கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை
மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி
ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற
பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்;
மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சிநெய்தல்
நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தனவன்;
கோட்டைச் சுவரெடுத்துக் கூடும் படையமைத்து
நாட்டைப் புரந்து நலந்தந்தான்; நாளும்
குடிபழி தூற்றாது கோலோச்சி நல்ல
படியரசு செய்து பயன்தந்து பேர்கொண்டான்;
... ... ...
வாழ்ந்த தமிழினத்தின் வாய்த்த வரலாறு
சூழ்ந்து சொலக்கருதின் சொல்லில் அடங்காது
நாகரிகத் தொட்டில் நமது திருநாடு
வீழ்ந்த வரலாறு விண்டால் மனம்நோகும்;
முச்சங்கம் கண்டு மொழிவளர்த்தோன் எப்பகையின்
அச்சங்க ளின்றி அமைதியில் நூல்படைத்தோன்
ஆங்கிலத்தால் ஆரியத்தால் ஆதிக்க இந்தியினால்
தீங்கு வரக்கண்டு திண்டாடி நிற்கின்றான்
... ... ...
காசுக்கும் மாசுக்கும் கண்ட படிஎழுதும்;
ஆசைக்குட் பட்டே அலைகின்றான் பாவிமகன்;
நல்ல அரசியலில் நஞ்சைக் கலந்துவிட்டான்;
சொல்லும் மொழியெல்லாம் சூதன்றி வேறில்லை;
சூதாட் டரசியலில் சொக்கித் திரிபவரைச்
சூதாட்டக் காயாக்கிச் சொக்கட்டான் ஆடுகிறான்;
பண்பாட் டரசியலைப் பாழடித்துச் சாகடித்துத்
தன்பாட்டில் மட்டும் தனியார்வம் காட்டுகின்றான்;
கண்டுமுதல் காணும் களமாக்கி அச்செயலைத்
தொண்டென்றும் சொல்லித் தொலைக்கின்றான் மக்களிடம்;
. .. ... ...
விண்முட்ட வாழ்ந்து வியந்த வரலாறு
மண்முட்டச் சாய்ந்து மடிவதோ? பீடுடுத்து
வாழ்ந்த வரலாறு வீழ்ந்து மறைவதோ?
தாழ்ந்து கெடுதல் தகுமோ? எனவெழுந்து
பண்டை வரலாற்றைப் பாரில் நிலைநிறுத்தி
மண்டும் புகழ்சேர்க்க வந்தோர் சிலராவர்;

Pin It