நேரடியாக தமிழ்நாடு தொடர்பான வழக்கில்லை என்றாலும் கர்நாடக மாநில அரசு - எதிர் - ஆங்கில வழி தொடக்க பள்ளியினர் சங்கம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழ் வழி கல்விக்கு எதிரான பேரிடியாக வந்துள்ளது.

govt schoolதலைமை நீதிபதி ஆர்.எம். லோடா தலைமையில் நீதிபதிகள் ஏ.கே. பட்நாய்க், எஸ்.ஜே. முக்கோபாத் தியாயா, தீபக் மிஸ்ரா எஃப் எம் இப்ராகிம் கலிபுல்லா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயம் கடந்த 2014 மே 6 அன்று இத்தீர்ப்பை வழங்கியது. (சிவில் அப்பீல் 5166 - 5190 / 2013)

கர்நாடக மாநில அரசு கடந்த 29/4/1994 அன்று கர்நாடக மாநிலத்தில் இயங்கும் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிற்றுமொழியாக எது இருக்க வேண்டும் என்பது குறித்து ஆணை வெளியிட்டது. 1994--95 கல்வியாண்டிலிருந்து கர்நாடகாவில் இயங்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் அனைத்திலும் 1 ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு வரை தாய்மொழியோ அல்லது கன்னடமோ பயிற்று மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலம் தாய் மொழியாகக் கொண்டோர் மட்டுமே விதிவிலக்காக ஆங்கிலத்தை பயிற்றுமொழியாகக் கொள்ளலாம் என இந்த அரசாணை வலியுறுத்தியது.

கர்நாடகத்தில் இயங்கும் தன்நிதிப் பள்ளி முதலாளிகள் இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கில் 2/7/2008 அன்று தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதி மன்றம், கர்நாடக அரசின் இந்த ஆணை அரசமைப்புச் சட்ட விதி 21, 19 (1) (g), 29(1), 30 (1) ஆகியவற்றிற்கு எதிரானது என்று கூறி கர்நாடக அரசின் தாய் மொழிக் கல்வி ஆணையை ரத்துசெய்தது.

இதன் மீது பல்வேறு இழு பறிகள் நடந்ததற்குப் பிறகு உச்சநீதி மன்றத்தை கர்நாடக அரசு அணுகியது மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இச்சிக்கலை அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பி 5/7/2013 அன்று ஆணையிட்டது.

அரசமைப்பு ஆயம் ஆய்ந்து தீர்ப்பளிக்க வேண்டிய சிக்கல்களாக கீழ்வரும் ஐந்து கேள்விகளை அது முன்வைத்தது.

1. தாய்மொழி என்றால் என்ன? ஒரு குழந்தை கருத்துப் பறிமாற்றத்தின் போது எந்த மொழியை எளிமையாகக் கொள்கிறதோ அதையே அதன் தாய் மொழி என்று கொள்ளலாமா? அப்படியானால் அதை தீர்மானிப்பது யார்?

2. தாய்மொழி திணிப்பு என்பது அரசமைப்புச் சட்ட கூறுகள் 14, 19, 29 மற்றும் 30 ஆகியவை வழங்கும் அடிப்படை உரிமைகளை எந்த வகையிலாவது பாதிக்கிறதா?

3. தொடக்கப் பள்ளி நிலையிலேயே ஒரு மாணவரோ அல்லது அவரது பெற்றோரோ அல்லது ஒரு குடிமகனோ பயிற்று மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை உண்டா?

4. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் என்றால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளையும் மட்டுமின்றி தனியார் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளையும் குறிக்குமா?

5. அரசமைப்புச் சட்டக்கூறு 350A படி ஓர் மாநில அரசு மாநிலத்தில் வாழும் மொழிச் சிறுபான்மையினரை அவர்களது தாய்மொழியில் மட்டும் தான் தொடக்கப் பள்ளியில் பயில வேண்டும் என வற்புறுத்த முடியுமா?

இதன் மீது விசாரணை நடத்தி 6. 5. 2014 அன்று அளித்த தீர்ப்பில் அரசமைப்புச் சட்ட ஆயம் கீழ் வருமாறு தீர்ப்புரைத்தது.

