தமிழ்நாட்டில் சிலருக்கு தமிழ். தமிழர் நலன். தமிழீழம் என்றால் ஒவ்வாமையாகி விடுகிறது, தமிழன உணர்வாளர்களைத் தாக்குவதற்கு ”அடங்கா வெறியுடன் அலைகிறார்கள், தமிழ் இன உணர்வாளர்களை அவதூறு செய்வதில் எதிரிகளைவிட “கோடரிக்காம்புகள்’’ நம்மினத்தில் அதிகம்.

கடந்த மார்ச் 28 அன்று ”இனம்’’ திரைப்படம் வெளியானது. தமிழீழவிடுதலைப் போராட்டத்தை, விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக இத்திரைப்படம் உள்ளது, எனவே தமிழகத்தில் இத்திரைப்படத்தை திரையிடக் கூடாது என்ற கோரிக்கை எழுப்பட்டது.

தமிழகத் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவர் விக்கிரமன் ”கருத்து சுதந்திரத்தில் பிறர் தலையிடக் கூடாது’’ என்று சொன்னார், தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கருத்துக்கு மதிப்பளித்து படத்தை திரையரங்குகளில் இருந்துபடத்தின் இயக்குனர் லிங்குசாமி திரும்பப் பெற்றுக்கொண்டார்,

தமிழகத்தின் எதிர்ப்புகளை விட இயக்குனர் லிங்குசாமி அதிகம் பயந்தது புலம் பெயர்ந்த தமிழர்களுக்குத்தான், ஏனென்றால். லிங்குசாமி மிகுந்த பொருட்செலவில் உருவாக்கி வரும் சூர்யா நடிக்கும் ”அஞ்சான்’’ கமலஹாசன் நடிக்கும் ”உத்தம வில்லன்’’ படங்களைப் புறக்கணிப்போம் என்று புலம் பெயர்ந்த தமிழர்கள் அறிவித்தது தான் காரணம்.

ஏப்ரல் 2 இல் தமிழ் இந்து நாளிதழில் இரா.திருநாவுக்கரசு என்பவர் ”இனம்’’ கண்டு கொள்வோம் என்ற கட்டுரையொன்று எழுதியுள்ளார்.

ennam-movie- 600”இனம்’’ படத்தை இயக்கிய மலையாளி சந்தோஷ் சிவன் கூட இவ்வளவு பதறியிருக்க மாட்டார், கட்டுரையாளர் திருநாவுக்கரசு அப்படி பதறுகிறார். தமிழ் உணர்வாளர்கள் மீது கடும் கோபத்துடன் பாய்கிறார்.

“தமிழ் உணர்வாளர்களின் கருத்துக்கு எதிர் மறையான எந்த விதமானபடைப்பும், தமிழ் இன விரோதம் என்று முத்திரை குத்தப்படும் அபாயம் இருப்பதை இயல்பான அரசியல் நிலை என்று தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொண்டது எப்படி என்று தெரியவில்லை’’ என்று அங்கலாய்கிறார். புலம்புகிறார்.

”இனம்’’ திரைப்படம் திரையிடமுடியாமல் போய் விட்டதே என்ற வயிற்றெரிச்சலோடு தமிழ் உணர்வாளர்கள், மீது விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீது புழுதி வாரித்தூற்றுகிறார்.

தமிழ்க் கலாச்சாரம் - சமூக அரசியல் ஆய்வாளர் என்று தன்னைக் சொல்லிக்கொள்ளும் இரா. திருநாவுக்கரசு உண்மையில் ”இனம்’’ படத்தை பார்த்து விட்டுத் தான் இந்த கட்டுரை எழுதினாரா? என்ற ஐயம் எழு கிறது. படத்தின் காட்சிகளை விளக்குவதை விட்டு விட்டு தமிழ் உணர்வாளர்கள் மீது அவதூறை அள்ளி வீசுவதில்தான் அக்கரை காட்டுகிறார்.

