குடந்தையில் 12.7.2014 அன்று நடந்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாட்டு நிறைவரங்கில் தோழர் பெ. மணியரசன் பேசியதின் எழுத்து வடிவம்:

மீத்தேன் திட்ட எதிர்ப்பு - காவிரிப்படுகை பாதுகாப்பு மாநாடு உண்மையில் பெருந்திரள் மாநாடாக சிறப்புடன் நடந்து கொண்டுள்ளது. இம் மாநாட்டிற்கு இரவு பகலாகப் பாடுபட்ட தோழர்களின் அயரா உழைப்பைத் தோழர் கோ.வரதராசன் இங்கே எடுத்துரைத்தார்.கடும் உழைப்பை நல்கி மாநாட்டை சிறப்புடையதாக்கிய தோழர்கள் அனைவர்க்கும் நான் சார்ந்திருக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பிலும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பிலும் நெஞ்சு நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாடு காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்க்கிறது. அதுமட்டுமல்ல, காவிரிப் படுகையில் ஓ. என்.ஜி.சி பெட்ரோலியம் எடுப்பதையும், எரிவளி எடுப்பதையும் எதிர்க்கிறது. காவிரி நீரில் தமிழகத்திற்குள்ள உரிமையை மீட்கவும் இம்மாநாடு குரல் கொடுத்துள்ளது. இம்மூன்றுக்கும் தீர்மானங்கள் போடப்பட்டுள்ளன.

காவிரிப் படுகையை மூன்று ஆபத்துகள் சூழ்ந்துள்ளன. 1. தமிழகத்திற்குரிய காவிரி நீரைக் கர்நாடகம் தடுத்து வைத்திருப்பது. 2. மீத்தேன் எடுப்பது. 3. எண்ணெய், எரிவாயு குழுமம் (ளிழிநிசி) காவிரி படுகையில் பெட்ரோலியம் எடுப்பது, எரிவாயு எடுப்பது.

நாம் மீத்தேன் எடுப்பதை மட்டும் எதிர்க்கவில்லை. எரிவாயு எடுப்பதையும், பெட்ரோலியம் எடுப்பதையும் எதிர்க்கிறோம். ஏன்? பெட்ரோலியம் எடுக்கும் இடங் களில், எரிவளி எடுக்கும் இடங்களில் நிலத்தடி நீர் இரசாயனக் கலவையாகி, குடிநீருக்குப் பயன்படாத நீராக, பாசனத்திற்குப் பயன்படாத நீராகக் கெட்டுப் போய்விட்டது. இதனைத் திருநகரி மக்கள் மெய்ப்பித்துள்ளார்கள்.

திருநகரியில் எரிவளி எடுப்பதைத் தடைசெய்யக் கோரி கடந்த 9 ஆம் தேதி சீர்காழியில் உண்ணாப் போராட்டம் நடத்தினார்கள். அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது திருநகரியில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர், நச்சுத் தன்மையுடன் நிறம் கெட்டு இருப்பதைப் பாட்டிலில் பிடித்து வந்து காட்டினார்கள்.

எனவே பெட்ரோலியம், எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி.யை அனுமதித்தால், காவிரிப் படுகை - பாசன நீரற்ற - குடி நீரற்ற மண்டல மாக மாறிவிடும். நிலத்தடி நீர் நஞ்சானால் அந்த நிலத்தில் சாகு படி செய்ய முடியாது.

காவிரிப்படுகைப் பாதுகாப்புச் சட்டம் :

பேராசிரியர் செயராமன் அவர்கள் ஒரு நல்ல கருத்தை முன் வைத்து வருகிறார். காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்ற வேண்டும். அதற்குரிய சட்டம் இயற்ற வேண் டும் என்கிறார். இதுமிகமிக முகா மையான கோரிக்கையாகும்.

