மேக்கேதாட்டு அணைத் திட்டம், மீத்தேன் திட்டம், கெய்ல் - நியூட்ரினோ - அணு உலைத் திட்டம் என தமிழ கத்தின் பல்வேறு சூழலியல் நாசத் திட்டங்களை எதிர்த்து, சிதம்பரத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், ‘தமிழ்த் தேச சூழலியல் மாநாடு’, 07.04.2015 அன்று மாலை நடைபெற்றது.

சிதம்பரம் போல் நாராயணன் தெருவில், மாலை 5.30 மணியளவில், தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் எழுச்சி சிலம்பாட்டத்துடன் மாநாடு தொடங்கியது. ஆண்களும் பெண்களும் என பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய தமிழர் கலை நிகழ்ச்சி, கூடியிருந் தோரிடம் எழுச்சி ஊட்டியது.

தமிழ்த் தேசியப் பேரியக்க சிதம்பரம் நகரச் செய லாளர் தோழர் கு. சிவப்பிரகாசம் வரவேற்புரையாற்றி னார். தமிழக இளைஞர் முன்னணி தமிழகத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன் நிகழ்வை நெறிப்படுத்தினார்.

சிதம்பரத்தில் டாஸ்மாக் மதுக்கடையை இழுத்து மூடும் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையின் தடிய டிக்கு உள்ளாகி சிறைக்குச் சென்ற தமிழக இளைஞர் முன்னணித் தோழர்களுக்கு, தமிழ்க் காப்பணி செயலா ளர் திரு. பா. பழநி அவர்கள், பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்கினார்.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கா. திருமுருகன் தொடக்க உரையாற்றினார். அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ப. உதயகுமார், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. செய ராமன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். தமிழ்த் திரைப் பட இயக்குநர் திரு. தங்கர்பச்சான் நிறைவுரையாற்றி னார்.

இந்திய அரசமைப்புச் சட்ட விதி 355ஐப் பயன்படுத்தி, மேக்கே தாட்டு அணைத் திட்டத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், மீத்தேன் திட்டத்தை முற்றிலுமாக இந்திய அரசு கைவிட வேண்டும், தமிழகத்தில் செயல் படுத்தும் கெயில் குழாய் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும், அணு உலைப் பூங்காத் திட்டங்களைக் கைவிட வேண்டும், தமிழகத்தை ஆபத்தில் சிக்க வைக்கும் நியூட்ரினோ திட்டத்தை நிறுத்த வேண்டும், பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்காகத் தமிழ் நாட்டு நீர்வளம் கொள்ளை போவதை அனுமதிக்கக் கூடாது, மரபீனி மாற்ற விதைகளைத் தடை செய்ய வேண்டும், நம்முடைய வாழ்வியல் முறைகளில் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டு நாம் இயற்கையான வாழ்வியலுக் குத் திரும்ப வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள், இம் மாநாட்டில் மக்கள் கைத்தட்டல்களுக்கிடையே நிறைவேற் றப்பட்டன.

நிகழ்வைத் தலைமையேற்று தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட் ராமன் பேசினார்.

மாநாட்டில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. செயராமன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

“மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், எந்தப் பகுதிக்கு வெளியேறி அகதியாகச் செல்லலாம் என்ற சிந்தனையுடன் இந்தக் கூட்டத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் சிதம்பரம் வாழ் மக்களே! மாநாட்டின் தலைவர்களே, பொறுப்பாளர்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு கடுமையான சூழலில் இந்த மாநாடு நடை பெறுகின்றது. ஒரு அழகான - செழிப்பான வெள்ளாடு கசாப்புக் கடை வாசலில் கட்டப் பட்டுள்ளது. கசாப்புக் கடைக்காரன் அந்த ஆட்டின் மீது கை வைக்கிறான். தலைகீழாக மாட்டி அதன் கழுத்தை அறுக்கிறான். அதற்குள், ஒரு 20 - 30 பேர் கறி வாங்க நிற்கிறார்கள். ஒருவன் 2 கிலோ என்கிறான். இன்னொருவன், நாலு கால் வேண்டும் எனக்கு என்கிறான். ஒருவன் குடல் கேட்கிறான். ஒருவன் இரத்தம் வேண்டுமென வாலி யுடன் நிற்கிறான். கடைசியாக அனைவருக்கும் பங்கு பிரித்து முடிக்கையில், ஒருவன் ஆட்டுத் தோலைக் கொடு என்கிறான்.