இக்கட்டுரையில் “இந்தத் திரைப்படம் கடந்த 65 ஆண்டுகளாக சிங்களப் பேரினவாத அமைப்புகள் மேற் கொண்டதன் கொடுமைகளை நியாயப்படுத்திப் பேச வில்லை என்று நிச்சயமாகச் சொல்லாம். அதே சமயம் சிங்கள ராணுவம் நடத்திய படுகொலைகளை ஆதரித்தும் பேசவில்லை’’ என்கிறார். படத்தில் புலிகளுக்கும், சிங்கள இராணுவத்திற்கும் சண்டை நடக்கும் போது தமிழர்களை சிங்கள இராணுவம் பாதுகாப்பது போன்ற காட்சி.

பள்ளிக்கூடத்தில் வகுப்பு நடந்துகொண்டிருக்கிற போது புலிகள் வருவார்கள் -திரையைக் கட்டுவார்கள்- படம் திரையிடப்படும் - மாணவர்கள் புலிகளுடன் சென்றுவிடுவார்கள் - சில நாட்கள் கழித்துவரும் மாணவன் அவனை வளர்த்து வரும் சரிதாவிடம் சொல்லுவான் ”அங்க எனக்கு சரியான உணவில்லை, உறக்கமில்லை’’ சரிதா சொல்லுவார் ”உன்ன எப்படி யெல்லாம் வளர்க்கனும்னு நினைத்திருந்தேன்- இப்படி பண்ணிட்டியே’’...

ஓடையில் தண்ணீர் அள்ளி, புத்த பிக்கு வடிகட்டி குடத்தில் ஊற்றுவார். துணியில் உள்ள மீன் குஞ்சு களை அள்ளி ஓடையில் விடுவார். அங்கு வரும் தமிழ்க் குழந்தைகளுக்கு புத்த பிக்கு மாதுளம் பழம் தருவார்.

மலையாளி சந்தோஷ் சிவன் சிங்களவர்களை எப்படி அடையாளம் காட்டுகிறார். விடுதலைப் புலி களை எப்படி அடையாளம் காட்டுகிறார். திருநாவுக் கரசால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை, ஏன்?

புலிகள் அமைப்பு மீதுள்ள எரிச்சல் திருநாவுக்கர சின் கண்களை மறைக்கிறது. புலிகள் மீதுள்ள வன்மம் இந்த கட்டுரையில் நன்கு வெளிப்படுகிறது.

“விடுதலைப் புலிகள் மட்டுமே போராட்டத்தின் நிரந்தரக் கதாநாயகர்கள் என்று தமிழ் உணர்வாளர்கள் நிறுவ முயற்சிப்பது ஏன் என்று தெரியவில்லை?’’

விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யார் கதாநாயகர்கள் என்று சமூகஅரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு அடையாளம் காட்ட வேண்டியது தானே! என்ன தயக்கம்.

“இந்தத் தமிழ் உணர்வாளர்கள் தமிழ்நாட்டில் தங்களுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்று அறிவார்களா?’’ என்று கேட்கும் திருநாவுக்கரசர் தமிழ் உணர்வாளர்களுக்கு மதிப்பில்லை என்றால் பாதுகாப்பு கொடுத்து படத்தை ஓட்ட வேண்டியதுதானே.

“சங்கம் வளர்த்த மதுரையில் தமிழ் வழி மழலையர் பள்ளி இல்லை. தாய் மொழி தெரியாமல் இன்று தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து உண்மையான தமிழ் உணர்வாளர் அச்சமடைவார்’’ என்று கவலை கொள்ளும் திருநாவுக்கரசு இதை யெல்லாம் மாற்றாமல் “இனம்” படத்தை தடுப்பது என்ற தமிழ் உணர்வு என்று நக்கலடிக்கிற பாணியில் எழுதுகிறார்.

தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யலாம் என்று சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அறிவித்த போது உடனே ”கடவுளுக்கு பிடித்த மொழி மவுனம்’’ என்றார்கள். தமிழ்நாட்டில் வெங்காய விலை ஏறிவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. இப்போது போய் கடவுளுக்கு அர்ச்சனை மொழி எது என்ற விவாதம் தேவையா? என்றார்கள். திருநாவுக்கரசும் பழைய பாணியில் இதே வகை கேள்விகளை கேட்கிறார்.

எந்த ஒரு கருத்தும் எந்த சூழலில், யாரால், எதற்காக சொல்லப்படுகிறது என்பதை நாம் புரிந்துக்கொண்டு செயல்படவேண்டும். நான்காம் கட்ட ஈழப்போர் பின்னடைவுக்கு உள்ளான நிலையில் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவும், அவனுக்கு துணை நின்றவர்களும் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப் படவேண்டும் என்று போராடி வருகிறோம்.

தமிழ் நாட்டில் சிங்கள கிரிக்கெட் அணியோ, கால் பந்து அணியோ விளையாடக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். வெற்றியும் பெற்றிருக்கிறோம்.

தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தவெறியை தூண்டுகிற புத்தபிக்குகளை தமிழ் நாட்டிலிருந்து அடித்து விரட்டி யிருக்கிறோம். வேளாங்கன்னி, தஞ்சாவூர் பூண்டி, திருச்சி போன்ற பகுதிகளில் சிங்களவர்களை விரட்டி யிருக்கிறோம். ”அயல் மண்ணில் அப்பாவித் தமிழன் அடிப்பட்டால் அயல் இனத்து அப்பாவியும் தமிழ் நாட்டில் அடிபடுவான்’’ என்று தலைவர் மணியரசன் போன்றவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு திரைத்துறைகலைஞர்கள் இலங்கையில் எந்தவொரு கலை நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளக் கூடாது என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

பாலச்சந்திரன். இசைப்பிரியா உள்ளிட்டோரின் படுகொலைகளுக்கு நீதிகேட்டு போராடுகிறோம். இந்திய சிங்கள அரசுகள் இணைந்து நடத்திய நான்காம்கட்ட ஈழப் போரில் நமக்கான நீதியை வலியுறுத்தி போராடி வருகிற நம்முடைய உணர்வுகளை திசைத் திருப்பவும், தமிழீழ விடுதலைக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன், அறஉணர்வுடன் போராடிய விடுதலைப் புலிகளின் அமைப்பை கொச்சைப்படுத்தி, தமிழ் மக்களிடமிருந்து அன்னியப்படுத்த சிங்கள இனவெறி அரசு இந்திய அரசின் உதவியோடு தீவிரமாக செயல் பட்டு வருகிறது. துரோகிகள் மூலம் ”இனம்’’ போன்ற திரைப்படங்களை உருவாக்கி வெளியிடுகிறது.

”இனம்’’ திரைப்படத்தில் தமிழ்ப் பெண்ணை சோதனை என்ற பெயரில் இழிவுபடுத்தி, பாலியல் வல்லுறவு கொள்ளும் சிங்கள வெறியன் தன் நண்பனிடம் சொல்லுவான். ”போர் என்றால் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். நான் ஒன்றும் சாமியார் அல்ல’’.

இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு எதிராக நீங்கள் போராட வேண்டியதில்லை. போர் நடக்கும்போது இவையெல்லாம் இயல்பானது. சாதாரனமானது என்பதை காட்சிப்படுத்தி உணர்த்துகிறார்கள்.

கருணை வடிவான புத்தபிக்குவையா இவர்கள் அடிக்கிறார்கள் என்ற பரப்புரையை தந்திரமாக செய்கிறார்கள்,

படம் முடியும் வேளையில் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சொல் வதைப் போல பார்வையாளர்கள் நமக்கு அறிவுரை சொல்கிறார்கள். மண்ணை இழந்து, மானத்தை இழந்து, கணவனை இழந்த ஒரு பெண்ணிற்கு நீதியை வலியுறுத்தாமல் ஒத்துப்போகச் சொல்கிறார்கள்.

