திருநெல்வேலியில் உள்ள பழம்பெரும் கல்வி நிறுவனமான ம.தி.மா. இந்துக் கல்லூரி தமிழ்த்துறையில் 11.09.2013 அன்று, துறைத்தலைவர் பேராசிரியர் ஆ. செல்லப்பா அவர்கள் தலைமையில் உரையரங்கம் நடந்தது. இதில் கலந்து கொண்டு தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழாசிரியர் தோழர் பெ. மணியரசன் “தமிழ் இலக்கியத்தில் தமிழர்” என்ற தலைப்பில் பேசினார். முன்னதாக பேராசிரியர் சங்கர நாராயணன் வரவேற்புரை வழங்கினார். உரைநிறைவில் பேராசிரியர் அ.சுந்தரம் நன்றி நவின்றார். தமிழ்த் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அவ்வுரையரங்கத்தில் தோழர் பெ. மணியரசன் அவர்கள் பேசியதன் எழுத்து வடிவம்.

தமிழ் இலக்கியம் என்று சொல்லும் போது தமிழ் மொழியில் உள்ள இலக்கியம் என்றே இந்நாளில் நாம் புரிந்து கொள்வோம். சங்க காலத்தில் “தமிழ்” என்ற சொல்பெரிதும் தமிழர் என்ற இனப்பெயரையே குறித்துள்ளது. தமிழ் மொழியையும் அது குறித்துள்ளது. தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் “தமிழ்“என்ற சொல்லால் நம் முன்னோர்கள் அழைத்துள்ளனர்.

தலையாலங்கானத்தில் நடந்த போரில் போரிட்டுக் கொண்ட இருதரப்பினரும் தமிழர்கள். தமிழ் மன்னர்களுக்கிடையே நடந்த போர் அது. இரு தரப்பிலும் தமிழர்கள் இருந்ததால் வென்றவர் யார் தோற்றவர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. வென்ற மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியப் பாண்டியன். இப்போர் பற்றி பாடிய புலவர் குடபுலவியனார்.

“இமிழ்கடல் வளைஇய ஈண்டகன் கிடக்கைத்

தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து” -                                         புறநானூறு-19

என்று கூறினார். இங்கு தமிழ் என்று கூறியது “தமிழர்” என்ற பொருளில்தான் தமிழ் மொழி என்ற பொருளில் அன்று.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், தமிழரின் போர்த்திறத்தை அறியாது இகழ்ந்து பேசிய ஆரிய மன்னர்களைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:

செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்

அறியாது மலைந்த ஆரிய மன்னர்

இக்கூற்றில் உள்ள “தமிழ்” என்ற சொல், தமிழர் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

தமிழர் எதிர் ஆரியர் என்ற பொருளில் இரண்டு இனப் பெயர்கள் சுட்டப் பட்டுள்ளன.

பிற்காலத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக் கரசர் “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று சிவ பெருமா னைப் புகழ்ந்துரைத்தார்.

நம்முடைய இனப்பெயர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் தமிழர்தான் இன்றைக்கும் தமிழர் தான். ரேஸ் (Race) என்று அடை யாளப் படுத்தப்பட்ட மரபினப் பெயரும் தமிழர்தான். பிற்காலத்தில் நேஷனாலிட்டி (Nationality) என்று வரையறுக்கப்படுகின்ற தேசிய இனப்பெயரும் தமிழர் தான். இவ்வாறு மரபினப் பெயரே தேசிய இனப்பெயராகத் தொடர் கின்ற இனங்கள் உலகத்தில் மிகமிகச் சில இனங்களே! யூதர்கள், சீனர்கள், போன்றவர்கள் அப் பெருமைக்குரியவர்கள். இவ்வரிசையில் தமிழினம் தான் மூத்த இனம்; முதல் இனம்.

தேசிய இனம் என்பது நவீன எந்திர உற்பத்தி முறை உருவான பிறகு, முதலாளிய உற்பத்தி முறை நிலைபெற்ற பின்னர் உருவானது என்று ஆய்வாளர்கள் பொதுவாகக் கூறுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் உள்ள மார்க்சியவாதிகள் “தேசிய இனம்” என்பது 17,18 ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஐரோப்பாவில் உருவான கருத்தியல். அங்கிருந்துதான் அக்கருத்தியல் இந்தியாவில், தமிழ்நாட்டில் இறக்குமதியானது என்று கூறுகின்றனர்.

