இந்தியா முழுவதிலும் உள்ள சாலைகள், அந்தந்த மாநிலங்களின் எல்லைக்குட்பட்ட பகுதி களில்தான் இருக்கின்றன. எனவே, சாலை என்பது அது அமைந்துள்ள மாநில அரசுகளிடமே முழுவது மாக இருக்க வேண்டிய பகுதி ஆகும். ஆனால், ‘தேசிய நெடுஞ்சாலை’ எனப் பெயரிட்டு, அந்தச் சாலையிலும் தனது அதிகாரத்தைச் செலுத்தி, தேசிய இனத் தாயகங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தமது நேரடி வரி வசூல் நிலையங்களை அமைத்திருக்கிறது, இந்திய அரசு. அதன் பெயர், ‘சுங்கச் சாவடி’!

முன்பெல்லாம் நெடும் பயணங்கள் மேற்கொள்ளும் போது, நம்மை வழியனுப்பி வைக்கும் சுற்றத்தார், “வழிப்பறிக் கொள்ளையர்கள் இருப்பர், எனவே பார்த்துச் செல்லுங்கள்” என்று சொன்ன காலம் காணாமல் போய்விட்டது. இன்றோ, “இத்தனை சுங்கச் சாவடிகள் வரும், எனவே பார்த்துச் செல்லுங்கள்” என்று சொல்லுகின்ற காலம் வந்துள்ளது.

வழிப்பறிக் கொள்ளையர்களுக்கு நிகராக, சாலையில் வரும் வாகனங்களிடம் கட்டண வசூல் நடத்தும் கொள்ளைக் கூடாரமாக இந்தியா முழு வதிலும் சுங்கச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.

வாகனங்கள் வாங்கும் போதே, சாலை வரி வசூலிக்கப்படுகிறது. மேலும், எரிபொருள் விலையுடன் சாலை மேம்பாட்டுக்காக ஒரு குறிப்பிட்டத் தொகையும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இதை செலுத்தும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணமில்லாத சாலை வசதியை செய்து தர வேண்டியது அரசின் கடமை. ஆனால், இந்தக் கடமையை தட்டிக் கழித்து, அதை தனியாரிடம் ஒப்படைத்த பெரும்பணியை, பா.ச.க. அரசே தொடங்கி வைத்தது.

2001ஆம் ஆண்டு முதல், பா.ச.க. அரசால் செயல் படுத்தப்பட்ட தங்க நாற்கர சாலைத் திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதுமுள்ள முதன்மை நகரங்கள் ‘தேசிய நெடுஞ்சாலைகள்’ வழியே இணைக் கப்பட்டன. அரசு மற்றும் தனியார் கூட்டுடன் செயல் படுத்துகிறோம் எனச் சொல்லி அச்சாலைகளைப் போட்ட இந்திய அரசு, ‘பராமரிப்பு’ என்ற பெயரில், அவற்றை முழுமையாக தனி யாரிடம் ஒப்படைத்தது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (ழிபிகிமி) வரையறுத்துள்ள கட்ட ணத்தை, வசூலித்துக் கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தொடக்கத்தில், சாலை வரி செலுத்திய பிறகும், நம்முடைய வரிப் பணத்தைக் கொண்டு அமைக்கப் படுகின்ற இந்தச் சாலைகளில் செல்ல, திரும்பவும் ஒருமுறை நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் என மக்களிடம் கேள்வி எழும்பியது.

இச்சாலை அமைப்பதற்கான செலவை இந்த சுங்கச்சாவடியின் மூலம் வசூலித்து விடலாம் என்றும், சாலை அமைப்பதற்காக செலவிடப் பட்ட தொகையை சுங்கச்சாவடி நிர்வாகம் குறிப்பிட்ட காலத்தில் வசூலித்து முடித்துவிட்டால், அதன்பின் சுங்கக் கட்டணத்தை 40 விழுக்காடாக குறைத்து விட வேண்டும் என்றும் அதன்பின் அறிவிக்கப்பட்டது. அத்தொகை சாலையில் பராமரிப்பிற்கே பயன் படும் என்றும் பதில் கூறப்பட்டது. ஆனால், நடைமுறையில் இவை எதுவும் நடைபெறுவதேயில்லை.

பல சாலைகளில், சாலைகள் அமைக்கப்பட்டதற்கான தொகையைவிட அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டது. அந்தக் கொள்ளை இன்றும் தொடர்கிறது.

பழுதில்லாத சீரான சாலை,- விபத்து ஏற்பட்டால் உடனடி அவசர ஊர்தி வசதி - ஓய்வெடுக்கும் இடம் என வசதிகளை, இத்தனி யார் நிறுவனங்கள் செய்து தர வேண்டும். ஆனால், சுங்கச் சாவடி வசூலில் கறாராக இருக்கும் தனியார் நிறுவனங்கள், இந்த வசதிகளை மக்களுக்கு அளிப்பதில் கறாராக இல்லை.

தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு, மதுக்கான் என்ற ஆந்திர நிறுவனத்திடம் ஒப்படைக் கப்பட்டது. அச்சாலையில் மக்கள் வாழ்கின்ற கிராமங்கள் அமைந் துள்ள பல இடங்களில் வேகத் தடை இல்லாத காரணத்தால் விபத்துகள் நடப்பதும், விபத்து நடைபெற்றால் அவர்களை மருத்துவமனை தூக்கிச் செல்ல சொந்தமாக ஒரு அவசர ஊர்தி கூட இல்லாத நிலையிலும், அந்த சுங்கச்சாவடி செயல்பட்டு வருகி றது. இவ்வசதிகளைக் கோரி, புதுக்குடி உள்ளிட்ட அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங் களை நடத்தி வருகின்றனர். இந்த இலட்சணத்தில் தான் பல சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின் றன.