காவிரிப் படுகை என்பது உலகத்தில் எங்கு மில்லாத மிகப் பெரிய சாகுபடிச் சமவெளி என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நான் உத்திரப் பிரதேசம், பீகார், பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்குச் சென்றிருக்கி றேன். கங்கைச் சமவெளியை ஓரளவுபார்த்திருக்கிறேன். ஆனால் அங்கெல்லாம் நம் காவிரிச் சம வெளி அளவிற்கு மிகப்பெரிய சம வெளி இல்லை. அங்கங்கே மலை களும், குன்றுகளும் சாகு படிக்குத் தகுதியில்லாத நிலப்பகுதிகளும் குறுக்கிடும்.

ஆனால் நம்முடைய தஞ்சை, திருவாரூர், நாகை மூன்று மாவட் டங்களில் மலைகளோ, குன்று களோ இல்லை. மேலணை என்று சொல்லப்படுகின்ற திருச்சி முக்கொம்பிலிருந்து கிழக்குக் கடற்கரை வரை ஒரே சமவெளி. சாகுபடிச் சமவெளி; வளமான மண்!

தஞ்சாவூர் மாவட்டம் 3,397 சதுர கிலோ மீட்டர் பரப்புக் கொண்டது. நாகை மாவட்டம் 2, 715 சதுர கிலோ மீட்டர், திருவாரூர் மாவட்டம் 3, 397 சதுர கிலோ மீட்டர் ஆக மொத்தம் 8, 489 சதுர கிலோ மீட்டர். திருச்சி, குளித்தலை, முசிறி, இலால்குடி வட்டங்கள், கடலூரில் காட்டு மன்னார்குடி, சிதம்பரம் வட்டங்கள் எனச்சேர்த்தால் சற்றொப்ப 10,000 சதுரகிலோ மீட்டர் பரப்பு காவிரிப் படுகையின் சாகுபடிப் பரப்பு. இவ்வளவு பெரிய சாகுபடிச் சமவெளி காவிரிப்படுகை!

கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகளுடன் ஒப்பிடும்போது, காவிரி மிகவும் சிறிய ஆறுதான். அதில் நமக்கு 192 டி. எம்.சி. தண்ணீர் என்பது மிகவும் குறைவானது. ஆனால் தமிழ்நாட் டில் காவிரிதான் பெரிய ஆறு. அதற்கு ஈடாக வேறொரு ஆறில்லை. 12 மாவட்டங்களில் 26 இலட்சம் ஏக்கர் சாகுபடிக்கு காவிரி நீர்தான் பாசன நீர் 19 மாவட்டங்களுக்குக் குடிநீராகக் காவிரி நீர் செல்கிறது.

சென்னைக்கு வீராணம் ஏரியிலி ருந்து காவிரி நீர் செல்கிறது. இது போதாதென்று, இப்போது மேட்டூர் அணையிலிருந்து நேரடியாகக் குழாய் மூலம் 12 டி.எம்.சி. தண்ணீர் சென்னைக்குக் கொண்டு போக வேலை நடந்துள்ளது. புதுக் கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, பரமக்குடி, இராமநாதபுரம் வரை காவிரி நீர் செல்கிறது. திருப்பூருக்கு வேலூருக்கு காவிரி நீர் செல்கிறது.

கிருஷ்ணா நீரைப் பெற்றார்களா?

192 டி. எம்.சி.யில் மேலும் 12 டி. எம்.சி. புதிதாகச் சென்னைக்குக் கொண்டு போனால் மிச்சம் எவ்வ ளவு தண்ணீர் பாசனத்திற்குக் கிடைக்கும்? இந்தத் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட போது, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நான் அதை எதிர்த்து அறிக்கை கொடுத்தேன். சென்னை நமது தலைநகரம். தமிழகத்தின் எல்லா மாவட்ட மக்களும் சென்னையில் வாழ்கிறார்கள். நான் மாதத்தில் அதிக நாட்கள் சென்னையில் இருக்க வேண்டிய தேவை இருக்கி றது. சென்னை மக்களுக்குத் தட்டுப் பாடில்லாமல் தண்ணீர் தர வேண்டிய பொறுப்பு இருக்கிறது. கிருஷ்ணா ஆற்றிலிருந்து ஓர் ஆண்டிற்கு 12 டி. எம்.சி. தண்ணீர் சென்னைக்கு வர வேண்டும். அதற் குரிய கால்வாய் வெட்டுவதற்கு தமிழக அரசு ஆந்திரப் பிரதேசத்திற்குப் பணம் அளித் திருக்கிறது. கிருஷ்ணா தண்ணீரை சென்னைக்குத் தர ஆந்திரப் பிரதேச தமிழக அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் இருக்கிறது.