ஐரோப்பாவில் 15ஆம் நூற்றாண்டு வாக்கில் உருவான மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பின் தேசிய இனக்கருத்தியல் வளர்ந்தது என்பது உண்மை. அவர்கள் தேசிய இனம், தேசம் ஆகியவை பற்றிய வரையறுப்புகளைத் துல்லியமாக்கி னார்கள் என்பது உண்மை. “தேச அரசு உருவாக்கம்” (Nation State formation) பற்றிய கருத்தியலை வளர்த்தார்கள் என்பதும் முதலாளிய உற்பத்தி முறை இந்த வரையறுப் பிற்கு வாயில் திறந்துவிட்டது என்பதும் உண்மை.

ஆனால் அதற்கு முன் தேசிய இனம், தேசம் குறித்த புரிதலும் உணர்ச்சியும் வேறு எங்கேயும் ஏற்படவில்லையென்று கூறக் கூடாது. தமிழ்நாட்டில் “தமிழர்” என்ற உணர்ச்சியும் புரிதலும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியுள்ளதைத்தான் மேலே உள்ள புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. பின்னர் வந்த சிலப்பதி காரம் கூறுகிறது.

புறநானூறும் சிலப்பதிகாரமும் தேவாரமும் “தமிழர்” என்ற மரபினத் தைத்தான் கூறுகின்றனவே அன்றி, தமிழர் என்ற தேசிய இனத்தைக் கூறவில்லை என்று நண்பர்கள் வாதிடக் கூடும். தேசம் பற்றிக் கூறியிருக்கிறார்களா என்று கேட்கக் கூடும். தேசம் பற்றியும் கூறியிருக்கிறார்கள். தேசத்திற்கான எல்லையையும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வரையறுத் திருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டும்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது தொல்காப்பியம் தன்னுடைய நண்பர் எழுதிய தொல்காப்பியத்திற்கு ஒரு முன்னுரை வழங்கினார் பனம்பார னார். அதில், எடுத்த எடுப்பிலேயே தமிழர்களின் தேசத்தின் எல்லையை அவர் வரையறுத்துக் காட்டுகிறார்.

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்”

என்றார் பனம்பாரனார்.

வேங்கட மலையிலிருந்து குமரி முனை வரை தமிழர் தாயகம் என்கிறார் அவர். கிழக்கிலும் மேற்கி லும் கடலே எல்லை.

தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் வேங்கடம் முதல் குமரி வரை ஒரே மன்னன் ஆட்சியில் இருந்ததா? இல்லை. அப்பகுதியில் ஒரே காலத்தில் எத்தனையோ மன்னர்கள் இருந்திருப்பார்கள். மன்னர் ஆட்சியின் எல்லையை ஒரு தேசத்தின் எல்லையாக, ஒரு நாட்டின் எல்லையாகக் கொள் ளாமல் தமிழ் மொழி பேசப்படும் தாயகத்தை தேசத்தின் எல்லையாக நம்முன்னோர் வரையறுத்தனர். மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பிந்தைய மேற்குலகச் சிந்தனை யாளர்கள் ஒரு பொது மொழி பேசப்படும் சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியைத்தான் ஒரு தேசம் என்று வரையறுத்தனர். கம்யூனிசத் தலைவரான ஸ்டாலின் சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியைப் பேசி பொதுப்பண் பாடும் பொதுப் பொருளியல் வாழ்வும் கொண்ட மக்கள் ஒரு தேசிய இனமாவர் என்றார். அவர்கள் வாழும் தாயகம் ஒரு தேசம் என்றார்.

