சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி- அப்போலோ தனியார் இதய நோய் மருத்துவ மனைக்கு எதிரிலும், கூவம் நதிக்கரையை ஒட்டியும் அமைந்துள்ள திடீர்நகர் குடிசைப் பகுதியில், 12.06.2012 அன்று தீப்பிடித்தது. அம்மாதத்தில், அது 3 முறை பற்றியத் தீ. தீயில் கருகி சற்றொப்ப 70 குடிசை வீடுகளும், அதிலிருந்த உடைமைகளும் கடும் சேதத்திற் குள்ளாயின.

இந்நிகழ்வு நடந்தேறிய ஒரு மாதத்திற்குள், சென்னை அசோக்நகர் – ஜாபர்கான்பேட்டையில் அமைந்துள்ள குடிசைப் பகுதிகளில் தீப்பற்றி எரிந்தன. இதில் சற்றொப்ப 600 குடிசை வீடுகள் தீயில் கருகி அம்மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. இவ்வீடுகளில் இருந்த, உணவுப் பங்கீட்டு அட்டை, அரசின் பல்வேறு சான்றிதழ்கள், மாணவர்களின் புத்தகங்கள் என பலவும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

அம்மக்கள் வீடின்றி உண்மையிலேயே நடுத் தெருவில் தான் நின்றனர். வீடிழந்த அம்மக்கள் மழைக்கு ஒதுங்கினால் கூட, அருவருப்புடன் அவர்களை விரட்டும் மேட்டுக் குடிகளின் ‘சொர்க்கமான’ சென்னை நகரம், இவர்களுக்கு என்றைக்குமே ‘நரக’மாகத் தான் திகழ்கின்றது. சென்னையில் இது போன்று குடிசைப் பகுதிகள் தீப்பிடித்து எரிவது ஒன்றும் புதிதான நிகழ்வல்ல.

ஒரு காலத்தில், ‘சென்னப்பட்டினம்’ என்ற பெயரில் மீனவர்களுக்கேச் சொந்தமாயிருந்த சென்னை நகரம், என்றைக்கு வடநாட்டு மார்வாடி – குசராத்தி சேட்டுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் படிப்படியாகத் தாரை வார்க்கப்பட்டதோ அன்றிலிருந்தே சென்னை மண்ணின் மைந்தர்களான குடிசைப் பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல்கள் தொடங்கிவிட்டன.

பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, சென்னை நகரம் கங்காணித் தேர்தல் அரசியல் கட்சிகளின் தொடர் ஆட்சிகளால் ‘அழகு’படுத்தப் பட்டது. ‘வளர்ச்சி’த் திட்டம் என்ற பெயரில், மக்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டது.

ஒரு காலத்தில், சென்னையின் வேளாண்விளை நிலங்கள் சூழ்ந்திருந்த பகுதிகள், இன்று பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கட்டிடங்களைத் தாங்கி நிற்கின்றன.

ஏரிகளும், பிற நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப் பட்டு அங்கெல்லாம் கான்கிரீட் காடுகள் முளைக்கின்றன.

தி.மு.க. ஆட்சியின் போது ‘சிங்காரச் சென்னை’ என்ற பெயரிலும், அ.தி.மு.க. ஆட்சியில் ‘எழில்மிகுச் சென்னை’ என்ற பெயரிலும் ‘அழகு’படுத்தும் திட்டம் என்ற பெயரில், குடிசைப் பகுதி மக்களின் வாழ் விட நிலங்களை அழிப்பதே இக்கட்சிகளின் முக்கிய நோக்க மாக முன் நிற்கிறது.

சென்னையின் குடிசைப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் தனியார் நிறுவனங்களில் வாழும் மாதச் சம்பளக்காரர்கள் அல்ல. இப்பகுதிகளிலுள்ள பெரும்பாலான ஆண்கள், கட்டுமானக் கூலித் தொழிலாளிகளாகவும், தட்டு வண்டி ஓட்டு பவராகவும், சாவு மேளம் அடிப்பவர்களாகவும், துப்புரவுத் தொழிலாளர்களாகவும் சென்னை நகரின் அடிப்படை வேலைகளை செய்கின்றவர்களாக உள்ளனர்.