எந்த ஆண்டாவது 12 டி.எம்.சி தண்ணீரைக் கிருஷ்ணாவிலிருந்து சென்னைப் பெற்றிருக்கிறதா? இல்லை. கடந்த ஆண்டு 3.87 டி.எம்.சி தண்ணீர்தான் கிருஷ்ணாவிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறது. கால் வாயில் உடைப்பு என்றார்கள்; கண்டலேறு அணை யில் பழுது என்றார்கள். அதையெல்லாம் செப்பனிடத் தமிழக அரசு மேலும் பணம் கொடுத்துள்ளது. சென்னைக்குரிய தண்ணீரைத் தமிழக அரசு ஆந்திரா விடமிருந்து ஏன் கேட்டுப் பெறவில்லை? கடந்த ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி, இது பற்றி என்ன முயற்சி எடுத்தார்கள்? எந்த ஆண்டிலாவது 12 டி.எம்.சி. தண்ணீரைக் கிருஷ்ணாவிலிருந்து எந்த ஆட்சியாவது பெற்றதா? இல்லை. அதற்கு முயற்சி எடுக்காமல், இருக்கின்ற கொஞ்சம் காவிரி நீரையும் காலி செய்யத்தானே முயல்கிறார்கள். இதைப்பற்றி காவிரிப்படுகையிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி உழவர் அமைப்புகளோ; கட்சிகளோ குரல் கொடுக்காதது ஏன்?

தமிழகம் தழுவிய போராட்டம் வேண்டும்:

காவிரியின் உரிமையை மீட்கத் தமிழகம் தழுவிய போராட்டம் ஏன் நடத்தப்படுவதில்லை? சோழ மண்டலத்திற்கும், புதுக்கோட்டையிலிருந்து, இராம நாதபுரம் வரை பாண்டிய மண்டலத்திற்கும், சேலத்தி லிருந்து ஈரோடு, திருப்பூர் வரை கொங்கு மண்டலத் திற்கும், சென்னை, வேலூர் உட்படத் தொண்டை மண்டலத்திற்கும் காவிரி நீர் குடிநீராகப் போகிறது. அப்படி இருந்தும், தமிழகம் தழுவிய போராட்டம் காவிரி நீரைப் பெற ஏன் நடைபெறவில்லை?

அரிசியை ஆந்திராவிலிருந்தும், அரியானாவிலிருந்தும் வாங்குகி றார்கள். குடிநீரை அது போல் வாங்க முடியுமா? தமிழக அரசு அரிசியை இலவசமாகத் தருகிறது. ஆனால் தண்ணீரைப் பாட்டில் பாத்து ரூபாய் என்றல்லவா விற் கிறது. அரிசியை இறக்குமதி செய்ய லாம்; தண்ணீரை இறக்குமதி செய்ய முடியுமா? தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெறத் தமிழகம் தழுவிய போராட்டங்களைப் பெரிய கட்சி கள் நடத்தாதது ஏன்?

காலம் காலமாகத் தமிழர்களின் தாயாக விளங்கி வந்த காவிரி ஆற்றின் உரிமையை- சட்டப்படி யான உரிமையை -நிலைநாட்டாத இந்திய அரசு காவிரிப் படுகையைக் காலி செய்ய மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரிப்படுகை இரசாயன மண் ணாகிவிடும். சாகுபடிக்குத் தகுதியற்ற மண்ணாகி விடும். நிலத்தடி நீர், இரசாயனக் கலவையாகி, பாச னத்திற்கும், குடிநீருக்கும் பயன் படாமல் போய்விடும். எண்ணெய், எரிவளி எடுப்பதற்காக ஓ. என். ஜி. சி யை அனுமதித் தால், மீத்தேன் எடுப்பதால் ஏற்படும் அதே தீய விளைவுகள் இதனாலும் ஏற்படும்.