நவீன காலத்தில் ஐரோப்பிய சிந்தனையாளர்களும் ஸ்டாலினும் தேசம் குறித்துக் கூறிய வரையறுப் பின் சாரத்தை மூவாயிரம் ஆண்டு களுக்கு முன் பனம்பாரனார் கூறி விட்டாரே. நாம் இப்படிச் சொன்னால் ஒரு தேசமாக, ஒரு நாடாக தமிழகத்தை - தமிழ் நாட்டை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெயரிட்டு அழைத்துள்ளார்களா என்று நண்பர்கள் அடுத்த வினாவை வீசுவார்கள்! இதோ அதற்கும் சான்றுகள் உள் ளன!

“தமிழகம்” என்ற பெயர் புறநானூற்றில் வருகிறது. அகநானூற் றில் வருகிறது. சிலப்பதிகாரத்தில் தமிழகம் என்ற பெயரும் வருகிறது. தமிழ்நாடு என்ற பெயரும் வருகி றது.

பிட்டங்கொற்றன் என்ற சிற்றர சனைப் பாடிய கருவூர்க் கதப்பிள் ளைச் சாத்தனார் “தமிழகம்” என்று தெளிவாகக் கூறுகிறார். இப்பாடல் புறநானூற்றில் 168 வது பாடலாக உள்ளது.

“நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி

வடிநவில் அம்பின் வில்லோர் பெரும

கைவள் ஈகைக் கடுமான் கொற்ற

வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்

பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்

பாடுப என்பர். பரிசிலர் நாளும்

ஈயா மன்னர் நாண

வீயாது பரந்த நின் வசையில் வான் புகழே”

அகநானூற்றில் 227 ஆம் பாடல் “தமிழகம்” என்று கூறுகிறது.

“தமிழகப் படுத்த விமிழிசை முரசின்

வருநர் வரையாப் பெருநாளி ருக்கை”

சிலப்பதிகாரத்தில் நாட்டிய அரங்கேற்றத்திற்கு வருகிற மாதவியை அறிமுகப்படுத்துகிறார் இளங்கோவடிகள். அவள் ஆடல், பாடல், அழகு என்று கூறிய இம் மூன்றனுள் ஒன்று குறையாதவள், அவளுக்குக் கற்றுக் கொடுத்த ஆசா னோ தமிழ் முழுதும் அறிந்தவன். தமிழகம் முழுவதும் அறியப்பட்ட வன் என்கிறார்.

“இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்

தமிழ்முழு தறிந்த தன்மையன் ஆகி” என்கிறார்.

இங்கேயும் “தமிழகம்” என்ற ஒரு தாயகம் - ஒரு தேச அலகு (National Unit) என்று உணர்த்தப்பட்டுள்ளது. இளங்கோவடிகள் தமிழகம் என்று ஒற்றை அலகில் அடையாளப் படுத்தியபோது சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று மூன்று நாடுகள் மூன்று ஆட்சிகள் தமிழகத்தில் இருந்தன என்பதைக் கவனிக்க வேண்டும்.

அரசபரம்பரையில் ஆட்சி நிர்வாகம் ஒரு தேசத்தின் இருப்பை வரையறுக்க முடியாது என்ற சமூக அறிவியல் கருத்தியல் அக்காலத்திலேயே தமிழ்ச் சான்றோர்களுக்கு இருந்திருக்கிறது. இளங்கோவடிகள் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று அறியப்படுகிறது.

தேசம், நாடு குறித்த வரைய றுப்பைத் தமிழ் அறிவாளர்கள் எப்படித் துல்லியமாக வரையறுத் திருந்தனர் என்பதை இன்னொரு எடுத்துக்காட்டின் மூலம் அறிய லாம். வினாவும் விடையும் குழப்ப மில்லாமல் துல்லியமாகவும் தெளி வாகவும் இருக்கவேண்டும் என்பதைத் தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பது அந்நூற்பா. இதற்கு விளக்கவுரை எழுதிய இளம்பூரணர் குழப்ப மில்லாத துல்லியமான வினாவுக்கும் விடைக்கும் ஓர் எடுத்துக் காட்டைக் கூறினார். “நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“ என்று விளக்கினார். இளம்பூரணர் கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று காலவரையறை செய்துள்ளார்கள். 11 ஆம் நூற்றாண்டில் சோழநாடு இருந்தது பாண்டியநாடு இருந்தது. அப்போது எப்படித் தமிழ்நாடு வந்தது?