அந்த நிலையில்தான் தமிழகம் இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள சூழலியல் - கனிம வளங்கள், பன்னாட்டு - வடநாட்டு முதலாளிகளுக்குத் தேவை.

கடலுக்குள் எஞ்சியது போக மீதமுள்ள இந்த தமிழக நிலப்பரப்பு என்பது, உலகின் முன்தோன்றிய நிலப்பரப்பு ஆகும். இங்குள்ள மலைகளுக்கு அகவை 450 கோடி ஆண்டுகள் என்கிறார்கள். உலகம் தோன்றி 450 கோடி ஆண்டுகள்தான் ஆகிறது.

இங்குள்ள மலைகளைக் கொண்டு சிற்பங்கள் செதுக்க முடியும். கற்களைக் கொண்டு பாலிஷ் போட்டு பயன்படுத்த முடியும். அவ்வளவு சிறப்பான மலைகளாக இவை இருக்கின்றன.

தேரிக்காடு எனப்படும் தோரியம் மணல், சாத்தான் குளம் - தூத்துக்குடி பகுதியில் நிறைந்து இருக்கிறது. எனவே, உலக முதலாளிகள் அதன் மீது கண் வைக்கிறார்கள். அந்த மணலைக் கையாளுபவர் கள்தான் அடுத்த நூற்றாண்டின் வல்லரசு என அவர்கள் கணக்குப் போடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் கனிம வளம் நிறைந்துள்ளது. வானத்திலிருந்து செயற்கைக்கோள் வழியாக ஆய்வு செய்து, நாமக்கல் - கோவை பகுதிகளுக்கு அடியில், பிளாட்டினம் பாளம் இருக்கிறது என்று சொல்லி யிருக்கிறார்கள். அது வேண்டுமென இந்திய அரசு இப்போதே ஒப்பந்தம் செய்ய காத்திருக்கிறது. அது போல, அரியலூரில் சுண்ணாம்புக் கல்!

எனவே, தமிழகத்தையே கொத்திக் குதறக் காத்திருக்கிறார்கள் இந்திய அரசும், பன்னாட்டு - வடநாட்டு முதலாளிகளும்.

சற்றொப்ப 1200 கிலோ மீட்டர் அளவிற்கு - உயிர்மப் பன்மைச் சூழல் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலை இங்கு இருக்கிறது. அங்குள்ள கனிம வளங்க ளைச் சுரண்டுவதற்காக, இதை எங்களிடம் அப்படியே ஒப்படை என பன்னாட்டு - வடநாட்டு நிறுவனங்கள், இந்திய அரசிடம் கேட்கின்றன.

ஏற்கெனவே, கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் வைத்தபோது, அதை ஒட்டு மொத்தத் தமிழகத்திற்குமான சவக்குழி எனக் கருதி, அதனை எதிர்த்துப் போராடினோம். தற்போது, மேலும் 6 அணு உலைகளை அங்கு வைக்க ஒப்பந்தம் போடுகிறார்கள். ஒன்று இல்லையென்றால் இன்னொன்று வெடிக் கட்டுமே என அவர்கள் கருதுகிறார்கள்.

ஒரு சிறு விபத்து என்றாலும் 100 கிலோ மீட்டர் அகலத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். 22,500 ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மை கொண்ட அணுக் கழிவுகளை நாம் வைத்திருக்க வேண்டும். இவை யெல்லாம் தெரிந்தே தான், இவற்றை நம் மீது திணிக்கிறார்கள். பன்னாட்டு முதலாளிகளின் தேவை களுக்காகவே, இந்த ஆலைகளை நிறுவுகிறார்கள்.

தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள், நியூட்ரினோ திட்டம் குறித்து ஒரு அருமையான புத்தகத்தை எழுதி யுள்ளார். தேனி மாவட்டம் - பொட்டிபுரத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை, ஒன்றரை கிலோ மீட்டர் ஆழத்திற்கு பிளந்து, அதில் ஆய்வு செய்யப் போகிறார்களாம். அத்திட்டத்தால், ஆபத்து இல்லையென எந்தவித அடிப்படை அறிவியல் அறிவும் இல்லாதவர்கள் எல்லாம் பரப்புரை செய்கிறார்கள்.

அணுவுக்குள் இருக்கும் எலக்ட்ரான் - புரோட்டான் ஆகிய துகள்களை விட மிகச் சிறியதான நியூட்ரான் துகளைக் கண்டறிந்து ஆய்வு செய்தால், சூரியனிலிருந்து பிரிந்து உலகம் எப்படி வந்தது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் என்கிறார்கள். இது அபாயகர மானது. இதே போன்று இத்தாலியில் நிறுவப்பட்ட ஆய்வகம் மூடப்பட்டு விட்டது. அமெரிக்கா - ஜப்பான் போன்ற நாடுகள், நியூட்ரினோ கற்றை எனச் சொல்லப்படும் கதிர்களை தேனி மாவட்ட ஆய்வகத் திற்கு அனுப்பி, ஆய்வு செய்ய இருக்கிறார்கள். 7,400 கிலோ மீட்டர் தொலைவிற்கு கண்ணிமைக்கும் நேரத் தில் அந்தக் கதிர்களை அவர்களால் அனுப்ப முடியும்.

பன்னாட்டு - வடநாட்டு முதலாளிகளுக்காக நடக்கும் இந்த ஆய்வுக்காகத்தான், இந்தியக் கைக் கூலிகள், தேனி மாவட்ட பொட்டிபுர மலையை ஒப்படைத்துள்ளனர். இங்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டால் கூட, 350 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு கதிர்வீச்சு இருக்கும்.

நீங்களும் நானும் என்ன செய்யப் போறோம்? தமிழகம் காணாமல் போய்விடும்.

எல்லாவித சூழலியல் அழிவுகளும் இங்கு தான் நடக்கின்றன. ஆறுகளுக்கு தண்ணீர் விட மறுக்கின் றனர். கனிமங்கள் சுரண்டப்படுகின்றன. அணு உலை - அனல் மின் நிலையங்கள் திணிக்கப்படுகின்றன. மணல் குவாரிகள் அமைத்து, மணல் கொள்ளை யடிக்கப்படுகிறது. மீத்தேன் எடுப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு காவிரிப் படுகை சிதைக்கப்படுகிறது.

மீத்தேன் எடுக்கப்பட்டால், இந்த சிதம்பரம் பகுதி, 21 அடி உள்வாங்கிக் கொள்ளும். நிலவியலாளர் முனைவர் நட்ராஜ் அவர்கள் தொலைக்காட்சியில் இது குறித்து எச்சரித்தார். அதன்பின், தஞ்சையும் கிடையாது சிதம்பரமும் கிடையாது. காவிரிப் படுகை காணாமல் போய்விடும்.

500 அடிக்குக் கீழே 1250 அடியில் உள்ள நிலக்கரிப் பாளத்தை நொறுக்கி, அதிலிருந்து மீத்தேன் வாயுவை எடுப்பதற்காகத்தான், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத் துடன் 32 ஆண்டு கால ஒப்பந்தம் போடப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு நிலக்கரியை 2000 அடி வரை எடுக்கும் போது, இயல்பாகவே கடல் புகுந்து கொள் ளும். பிச்சாவரத்தில் கடல் இருக்காது. திருச்சியில்தான் கடற்கரை இருக்கும். நாகை -- பூம்புகார் பகுதிகள் கடலுக்குள் போயிருக்கும். அவ்வளவு ஆபத்தானது இந்தத் திட்டம்!

