இனக்கொலையாளி இராசபட்சேயை உலகக் கண்டனத்திலிருந்தும், பன்னாட்டு நீதிமன்ற விசார ணையிலிருந்தும் பாதுகாக்க இந்தியா பல முனைகளி லும் முயன்றுவருகிறது. அவற்றுள் ஒன்றுதான் இலங்கையில் காமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்தும் முயற்சி.

உலகெங்குமுள்ள பல்வேறு மனித உரிமை அமைப்பு களின் எதிர்ப்புகளுக்கிடையே வரும் 2013 நவம்பர் 15 முதல் 17 வரை காமன்வெல்த் நாட்டு அரசுகளின் தலைவர்கள் 23ஆவது மாநாடு - அதாவது காமன் வெல்த் உச்சி மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்பு வில் நடைபெற உள்ளது. காமன்வெல்த் மரபுப்படி எந்த நாட்டில் உச்சி மாநாடு நடக்கிறதோ அந்த நாட்டின் அரசுத் தலைவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக இருப்பார். அந்த வகையில் இலங்கையில் இம்மாநாடு நடப்பதன் மூலம் வரும் இரண்டாண்டு களுக்கு காமன்வெல்த் அவைத்தலைவராக இனக் கொலை யாளி இராசபட்சே இருப்பான்.

உலகமே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, கேள்விமுறையின்றி 2008-2009 இல் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் உலகச் சமூகத்தின் மனச்சான்று இப்போது தான் இலேசாக விழித்துப்பார்க்கத் தொடங்கியிருக்கிறது. தமிழின உரிமை அமைப்புகளும் உலகெங்குமுள்ள மனித உரிமை செயல் பாட்டாளர்களும், சேனல்4 போன்ற ஊடகவியலாளர் களும் இடையறாது செய்த முயற்சிகளின் விளைவாக, சிங்களப் பேரினவாதம் அம்பலப்பட்டு வருகிறது.

2009 இல் இனக்கொலையாளி இராசபட்சேவுக்கு பாராட்டுரை வழங்கிய ஐ.நா. மனித உரிமை மன்றம் இன்று அவனைக் குற்றவாளி என இனங்காணத் தொடங்கிவிட்டது.

ஆனால் இந்த இனக்கொலையாளிக் கும்பலை பாதுகாக்கும் அரணாக இந்தியா தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. ஐ.நா,. மனித உரிமை ஆணையர் விரிவான முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு தமிழர்களுக்கெதிராக “இலங்கை அரசும் அதன் படைகளும் முள்ளிவாய்க் காலில் செய்துள்ள பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களுக்கெதிரான குற்றங்களை விசாரிக்க தற்சார்பான புலன் விசார ணைக்குழு நியமிக்கப்பட்டு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நிறுத் தப்பட வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.

காமன்வெல்த் அமைப்பிலும் இது எதிரொலித் தது. காமன்வெல்த் தலைமைச் செயலகம் இந்த மனித உரிமை மீறல் குறித்து வெளிப் படையான கண்டன அறிக்கை வெளியிட வேண்டும் என்ற முயற்சி 2009 இறுதியில் நடந்த போது அதை தடுத்ததும் இந்தியாதான். சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சில ஊடகங்கள் புகைப்பட மற்றும் காணொளி ஆதாரத்தோடு வெளி யிட்ட தகவல்களின் அடிப்படை யில் முள்ளிவாய்க்கால் பேரவலத் திற்கு காமன்வெல்த் தலைமைச் செயலகம் வெளிப்படையான கண் டன அறிக்கை வெளியிட வேண் டும் என அத்தலைமைச் செயலக அதிகாரிகள் உள்ளக அறிக்கை ஒன்றை அணியம் செய்து காமன் வெல்த் தலைமைச் செயலாளருக்கு 2009 அக்டோபரில் அளித்தனர். உறுப்புநாடுகளில் நிகழ்ந்த உள் நாட்டுச் சிக்கல் தொடர்பாக அறிக்கை எதுவும் வெளியிட வேண் டாம் எனக் கூறி காமன்வெல்த் தலைமைச் செயலாளர் கமலேஷ் சர்மா நிராகரித்தார். இவர் இந்தி யாவைச் சேர்ந்தவர்.

அமுக்கப்பட்ட இந்த உள்ளக அறிக்கை 2010 ஆண்டில் கார்டியன் இதழில் கசிந்து வந்த போது உல கெங்கும் கண்டனக் குரல்கள் எழுந் தன.