எங்கே போவோம் :

தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் தங்க தமிழ்வேலன் பேசும் போது, மக்கள் வாழத் தகுதி யில்லாத மண்ணாக, காவிரிப்படுகை மாறிவிட்டால், தமிழ் மக்கள் வாழ்வதற்கு எங்கே போவார்கள் என்று கேட்டார். தமிழ் ஈழத்தில் சிங்களவர்கள் தமிழர்களை இனப்படுகொலை செய்தபோது உரிமையோடு அவர்கள் தமிழகத்திற்கு வந்தார்கள். தமிழகத்தில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டால் நாம் உரிமையோடு எந்த மண்ணுக்குப் போக முடியும் என்று கேட்டார். அவர் கேட்ட கேள்வி உண்மையானது. அது பற்றி எண்ணினால் அதிர்ச்சியும் அச்சமும் ஏற்படுகிறது. எனவே, காவிரிப் படுகையைப் பாதுகாக்க வேண்டியது தமிழக மக்களின் தவிர்க்க முடியாத கடமையாகும்.

மனநிலை மாற வேண்டும் :

இங்கு பேசிய கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளி தோழர் முகிலன், காவிரியின் துணை ஆறான நொய்யல் ஆறு, திருப்பூர் சாயப்பட்டறைகளின் இரசா யனக் கழிவுகள் கலந்ததால் செத்துப்போன ஆறாகி விட்டது. நொய்யல் தண்ணீரை பயன்படுத்த முடியாத அளவிற்கு இரசாயன நீராகி விட்டது என்பதை எடுத்துக் காட்டினார். தொழிற்சாலைக ளால் சுற்றுச் சூழல் மாசுபட்டுப் போனதை- தோல் பதனிடும் தொழி லால் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாததாய் ஆகிப் போனதை எடுத்துக் காட்டினார்.

பழைய காலத்தில் சுற்றுச் சூழல் மாசுபடாத வகையில் இயற் கைத் தாவரங்களைக் கொண்டு சாயம் உருவாக்கப்பட்டது. இப் போது மிக மோசமான இரசா யனக் கலவைகளைக் கொண்டு சாயம் தயாரிக்கப் படுகிறது. இதன் கழிவுகளால் சுற்றுச் சூழல் நஞ்சாக மாறிப் போகிறது என்றார், உண்மை.

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரான ஆச்சாம் பட்டி யில் ஆவாரஞ்செடிகளை அறுத்து அந்தக் குச்சிகளைத் தோலுரித்து அந்தப் பட்டையை விற்பார்கள் வியாபாரிகள் அதை லாரிகளில் வாங்கிச் செல்வார்கள். எதற்கு என்று கேட்டால் “சாயம் தயாரிப் பதற்காக’’ என்பார்கள். சுற்றுச் சூழல் மாசுபடாத வகையில் அப்போது சாயம் தயாரிக்கப்பட்டது. துணிகளுக்கு வண்ணங்கள் ஏற்றப்பட்டன.

இப்பொழுது அவ்வாறான வண்ணத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆளை அடிப்பது போல், பகட்டான வண்ணங்கள் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். என்பதை விட அவ்வாறு விரும்பும் படி, மக்களை மயக்கும் விளம்பரங்களை நிறுவனங்கள் வெளியிடுகின்றன. முதலாளிய நிறுவனங்கள் தங்கள் இலாபத்திற்காக மக்களின் விருப்பங்களைக் கட்டமைக்கின்றன.

நாம் அவ்வாறான முதலாளிய நிறுவனங்களை எதிர்ப்பதோடு நின்றுவிடக் கூடாது. சுற்றுச் சூழ லைக் கெடுக்கும் தொழிற்சாலை களை -தொழில்களை மூடு என்ப தோடு நின்று விடக் கூடாது. மக்க ளின் விருப்பங்களை மக்களின் நுகர்வை - சரியான திசையில் சமூக நோக்கில் நாம் மாற்றி அமைக்க வேண்டும்!