நம் முன்னோர்கள் முட்டாள்கள், மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடந்தவர்கள் என்ற தவறான கருத்துப் பரப்பப்பட்டதால் அவர் களின் அறிவாற்றலை நாம் உண ராமல் தவறவிட்டோம். சோழப் பேரரசு பாண்டியப் பேரரசு என்ற பரம்பரை அரசுகள் தற்காலிகமா னவை. அவற்றின் ஆட்சி எல்லையும் தற்காலிகமானவை. ஆனால் ஓர் இனத்தின் மொழியும், அம்மொழி யைப் பேசும் மக்களின் தாயக எல்லையும் நிரந்தரமானவை என்று நம் முன்னோர்கள் கருதினர். அதனால்தான் உன் நாடு எது என்று கேட்கும் போது சோழ நாடு என்றோ, பாண்டிய நாடு என்றோ விடையளித்தால் அது குழப்ப மானது என்று இளம்பூரணர் கருதினார். தமிழ்நாடு என்று கூறு வதுதான் சரியான துல்லியமான விடை என்று கூறினார். நீ எந்த ஆட்சியில் இருக்கிறாய் என்று கேட்டால் சோழர் ஆட்சியில் அல்லது பாண்டியர் ஆட்சியில் என்று விடை கூறலாம்.

தமிழ்நாட்டிற்குத் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டியவரே அண்ணாதான் என்று சிலர் கருது கிறார்கள். அரசியல் ஆதாயங் களுக்காக அவ்வாறு திரிக்கப்படு கிறது. நவீன காலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டப்படி சென்னை மாகாணம் என்று இருந்ததை அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது தமிழ்நாடு என சட்டப்படி மாற்றினார். அதற்காக அவரை நாம் பாராட்டலாம். ஆனால் நவீன காலத்தில் பிரித்தா னிய ஏகாதிபத்தியமோ அல்லது இந்திய ஏகாதிபத்தியமோ தனது காலனிக்கு என்ன பெயர் சூட்டிக் கொண்டாலும் தமிழர்கள் உளவி யலில், தமிழர்கள் வரலாற்றில், தாங்கள் தமிழர்கள் என்ற உணர்ச்சி யும் தங்கள் நாடு தமிழகம் அல்லது தமிழ்நாடு என்ற புரிதலும் மூவா யிரம் ஆண்டுகளாக ஊறிவந்து உறுதிப்பட்டுள்ளது.

இளம்பூரணருக்கு முன் சிலப்ப திகாரம் “தமிழ்நாடு” என்ற பெயரைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. கண்ணகிக்குச் சிலை எடுக்க இமயமலைக்குக் கல் எடுக்கப் போகும்போது அங்கங்கே உள்ள வேற்று மன்னர்கள் குறிப்பாக ஆரிய மன்னர்கள் தடுப்பார்களோ, அதை எதிர் கொள்ளும் அளவுக் குப் படைகொண்டு செல்ல வேண் டுமோ என்று சேரன் செங்குட்டு வன் அமைச்சர்களிடம் கலந்து ஆய்வு செய்தான். அப்போது அமைச்சர் வில்லவன் கோதை கூறியது நமக்கு வியப்பளிக்கிறது.

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய

இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்

முதுநீர் உலகு முழுமையும் இல்லை

இமய மால்வரைக்கு எம்கோன் செல்வது

கடவுள் எழுதவோர் கற்கே யாதலின்”

ஒலிக்கின்ற கடலை எல்லையா கக் கொண்ட இந்நிலம் முழுவதை யும் ஒரே ஆட்சியின் கீழ் உள்ள தமிழ் நாடாக ஆக்கிட நினைக்கும் நீ இமய மலைக்குக் கல்லெடுக்கச் சென்றால் உன்னை எதிர்த்து நிற்க எவரும் வரமாட்டார் என்றான் வில்லவன் கோதை!

