நேர்காணல்:கே. தங்கவேல், நிர்வாக இயக்குநர், அக்னி ஸ்டீல்ஸ், ஈரோடு

தங்களது வாசிப்புப் பழக்கம் எந்த வயதில் தொடங்கியது? அதற்கு உந்து சக்தியாக இருந்த சூழல் பற்றிச் சொல்லுங்களேன்.

நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உருவானது. எட்டாம் வகுப்புப் படிக்கும் போது பள்ளி நூலகத்திலிருந்து நாவல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர், தினமும் செய்தித்தாள் படிக்க ஊக்குவித்தார். ஒன்பதாம் வகுப்பு பின் போதே தீவிர வாசிப்புப் பழக்கம் என்னைத் தொற்றிக் கொண்டது. அப்போது தமிழ்வாணன் நூல்கள் மிகவும் பிரபலம். அவரது நூல்களை எடுத்துச் சென்று பயில கடும்போட்டி நிகழும். எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவுடன் நூலகமே கதியெனக் கிடந்தேன். நூலகம் திறக்கும் போது உள்ளே நுழைந்தால், மூடும் போதுதான் வெளியே வருவேன். அப்போது ராஜம் கிருஷ்ணன் நூல்களைப் பலமுறை வாசித்துள்ளேன்.

நல்ல நூல்களைத் தேர்வு செய்து வாசிக்க தங்களுக்கு உதவிகரமாக இருப்பது அல்லது இருப்பவர்கள் பற்றி...

புத்தகம் பேசுது மாத இதழும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நண்பர்களும்தான். அதிலும் குறிப்பாக தமிழ்ச்செல்வன், பவா செல்லதுரை, முத்துக்கிருஷ்ணன் போன்றோர்தான்.

ரொம்பவும் பிசியான தொழிலதிபர் நீங்கள்; வாசிப்புக்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?

இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் நேரம் ஒதுக்க முடிகிறது. 9 மணிக்கு தொடங்கும் வாசிப்பு ஒரு மணி வரை நீளும். நல்ல புத்தகங்களாகக் கையில் கிடைத்து விட்டால் எத்தனை பக்கங்களானாலும் ஒரு நாள், இரண்டு நாள் தூங்காமல் படித்து முடித்து விடுவேன்.

சமீபத்தில் தாங்கள் படித்த புத்தகங்களில் மிகவும் பிடித்தது?

ஜெயமோகனின் இன்றைய காந்தி. தற்போது வாசிப்பில் உள்ள புத்தகம் மருதனின் இரண்டாம் உலகப் போர்

தங்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டிய புத்தகங்கள் உண்டா?

எம்.எஸ். உதய மூர்த்தியின் எண்ணங்கள் உள்ளிட்ட அவரது அனைத்து தன்னம்பிக்கை நூல்களையும் வாசித்தது. ஒரு தொழில் முனைவோனாக வளர அடித்தளமிட்டது. தற்போது தன்னம்பிக்கை நூல்கள் நிறைய வருகின்றன. மாத இதழ்கள் வருகின்றன. ஆனால் எனது இளமைக்காலத்தில் உதயமூர்த்தி மட்டும் தான் இது சார்ந்து எழுதிக்கொண்டு இருந்தார்.

நாள் ஒன்றுக்கு தாங்கள் வாசிக்க விரும்பும் நேரத்திற்கும், வாசிக்கக் கிடைக்கும் நேரத்திற்குமான இடைவெளியை தங்களால் அளவிட்டுக் கூற முடியுமா?

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது வாசிக்க விரும்புகிறேன். ஆனால் இரண்டு முதல் மூன்று மணி நேரம் சராசரியாக வாசிக்கக் கிடைக்கிறது.

தங்களுக்குப் பிடித்த சமகால எழுத்தாளர்கள்?

ஜெயமோகன், எஸ்.இராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், ஞாநி, தமிழருவி மணியன்

இளைஞர்கள் இடையே வாசிப்புப் பழக்கம் மேம்பட என்ன செய்யலாம்?

முதலில் வாசிப்புக்கான வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். அந்தச் சூழலை உருவாக்காமல் இளைஞர்கள் இடையே வாசிப்புப் பழக்கம் குறைவாக உள்ளது என குறைகூறுவது சரியல்ல. கிராமப்புறப் பள்ளிகளில் சின்ன வகுப்புகளுக்கே கூட நல்ல நூலகங்களை அமைத்துத் தர வேண்டும். வாசிப்புப் பழக்கம் உருவாக மோட்டிவேசன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். ஒன்பதாம் வகுப்பு பயிலும் போது எங்களது ஒரே ஒரு ஆசிரியர் கொடுத்த உத்வேகம் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களையும் செய்தித்தாள் வாசிக்கும்படி தூண்டியதே.

ஈரோடு புத்தகத் திருவிழா பற்றி தங்கள் கருத்து என்ன?

ஈரோட்டுக்கு இது ஒரு வரப்பிரசாதம். புத்தக வாசிப்பை அடக்கி ஆளக்கூடிய, இன்னும் சொல்லப் போனால் புத்தக வாசிப்பையே அழிக்கத் துடிக்கும் மின் அணு ஊடகக் தாக்கம் உள்ள இக்காலத்தில், வாசிப்பை ஊக்குவிக்க தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த புத்தகத்திருவிழா ஒரு நல்ல முயற்சி. புத்தகக் கடைகளுக்கு ஜவுளிக்கடைகளுக்கு வருவது போல் மக்கள் வருவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. கூட்டம் கூட்டமாக மக்கள் புத்தகக் கடைகளுக்குள் நுழைந்து புத்தகங்களை உற்றுப் பார்த்து, கையிலெடுத்து அட்டையைப் புரட்டிப் பார்க்கும் அழகை பல நாட்கள் நின்று ரசித்திருக்கிறேன். அந்த அழகே தனி. இப்பகுதி மக்களின் வாழ்க்கையில் இது திருப்புமுனையாக அமையும். உடனடியாக இல்லையென்றாலும், காலம் தாழ்ந்தேனும் நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த புத்தகத்திருவிழாவை ஏற்பாடு செய்து நடத்தி வரும் மக்கள் சிந்தனைப் பேரவையையும் ஸ்டாலின் குணசேகரனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இறுதியாக, தற்போது வாசிக்க ஒதுக்கும் நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் ஒதுக்கும் எண்ணம் உண்டா?

நிச்சயம். அது எண்ணமல்ல; வருங்காலத் திட்டம். இன்னும் சில ஆண்டுகளில் எனது பிள்ளைகள் தொழிலின் முழுப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். அப்போது தொழிலதிபர் என்ற இந்தப் பொறுப்புக்கு ஒய்வு கொடுத்து விட்டு, பொதுப்பணிக்காகவும் வாசிப்புக்காகவும் எனது நேரம் முழுவதையும் அர்ப்பணிக்கப் போகிறேன். அப்போது வாசிக்க, இப்பொழுதிருந்தே புத்தகங்களைத் தேடித் தேடிச் சேகரித்து வருகிறேன்.

Pin It