இவ்வாறு கமலேஷ் சர்மா அறிக்கையை அமுக்கியது காமன் வெல்த் தீர்மானத்திற்கு எதிரானது. 1995 இல் நடைபெற்ற காமன் வெல்த் உச்சி மாநாட்டு அறிக்கை யில் “ஏதாவது ஒரு உறுப்பு நாடு தனது உள்நாட்டு மக்கள் தொடர் பாக கடுமையான மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருந்தால் அக்குற் றத்தை கண்டித்தோ அல்லது அக் குற்றச்செயல் வருத்தமளிப்பதாக அறிவித்தோ காமன்வெல்த் தலை மைச்செயலகம் வெளிப்படையான அறிக்கை வெளியிடலாம்.” என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே கமலேஷ் சர்மா தன்னுடைய செயலக அதிகாரிகள் அறிக்கை தயாரித்தளித்த பிறகும் அதை வெளியிடாமல் இனக் கொலையாளி இராசபட்சேயை காப்பாற்றியது இந்திய அரசின் தூண்டுதலில்தான் என்று கருத இடமுண்டு.

காமன்வெல்த் அமைப்பின் வரலாற்றில் அதன் உறுப்பு நாடு கள் மீது கண்டனம் தெரிவிப்பதோ, நடவடிக்கை எடுப்பதோ நடக்காத ஒன்றல்ல.

பெரிதும் பிரிட்டனின் முன் னாள் காலனிநாடுகளைக் கொண்டு 1949 இல் நிறுவப்பட்ட “காமன் வெல்த் தேசங்கள்” என்ற அமைப்பு இப்போது 54 நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்டு இயங்கு கிறது. அண்மையில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த பிஜிநாடு தற்காலிக மாக நீக்கிவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 53 நாடுகளைக் கொண்டு காமன்வெல்த் அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. இதன் தலைவ ராக பிரிட்டனின் பேரரசி இரண் டாம் எலிசபெத் இருக்கிறார்.

எந்த உருப்படியான கட்டுத் திட்டமும் இல்லாத ஓர் அமைப் பாக இது தொடங்கப்பட்டிருந் தாலும் ஆண்டுகள் செல்ல செல்ல காமன்வெல்த் அமைப்பிலும் பல் வேறு சீர்திருத்தங்கள் நடை பெற் றன. அடிப்படையான சில மனித விழுமியங்களை பாதுகாப்பது காமன்வெல்த் அமைப்பின் கடமை யாகக் கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் காமன் வெல்த் அமைப்பின் நடவடிக்கை களும் சில நேரங்களில் அமைந்தன.

தென்னாப்பிரிக்கா அரசு 1960 ஆம் ஆண்டு கருப்பின மக்களுக் கெதிரான வெள்ளை நிறவெறி கொள்கையை தனது குடியரசுக் கொள்கையாக அறிவித்தது. உடன டியாக காமன் வெல்த்திலிருந்து தென்னாப்பிரிக்கா நீக்கப்பட்டது.

உகாண்டா அதிபர் இடிஅமீன் சாராயம் குடித்த குரங்குபோல் கண்மண்தெரியாத சர்வாதிகார ஆட்சி நடத்தியபோது 1977 இல் உகாண்டா நாடு காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கிவைக்கப் பட்டது. அப்போது ஒரு நாட்டின் உள்நாட்டு சிக்கல் தொடர்பாக காமன்வெல்த் அமைப்பு தலையீடு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் எல்லை மீறிய மனித உரிமை மீறல் நடக்கும் போது அதனை உள்நாட்டுச் சிக்க லென்று தள்ளிவிட முடியாது என இந்தியா உள்ளிட்ட நாடுகள் அப்போது காமன்வெல்த்தில் வாதம் புரிந்தன. அதன் பிறகே உகாண்டாவை நீக்கிவைக்கும் தீர்மானம் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் நிறைவேறியது.

வெள்ளை நிற வெறி தென்னாப் பிரிக்காவை உறுப்பாண்மையிலி ருந்து நீக்கியதோடு நிற்கவில்லை. காமன்வெல்த் உறுப்பு நாடுகள் தென்னாப்பிரிக்காவோடு எந்த வகை வணிக உறவும் விளை யாட்டு உள்ளிட்ட பண்பாட்டுத் துறை உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று 1985 இல் தீர்மானம் இயற்றியது. விளையாட்டுத் துறை யைப் பொருத்தளவில் 1977லிருந்தே தென்னப்பிரிக்கா புறக்கணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. மேற் சொன்ன தீர்மானம் அதனை மறு உறுதி செய்தது.

நெல்சன் மண்டேலா தலை மையில் நடைபெற்ற கருப்பின மக் களின் உரிமைப் போராட்டம் வெற்றிபெற்று, இன ஒதுக்கல் கொள்கை கைவிடப்படுவதாக 1994 இல் அறிவிக்கப்படும் வரை தென் னாப்பிரிக்கா மீது இந்த பொருளா தார தடை நீடித்தது.