வரலாறு தன்போக்கில் இருந்தால், ஒரு தேசிய இனத்திற்கு ஒரு நாடு என்ற வகையில், நாம் தமிழ்த் தேசிய இனத்திற்கான தமிழ்த் தேசக் குடியரசில் இருந்திருப்போம். ஆனால், இன்று இந்தியாவில் அடிமைகளாக நாம் இருக்கின்றோம்.

ஐ.நா. அவையில் தற்போது, 193 நாடுகள் உறுப்பு வகிக்கின்றன. அதில், 120 நாடுகள், ஏழே கால் கோடி மக்கள் தொகைக் கொண்ட தமிழ்நாட்டைவிடக் குறைந்த அளவு மக்கள் தொகை கொண்டிருப்பவை. ஆங்கிலேயன் எல்லோரையும் ஆண்ட போது, முடிந்தளவு அனைவரையும் இணைத்தான். இரண் டாம் உலகப் போர் முடிந்து, தாம் இந்தியாவை விட்டு வெளியேறுவது என முடிவு செய்த போது, கொள்ளை யர்களிடமும் நயவஞ்சகர்களிடமும் நாடு சிக்கியது.

அதனால், நாம் விடுதலைக்குப் பிறகும் அடிமைப் பட்டோம். அன்றைக்கு இருந்த ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திற்கு இருந்த அதிகாரங்களை விடக் குறைவான அதிகாரங்களைக் கொண்டது தான் இன்றைய தமிழ்நாடு மாநிலம் என்பதை நீங்கள் அறிவீர்களா?

நாம் இப்பொழுது அடிமைகள். உங்களுக்கு உங்கள் மண் மீது உரிமை கிடையாது. என்ன செய்யப் போகி றோம்?

நாம் நீண்டகாலமாக தனி அரசுகளை நடத்திக் கொண்டிருந்தவர்கள். பூம்புகார் அருகே, கிழக்கே, கடலுக்கடியில் அட்கார்க் என்ற வெள்ளைக்காரன் ஆய்வு செய்து, 11,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரு நகரம் ஒன்று அங்கு புதைந்து கிடக்கிறது என்கிறார்.

நான் ஒரு வரலாற்று ஆசிரியன். சிந்து சமவெளி நாகரிகம் 5,000 ஆண்டுகள் முற்பட்டது, சுமேரியர் நாகரிகம் 5,000 ஆண்டுகள் முற்பட்டது என பாடம் நடத்தி இருக்கிறேன். இன்று, உலகின் முதல் நகர நாகரிகம் பூம்புகார் தான், அது 11,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது, கடலுக்குள் சிதைந்து கிடைக்கிறது எனும் போது, பெருமையாக இருக்கிறது. ஆனால், இந்திய அரசு இதை ஆய்வு செய்ய அஞ்சுகிறது. உண் மைகள் வெளிவந்தால், ஆரியம் என்று இனிப் பெருமை பேச முடியாது என்று அஞ்சுகிறது.

கலிங்கத்தில் கத்திக்கும்பா என்ற பகுதியில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. முதலாம் கார வேலன் என்ற அசோகன் காலத்து சமகால அரசன் ஒருவன், அக்கல்வெட்டை செதுக்கியதாகத் தெரிய வந்தது. 1,300 ஆண்டுகளாக இங்கே ‘தமிழ தேச சங்கதா’ என்ற அமைப்பு இருந்திருக்கிறது. அது, 3 தமிழ் அரசர் கள் அந்நியர்களை எதிர்த்து கூட்டமைப்பு நடத்திய தைப் பறைசாற்றியது. அப்படியென்றால் அந்தளவிற்கு அரசியல் பாரம்பரியத்திற்கும் தொன்மைப் புகழுக்கும் உரியவர்கள் நாம்!