வசதியற்றோரை வதைக்கும் சென்னை நகரில் வாழுகின்ற இக்குடிசைப் பகுதிக் குடும்பங்களில் ஒருவர் மட்டும் சம்பாதித்தால் போதுமா? போதாது. ஆகவே, இப்பகுதி பெண்களும் வீட்டு வேலை, பூ விற்பனை, துப்புரவுத் தொழில் என பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உழைத்து சேர்த்த பணத்தைக் கொண்டு, தமது குடிசைகளை சொர்க்கமாகக் கருதி வாழ்ந்து கொண்டுள்ள இம்மக்கள், தமது வாழ்விடத்திற்கு அருகமையிலேயே பணி மற்றும் குழந்தைகளுக்கான கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வதால், இவர்களை ஒட்டுமொத்தமாக வேறு இடங்களுக்கு மாற்றுவது இவர்களை அடியோடு ஒழிப்பதற்குச் சமம் ஆகும். அதைத் தான் சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் தொடர்ந்து செய்து வருகின்றது.

1985இல், மும்பை மாநகராட் சிக்குட்பட்ட ஓர் பகுதியில் குடிசைகளை அகற்றுவதை எதிர்த்த ஓர் வழக்கில் (Olga Tellis vs Bombay Municipal Corporation), நீதிபதி ஒய்.வி. சந்தரசுத் ‘குடிசைகளை இடிப்பது என்பது வெறும் குடியிருப்பு அகற்றல் மட்டு மல்ல, அம்மக்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதும் ஆகும்’ என கடுமையாகக் கண்டித்திருந்தார். ஆனால், மக்களுக்கான நீதி ஒரு போதும் மதிக்கப் படாத நாட்டில், சட்டம் பேசி என்ன பயன்?

சென்னை நகரின் மையப் பகுதியில் வாழும் மக்களின் குடிசைக் குடியிருப்புகளை புல்டோசர்களில் இடித்து விட்டு, அவர்களை நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் எட்டியுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதிகளுக்கு விரட்டியடிக்கிறது தமிழக அரசு. அவ்வப்போது, குடிசைகளை இடிப்பதும், மறை முகமாக குடிசைகளை எரிப்பதும் இந் நடவடிக்கையின் ஒரு பகுதியே ஆகும் என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

‘குடிசைப் பகுதிகளை இல்லா தொழிக்கப் போகிறோம்’ என முழங்கும், தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம் குடிசைப் பகுதிகளை முற்றிலும் அழித்து விட்டு, அப்பகுதி வாழ் மக்களை அவரவர் வாழ்பகுதிகளிலிருந்து விரட்டி வேறு பகுதிகளில் குடியமர்த்தும் மாற்றுத் திட்டங்களைத் தான் தொடர்ந்து முன் வைக்கிறது. இதன் கண்முன் சாட்சியமாக சென்னையின் கண்ணகிநகர் விளங்குகிறது. ஒரு சில இடங்களில், குடிசைப் பகுதிகளுக்கு அருகேயேகுடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தாலும், அவை முறையாக பராமரிக்கப்படாமல் பரிதாபமாக காட்சியளிக்கின்றன.

2001ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சென்னை நகரின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில், சற்றொப்ப 10.79 இலட்சம் மக்கள், அதவது 26 விழுக்காட்டு மக்கள் இதுபோன்ற குடிசைப் பகுதிகளில் தான் வாழ்ந்து கொண்டுள்ளனர். இது கூட இல்லாமல் வெட்ட வெளியில் குடித்தனம் நடத்தும் நடைபாதை வாசிகள் உண்டு இவர்களுக்கு ஒழுங்கமைக்கப்படாத குடியிருப்பில் வசிப்போர் எனப் பெயர்.

உலகமயப் பொருளியலின் விளைவால் மேலும் மேலும் சுரண்டப்படுகின்ற இம்மக்களின் எண்ணிக்கை இன்று பலமடங்கு உயர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இவர்களில் பெரும்பாலான மக்கள் தாழ்த்தப்பட்ட தலித் மற்றும் பழங்குடியின சமூக மக்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முறையான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட எவ்வித வசதிகளுடன்றி, நாளும் கொசுக்களுடன் இப்பகுதிகள் அலங்கோலமாகவே காட்சியளிப்பதன் பின்னணியில், அரசு மற்றும் அரசியல்வாதிகளின் பேராசைத் திட்டங்களே ஒளிந்துகொண்டுள்ளன. மழைக் காலங்களில் கூவம் ஓரத்திலுள்ள குடிசைப்பகுதிகள் தண்ணீரில் மூழ்கி பெரும்சேதங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

தீ, மழை – வெள்ளம் போன்ற ஆபத்து காலங்களில் தம்உணவுப் பங்கீட்டு அட்டையை இழக்கும் குடிசைமக்கள், அதைத் திரும்பப்பெற அரசு அதிகாரிகளுடன் பெரும்போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். கையூட்டும் அளிக்க வேண்டியிருக்கும்.