இத்தீர்மானங்களை முன் மொழிந்து ஆதரவு திரட்டுவதில் முனைப்புக் காட்டிய நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஆனால் ஈழத் தமிழர்களை இனக் கொலை செய்த சிங்களப் பேரின வாத ஆட்சியாளர்களைப் பாது காப்பதில் இதே இந்தியா முனைப் புக் காட்டுகிறது.

காமன்வெல்த் தலைமைச் செய லாளர் இலங்கைக்கெதிரான கண் டன அறிக்கை கொடுக்க மறுத்த செய்தி கடந்த காமன்வெல்த் மாநாட்டில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியது.

முன்னணி நபர்கள் குழு (Eminent Persons Group-EPG) என்பது காமன்வெல்த் அமைப்பில் உறுப்பு நாடுகளைப் பற்றி அறிக்கை தயாரித்து அளிக்கும் ஓர் வல்லுநர் குழுவாகும். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையும் தேவையை ஒட்டியும் இந்த குழு நிறுவப்படும். மலேசியா வைச் சேர்ந்த அப்துல்லா அகமது பதாவி என்பவர் தலைமையில் நிறுவப்பட்டிருந்த பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்ட முன் னணி நபர்கள் குழு காமன் வெல்த் அமைப்பின் செயல்பாடு குறித்து கடந்த 2011 அக்டோபரில் ஆஸ்தி ரேலியாவில் நடந்த காமன்வெல்த் 22 ஆவது உச்சி மாநாட்டில் அறிக்கை முன் வைத்தது. தலைமைச் செயலகம் உள்பட காமன்வெல்த் அமைப்பின் ஒட்டுமொத்தச் செயல் பாடு கவலையளிக்கும் நிலையில் உள்ளது என்றும் இப்படியே போனால் காமன்வெல்த் என்ற ஒன்றே தேவையற்றதாக மாறி விடும் என்றும் இந்த அறிக்கை கூறியது.

இவ்வறிக்கை குறித்து 2011 இல் காமன்வெல்த் மாநாடு கூர்மை யான, சூடான விவாதங்களை நடத்தியது. அவ்விவாதத்தின் ஊடாக இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போதெல் லாம் துள்ளிக்குதித்துச் சென்று அவ்விவாதத்தைத் தடுத்தவர்கள் இந்தியப் பேராளர்கள் ஆவர்.

காமன்வெல்த் உச்சி மாநாடு களின் விவாதங்களில் எலிசபெத் பேரரசி கலந்து கொள்வது மிக மிக அரிதான செய்தியாகும். ஆனால் கடந்த மாநாட்டில் விவாதத்தின் ஊடாக எலிசபெத் பேசினார். “உறுப்பு நாடுகளுக்குள் நடை பெறும் கடும் மனித உரிமை மீறல்களை காமன்வெல்த் கண்டு கொள்ளாமல் விட்டுவிடமுடியாது. இதற்குரிய அமைப்பு வழிப்பட்ட ஏற்பாடுகளுக்கு வழிவகை செய்ய வேண்டும்.” என்று கூறினார்.

இதனை அடுத்துப் பேசிய பிரிட்டன் பிரதமர் கேமரூன் “எல்லா உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கட்டுப்படும் வகையிலான கொள் கைப்பட்டயம் ஒன்றை (சார்ட்டர்) உருவாக்கலாம்” என்றார். இந்த முன்மொழிவு ஒரு மனதாக ஏற்கப் பட்டு அதற்கான குழு அமர்த்தப் பட்டது.

கடந்த இரண்டாண்டுகள் உறுப்புநாடுகளுக்கிடையே நடை பெற்ற தொடர் விவாதங்களை அடுத்து “காமன்வெல்த் பேரறிக்கை அல்லது கொள்கைப் பட்டயம் (காமன்வெல்த் சார்ட்டர்)” கடந்த 2012 அக்டோபரில் இறுதி செய்யப் பட்டது. காமன் வெல்த் அமைப்பின் தலைவரான எலிசபெத் அரசி கையெழுத் திட்டதை அடுத்து 2013 மார்ச்சு 1 முதல் இந்த காமன்வெல்த் கொள்கைப் பட்டயம் செயலுக்கு வந்தது. இந்தக் கொள்கைப் பட்டயம் காமன்வெல்த் உறுப்பு நாடுகளை கட்டுப்படுத்தும் அதா வது இதனை மீறும் நாடுகள் மீது காமன்வெல்த் நடவடிக்கை எடுக்க லாம்.

