன் பிரதர்ஸ், பியர் ஸ்டெர்ன்ஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிடிபேங்க், வெல்ஸ் ஃபார்கோ, வாக்கோவியா, ஏ.ஐ.ஜி, ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் போன்ற நிறுவனங்கள் ஒரு பக்கம். இந்தப் பிரச்னையில் சிக்காத வாரன் பஃபெட் போன்ற முதலீட்டாளர், சீனா, ஜப்பான், கொரியா நாடுகளின் வங்கிகள் அல்லது அரசின் முதலீட்டு அமைப்புகள் ஆகியோர் ஒரு பக்கம். அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நிதி அமைச்சர் ஹென்றி பால்சன், அவரது ஆலோசகர்கள், ஃபெட் தலைவர் பால் பெர்னாங்க், மத்திய வங்கியின் முக்கிய ஆளுநர்கள், நாடாளுமன்ற செனட்டர்கள், ரெப்ரசென்டேடிவ்கள் ஒரு பக்கம். இந்த நிதிச் சிக்கலால் பயந்து நடுங்கும் பொதுமக்கள் மற்றொரு பக்கம்.

நிறுவனம் என்றால் அந்த நிறுவனத்தை நடத்தும் தலைமை நிர்வாகிகள், ஒவ்வொரு நிறுவனத்தின் இயக்குனர் குழுமம், அவர்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள், ஒவ்வொரு நிறுவனத்தின் உள்ளே வேலை செய்யும் முக்கியமானவர்களின் எண்ண ஓட்டங்கள், அவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றைப் பல நேர்முகங்கள் மூலம் சேகரித்து, நடந்தது நடந்தபடியே ஒப்பிக்கிறார் சார்கின். பாரதப் போர் நடக்கும்போது சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு அளித்த நேர்முகம் போல உள்ளது இந்தப் புத்தகம்.

புத்தகம் எந்தவிதக் கருத்தையும் முன்வைப்பதில்லை. இது சரியா, தவறா, யார் நல்லவர், கெட்டவர் என்று எதையும் சொல்வதில்லை. ஆனால் சமீப காலத்தில் நடைபெற்றுள்ள மிக முக்கியமான பொருளாதார நிகழ்வு ஒன்றைத் துல்லியமான வரலாறாக மாற்றிக் கொடுத்துள்ளது இந்தப் புத்தகம். இதைப் படிப்போர் நிகழ்வுகளை சரியான முறையில் அலசி, யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என்று முடிவெடுத்துக் கொள்ளலாம்.

ஒரு செய்திப் பத்திரிகையாளர் தினசரிச் செய்தியில் எதைத்தரவேண்டும் என்பதற்கு நியூ யார்க் டைம்ஸ் நிருபர் சார்கினின் இந்தப் புத்தகம் ஒரு உதாரணம். “Too Big to Fail" அதாவது இந்த நிதி நிறுவனங்கள் மிகப் பெரியதாகிவிட்டன; எனவே வீழ்ச்சி அடைய வாய்ப்பே இல்லை என்ற இறுமாப்புடன் வலம் வந்துகொண்டிருந்தவர் களுக்கு மரண அடி கிடைத்தது 2008-ல். எந்தப் பெரிய அளவை அடைந்தாலும் வீழ்ச்சியைத் தடுக்க முடியாது. அதுவும் எக்கச்சக்கமான லாபத்தைத் தேடி ரிஸ்க்கியான வியாபாரங்களிலும் நிதிப் பேரங்களிலும் ஈடுபடும் நிறுவனங்களால்... என்ற உண்மையை முகத்தில் அடித்தாற்போல நமக்குப் புரியவைக்கிறது இந்தப் புத்தகம்.