ஆறுகளை - சுற்றுச் சூழலை நாசஞ்செய்யும் இரசா யன வண்ணங்களைப் புறக்கணிக்கும் மனநிலையை மக்களிடம் உருவாக்க வேண்டும். அவற்றைக் கண்டு அரு வருக்கும் மனநிலையை உருவாக்க வேண்டும். சுற்றுச்சூழலை மாசுப் படுத்தாத சாதாரண வண்ணங் களில் மனநிறைவு காணும் உளவியலை - பக்குவத்தை நாம் உருவாக்க வேண்டும்.

எல்லாவற்றையும் அனுபவித்து ஆக வேண்டும். அனைத்தையும் துய்க்க வேண்டும். ஆசைபடுவதற்கு அளவு கிடையாது. ஆசைப்பட்டதையெல்லாம் அனுப விக்க வேண்டும் என்ற நுகர்வுவெறியை மக்களிட மிருந்து விரட்ட வேண்டும். குறைவாக நுகர வேண்டும். அளவாக நுகரவேண்டும் என்ற மன நிலையை மக்களிடம் வளர்க்க வேண்டும். இந்த வகையில் புதிய தமிழனை, புதிய தமிழச்சியை நாம் மறு வார்ப்பு செய்தாக வேண்டும்.

பெருஞ்தொழிற்சாலைகளால் ஆபத்து!:

நமக்கொரு தொழில் கொள்கை இருக்க வேண்டும். முதலாளியத்தில் இருந்தாலும் சோசலிசத்தில் இருந்தாலும் பெருந் தொழிற்சாலைகள், மையப்படுத்தப் பட்ட பெரும் உற்பத்தி ((Mass Production) நிறுவனங்கள் சுற்றுச் சூழலைக் கெடுத்தே தீரும். ஒவ்வொரு மண்டலத்திற்கும், தற்சார் புள்ள சிறு சிறு தொழிற் சாலைகள் இருந்தால் போதும். காவிரிப் படுகையில் எடுக்கப்படும் மீத்தேன் - தமிழ்நாட்டிற்காகவா? இல்லை.

பல வெளிமாநிலங்களுக்காக - வெளிநாடுகளுக்காக - முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காக - அதிகார அரசியல்வாதிகளின் இலஞ்ச இலாவண்யத்திற்காக!

தமிழ் நாட்டிற்குள் கூட மையப்படுத்தப்பட்ட பெரும் உற்பத்தி கூடாது. மண்டல வாரியாகத் தற்சார்பு உற்பத்தியே தேவை. பெட்ரோலியத்திற்கு மாற்றாக - மீத்தேனுக்கு மாற்றாக - சுற்றுச் சூழலைக் கெடுக்காத ஆற்றல்களை உருவாக்க வேண்டும்.

முதலாளிய மனநிலை என்று ஒன்று உள்ளது. சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் தொழில் செய்கிறோமே, இது நம் குடும்பத்தாரையும் நம் வாரிசுகளையும் சேர்த்துத் தானே பாதிக்கும் என்ற கவலை பெரும்பாலும் பெருமுதலாளிகளுக்கு - ஏகபோக முதலாளிகளுக்கு இருப்பதில்லை. இலாபம்- கொள்ளை இலாபம் - சந்தைப் போட்டியில் வெற்றி என்பவை மட்டுமே அவர்களின் குறிக்கோள்களாக இருக்கும். அவர்களின் வெறியாக இருக்கும். அது ஒருவகை மனநோய் - மனத்திரிபு! நாம் முதலாளிகளின் குடும்பத்தார் நலனுக்கும் - அவர்களின் வாரிசுகளின் நலனுக்கும் சேர்த்துக் கவலைப் படுகிறோம்.