“கல்வித்துறை வல்லுநர்கள் ஒரே ஒத்தக் கருத்தாக 1 முதல் 4 முடிய தொடக்கப் பள்ளி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு தாய்மொழி வழியில் கற்பிக்கப்பட்டால்தான் அவர்கள் கற்றுக் கொள்வது எளிதாக இருக்கும் என்று கூறலாம் ஆனால் அரசமைப்புக் கூறுகள் 29 (1) மற்றும் 30 (1) ஆகியவற்றின் பாதுகாப்புப் பெற்றுள்ள பள்ளிகளிலும் அரசமைப்புச் சட்டக் கூறு 19 (1) (g) வழங்கும் தொழில் செய்யும் உரிமையின் அடிப்படையில் அரசு உதவி பெறாமல் நடைபெறும் தனியார் பள்ளிகளிலும் தாய் மொழிவழி கல்வி வழங்கப்பட்டால் தான் அப்பள்ளிகளை மாநில அரசு அங்கீகரிக்கும் என நிபந்தனை விதிப்பது சட்ட விரோதமானது என்ற முடிவுக்கு இந்நீதிமன்றம் வருகிறது. இவ்வாறான தாய்மொழித் திணிப்பு அரசமைப்புச் சட்ட கூறு 19, 29, 30 ஆகியவற்றிற்கு எதிரானது என இந்த அரசமைப்புச் சட்ட ஆயம் முடிவு செய்கிறது.’’

அரசமைப்புச் சட்ட ஆயத்தின் முன்னால் வைக்கப்பட்ட கேள்விகளிலிருந்தே தாய்மொழி கல்விக்கு எதிரான மனநிலையில்தான் உச்ச நீதிமன்றம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, கர்நாடகத்தில் இயங்கும் பள்ளிகள் அரசின் அங்கீகாரம் பெற வேண்டு மென்றால் அவற்றில் 1 முதல் 4ஆம் வகுப்பு வரை தாய்மொழியோ அல்லது கன்னடமோதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று அவ்வரசு கூறியதை “தாய் மொழித் திணிப்பு’’ என உச்சநீதிமன்றம் கேள்வி நிலையிலேயே வரையறுக்கிறது. “தாய்மொழி’’ என்பதும், “திணிப்பு’’ என்பதும் ஒரே சொற்றொடரில் இணைக்கப் படுவதே இயல்புக்கு முரணானது என்பதைக் கூட உச்சநீதிமன்றம் புறக்கணிக்கிறது. தாயைத் திணிப்பதோ, தாய்மொழியை திணிப்பதோ நடவாத ஒன்று. தாய் என்றாலும் தாய்மொழி என்றாலும் அவை திணிக்கப்படக் கூடியவை அல்ல. தாய்மொழில் கருத்துப் பரிமாறிக் கொள்வது சமூகமாக வாழும் மனிதனின் இயற்கையான இயல்பு. இந்த அடிப்படை அறிவியல் உண்மையைக்கூட உச்சநீதிமன்றம் குப்பையில் வீசுகிறது.

குழந்தை உளவியலாளர்கள் உலகம் முழுவதும் ஆய்ந்து கூறும் ஒரே கருத்து கல்வியில் பயிற்று மொழியாக, குறிப்பாக தொடக்கக் கல்வியில் பயிற்று மொழியாக தாய் மொழியே இருத்தல் வேண்டும் என்பதாகும். இந்த அடிப்படை அறிவியலை எந்த அறிவார்ந்த விவாதமுமின்றி போகிற போக்கில் உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் தூக்கி எறிகிறது.

ஆங்கிலத்தை பயிற்று மொழியாக திணிப்பதையே உண்மையில் உச்சநீதிமன்றம் விரும்புகிறது. ஆனால் அதை வெளிப்படையாக சொல்லத் தயங்குகிறது. குழந்தையோ அல்லது அதன் சார்பில் அதன் பெற்றோரோ கேட்கும் மொழியில் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது. நாளைக்கு ஒருவர் ஸ்பானிய மொழியிலோ, சீனமொழியிலோ அல்லது எத்தியோப்பிய மொழியிலோ பயில விரும்பினால் அந்த மொழி வழியில்தான் கல்வி வழங் கப்படவேண்டும் என்று பொருளா? அது சாத்தியப்படுமா? ஆங்கிலத்தைத்தான் பயிற்று மொழியாக்க விரும்பினால் அதையாவது வெளிப் படையாக அறிவிக்கும் அறத் துணிவு அற்ற மன்றமாக அரசமைப்புச் சட்ட ஆயம் தாழ்ந்து போய் உள்ளது.