நான்கு வழிப் பாதைகள் உள்ள நெடுஞ்சாலைகளில், ஆறு வழித் தடங்கள் அமைக்கப்படாமல் உள்ள நிலையில், ஆறு வழித்தடங் களுக்கானக் கட்டணம் சட்டத் திற்குப் புறம்பாக வசூலிக்கப் படுகிறது. மேலும், ஆங்காங்கு, கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப் படுவதும் சுங்கச்சாவடிகளில் நடை பெற்று வருகிறது.

எனவே, பொது மக்கள், வாகன ஓட்டிகள், அரசியல் கட்சிகள் என பலராலும் பல்லாண்டு காலமாக இந்தக் கொள்ளை எதிர்க்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்றுவரை இது நின்றபாடில்லை. தற்போது, மீண்டும் சுங்கச்சாவடியின் சுங்கக் கட்டணம், இந்த மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இது வரை சற்றொப்ப 234 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நடுவண் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் - 1992 ஆம் ஆண்டு ஒப்பந்த விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் நாளும், 2008ஆம் ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் நாளும் கட்டணம் திருத்தி அமைக்கப்படுகிறது.

அதன்படி இந்த சுங்கச் சாவடிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 முதல் 15 விழுக்காடு வரை கூடுதல் கட்டணம் வசூலிக் கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 2008 ஆம் ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட சுங்கச் சாவடி களுக்குக் கட்டணம் உயர்த்தப் பட்டது. தற்போது மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படியே தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டம் - சூரப் பட்டு, வானகரம், காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர், சென்னசமுத்திரம், விழுப்புரம் மாவட்டம் - பரனூர், சேலம் மாவட்டம் - ஆத்தூர், கிருஷ் ணகிரி, தூத்துக்குடி மாவட்டம் - சாலை புதூர், வேலூர் மாவட்டம் - பள்ளிகொண்டான், வாணியம் பாடி, நெல்லை மாவட்டம் - எட்டூர்வட்டம், நாங்கு நேரி, மதுரை மாவட்டம் --சிட்டம்பட்டி, கப்பலூர், புதுக் கோட்டை, திருச்சி மாவட்டம் --பூதக்குடி, சிவகங்கை மாவட்டம் -- லெம்பலாக்குடி, இலட்சுமணப் பட்டி மற்றும் சென்னை புறவழிச் சாலையில் உள்ள 2 சுங்கச் சாவடிகள் உள்ளிட்ட 20 சுங்கச் சாவடிகளுக்கு கட்டணம் திருத்தி அமைக்கப் பட்டுள்ளது.

இந்த சுங்கச் சாவடிகளில் தற்போது 5 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் 3 முதல் 5 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.

நாள்தோறும் பயணிக்கும் அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு, மாதந்தோறும் கட்டணம் செலுத் தும் முறை செயல்பட்டு வருகிறது. இவ்வகையில், அரசுப் போக்கு வரத்துக் கழக பேருந்துகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் செலுத்தப் படும் சுங்கக் கட்டணம் கடந்த 2011ஆம் ஆண்டில் ரூ.37 கோடியாக இருந்தது. 2014ஆம் ஆண்டு அது 118 கோடி ரூபாயாக உயர்ந்திருக் கிறது. அதாவது, கடந்த 3 ஆண்டு களில் சுங்கக் கட்டணம் 320% அதிகரித்திருக்கிறது. தற்போது, அது இன்னும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தும் சேவைக்கான கட்டணத்தை உயர்த்துவதாக இருந்தால், அது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், சுங்கச்சாவடி நிர்வாகங்களும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் இவ்விதிகளையெல்லாம் மதிக்காமல் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.

கடந்த மார்ச் மாதம், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலை களில் சுங்கக் கட்டணம் வசூலிக் கப்படுவது நிறுத்தப்படும் என நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். முதல் கட்ட மாக, 15 மாநிலங்களைச் சேர்ந்த 62 சுங்கக் கட்டணச் சாவடிகளில் நிதி வசூல் நிறுத்தப்பட்டது. ஆனால், இதில் இந்திய அரசு வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்ளவில்லை.

இந்தக் கட்டண உயர்வு காரணமாக, சரக்கு வாகன வாடகை, ஆம்னி பேருந்து கட்டணம் உள்ளிட்டவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இது மறைமுகமாக அத்தியாவசியப் பொருட் களின் விலையை உயர்த்துவதோடு, விலைவாசி உயர்வையும் ஏற்படுத்தும்.

சுங்கச் சாவடிகளில் தனியார் நிறுவனங்கள், எவ்வளவு வசூலிக்கின்றன, இந்தச் சாலையின் மதிப்பீடு என்ன, எவ்வளவு காலம் வசூலிக்கலாம் என அனைத்திற்கும், இந்திய அரசு தெளிவான வரையறைகளை முன்வைக்க வேண்டும். சாலை மதிப்பீட்டுத் தொகையை விட கூடுதலாக வசூலித்துள்ள நிறுவனங்களின் உரிமங்களை திரும்பப் பெற்று, அந்நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி, அத் தொகையை வட்டியுடன் வசூலிக்க வேண்டும்.

பன்னாட்டு முதலாளிகளுக்கு இலட்சக்கணக்கான மக்கள் வரிப் பணத்தை மானியமாக வழங்கும் இந்திய அரசு, சில ஆயிரம் கோடி கள் கொடுத்து இந்த சுங்கச்சாவடி களை முழுவதுமாக இழுத்து மூட முடியும். எனவே, தனியார் நிறுவ னங்களின் கொள்ளைக்காக மட்டுமே இயக்கப்படுகின்ற சுங்கச் சாவடிகள் அனைத்தையும் இழுத்து மூட வேண்டும்!

Pin It