16 கூறுகளைக் கொண்ட இந்தக் கொள்கைப் பட்டயம் உறுப்பு நாடுகளில் தேர்தல் வழிப்பட்ட சனநாயகம், மனித உரிமைப் பாது காப்பு, கருத்துரிமை, முரண்பட்ட சமூகங்களிக்கிடையே சகிப்புத் தன்மை, அதிகாரப்பரவல், சட்டத் தின் ஆட்சி ஆகியவை கட்டாயம் நிலவ வேண்டும் எனக்கூறுகிறது.

இலங்கையை பொருத்தளவில் மேற்கண்ட எதுவுமே செயலில் இல்லை.

இப்பிரச்சினையை கடந்த மாநாட்டிலேயே கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பெர் எடுத்துக்காட்டி கண்டன உரை யாற்றினார். குறிப்பாக காமன் வெல்த் 23 ஆவது உச்சி மாநாடு 2013 இல் இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என இந்தியா உள் ளிட்ட நாடுகள் முன்மொழிந்த போது ஸ்டீபன் ஹார்பெர் மட்டு மின்றி அன்றைய ஆஸ்திரேலியா பிரதமர் ஜூலியா கில்லார்ட் அம்மையாரும் கடுமையாக எதிர்த் தனர். மாநாட்டில் இராசபட்சே பேச எழுந்த போது “இரத்த வாடை வீசும் இந்த மனிதனின் பேச்சை எங்களால் செவி மெடுக்க முடி யாது” என்று கூறி ஸ்டீபன் ஹார் பெர் வெளிநடப்பு செய்தார். இலங்கையில் அடுத்த மாநாடு நடக் குமானால் அதில் கனடா பங்கு பெறாது எனவும் அறிவித்தார்.

இதற்கு முன்னர் இருந்த நிலைமை எதுவாக இருப்பினும் காமன்வெல்த்தின் கடந்த உச்சி மாநாட்டிற்கு பிறகு ஓர் புதிய நிலைமை தோன்றியுள்ளது. அது தான் 2013 மார்ச்சு 1 இல் செயலுக்கு வந்த காமன்வெல்த் கொள்கைப் பட்டயம்.

இக்கொள்கைப் பட்டயம் மனித உரிமைப்பாதுகாப்பு, அதிகாரப் பரவல், சட்டத்தின் ஆட்சி, சமூகங் களிக்கிடையே சகிப்புத் தன்மை, கருத்துரிமை, ஆகியவற்றை கட் டாயமாக்குகிறது என்பதை மேலே குறிப்பிட்டோம்.

இதில் மீறல் நடைபெற்றால் தொடர்புடைய நாடு காமன் வெல்த்தில் உறுப்பு வகிக்கத் தகுதி இழக்கிறது என்றாகிறது. ஐ.நா. மனித உரிமை மன்றம் உள்ளிட்ட பல்வேறு உலகநாட்டு அமைப்புகள் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததை ஏற்கவில்லையென்றா லும் மனிதகுலத்திற்கெதிரான குற்றம் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்துள் ளதை உறுதி செய்து விட்டன. இக்குற்றங்கள் குறித்து விசாரணை நடைபெற வேண்டும் எனவும் தீர் மானித்து விட்டன.

இதுவே இலங்கையின் மீதான குற்றச்சாட்டுரையாகும். இக்குற்றச் சாட்டை அடிப்படையாகக் கொண்டு இலங்கையை காமன் வெல்த் அமைப்பிலிருந்து உடனடி யாக நீக்க வேண்டும். பிஜியைப் போல, பாகிஸ்தானை செய்ததை போல குறைந்தது இடை நீக்கம் செய்ய வேண்டும்.

அதற்கு முதல் படியாக 2013 இல் நவம்பரில் நடைபெறும் 23 ஆவது உச்சி மாநாட்டை வேறுநாட்டிற்கு மாற்ற வேண்டும். கொழும்புவில் நடத்தக் கூடாது.

இவ்வாறு கொழும்புவில் நடந்து காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக வரும் இரண்டாண்டு களுக்கு இனக்கொலையாளி இராச பட்சே நியமிக்கப்பட்டால் அவன் மீது தற்சார்பான பன்னாட்டு புலன் விசாரணை நடத்துவது சிக்கலாகும். இதைத்தான் இந்தியா விரும்புகிறது.

இந்தியாவின் இந்த இனப்பகை முயற்சியை எதிர்த்து தமிழ்நாட்டு மாணவர்களும், இளைஞர்களும் பெருந்திரள் போராட்டம் நடத்த களம் அமைப்பது உடனடித் தேவை ஆகும்.

Pin It