சென்னை நகரின் ஒவ்வொரு அங்குலத்தையும் கோடிகளில் விலைபேசி விற்கத் துடிக்கும் மனைவணிகத் தொழில் கும்பலும், அவர்களுடன் பின்னிப் பிணைந்துள்ள தேர்தல் அரசியல்வாதிகளும், சென்னையின் இக்குடிசைப் பகுதிகளை அருவருப்பானவையாகவே கருதுகின்றனர்.

தீ விபத்துகளாலும், தகவல் தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்க்க பூங்காக்கள் அமைத்தல், மெட்ரோரயில் திட்டம், சாலை அகலப்படுத்தல் என பல்வேறு ‘வளர்ச்சித் திட்டங்களாலும், அம்மக்களை நகரத்தை விட்டுத் துரத்தி, ஓர் மூலையில் குடியமர்த்திவிட துடியாகத் துடிக்கின்றனர்.

வளாகக் குடியிருப்புகளில் (கேட்டட் கம்யூனிட்டி) வாழும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் இக்குடிசைவாசிகளிகளை அருவருப்போடும் தங்களுக்கான அச்சுறுத்தலாகவுமே பார்க்கின்றனர். இவர்கள் ஒழிந்தால் நல்லது என இவர்கள் நினைக்கிறார்கள். பெரு முதலாளிகளுக்கு, ரியல் எஸ்டேட்காரர்களுக்கு இது நல்வாய்ப்பாக அமைகிறது.

இதன் ஒருபகுதியாகத்தான் சென்னை குடிசைப் பகுதிகளின் தீ விபத்துகள் இருக்க முடியும் என நாம் உறுதியாக கூறலாம். ஏனெனில், பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் தேர்தல் கட்சியினரும், பன்னாட்டு நிறுவனங்களும், ஒடுக்கப்பட்ட மக்களைத் துச்சமெனக் கருதும் பார்ப்பனிய மனநிலையில் ஊறித்திளைப்பவர்கள் ஆவர்.

உண்மையில், இம்மக்கள் இங்கேயே வாழவேண்டும் என ஓர் அரசோ, தேர்தல் கட்சியோ நினைத்திருந்தால், இம் மக்களுக்கு அவரவர் வாழ்விடத்திலேயே அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி, அவர்களை அதில் குடியமர்த்தியிருக்க முடியும். ஆனால், கால்நூற்றாண்டு காலத்திற்கே மேல் தமிழகத்தை ஆண்ட ‘திராவிடக் கட்சிகள் அதைச் செய்ய முனையவில்லை.

குடிசைப் பகுதிகளில் தம் கட்சிக் கொடிகளை ஏற்றி, அம்மக்களோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் தான் அவர்கள் குறியாக இருந்தனரே ஒழிய, ஒவ்வொருநாளும் கொசுக்கடியிலும், மழை, வெயிலிலும், கடுங்குளிரிலும் துன்பப்பட்டு உழலும் இம்மக்களுக்கு அவரவர் வாழ் பகுதிகளிலேயே நிரந்தரக் குடியிருப்புகள் ஏற்படுத்தி அவர்களை வாழ்வைக்க முனையவில்லை. மாறாக, பன்னாட்டு நிறுவனங்களுடன் நாளுக்கொரு ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தம் போட்டு, அதில் தரகுப்பணம் பார்க்கவே அவர்களுக்கு நேரம் சரியாகவுள்ளது.

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வழங்கும் தகவல்களின்படி, 2009ஆம் ஆண்டில் மட்டும், சற்றொப்ப 263 தீ விபத்துகள் குடிசைப் பகுதிகளில் பதிவாகியுள்ளன. இதில், மொத்தம் 691 குடிசைகளும், சற்றொப்ப 50 இலட்சத்திற்கும் மேலானப்பொருட்களும் சேதமாகியுள்ளன. ஆனால், இன்று வரை இதுபோன்ற குடிசைப் பகுதிகளுக்கு அருகில் ஓர் தற்காலிகத் தீயணைப்பு நிலையம் கூட இல்லை என்பது, அரசுகளின் ‘உள்நோக்கத்தை அம்பலப் படுத்துவதாகவே உள்ளது.