அப்படிப்பட்ட இந்த இனம் உட்பட பல தேசிய இனங்களை, இந்தியா தனக்குள் அடிமையாக வைத் திருக்கிறது.

தில்லியிலிருந்து இந்த தேசிய இனத் தாயகங்களை ஏலம் விடுகிறான். மீத்தேன் எடுக்க, புதுச்சேரியிலிருந்து மன்னார்குடி வரை உள்ள நிலத்தை ஏலம் விடுகிறான். கச்சத்தீவை யாரையும் கேட்காமல் கொடுக்கிறான். நிலம் கையகப்படுத்துதல் சட்டம் எனக் கொண்டு வந்து, நம் நிலங்களின் மீதான உரிமைகளைப் பறிக்கி றான். இந்த, சிதம்பரம் பகுதியில் ஒரு முதலாளி எனக்கு 1,000 ஏக்கர் நிலம் வேண்டும் என்று கேட்டால், அதை அரசே பறிமுதல் செய்து ஒப்படைக்கும். விவசாயிக்கு அதில் உரிமை கிடையாது. இதுதான் அந்தச் சட்டம்!

எந்த விவசாயிக்கும் அவருடைய வேளாண் நிலத் தின் மீது உரிமை கிடையாது என்பது மட்டுமல்ல, ஒரு தமிழனுக்கு தமிழ் மண் மீது உரிமை கிடையாது என்று அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை அது வேளாண்மைச் சிக்கல் -உழவர்கள் சிக்கல். நம்மைப் பொறுத்தவரை அது இனச்சிக்கல்!

காவிரிப் படுகையிலுள்ள தஞ்சை - திருவாரூர் - நாகை ஆகிய 3 மாவட்டங்களில் 53 இலட்சம் பேர் இருக்கின்றனர். நம்முடைய உணவுத் தேவையில் 60 விழுக்காடு இந்த பகுதியிலிருந்துதான் வந்திருக்கிறது. தற்போது, நீர் மறுப்பின் காரணமாக அதன் விழுக் காட்டு அளவு குறைந்திருக்கலாம். ஆனாலும், 19 மாவட்டங்களுக்கு காவிரிப் படுகை நீர் தருகிறது.

அப்படிப்பட்ட பகுதியில், மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாம் வெளியேறித்தான் ஆக வேண்டும். 100 ஏக்கர் மிராசுதாரராக ஒருவர் இருக்க லாம், ஆனால் அவரது மண்ணுக்கு அடியில் 2,000 அடி வரை உள்ள நீரை உறிஞ்சி எடுத்துவிட்டு, நிலக் கரிப் பாளத்திற்குள் 600 வகை இரசாயணங்களைக் கலந்து, வெடிக்க வைத்து, அவர்கள் மீத்தேன் வாயுவை எடுப்பார்கள். அப்போது, கடல் நீரை விட அதிகளவு உப்பு நீர் வெளியாகும். நம் நிலம் பொட்டல் காடாக - சுடுகாடாக உருமாறும். வெளியேறும் கழிவுகளில் 40 விழுக்காட்டு வேதியியல் கழிவுகள் ஆவியாகும் தன்மை கொண்டவை. முகத்தை மூட முடியாமல் வெளியே வர முடியாது. வெளியேறித்தான் ஆக வேண்டும்.

இது போலத்தான் நியூட்ரினோ ஆய்வக அபாய மும், அணு உலை அபாயமும்! ஆக, ஒட்டு மொத்தத் தமிழகமும் காணாமல் போகச் செய்யும் சூழலியல் நாசத் திட்டங்கள் இவை!

32 ஆண்டுகள் மீத்தேன் வாயுவை எடுக்க, 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கிரேட் ஈஸ்டர்ன் இந்தியா நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டது. அதாவது, 1இலட்சத்து 60 ஏக்கர் நிலத்தில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சற்றொப்ப 8,100 சதுர கிலோ மிட்டர் அளவிலுள்ள இடத்தில், 12 இலட்சத்து ஏக்கர் நிலப்பரப்பில், மீத்தேன் இருக்கிறது என சொல்லி இருக்கிறார்கள். இதை எடுக்காமல் விடுவ தில்லை என்று திட்டமிடுகிறது இந்திய அரசு. எந்த கசாப்புக் கடைக்காரன் ஆட்டை சும்மா விடுவான்?