விஞ்ஞான வழிபாடு கூடாது :

தமிழ்நாட்டில் நிலவிய முற்போக்குத் தத்துவங்கள் - ஒருவகையான விஞ்ஞான வழிபாட்டை உருவாக்கி விட்டன. அறிவியல் ஆராய்ச்சி தேவை! ஆனால் அறிவியல் வழிபாடு கூடாது. விஞ்ஞானம் மட்டுமே மேலானது - விஞ்ஞானத்தின் மூலம் மட்டுமே விடிவு காலம் வரும் - வாழ்க்கைத் தரம் உயரும், விஞ்ஞானம் கூறுவதை மட்டுமே நம்ப வேண்டும் என்ற விஞ்ஞான வழிபாட்டைத் தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ளார்கள்.

விஞ்ஞானம் சமூகத்திற்குப் பணியாற்ற வேண்டும்; விஞ்ஞானம் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது. தொழில் நுட்பம் சமூகத்திற்கு தொண்டு செய்ய வேண்டும். தொழில் நுட்பம் சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்தக் கூடாது. தொழில் நுட்பம் சமூகத் திற்குக் கீழ்ப்படிய வேண்டும். சமூகம் தொழில் நுட்பத் திற்குக் கீழ்ப்படியக்கூடாது. விஞ்ஞானம் மனிதர்களுக் காக - விஞ்ஞானத்திற்காக மனிதர்கள் இல்லை.

இந்தியாவில் நீடிக்க முடியுமா?:

தோழர் முகிலனும், தோழர் கோவை இராம கிருட்டிணனும், ஆபத்தான தொழில்கள் தமிழகத்தைச் சூழ்ந்துள்ளதை சுட்டிக் காட்டினார்கள். வடக்கே கல்பாக்கம் அணு உலை, தெற்கே கூடங்குளம் அணு உலை. கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டன. ஒரு அணு உலைக் கட்டிக் கொள்வோம் என்றார்கள். இப்போது மேலும் ஏழு அணு உலைகள் கூடங் குளத்தில் கட்டத்திட்டமிடுகிறார்கள். அணு உலை வெடிப்பும், கதிர்வீச்சும் ஏற்பட்டால் தென் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடும் அழியக் கூடிய ஆபத்து உள்ளது. இது போதாதென்று தேவாரத்தில் அணுக்கதிர் ஆராய்ச்சி நிறுவனம், திருவண்ணா மலையில் கவுத்தி மலையை காலி செய்கிறார்கள்.-

தமிழக மணல், தாது மணல் கொள்ளை போகிறது, காவிரிப்படுகையில் மீத்தேன் திட்டம் ஓ.என்.ஜி.சி சீரழிவுகள். மீனவர்கள் மீன் பிடிக்க முடியவில்லை. சிங்கள அரசு அன்றாடம் தமிழக மீனவர்களை சிறை பிடிக்கிறது. காவிரி. முல்லைப்பெரியாறு, பாலாறு உரிமைகள் பறிபோகின்றன. சிறுவாணித் தண்ணீர்க் குழாயை மலையாளிகள் அடைத்துவிட்டார்கள். பரம்பிக்குளம், ஆழியாறு, தூணக்கடவு, போன்ற தமிழக நீர்த் தேக்கங்கள் தங்களுடையது என்கிறது கேரளம்.

ஓர் இடத்தில் அரித்தால் சொறிந்து கொள்ளலாம். உடம்பு முழுக்க அரித்தால் இரத்தத்தை தூய்மைப் படுத்த, நச்சுக் கிருமிகளை அழிக்க மருத்துவம் செய்தாக வேண்டும்.

ஒரு வீட்டிற்குள் ஒரு அறையில் வெடிகுண்டுகள், இன்னொரு அறையில் அணு குண்டுகள். அடுத்த அறையில் அமிலப் பீப்பாய்கள் வைத்திருந்தால் அந்த வீட்டில் குடும்பம் வாழுமா?

இந்தியாவால்தான் இத்தனைத் தீமைகளும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளன. ஆதலால், இந்தியாவிலி ருந்து தமிழ்நாடு விடுதலை பெறுவதே இத்தனை தீமைகளிலிருந்தும் நாம் விடுபடுவதற்கு ஒரே தீர்வு. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆரியர் - தமிழர் பகை தொடர்கிறது. கிளிநொச்சியை அழித்த அதே ஆரியம் தான் தமிழ்நாட்டை அழிக்கவும், தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கவும் துடிக்கிறது. துணை போகிறது.

