ஜம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் மெஃபூபா முபத் இந்து ஆங்கில நாளிதழுக்கு (08.12.2014) அளித்த செவ்வியில் “இராசீவ் காந்தி கொலையாளிகளை உயிர் வாழ அனுமதித்துவிட்டு, அப்சல் குருவைத் தூக்கிலிட்ட நடுவண் காங்கிரசு அரசு தமிழ்நாட்டிற்கு ஓர் அளவுகோலையும், காசுமீருக்கு வேறொரு அளவு கோலையும் கடைபிடித்தது” என்று குற்றம் சாட்டியுள்ளாதே, அது உண்மையா?

இராசீவ் காந்தி கொலை வழக்கில் அப்பாவித் தமிழர்களைத் தூக்கிலிடத்தான் காங்கிரசு அரசு தீவிரமாக முயன்றது. அவர்களின் கருணை மனுக்களை ஏற்க மறுக்கும்படி குடியரசுத் தலைவருக்குப் பரிந்து ரைத்தது. கருணை மனுக்கள் மறுக்கப்பட்டு, தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது. தூக்குக் கயிறுகள் அணியம் என்று அறிவித்தது. அந்நிலையில், தமிழகம் கொந்த ளித்து எழுந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டு தூக்கிலிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் தமிழகத்தின் மூன்று தமிழர்கள் உட்பட பலரின் சாவுத் தண்டனையை நீக்கி, வாழ்நாள் தண்டனை ஆக்கியது.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து, நடுவண் அரசு காங்கிரசு மறு ஆய்வு மனுப் போட்டது. அவ் வழக்கு இப்போது, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதி களைக் கொண்ட அரசமைப்பு அமர்வின் ஆய்வில் உள்ளது.

இத்தனை மெய்நடப்புகளையும் ஒரே அடியாக மறுப்பதுபோல், தமிழர்களுக்கு ஒரு நீதி காசுமீரிகளுக்கு வேறொரு நீதியா என்று மெஃபூபா கேட்பது தவறானது.

அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும் தமிழர்களும் காசுமீரிகளும் ஒடுக்கப்பட்ட மக்களாக - உரிமை பறிக்கப்பட்ட மக்களாக இருக்கிறார் கள் என்பதே தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகள், தமிழின உணர்வுக் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், உரிமை உணர்ச்சியுள்ள தமிழர்கள் அனைவரின் ஒட்டு மொத்தக் கருத்தாகும்.

அப்சல் குருவைத் தூக்கிலிடக்கூடாது என்று தமிழ்நாட்டில் மனித உரிமை அமைப்புகளும் தமிழின உணர்வு அமைப்புகளும் பல கூட்டங்கள் ஆர்ப்பாட் டங்கள் நடத்தின. கருத்துப் பரப்புரைகள், கட்டுரைகள் வெளியிட்டன. காசுமீரைச் சேர்ந்த பேராசிரியர் ஜீலானி போன்றவர்கள் இங்கு வந்து அக்கூட்டங்களில் பேசியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், மெஃபூபா பேசத் தமிழர்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

தமிழின உரிமைப் போரா?டம் நடத்தும் தமிழர்கள் - பரந்த மனப்பான்மையுடன், ஒடுக்கப்பட்ட எல்லா இனங்களின் உரிமைகளுக்காகவும் போராடுகிறோம்; அவ்வின மக்களை நேசிக்கிறோம். ஆனால், மற்ற இனங்களில் அப்படி இல்லையே என்பது வருத்தமாகத் தான் இருக்கிறது. அதற்காக காசுமீர் மக்கள் மீதுள்ள நமது அக்கறையை நாம் குறைத்துக் கொள்ளக் கூடாது.

நடுவண் திட்டக் குழுவிற்கு மாற்றாகப் புதிய அமைப்பை உருவாக்கிடத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி நடத்திய முதலமைச்சர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில், நடுவண் அரசு - மாநில அரசு என்ற பாகுபாடில்லாமல் இருதரப்பாரும் ஒரே இந்திய அணியாக செயல்படுவோம் என்று கூறியுள் ளார். இதன் பொருள் என்ன?

பொதுவாக, நரேந்தி மோடி ஒரு சொற்சால சோக்குப் பேர்வழி. ஆனால் அவரின் சொற்சாலங் களுக்குப் பின்னால், மக்களுக்குக் கேடான அதே வேளை பன்னாட்டு முதலாளிகளுக்கும் பார்ப்பனப் பாசிசத்துக்கும் ஆதரவான கருத்துகள் மறைந்திருக்கும்.

நடுவண் அரசு வேறு - மாநில அரசுகள் வேறு என்ற ஏற்றத் தாழ்வில்லாமல் நடுவண் அமைச்சர வையும் மாநிலங்களில் அமைச்சரவையும் அணியாக இணைந்து கலந்து பேசி முடிவுகள் எடுக்கும் கூட்டுறவுக் கூட்டாட்சியை செயல் படுத்துவோம் என்று முதலமைச்சர்கள் மாநாட்டில் மோடி பேசியுள்ளார்.

ஆனால், அந்த ஒரே அணிக்குள் மூன்று அணிகள் இருக்கும் என்று கூறியுள்ளார் மோடி. இந்தியத் தலைமை அமைச்சர் + மாநில முதலமைச்சர்கள் இரண்டாவது அணி; நடுவண் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் மூன்றாவது அணி.

இந்தக் கூட்டணியில் தலைமை அமைச்சர் மட்டும் அதிகாரம் செலுத்தும் பெரிய அண்ணனாக இருப்பார். மாநில முதலமைச்சர் தமது அதிகாரிகளை - நடுவண் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டுத் தனியே நிற்பார். நடுவண் அதிகாரிகளும் மாநில அதிகாரிகளும் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் கீழ் செயல்படுவார்கள். தலைமை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கும் நிலையில் வலிவிழந்து நிற்பார். எனவே, மோடி முன்மொழியும் இந்திய அணி மாநில உரிமைகளுக்குப் பிணி!

கடந்த 5.12.2014 அன்று ஜம்மு காசுமீர் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்கி 11 படையாட்களும் 3 காவல்துறையினரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானிலிருந்து காசுமீரிக்குள் ஊடுருவியிருக்கிறார்கள். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளைப் பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை எனில், பாகிஸ்தானுக்கு உதவிட இந்தியா தயாராக உள்ளது என்று இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். இந்திய இராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று தடுப்பு வேலைகளில் ஈடுபட அனுமதி கோருகிறாரா ராஜ்நாத் சிங்?

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவுகின்றவர்களைப் பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை என்று கூறும் ராஜ்நாத் சிங் - ஊடுருவி உள்ளே நுழைபவர்களை இந்தியாவால் தடுக்க முடியவில்லை என்பதை மறைக்கிறாரே! பாகிஸ்தான் திருப்பிக் கேட்டால் என்ன விடைசொல்வார்கள்?

Pin It