வடநாட்டுக் காப்பியமான இரா மாயணத்தைத் தமிழில் வடித்த கம்பர், “தமிழ்நாடு” என்று சில இடங்களில் அடையாளப் படுத்தி யுள்ளார். சீதையைத் தேடிக் காணு மாறு அனுமனுக்கும் மற்ற வானரப் படையினருக்கும் கட்டளை இட்ட சுக்ரீவன் - இலங்கைக்குச் செல்லும் வழிகளைச் சொல்கிறான். அப் போது தமிழ்நாட்டைக் கடந்து செல்ல வேண்டும் என்று கூறு கிறான்.

“துறக்கமுற்றார் மனமென்னத் துறைகெழுநீர்ச் சோணாடு கடந்தால் தொல்லை

மறக்கமுற்றா ரதனயலே மறைந்துறை வரவ்வழி நீர் வல்லையேகி

உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி

 மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ”

-கிட்கிந்தா காண்டம் நாட விட்ட படலம்-30

சங்க இலக்கியங்களிலும் சங்க காலத்திற்குப் பிந்தைய இலக்கியங் களிலும் தமிழர், தமிழ்நாடு என்ற சொற்கள் பரவலாகப் பயின்று வந்துள்ளன. ஆனால் திராவிடம், திராவிட நாடு, திராவிடர் என்ற சொற்கள் பிற்கால ஆன்மிகச் சான் றோரான தாயுமானவர்க்கு முந் தைய கால இலக்கியம் எதிலும் பேசப்படவில்லை. ஏனெனில் தமிழர்களை ஆரியர் போன்ற அயலார் திராவிடர் என்று அழைத் தனரே தவிர தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. திராவிடர் என்ற சொல் தமிழர்களைக் கொச்சையாகக் குறிக்கும் பெயர் என்றே கருதினார்கள். விசயநகரத் தளபதிகள் நாயக்கமன்னர்கள் ஆகிய தெலுங்கின ஆட்சியாளர்களுக்குத் தமிழர்கள் அடிமைப்பட்டிருந்த காலத்தில் பார்ப்பனியம் கோலோச்சியது. தமிழர்களைத் திராவிடர்கள் என்று அழைப்பதைத் தெலுங்கர் ஆட்சி ஊக்கப்படுத்தியது.

அதைப்போலவே இந்தியா, இந்தியர், பாரதம் என்று எந்தச் சொல்லும் தமிழர் வரலாற்றிலும் இலக்கியத்திலும் இடம் பெற்ற தில்லை. ஆங்கிலேயர்களுக்கு நாம் அடிமைப்பட்ட காலத்தில் தான் இச்சொற்களை அயலாரும் வட நாட்டு அரசியல் தலைவர்களும் பார்ப்பனிய ஆற்றல்களும் தமிழர் மீது திணித்தன.

மூவாயிரம் ஆண்டுகளாகத் தாங்கள் தமிழர்கள், தங்கள் தாயகம் தமிழ்நாடு என்ற உணர்ச்சியும் உறவும் தமிழ் மக்களுக்கு குறிப்பா கத் தமிழ் அறிஞர்களுக்கு இருந்த போதிலும் ஒரே ஆட்சியின் கீழ் ஒரு தமிழ்த் தேசம் இறையாண்மை யோடு இன்று வரை நிறுவப்பட வில்லை.