உண்மையில் இத்தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தையே குடைகவிழ்த்து விட்டுள்ளது. இச்சிக்கலில் அரசமைப்புச் சட்ட ஆயம் அறிவித்துள்ள ஒவ்வொரு முடிவும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. வெறும் சட்டப் பார்வையில் பார்க்கிறவர்களுக்குக் கூட இந்த உண்மை தெளிவாகப் புலப்படும்.

இந்த மேல் முறையீட்டு வழக்கு நடப்பது 2009 க்குப் பிறகு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்த அரசமைப்புச் சட்ட ஆயம் தனது தீர்ப்புக்கு டி.எம்.ஏ.பாய் அறக்கட்டளை - எதிர்-கர்நாடக மாநில அரசு என்ற தீர்ப்பையும் (2002, 8 SCC, , 481), பி.எ இனாம்தார் எதிர்-- மகாராட்டிரா மாநில அரசு என்ற வழக்கின் தீர்ப்பையும் (2005, 6 SCC,, 537) பெரிதும் சார்ந்திருக்கிறது. டி.எம்.ஏ பாய் அறக்கட்டளை வழக்கில் 11 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயம் படுபிற் போக்கான தீர்ப்பை வழங்கியது. (இத்தீர்ப்பு குறித்து விரிவான திறனாய்வுக்கு காண்க : 2003-பிப்ரவரி, தமிழர்கண்ணோட்டம்)

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று “குழந்தைகளுக்கான கட்டணமில்லாத கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009’’ என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இச் சட்டம் இந்திய குடிமக்களாக உள்ள 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணமில்லா கட்டாயக் கல்வி பெறுவதை உறுதி செய்து அதனை அரசின் கடமையாக வலியுறுத்தியது. முழுவதும் கட்டணமில்லாக் கல்வியை இது கொண்டுவந்துவிட வில்லை என்ற போதிலும் அரசிடம் உதவி பெறாததன் நிதிப் பள்ளிகளும் தங்கள் பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போது தங்கள் பள்ளி அமைந்துள்ள பகுதியில் நலிந்த பிரிவு மாணவர்களை குறைந்தது 25 விழுக்காடு அளவுக்காவது கட்டணமில்லாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனக் கூறியது. இந்த இழப்பை அரசு ஈடு செய்ய வேண்டும் என்றும் கூறியது.

இச்சட்டம் செயலுக்கு வர வேண்டுமென்றால் மேற்சொன்ன டி.எம்.ஏ.பாய் அறக்கட்டளை வழக்குத் தீர்ப்பை கடந்தாக வேண்டும், இல்லையென்றால் நீதிமன்றத் தால் இச்சட்டம் தள்ளுபடி ஆகிவிடும் என கல்வியாளர்களும் சட்ட வல்லுநர்களும் எடுத்துக் கூறினர். இந்த அடிப்படையிலேயே 1. 4. 2010 அன்று ஒரு திருத்த சட்டத்தின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 21கி என்ற புதிய கூறு சேர்க்கப்பட்டது.

“6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டணமில்லாத இலவசக் கல்வியை அரசு வழங்கும். இதற்கான வழிமுறைகளை சட்டத்தின் மூலமாக அரசு தீர்மானிக்கும்’’ என்று 21A கூறியது. 2009 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட கட்டாய இலவசக் கல்விச் சட்டத்திற்கு அரண் சேர்ப்பதற்கே இக்கூறு சேர்க்கப் பட்டது.