தஞ்சை - நாகை - திருவாரூர் பகுதிகளை, அவர்கள் எரிபொருள் வேதியியல் மண்டலம் (பெட்ரோ கெமிக்கல் சோன் -(றிமீtக்ஷீஷீ சிலீமீனீவீநீணீறீ ஞீஷீஸீமீ) என அழைக்கிறார்கள். நாகரிகம் செழித்த இந்தப் பகுதி, நமக்கு தாய் மடி போன்றது. இதை நாம், எங்கள் தாய் மண் என்று அழைப்போம். இந்த, காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்க வேண்டும்.

இல்லையெனில், இங்குள்ள கோவிந்தசாமி, குப்புசாமி என எல்லோரும் அகதி தான். அகதி எண் 465 நான், அகதி எண் 466 உதயகுமார், அகதி எண் 467 நீ, அகதி எண் 468 தோழர் கி. வெங்கட்ராமன்.. ஒருத்தரும் தப்பிக்க முடியாது. நீங்கள் போராடப் போகிறீர்களா? அல்லது அடிமையாகி வெளியேறப் போகிறீர்களா?

ஏற்கெனவே, சிதம்பரம் பகுதியில் 224 சதுர கிலோ மீட்டரில் ஓ.என்.ஜி.சி. எனப்படும் இந்திய அரசின் எரிபொருள் நிறுவனத்தின் மூலம் எரிவாயு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சில சிவப்புத் துண்டுக்காரர்கள், மீத்தேன் திட்டத்தை எதிர்க்கிறோம், ஆனால் ஓ.என்.ஜி.சி.யை ஆதரிக்கிறோம் என்கிறார்கள். ஓ.என்.ஜி.சி. மீத்தேன் எடுக்கவில்லை என்று யார் கூறினார்கள்?

500 அடி மண்ணுக்குக் கீழே 1,250 அடியில் நிலக்கரிப் பாளத்திற்குள், சிபி4 என அழைக்கப்படும் மீத்தேன் இருக்கிறது. அதை நொறுக்கி எடுக்கும் பணியை, Hydraulic Fracture எனப்படும் அபாயகரமான நீரியல் வெடிப்பு முறை மூலம் செய்ய இருக்கிறார்கள். அதன் காரணமாக, புற்றுநோய் உருவாகும். அதற்குக் கீழே 2 கிலோ மீட்டரில் Sedimentary Rock எனப்படும் வண்டல்மண் பாறைகள் இருக்கின்றன. இதனை ஷேல் (Shalle) என்கிறார்கள். ஒரு காலத்தில் டைனோசர் போன்ற விலங்குகள் ஓடி விளையாடிய காடுகள்தான் அவ்வாறு அங்கு இருக்கின்றன.

2010இல் ஒப்பந்தம் செய்த கிரேட் ஈஸ்டர்ன் இந்தியா நிறுவனம், 691 ஏக்கரில் மட்டும்தான் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் செய்தனர். ஆனால், மீதிப்பகுதியில் யார் எடுக்கப் போகிறார்கள்? நிலக்கரியிலிருந்து மட்டுமல்ல, ஷேல் பாறைகளிலிருந்தும் மீத்தேன் வாயுவை எடுக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். 2013 செப்டம்பர் 24 ஆம் நாள், இந்திய அரசின் பொதுத் துறை வல்லாதிக்க நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி., கெய்ல், ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்களுக்கு ஷேலில் இருந்து மீத்தேன் எடுக்க உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது பல பகுதிகளில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம், பெரிய பெரிய சுவர்களை எழுப்பிக் கொண்டிருக் கிறார்கள். மீத்தேன் வாயுவை எடுப்பதற்கான ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அண்மை யில், மனித உரிமைப் போராளி மேதா பட்கர் அவர்கள் வந்தபோது, பழைய பாளையத்திலுள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்குள் நாம் சென்றோம். அங்கு, 2 கிலோ மீட்டர் ஆழத்திற்கு துளை போட்டிருக்கிறார்கள். குடவாயில் போன்ற பகுதிகளில் இது முன்னரே நடைபெற்று இருக்கிறது.