17,18,19ஆம் நூற்றாண்டுகளில் தேச உருவாக்கக் கருத்து வளர்ந்த பின் ஐரோப்பியர்கள் தனித்தனித் தேசங்களை அமைத்துக் கொண்டு சாதித்துக் காட்டினார்கள். ஆனால் கி.பி. இரண்டாம் நூற் றாண்டிலிருந்து இடையில் நடந்த பிற்காலச் சோழர்கள் பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சியைத் தவிர்த்து இன்றுவரை தமிழர்கள் அயல் இனத்தார்க்கு அடிமை களாகவே உள்ளார்கள். இவ்வா றான மிக நெடிய அடிமை நிலை தமிழர்களின் விடுதலை உணர்ச்சியைப் பாதிக்கச் செய்துள்ளது. தேசிய இன அடிப்படையில் இறையாண்மையுள்ள ஒற்றைத் தேசம் அமைந்திட உற்பத்தி ஆற்றல்களில் நவீன காலத்தில் ஏற்பட்ட பாய்ச்சலும் முதலாளிய முறையும் முன் நிபந்தனையாக இருக்கின்றன என்பது உண்மை. ஆனால் ஸ்டாலின் வரையறுத்த நாம் ஓரினம் என்ற உளவியல் உருவாக்கம் (Psychological make up) மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களுக்கு இருந்தது என்ற உண்மையை உணர வேண்டும். நாம் ஓரினம் என்ற அடிப்படையில் உருவான “நாம்”, “நம்மவர்” என்ற உளவியல் உணர்ச்சி (We feeling) தமிழர் களுக்கு ஐரோப்பியர்களின் கருத்திய லால் ஏற்பட்டது என்றோ அல்லது முதலாளிய உற்பத்தி முறையினால் ஏற்பட்டது என்றோ கருதினால் அது தவறு. மற்ற பல தேசிய இனங்கள் அவ்வாறு முதலாளிய உற்பத்தி முறைக்குப் பின்னர் தேசிய இன உணர்ச்சி பெற்றிருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இன உணர்ச்சி இருக்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இத்தாலியர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், செர்மானியர் போன்ற இனங்கள் இல்லை. பல் வேறு மரபினங்கள் கலந்து மேற்படி தேசிய இனங்கள் பிற்காலத்தில் உருவாயின. இது குறித்து ஜெ.வி. ஸ்டாலின் பின்வருமாறு கூறுகிறார்.

“புதிய இத்தாலி தேசம் ரோமா னியர்கள், ட்யூட்டன்கள், கிரேக் கர்கள், அராபியர்கள் போன்ற மரபினங்களிலிருந்து உருவானது. பிரெஞ்சு தேசம் கால்ஸ், ரோமானி யர்கள், பிரிட்டானியர்கள், ட்யூட் டன்கள் போன்ற மரபினங்களி லிருந்து உருவானது. இதேபோல் தான் வேறுபட்ட மரபினங்கள், பழங்குடிகள் ஆகியவற்றிலிருந்து உருவான பிரிட்டிஷார், செர்மானியர் போன்ற மற்ற தேசங்கள் (தேசிய இனங்கள்) பற்றியும் சொல்ல வேண்டும்.”

தமிழர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் மரபினமாகவும் இன்று தேசிய இனமாகவும் ஒரே பெயரில் ஒரே மொழியுடன் விளங்கு கிறார்கள் என்ற வரலாற்றுப் பெரு மிதம் நமக்குரிய தனித்தன்மை யாகும்.

தமிழ்இலக்கியமெங்கும் பயின்று வந்துள்ள தமிழர் என்ற உணர்ச்சி தமிழர்களுக்கு இரண்டு வகையான கருத்துகளை ஊட்டி வந்துள்ளது.

1. வட ஆரிய எதிர்ப்பு.

2. தமிழர்களிடையே அறம் சார்ந்த சமத்துவ உணர்ச்சி வர்ண - சாதி எதிர்ப்பு ஆகிய நற்பண்பு களை வளர்த்தல்.

சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடிய கோவூர்க்கிழார் “நலங்கிள்ளியின் பெயரைக் கேட் டால் வடபுல மன்னர்களின் நெஞ் சில் பெரும் நடுக்கம் தோன்றும். அவர்கள் அச்சத்தின் காரணமாகத் தூக்கத்தை இழந்து விடுவார்கள் என்று கூறினார்.

“நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்

துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே” -        புறம்-31

-மாறன் வழுதியைப் பாராட்டிய இளநாகனார்

“வடபுல மன்னர் வாட அடல் குறித்து

இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி”

என்றார். இளங்கோவடிகள்

“வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு

தென்திசை ஆண்ட தென்னவன் வாழி“ என்பார்.

வடவாரியம் தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்யாமல் ஒடுக்கி வைப் பதே தமிழர் நலனுக்கும் தமிழர் உரிமைக்கும் இன்றிய மையாத தேவை என்பதை நம் முன்னோர் கள் காலம் காலமாக நமக்கு உணர்த்தியுள்ளனர். அதனை நாம் இன்று மறந்தோம்.