21A வந்ததற்குப் பிறகு சட்டத்தில் புதிய நிலைமை ஏற்பட்டு விட்டது. டி.எம்.ஏ பாய் தீர்ப்பு கடக்கப்பட்டு விட்டது. சட்டத்தின் பார்வையில் புதிதாக எழுந்துள்ள இந்த நிலைமையை கணக்கில் கொள்ளாமலேயே தலைமை நீதிபதி லோடா தலைமையிலான இந்த உச்சநீதிமன்ற ஆயம் தீர்ப்புரைத்துள்ளது. இதற்குப் பிறகும் டி.எம்.ஏ பாய் தீர்ப்பை தனது தீர்ப்புக்கு பெரிதும் அடிப்படையாகக் கொள்வது சட்டத்திற்கும் நீதிமுறைமைக்குமே எதிரானது.

ஏற்கெனவே அரசமைப்புச் சட்டக் கூறு 21 வழங்கும் “உயிர் வாழும் உரிமை’’ என்பதற்கு கண்ணியத்தோடு வாழும் உரிமை என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் விளக்கமளித்துவிட்டது. இந் நிலையில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னிகிருஷ்ணன் வழக்குத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் “ கண்ணியமாக வாழ்வதற்கு கல்வி உரிமை மிக அடிப்படைத் தேவை என்பதால் கல்வி உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும்’’ எனத் தீர்ப்புரைத்தது. இது குறித்தும், அதன் பிறகு 2009 இல் பிறப்பிக்கப்பட்ட கட்டாய கட்டணமில்லா கல்விச் சட்டம் குறித்தும் நடைபெற்ற நீண்ட விவாதங்களுக்குப் பிறகு 21A சேர்க்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டக் கூறு 19(1) கூறும் பிற அடிப்படை உரிமைகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாகவும் தனித்த வகை அடிப்படை உரிமையாகவும் இருப்பதால் 19(1) இல் திருத்தம் செய்து சேர்க்காமல் தனித்த ஒன்றாக 21கி சேர்க்கப் பட்டது. இதற்குப் பிறகும் 19(1) வழங்கும் பிற அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கல்வி குறித்த உரிமையை சேர்த்துப் பேசுவது இன்னும் உச்ச நீதிமன்றம் மனத் தளவில் 2009 ஆம் ஆண்டை கடக்கவில்லை என்று காட்டுகிறது. 21கி வந்த பிறகு பழைய படி 19 (1) (g) உள்ளிட்ட உரிமைகளின் கீழ் இதனை விவாதிப்பது பொருந்தாது.

அரசமைப்புச் சட்டக் கூறு 21A யின் வலுவில் நிற்பதே 2009 ஆம் ஆண்டு கட்டாய கட்டணமில்லா சட்டமாகும். எனவே கல்வி குறித்த எந்த பிரச்சினையையும் முதன்மையாக 21A மற்றும் 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றின் வெளிச்சத்தில் விவாதிப்பதே பொருத்தமானதாகும். ஆனால் இந்த அரசமைப்புச் சட்ட ஆயம் 21A குறித்து கண்மூடிக் கொண்டதாகவே தெரிகிறது.

21A யின்படி நிலைநிறுத்தப் பட்டுள்ள கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தின் பிரிவு 29 (2) (g) “குழந்தைகளின் தாய்மொழியே எந்த அளவு முடியுமோ அந்த அளவிற்கு பயிற்று மொழியாக இருக்க வேண்டும்’’ என்று கூறுகிறது. இதனை செயல்படுத்தும் அதிகாரம் அரசமைப்புச் சட்டக் கூறு 162ன்படி மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப் படையிலேயே இந்தப் பயிற்றுமொழி ஆணைகர் நாடக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையை கடக்காமல் உச்சநீதிமன்றம் புதிய முடிவுக்கு போவதற்கு சட்ட வழிமுறையே இல்லை. ஆனால் சட்ட நெறிகள், அவை குறித்த வாதங்கள் எதிலும் இறங்காமல் கண்ணை மூடிக் கொண்டு பயிற்று மொழியைத் தீர்மானிப்பது 19(1) (g) ன்படி அவரவர் தனி உரிமை என்று கூறுகிறது.