அதாவது, ஒரு தொடர்வண்டியில் மேலே உள்ள படுக்கையில் கிரேட் ஈஸ்டர்ன் இந்தியா நிறுவனமும், கீழே உள்ள இருக்கையில் ஓ.என்.ஜி.சி.யும் பயணிக் கிறார்கள். அதாவது, இருவரும் ஒரே ஊருக்குத்தான் செல்கிறார்கள்.

தமிழீழத்தில் தமிழ் மக்களை குண்டுபோட்டு விரட்டினான் சிங்களன். தமிழகத்தில், காவிரிப் படுகை நீரை வெளியேற்றி, அந்த மண்ணை வாழத் தகுதியற்ற மண்ணாக மாற்றி, நம்மை வெளியேற்றுகிறார்கள். இங்கே எவனாவது ஒருவன் நம்மிடம் வந்து ‘ஜெய்ஹிந்து’ என்று சொன்னால், அவனை சர்வ முட்டாள் எனச் சொல்லுங்கள். அப்படி சொல்லிக் கொண்டு, கதர் சட்டைக்காரன் வந்தாலும் விடா தீர்கள். காவிச் சட்டைக்காரன் வந்தாலும் விடாதீர்கள். சிவப்புச் சட்டைக்காரன் வந்தாலும் விடாதீர்கள்.

எனக்கொரு மூடநம்பிக்கை உண்டு. கம்யூனிஸ்ட் டுகள் எல்லாம் அறிவாளிகள் என நம்பியதே, அந்த மூட நம்பிக்கை. இங்குள்ள பல கம்யூனிஸ்ட்டுகள், ஆபத்துகள் எனத் தெரிந்தும் அபாயகரமானத் திட்டங்களை ஆதரித்து நிற்கின்றனர்.

எனவே, மீத்தேன் வாயுவை எடுக்க தனியார் வந்தாலும் எதிர்ப்போம். அரசு நிறுவனமான ஓ.என். ஜி.சி. வந்தாலும் தடுப்போம். காவிரிப் படுகை முழுமை யுமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

நாம் பல தவறான அரசியல் முன்னெடுப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்திய விடுதலைக்குப் பிறகு, இனம் சார்ந்த முன்னெடுப்பு அரசியல் இல்லாமல் போனது. நாம் தனித்த தேசிய இனம் - அந்த தேசிய இனம் சார்ந்த அரசியல் முன்னெடுப்பு நம்மிடம் இல்லை.

2009ஆம் ஆண்டு தமிழீழத்தில் போர் நிறுத்தம் கோரி நாம் என்னென்ன போராட்டங்கள் நடத்தி னோம்? நாம் ஏன் மதிக்கப்படவில்லை? நம்மால் என்ன செய்ய முடிந்தது? அழத்தான் முடிந்தது. ஏன் காப் பாற்ற முடியவில்லை?

ஒரு கிலோ அரிசி தமிழீழத்தில் 400 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த போது, தமிழகத்தில் ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்குக் கிடைத்தது. கொடுப்பதற்கு மனம் இருந்தும் கொடுக்க முடியாமல் தடுக்கப்பட்டோம். ஐயா நெடுமாறன் அவர்கள், ரூபாய் 1 கோடி அளவிற்கு, மருந்து மற்றும் உணவுப் பொருட்களை ஈழத்திற்கு கொடுக்க முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டது. செஞ்சிலுவை சங்கம் மூலமாகக் கூட நம்மால் கொடுக்க முடியவில்லை? ஏன்? காரணம், நாம் அடிமைகள்!