இந்திய - சிங்கள அரசுகள் இரண்டுமே தமிழனித்தின் பகை அரசுகள் தான். இந்திய- சிங்கள பகை முடிப்பது தான் தமிழர்களுக்கான அரசியல் கடமை. நம்முடைய கடமை நிறைவேறும் வரையில் நம்முடைய போர் குணம், கோபம் குறையக் கூடாது.

இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு “யு’’ சான்றுதழ் வழங்கியுள்ளது. தமிழ் இனத்திற்கு எதிரான கருத்துப் பரப்புரை செய்யும் படத்தை நாம் குடும்பத்துடன் பார்க்கவேண்டும் என இச்சான்றிதழை வழங்கியுள்ளது.

 ஏற்கெனவே ஆணிவேர், எல்லாளான், தேன் கூடு போன்ற ஈழத் தமிழ் திரைப்படங்களுக்கு தணிக்குழு வெளியிடுவதற்கு அனுமதி மறுத்தது. மூன்றாண்டு களுக்கு முன் தயாரான தேன்கூடு என்ற படத்தின் மூன்று நிமிடம் ஓடக்கூடிய முன்னோட்டத்தில் (டிரைலர்) தமிழ் இனம், விடுதலை, புரட்சி என்று வரக்கூடிய உரையாடல்கள், ஈழ வரைபடம் என 30 இடங்களில் தணிக்கைக் குழு வெட்டியிருக்கிறது.

பிரபாகரனை வில்லனாக காட்டினால் தணிக்கைக் குழு ஆதரிக்கும். கதநாயகனாக காண்பித்தால் தணிக்கை குழு மறுக்கும். இதுதான் தொடர்ந்து நடைமுறையாக உள்ளது. தமிழரின் சங்ககால வாழ்வியலை சொன்ன பாலை படத்தில் வில்லன் கைகளில் சிங்கம் உருவம் இருப்பதாகக் கட்சி இருந்தது. அதை நீக்க வேண்டுமென தணிக்கைக் குழு ஆர்ப்பரித்தது. காரணம் அது சிங்களர்களுடைய சின்னம். அதே சிங்கம் கதாநாயகனாக (சிங்கம் திரைப்படம்) வைத்து காட்சி அமைத்தால் ஆதரவு தந்தது.

இதுதான் தணிக்கைக் குழுவின் தமிழின இன எதிர்ப்பின் கோரமுகம். தமிழினப் படைப்பாளிகள் படம் எடுத்தால் தணிக்கை குழு அங்கீகரிக்கும் லட்சணம் இதுதான். இது திருநாவுக்கரசருக்குத் தெரியுமா?

உண்மையான தமிழின பற்றாளர் யார் தெரியுமா? திருநாவுக்கரசின் நஞ்சு கக்கும் எழுத்துக்களை அப் படியே உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

“எப்போதுமே மக்களை அச்சத்திலும், கருத்துச் சுதந்திரம் இல்லாத இருளுக்குள்ளும் வைத்திருந்த மாவீரர்கள் உண்மையான தமிழர்களா? என்ற கேள்வியை கேட்க வேண்டிய தருணம் வந்துவிட்டதை உண்மையான தமிழ் இனப்பற்றாளர் உணர்வார்கள்?’’ கருத்துப் போராளி திருநாவுக்கரசின் உண்மையான முகத்தை புரிந்துக் கொண்டீர்களா?

“இனம்” படத்திற்கு காட்டும் எதிர் வினை மூலம் தாங்கள் எந்த இனம் என்று சிலர் காட்டியுள்ளார்கள்’’ என்று கட்டுரையை முடித்துள்ள திருநாவுக்கரசு ”இனம்’’ படத்தை ஆதரிப்பதன் மூலம் தான் எந்த இனம் என்பதை நமக்கு தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டார்.

Pin It