இவர்கள் பெரிதும் சார்ந்திருக் கும் டி.எம்.ஏ பாய் தீர்ப்பே கூட அரசமைப்புச் சட்டக்கூறு 162ன்படி மாநில அரசுக்கு உள்ள கல்வி ஒழுங்குமுறை அதிகாரத்தை தள்ளு படி செய்யவில்லை. அத்தீர்ப்பின் பத்தி 54 ‘19(1) (g) மற்றும் (26) (a) வழங்கும் உரிமைப்படி நடத்தப் படும் கல்வி நிறுவனங்கள் மாநில அரசின் ஒழுங்கு முறைக்கு உட்பட்டவை’ என்றுதான் கூறுகிறது.

அத்தீர்ப்பின் பத்தி 115ம் இதே செய்தியை வேறு சொற்களில் கூறுகிறது.

நீதிபதிகள் இதை எடுத்துக் காட்டினாலும் ஒரே வார்த்தையில் “அதுவேறு’’ என்று முகத்தை திருப்பிக்கொள்கின்றனர்.

குழந்தை உளவியலாளர்கள் சொல்லும் அறிவியல் ஆய்வையும் வாத வழிப்பட்டு எதிர்கொள்ளாமல், அரசமைப்புச் சட்ட விவரங்களையும் சிந்திக்காமல், இவர்கள் சார்ந்திருக்கும் தீர்ப்பில் உள்ளதையும் கூட கருதிபார்க்காமல் தான டித்த மூப்பாக தாய்மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டிய தில்லை என தள்ளுபடி செய்கிறார்கள். எந்தத் தீர்ப்பாக இருந்தாலும் அது சட்டநெறி முறைபடிதான் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்ற நீதி முறைமை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

அரசமைப்புக் கூறு 29(1), 30(1) ஆகியவை இத்தீர்ப்பில் அடுத்து விவாதிக்கப்படும் முக்கியக் கூறுகளாகும்.

29(1) தனித்த மொழி, எழுத்து வடிவம், பண்பாடு உள்ளவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் தங்களது மொழி, எழுத்து பண்பாடு ஆகியவற்றை காத்துக் கொள்ள உரிமைப் படைத்தவர் ஆவர் என்று கூறுகிறது.

அதாவது ஒரு மாநிலத்தில் வாழும் மொழிச் சிறுபான்மையிருக்கு அவர்களது மொழியில் கல்வி வழங்க வேண்டும் என்று பொருள்.

கர்நாடக அரசின் ஆணையோ, தாய்மொழி அல்லது கன்னடம் பயிற்று மொழியாக இருக்கும் என்று கூறுகிறது. 29 (1) முரணாக மொழிச் சிறுபான்மையினர் மீது கன்னடம் பயிற்று மொழியாகத் திணிக்கப்படவில்லை.

29 (1) மீறப்பட்டுள்ளதாக நிலை நாட்ட முடியாத சூழலில் 30(1)க்குள் இத்தீர்ப்பு பதுங்கிக் கொள்ளப் பார்க்கிறது.

30 (1) கூறுவதாவது: “மத அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ சிறுபான்மையினராக உள்ள அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் நிறுவி நிர்வாகம் செய்ய உரிமை படைத்தவர்கள் ஆவர்’’ என்பதாகும்.

இதற்கு முன்னும், டி.எம்.ஏ பாய் தீர்ப்பிலும் இப்போதும் 30(1) கூறப்பட்டுள்ள ”தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப’’ (of their choice) என்றால் என்ன? என்பது குறித்து விரிவான விவாதங்கள் நடந்துள்ளன. மத, மொழிச் சிறுபான்மையினர் தங்கள் மொழி சார்ந்த அல்லது மதம், சார்ந்த கல்வி நிறுவனங்களை, அறக்கட்டளைகளை நடத்துவது குறித்து 29(1) கூறுகிறது. ஆனால் 30(1) மத, மொழி சிறுபான்மையினர் மதசார் பற்ற பொதுக் கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கான உரிமையையே “தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப’’ என்ற தொடரின் மூலம் பெறுகின்றனர்.

பயிற்று மொழி குறித்தோ, பாடத்திட்டம் குறித்தோ, அவரவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்ற ஒழுங்கு முறைக்கு அப்பாற்பட்ட எந்த உரிமையையும் “தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப’’ என்ற தொடரின் மூலம் இந்நிறுவனங்கள் பெற்று விடாது. டி.எம்.ஏ.பாய் தீர்ப்பும் கூட அதை குறிப்பிடுகிறது.