அடுத்து தமிழர் முன்வைத்த அறம், மனித சமத்துவத்தையே வலியுறுத்தியது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார் கணியன் பூங்குன்றன். எல்லா ஊரும் நம் ஊர் போன்றதே. எல்லாரும் நம் உறவி னரே என்றார். பிறப்பின் வழி உயர்வு தாழ்வு எதுவுமில்லை. எல் லோரும் சமமானவர்களே என்று திருவள்ளுவர் கூறினார். தமிழ் ஆன்மிகமும் சமத்துவத் தையே பேசியது. “ஆரியன் கண் டாய் தமிழன் கண்டாய்” என்று பாடிய அப்பர் “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று கூறி சமத்துவத்தையும் செம்மாப்பையும் முன்வைத்தார். “சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்தீர்? என்று கேட்டார்.

திருமந்திரம் தந்த திருமூலர் “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்று சமத்துவ அடிப் படையில் ஒற்றுமை பேசினார்.

நவீன காலத்தில் 19ஆம் நூற் றாண்டில் தமிழர் மறுமலர்ச்சியின் தொடக்கப் புள்ளியாய் விளங்கிய இராமலிங்க அடிகளார் சமத்துவத் திற்கான ஓர் அமைப்பை உருவாக் கினார். சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்று பெயர் சூட்டினார்.

மதம், சமயம், சாதி, குலம், ஆண், பெண் ஆகியவற்றால் எந்த பேத மும் இல்லாமல் எல்லாரும் சமத்துவ நிலையில் சமரச சுத்த சன் மார்க்க சங்கத்தில் உறுப்பினர் களாகச் சேர வாருங்கள் என்று அனைவரையும் அழைத்தார் வள்ள லார். இஸ்லாமியர்களையும் ஒடுக் கப்பட்ட வகுப்பு மக்களையும் அச் சங்கத்தில் உறுப்பினராக்கினார்.

ஆரியத்தின் வருணாசிரம தரு மத்தைக் கடுமையாகச் சாடினார்.

“நால்வருணம் ஆசிரமம் ஆசார மும் முதலா

நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே

மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

விழித்துப்பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே”

என்றார் வள்ளலார்.

வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்

வேதாகமத்தின் விளைவறியீர்

சூதாகச் சொன்னவலால் உண்மை வெளி தோன்ற உரைக்க வில்லை

என்ன பயனோ இவை?

என்று கேட்டார் இராமலிங்கர்.

தமிழர்களின் புரட்சிக் கவிஞ ராய் விளங்கிய பாரதிதாசன் தமிழர்களிடையே நிலவும் சாதிப் பிளவுகளை சாதி ஒடுக்கு முறை களைக் கடுமையாகச் சாடினார். “எஞ்சாதிக்கு இவர் சாதி இழி வென்று சண்டையிட்டுப் பஞ்சா கிப் போனாரடி சகியே” என்று நொந்து கொண்டார். சாதி ஒழித் தல் ஒன்று, நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று. இதில் பாதியை நாடு மறந்தால் மறுபாதி துலங்குவதில் லையாம்” என்றார்.

நான் இதுவரை கூறிவந்த தமிழர் பெருமை அனைத்தும் தமிழ்ச் சாதி கள் அனைத்திற்கும் உரியவை. தமிழர்கள் அனைவரும் ஒரு வேரிலிருந்து கிளைத்தவர்கள். ஒரு மரத்தின் கிளைகள்; ஒரு குலையின் காய்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற் பட்ட நமது முன்னோர் வரலாற் றையும் நமக்கிருக்கும் வரலாற்றுப் பெருமிதத்தையும் தமிழ்ச் சான் றோர்கள் காட்டிய அறப் பண் பையும் கற்று இக்காலத்தில் நம் மினத்தைப் பிணைத்துள்ள அடிமைத் தளைகளை அறுத்தெறிய இளந்தலைமுறையினர் முன் வரவேண்டும்.

இவ்வாறு தோழர் பெ. மணிரசன் பேசினார்.

Pin It