“நூலகத்தில் உள்ள நூல்கள் யாவும் படிப்பதற்கே” என்ற உணர்ச்சியைத் தூண்டும் வகையில் நூலகம் அமைந்திருச்க வேண்டும் என்பர். இன்றைய சமூகம் போகும் திசை நாம் அனைவரும் அறிந்ததே. இன்றைய தமிழ்மக்கள் சீர்படுத்த, சிந்திக்கச் செய்ய, மனித மாண்பை வளர்த்து பட்டை தீட்டுவது நூலகமாகும். அந்த வகையில் ஈரோடு மாவட்ட நூலக ஆணைக் குழுவின் ஒருங்கிணைந்த இம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலகம் - 1, கிளை நூலகங்கள் - 100, ஊர்ப்புற நூலகங்கள் - 120, பகுதி நேர நூலகங்கள் - 36 - என மொத்த நூலகங்கள் 257 என்பது புள்ளி விவரக் கணக்காகும். ஈரோடு மாவட்ட நூலகங்களுக்கு நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் புதிய நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கொல்கத்தாவில் உள்ள ராஜாராம் மோகன்ராய் அறக் கட்டளை மூலம் 10 ஆயிரம் நூல்கள் வந்துள்ளன.

மேலும் அனைத்து நாளிதழ்கள், பருவ இதழ்களும் வரவழைக்கப்படுகின்றன. தற்போது பொதுமக்கள் பயன் பாட்டுக்காக இணையத் தள மையமும் அமைக்கப் பட்டுள்ளது. தேவையான தரவுகளைப் படியெடுக்க நகலக வசதியும் உள்ளது. மேலும் இந்திய ஆட்சிப்பணி, தமிழ் நாடு தேர்வாணையத் தேர்வுகளுக்குத் தேவையான நூல்களும் ஆங்கில இதழ்களும் தனிப்பகுதியில் பராமரிக்கப் படுகிறது.

நாளன்றுக்கு 400-க்கும் மேற்பட்டோர் வருகைபுரிகின்றனர். பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நூலக உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு தமிழக அரசு Ôநமது உலகம் நூலகம்Õ என்ற திட்டத்தைத் துவங்கி உள்ளது. இதன் மூலம் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.பொன் குமார் அவர்களின் முயற்சியால் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 75 ஆயிரம் மாணவ மாணவிகள் நூலக உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் 'கோடை முகாம்' என்ற சிறப்பு முனைப்புத் திட்டத்தின் மூலம் 7,8 - ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் குறுக்கெழுத்துப்போட்டி, கணித விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நூலகத்துறையின் வளர்ச்சிக்காக “தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் மற்றும் பணியாளர் நல வாரியம் என்றும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நலவாரியத்தின் உறுப்பினர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம், மரண உதவி, ஊனத்திற்கான உதவி, உறுப்பினர் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை, கண்கண்ணாடி உதவித் தொகை மற்றும் ஓய்வூதியம் போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நன்றாகச் செயல்படும் 30 நூலகங்களை தேர்வு செய்து மக்களிடையே நூலக விழிப்புணர்வைக் கொண்டு செல்ல தமிழக அரசு முனைந்து செயல்படுவது பராட்டுக்குரியது.

வாசகர் வட்டம் - செயல்பாடுகள் :

நூலகத்தின் இதயத்துடிப்பாய்ச் செயல்படுவது வாசகர் வட்டமாகும். நூலகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதோடு வாசகர்களின் உடனடித் தேவைகளை உணர்ந்து ஆக்கபூர்வான செயல்பாடுகளின் மூலம் நூலகத்தின் செயல்பாடுகளில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

மாதந்தோறும் இலக்கியக் கூட்டம் கவிதையரங்கம், நூல்கள் அறிமுகம் மற்றும் Ôவாசிக்க வாங்கÕ எனும் தலைப்பில் கலந்துரையாடல் என தொடர்ந்து நடந்தேறி வருகின்றன. ஆசிரியர்கள் மாணவப்பிரதிநிதிகள், பொதுமக்கள், வழக்குரைஞர்கள் என பல்வேறு துறைசார்ந்தோரின் ஒத்துழைப்புடன் ஈரோடு மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் செம்மையாய் இயங்கி வருகின்றது.

- முனைவர் ப. கமலக்கண்ணன், தலைவர், வாசகர் வட்டம், ஈரோடு மாவட்ட மைய நூலகம்

Pin It