ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். முதலாளிகள் எல்லாவற்றையும் அனுபவித்து வாழ வேண்டுமென்ற நுகர்வுப் பண்பாட்டை பரப்புகின்றனர். மனத்தைத் தூண்டுகிற விளம்பரங் களைச் செய்து வருகிறார்கள். உலகமயச் சூழலில் ஆசை, பேராசை என்னும் பெருந்தீயாய் மாறி மனித மனங்களைச் சீரழிக்கிறது. எல்லாவற்றையும் அழித்து தின்றுத் தீர்த்துவிட வேண்டுமென்ற அடங்கா வெறியோடு அலைகிறது மனம்.

இயற்கையை நேசிப்பது, இயற்கையோடு இணைந்த வாழ்வு என்பதையெல்லாம் மாற்றி, இயற்கையை வெறும் மூலப்பொருளாகக் கருதுகிறது முதலாளியம். இயற்கையின் பல்வேறு எச்சரிக்கைகளை அலட் சியப்படுத்தி, அரசும் இயற்கையை அழித்து பணம் பார்க்கத் துடிக்கிறது.

தன்னொழுக்கம் இல்லாமல் வாழ்வதே நாகரிகம் என்று கருதுகிற போக்கு வளர்ந்து வருகிறது. அறச் சிந்தனைகள் பற்றி சிறிதும் அக்கறையில்லாமல் எப்படியாவது வாழ வேண்டும். எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் வாழ்ந்து வருகிறார்கள்.

இத்தகையச் சூழலில் இயற்கைக்கு எதிரான அரசியல் செயல்பாடுகளை அம்பலப்படுத்தி, இயற்கை யோடு இணைந்து வாழ்வதற்கு மக்களை அணி திரட் டும் நோக்கில் மக்களுக்கு விழிப்புணர்வு உருவாக்கக் கூடிய வகையில் கு. விஜயகுமாரின் உதிரி நாடகம் உள்ளது.

28.3.2015 அன்று மாலை தஞ்சாவூர் - தென்னகப் பண்பாட்டு மையத்தில் உதிரி நாடகம் நடந்தேறியது.

கு.விஜயகுமார் தஞ்சாவூர் பிள்ளையார்ப்பட்டியைச் சேர்ந்த மிகச்சிறந்த நாடகக் கலைஞர். தமிழகத்தின் மிகச்சிறந்த நவீன நாடக இயக்குநர்களான மிகச்சிறந்த ஆளுமைகள் பேராசிரியர் சே. இராமானுஜம், முனைவர் மு. இராமசாமி, திரு முருகபூபதி போன்றவர்களால் உருவாக்கப்பட்டவர். பேரா.சே. இராமானுஜம் அவர் களின் “வெறியாட்டம்” முனைவர் மு. இராமசாமி அவர்களின் கலக்காரர் தோழர் பெரியார்” திரு முருக பூபதியின் “கூந்தல் நகரம்”, “உதிர முகமூடி” மிருக விதூசகன், சூர்ப்பணங்கு, குகை மரவாசிகள் உள்ளிட்ட பல்வேறு நாடகங்களில் தனது நடிப்பால் தனி முத்திரைப் பதித்தவர் விஜயகுமார்.

தழல் ஈகி முத்துக்குமாரின் “உயிராயுதம்” அறிக்கையை தனியரு மனிதனாகப் பறையடித்துக் கொண்டே இவர் நடித்துக் காட்டியது மறக்க முடியாத ஒன்றாகும்.

விஜயகுமாரின் கதை - நெறியாளுகையில் அவர் மட் டுமே பங்கேற்று நடிக்கிற வகையில் (தனி உடல் நாடகம்) உதிரி நாடகம் நிகழ்த்தப்பட்டது.

கானகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு உடல் முழுவதும் இரத்தக் கீறல்களுடன், கானக மனிதன் தனியருவனாகத் தப்பி வந்து நகரத்தைப் பார்த்து, சமூகத்தின் பல்வேறு சீரழிவுகளைக் கண்டு கொதித்து, “திரும்பனும், எல்லோரும் இயற்கையின் பாதைக்குத் திரும்பனும்” என்று மக்களுக்கு அறைகூவல் விடுக் கிறான்.

நகரத்தில் ஊடகங்கள் மூலம் ஏற்படும் சீரழிவை மிக அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறார்.