எனக்கு முன் இங்கு பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் அண்ணன் வெள்ளை யன் அவர்கள் கச்சத்தீவை இந்தியா சிங்களர்களுக்குக் கொடுத்ததைக் கண்டித்தார். “கச்சத்தீவு இந்தியாவுக்குச் சம்பந்தமில்லாதது’’ என்று உயர்நீதி மன்றத்தில் இந்திய அரசு மனுதாக்கல் செய்ததை சுட்டிக்காட்டி, அப்படி யென்றால் தமிழ்நாடு இந்தியாவிற்குச் சம்பந்தம் உள்ளதா என்று நாங்கள் கேட்க வேண்டி வரும் என்றார். இப்படி ஒரு கேள்வியை, நானோ, இங்கு பேசிய கொளத்தூர் மணியோ கேட்டால் பிரிவினை வாதிகள் என்று எளிதாகக் கூறக்கூடும். ஆனால் அண்ணன் வெள்ளையன் தமிழ்நாடு விடுதலை கேட்பவர் அல்லர்; தமிழின உணர்வாளர். அவரே மனம் நொந்து “கச்சத்தீவு இந்தியாவுக்குச் சம்பந்தம் இல்லாதது என்று அவர்கள் கூறினால், நாம், தமிழ் நாடு இந்தியாவுக்குச் சம்பந்தமுள்ளதா என்று கேட்க வேண்டி வரும் என்று கூறுகிறார் என்றால் - இந்த மனநிலை இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அண்ணன் வெள்ளையன் வெளியிட்ட இந்த மனநிலை இன்று ஒவ்வொரு சராசரித் தமிழனுக்கும், தமிழச்சிக்கும் ஏற்பட்டுள்ள மனநிலை என்பதை உணரவேண்டும். நாம் கூறும் “தமிழ்நாட்டு விடுதலை’’ என்ற தீர்வை ஒளிவு மறை வின்றிக் கூற வேண்டும்.

தமிழினத்தின் கொள்கலன்:

தமிழ்த் தேசியம் என்பது ஒரு கட்சியின் முழக்க மல்ல, ஓர் அமைப்பின் முழக்க மல்ல! அது தமிழினத் தின் முழக்கம்! தமிழ்த் தேசியம் என்பது தமிழ் இனத்தின் கொள்கலன் ஆகும்.

தமிழ் இனத்தின் எல்லா ஆற்றல்களையும் உள்ளடக்கியது. மக்கள் சார்ந்த எல்லாக் கோட்பாடு களையும் உள்ளடக்கியது. மீத்தேன் திட்ட எதிர்ப்பு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, பெண்ணுரிமை, தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மக்கள் சமத்துவம், தமிழர் மருத்துவம், ஆன்மிகம், பகுத்தறிவு எனப் பல்வகைக் கோட்பாடு களை உள்ளடக்கியது தமிழ்த் தேசியம்.

காய்ச்சலுக்கு ஒரு மருத்துவர், காச நோய்க்கு வேறொரு மருத்துவர், இதய நோய்க்கு இன்னொரு மருத்துவர், புற்று நோய்க்கு மற்றொரு மருத்துவர் என்று பல்வகை நோயாளிகள் தனித்தனி மருத்துவரை நாடுவார்கள். ஆனால் தமிழ்த் தேசியம் எல்லா நோய்க்கும் சிறந்த வல்லுநர்களை ஒரே இடத்தில் வைத்திருக்கும்.

பன்முக வல்லுநர் சிறப்பு மருத்துவமனை ((Multy Specialty Hospital) போன்றது. சமூகத்திற்குத் தேவையான, சமூகத்திற்குப் பயன்படும் எல்லா வகைக் கோட்பாடுகளையும் ஆற்றல்களையும் உள்ளடக்கியது தமிழ்த் தேசியம்!’’

Pin It