பட்டு வேட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம் என நினைத்துக் கொள்ளாதீர்கள். அல்சேசன் நாய்கூட 1,000 ரூபாய் மதிப்புள்ள பெல்ட் போட்டிருப்பதை மறந்து விடாதீர்கள்!

2,000 ஆண்டுகளாகத் தொடரும் ஆரியப் பகை உணர்வோடு, இந்திய அரசு பார்ப்பனியத்தை நம் மீது திணிக்கிறது. சமற்கிருதத்தையும், அதன் குழந்தை வடிவமான இந்தியையும் நம் மீது திணிக்கிறது. ஆரிய மேலாண்மையை நம் மீது நிறுவப் பார்க்கிறது.

அதற்கு, இணக்கமான அரசியலை கங்காணிகள் மேற்கொள்கின்றனர். 574 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு செத்தால், புன்னகைக்கிறது இந்தியக் கடற்படை! நம் நாடு இந்தியா என உங்கள் படை அனுப்புங்களேன் பார்ப்போம். இப்பொழுது உரைக்க வில்லை என்றால், வேறு எப்பொழுது இது நமக்கு உரைக்கும்? வேண்டுமெனில், 1,000 மீனவர்கள் சுடப் பட்டு செத்தப் பிறகு விழா எடுப்போமா?

நம்முடைய பாரம்பரிய தாயகத்தை சிதைப்பது என்பது, தமிழ்நாட்டுத் தமிழர்களை இனப்படுகொலை செய்வதற்கான முயற்சி!

எனவே, அறிந்து கொள்ளுங்கள். கனிமங்கள், மலைகள், ஆறுகள் என இங்குள்ள அனைத்து சூழலியல் வளங்களும் தமிழ் இனத்திற்குச் சொந்த மானது. தமிழ்த் தேசத்தின் இறையாண்மை அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும். இந்த மண்ணைப் பாது காக்கும் மண்ணுரிமை அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

உலக அளவில் ஐ.நா. அவை சொல்கிறது, ஒவ்வொரு கனிம வளமும் அந்த தேசிய இனத்திற்குத் தான் சொந்தம் எனச் சொல்கிறது. இந்திய உச்சநீதி மன்றம் கூட, அதை ஒருமுறை சொன்னது. எனவே, தேசிய இன அரசியல் தான், மண்ணுரிமையைப் பாது காக்கும் அரசியல் - கனிம வளங்களின் மீதான இறையாண்மை அரசியல்!

எனவே, தமிழ்த் தேசிய இன அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும். கங்காணி தேர்தல் அரசிய லைக் கைவிட வேண்டும்.

மாணவர்களே! இளைஞர்களே! இந்த மண்ணைப் பாதுகாக்கும் அரசியலைக் கையிலெடுங்கள் - கங்காணித் தேர்தல் அரசியல்வாதிகளுடன் உங்களுக்குள்ள உறவை முறித்துக் கொள்ளுங்கள்! தமிழ்த் தேசிய விடுதலையை வென்றெடுங்கள். அது ஒன்று தான் நம்மைப் பாதுகாக்கும்! நன்றி!”.

இவ்வாறு முனைவர் த. செயராமன் உரை யாற்றினார்.

மாநாட்டுப் பேச்சாளர்கள் அனைவருக்கும், மரக்கன்று வழங்கப்பட்டு, துண்டு அணிவிக்கப்பட்டது. நிறைவில், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா நன்றி கூறினார். நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், ஆண்களும் பெண்களும் என திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர். மாநாட்டு நிகழ்வுகள், கண்ணோட்டம் இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நன்றியுரை முடியும் வரை கூட்டம் கலையாமல் நின்று மாநாட்டு உரைகளைக் கேட்டுச் சென்றது, கூடியிருந்தோரிடையே ஏற்பட்ட அரசியல் உணர்வை வெளிப்படுத்தியது.

Pin It