”கவர்ந்திழுக்கும் பச்சோந்தி நாக்குகள், உருகி உருகிச் சிதைக்கிறது புரியாமல் சிக்குகின்றனர் ஊடகம் விரிக்கும் வலையில்,

. . . ஆடைகள் இருந்தும் அம்மணமாய்த் திரிகிறது மக்கள் கூட்டம். அணியவிடாமல் அவிழ்க்கிறது பல்லூடகம் . . . ஆடைகளுக்குள் அம்மணம் போய், அம்மணமாய் ஆடைகள். தறிகெட்டு, நிலைகெட்டு, தடம் புரளவைக்கும் ஆயுதமாய் பரவித் திளைக்கிறது. சொரணையற்ற மானமில்லா கும்பலிது. . . த்தூ . . .

படித்து முடித்து கழுத்துப் பட்டை மாட்டிக் கொண்டு சமூக அக்கறை சிறிதும் இன்றி, தலை சாய்த்தபடி அலைப்பேசியில் பேசிக் கொண்டு, மதுபானக் கடைவெளியில் “என்ன ஜீ இருக்கு? . . . என்று ஜீ போட்டு பேசுகிற இளைஞர்களை நன்றாகவே கிண்டலடிக்கிறார் கானக மனிதன்.

“ உடைச்ச மலை, உடைக்கிற மலை

மலையக் காணோம், மரத்தைக் காணோம்

சிட்டைக் காணோம், பெருஞ்சிட்டைக் காணோம்

ட்ரினோ, ட்ரினோ, ட்ரினோ - நியூட்ரினோ” . . .

சமகால அரசியலை கானக மனிதன் சொல்லும் போது பார்வையாளர்களின் கையலி காதைப் பிளக்கிறது.

இசையலிக்கும் நிலத்தைத் தட்டித் தட்டித் தேடி நிலத்தைத் தோண்ட உள்ளிருந்து சிறு, சிறு, மூட்டைகளாய் வரகு, சாமை, திணை, குதிரைவாலி, சம்பா இறுதியில் தூக்கணாங்கூடும் கிடைக்கிறது.

பெண்ணின் பாவாடையணிந்து தூக்கணாங்குருவிக் கூட்டோடு கானக மனிதன் பேசுகிற காட்சிகள் நாடகத்தின் உச்சம்.

“ஏ . . . கூடே உனக்குத் தெரியுந்தானே என்று வந்து, மீத்தேன், நியூட்ரினோ, அணு உலை, பாதிப்புகளை சொல்வதும் விரைவு உணவு ( பாஸ்ட் புட் ) பாதிப்புகளைச் சொல்வது அருமை.

“உணவுச் சூடு, சூட்டு உணவு, உப்புச் சாவு, சாவு உப்பு

உப்பு வேலி, வேலி உப்பு, வச்ச உலை, வைக்கிற உலை,

ட்ரினோ.. ட்ரினோ.. நியூட்ரினோ , , ,

“ஏ . . . கூடே உனக்குத் தெரியுந்தானே . . . என்று கானக மனிதன் கத்துவது மனத்தை உருக்குகிறது.

இறுதியில் உடல் மெல்ல.. மெல்ல அடங்கும் போது மூச்சிரைப்பு அதிகமாக, அவன் தன் வயிற்றிலிருந்து வீச விதைகள் சிதறி விழுகின்ற போது “திரும்பணும்.. எல்லோரும் இயற்கைக்குத் திரும்பணும்.. பின்னணியிலிருந்து குரல்கள் ஒலிக்க நாடகம் முடிகிறது.

சுமார் ஒரு மணிநேரம் நிகழ்த்தப்படும் நாடகத்தில் தனியரு மனிதனாய் தனது அற்புதமான மெய்ப்பாட்டின் (உடல் மொழியின்) மூலமும் தெளிவான செறிவான உரையாடல்களாலும் மனத்தைக் கட்டிப் போடுகிறார். பொருத்தமான இசையும் ஒளியமைப்பும் நாடகத்திற்கு பெரும் சிறப்பு சேர்க்கிறது.

நாடகம் நடத்த விரும்புவோர்

தொடர்பு கொள்க: கு.விஜயகுமார்,

பேச: 97513 72248

Pin It