‘ஆனால் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப’ என்பதன் மூலம் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்கள் தாய் மொழியோ அல்லது மாநில பொது மொழியோ அல்லாத வேறு ஒன்றை பயிற்று மொழியாக வைத்துக்கொள்ள தங்கு தடையற்ற அதிகாரம் பெற்று விட்டதாக 30(1)க்கு லோடா ஆயம் பொருள் கூறுகிறது. ஆனால் அது குறித்த எந்த வகை சட்ட விளக்கமும் அளிக்கும் பொறுப்பை அது ஏற்க வில்லை.

அடுத்து அரசமைப்புக் கூறு 350A குறித்து இந்த அரசமைப்பு ஆயம் மனம்போன போக்கில் கூறிச் செல்கிறது. 1956 ஆம் ஆண்டு மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு அந்தந்த மாநிலங்களில் பலகாலமாக வாழும் மொழி, மதச் சிறுபான்மையினர் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.

மாநில சீரமைப்பு ஆணையம் 1955லேயே இச்சிக்கல் குறித்து விவாதித்தது. அதன் பரிந்துரையில் “புதிதாக நிறுவப்படும் மொழிவழி மாநிலங்களில் வாழும் மொழிச் சிறுபான்மையினர் அவர்களது தாய்மொழியில் கல்வி பெற உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்’’ என்று கூறியது. அதற்கு ஏற்ப மொழிவழி மாநிலங்கள் உருவனாதற்கு பிறகு 350A என்ற புதிய கூறு அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப் பட்டது.

இக்கூறு ஒரு மாநிலத்திலுள்ள மொழிச் சிறுபான்மையினரின் தாய்மொழி உரிமையை உறுதி செய்கிறதே அன்றி, அம்மாநிலச் சிறுபான்மையினர் அரசின் வரம்பீடுகளுக்கு அப்பாற்பட்டு எந்த மொழியில் வேண்டுமானாலும் கல்வி கற்பதற்கு தலைவிரிகோலாமான உரிமையை வழங்கிவிட வில்லை. 350Aஐ எழுத்துக் கூட்டிப் படித்தாலும், அத்திருத்தச் சட்டம் முன் வைக்கப்பட்டபோது கூறப்பட்ட நோக்க உரையைப் பார்த்தாலும் இது தெளிவாகத் தெரியும். ஆனால் 350Aக்கு இந்த அரசமைப்புச் சட்ட ஆயம் மனம்போன போக்கில் விளக்கம் கூறுவது எந்த சட்ட மாணவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.

மொத்தத்தில் இத்தீர்ப்பு ஒரு நீதிமன்றம் கடைபிடிக்க வேண்டிய சட்ட நெறிமுறைகள் எதுவும் பின்பற்றபடாமல் மனம்போன போக்கில் எழுதப்பட்டுள்ள - சட்டவியலுக்கு சற்றும் பொருந்தாத தீர்ப்புரையாகும்.

2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுந்துள்ள புதிய சட்ட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இச்சிக்கல் குறித்து மறு ஆய்வு செய்ய 9 அல்லது 11 நீதிபதிகள் கொண்ட விரிவான அரசமைப்பு ஆயத்திற்கு அனுப்புவதே இப்போதுள்ள சட்ட வாய்ப்பில் செய்யக்கூடிய ஒன்றாகும்.

கர்நாடக அரசாணை குறித்த வழக்காக இருந்தாலும், தமிழ்நாட்டில் பிறபிக்கப்பட்டு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள தமிழ் வழிக் கல்வி ஆணையையும் இத் தீர்ப்பு பாதிக்கும். எனவே மேற்கண்ட கோரிக்கையை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இத்தீர்ப்பை கண்டு அயர்ந்து நிற்காமல் முன்னிலும் வலுவோடு தமிழ்வழிக் கல்விக்கான இயக்கத்தை நாம் முன்னெடுத்தால் நடைமுறையிலும், சட்ட வழியிலும் தமிழ்வழிக் கல்வி உரிமையை நிலைநாட்டும் வாய்ப்பு ஏற்படும். அத்திசையில் தமிழின உணர்வாளர்கள் வலுவாக செயல்பட வேண்டும்.

Pin It