‘கூவம் போன்ற கழிவுநீர் ஓடும் ஆறுகளின் ஓரத்தில் சுகாதாரமற்ற முறையில் வாழாதீர்கள்’ என்று ஆசை வார்த்தையுடன் பேசும் அரசு அதிகாரிகள், அவர்கள் புதிதாகக் குடியமர்த்தும் கண்ணகிநகர், – செம்மஞ்சேரி போன்ற பகுதிகளில், அடிப்படை வசதிகளைக் கோரி மக்கள் இன்றுவரை போராடி வருகின்ற உண்மை நிலையும் மறைக்கப்படுகின்றது. கண்ணகிநகர், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளில் வாழ்கின்ற மக்கள், சென்னைநகருக்குள் பேருந்தில் தம்பணிக்காக வருவதற்கே தினமும் 20 விழுக்காட்டுத் சம்பளத்தை இழக்கின்ற அவலம் நடந்து கொண்டிருக்கிறது.

சென்னைக்குள் வாழுகின்ற இக்குடிசைப் பகுதி மக்கள், சென்னை நகருக்குள்ளேயே தம்மை குடியமர்த்தக் கோரி அரசிடம் முறையிடும் போதெல்லாம் ‘சென்னைக்குள் இடமில்லை’ என்றே காலங்காலமாக பதில்சொல்லப்பட்டு வருகிறது. ஆயிரம் விளக்குப்பகுதி தீ விபத்தை பார்வையிட வந்த அமைச்சர் வளர்மதி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் இதே கேள்வியைத் தான், பாதிக்கப்பட்ட மக்களிடமே எழுப்பி விட்டுச் சென்றுள்ளனர்.

வளர்ச்சி நிதியத்திற்கான நடுவம் (Centre for Development Finance) என்ற ஆய்வு நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ‘டிரான்ஸ்பரண்ட் சென்னை’ என்ற திட்டம், சென்னை நகரைப் பற்றிய பலதகவல்களை சேகரித்து வெளியிடுகின்றது. இவ்வமைப்பின் சார்பில், அண்மையில் நடைபெற்ற பயிலரங்கில், சென்னையின் குடிசைப் பகுதிகள் குறித்த சில விவரங்கள் வெளியிடப்பட்டன.

இவ்வமைப்பின் திட்டஇயக்குநர் நித்யா வி.ராமன் கூறுகையில், தமிழக அரசு 1985க்குப்பிறகு, சென்னையில் புதிய குடிசைப்பகுதிகள் எவற்றையும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவிக்கிறார். கடந்த 1971ஆம் ஆண்டில், சென்னையில் 1202 குடிசைப்பகுதிகள் இருந்தன என்றும், 1985இல் அவற்றுடன் 17 மட்டும் சேர்க்கப்பட்டன என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

அவ்வமைப்பின் இன்னொரு ஆய்வாளர், 2002ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தால் எடுக்கப்பட்ட ஓர்கணக்கெடுப்பின்படி, சென்னை நகருக்குள் உள்ள அங்கீகரிக்கப்படாத குடிசைப்பகுதிகள் வெறும் 1.7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், புறநகர் பகுதிகளில் 4.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும்தான் அமைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளது என்கிறார். இது விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியின் பரப்பளவில் வெறும் 1.1 விழுக் காடே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நில உச்சவரம்பு சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு அரசு பதிலளிக்கையில், சென்னைக்குள் 10.41 சதுர கிலோமீட்டர் இடம் எவ்வித பயன்பாடும் இன்றி கிடப்பதாகத் தெரிவித்திருப்பதையும் இவ்வமைப்பு வெளிக்கொணர்ந்தது (செய்தி: இந்தியன் எக்ஸ்பிரஸ், 23.07.2012).

இந்த நிலம் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்கள், பஞ்சமி நிலங்கள் என அரசு மீட்டெடுத்தால், சென்னை மாநகர எல்லைகளுக்குள்ளேயே குடிசை வாழ்மக்களை குடியமர்த்த முடியும். அவர்களுக்கெனக் குடியிருப்புகளைக் கட்டித்தர முடியும்.

ஆனால், இவற்றையெல்லாம் ஆக்கிரமிப்புச் செய்துள்ள முதலாளிகளும், அவர்களிடம் கையூட்டுப் பெறுகின்ற அரசியல்வாதிகளும் இதைச் செய்வார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. இவர்களை நிலைகுலைய வைக்கும் மக்கள் போராட்டங்களே இதைச் செய்யும். அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

Pin It