இந்திய அமைதிப்படையை அனுப்பி தமிழீழ மக்களை பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்த முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில், பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது சாவுத் தண்டனையை இரத்து செய்யக் கோரி, காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 21 வயதான தோழர் செங்கொடி, கடந்த 28.08.2011 அன்று தீக்குளித்து ஈகியானார்.

தோழர் செங்கொடியின் ஈகத்தையும், அவரது வாழ்க்கையையும் ஆவணப்படுத்தும் விதமாக “இப்படிக்கு தோழர் செங்கொடி” என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் பொன்னுசாமி என்ற புனைப் பெயரில் தொடர்ந்து எழுதி வரும் திரு. வெற்றிவேல் சந்திரசேகர் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு விழா சென்னை கீழ்ப்பாக்கம் டான் பாஸ்கோ கல்லூரியில் 19.08.2012 அன்று நடைபெற்றது.

நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். நடிகர் சத்யராஜ் படத்தை வெளியிட, பேரறிவாளன் தாயார் திருமதி. அற்புதம் அம்மையார் முதற்படி பெற்றுக் கொண்டார். இயக்குநர் ம.செந்தமிழன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மூவர் தூக்கிற்கு எதிராக காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர் கயல்விழி சிறப்பிக்கப்பட்டார். படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. மு.நியாஸ் அகமது, பாடல் எழுதிய கவிஞர் கவிபாஸ்கர், படத்தொகுப்பாளர் திரு ரிச்சர்ட், பாடல் பாடிய திரு. சுனந்தன், ஒலிக்கலவை அமைப்பாளர் திரு உதய், நிர்வாக உதவியாளர் திரு. RJ இன்பா உள்ளிட்ட படக்குழுவினரை நடிகர் சத்யராஜ் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். சுமார் 57 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம், திரையிடப்பட்டது.

திரையிடலுக்குப் பின் பேசிய தோழர் பெ.மணியரசன்,“ ஈழத்தமிழர்க்கு ஆதரவாக பேசிய வழக்கில் நான் கைது செய்யப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன் என்னை பேட்டி கண்டார். அந்தப் பேட்டியின் போது நான் தெரிவித்த நுட்பமான கருத்துகளை மிகக் கவனமாகவும், தைரியமாகவும் பத்திரிகையில் பதிவு செய்திருந்தார். அதே அக்கறையோடு இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் உயிர்நீத்த தோழர்களுக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் எதுவும் செய்யாத நிலையில், செங்கொடி போன்ற நம் இனத்தின் நாயகி பற்றிய இந்தப் பதிவு நல்ல தொடக்கம்!” என பேசினார்.

நடிகர் சத்யராஜ், “சினிமாத் துறையைச் சேர்ந்த நான் இந்தப் படத்தின் தொழில்நுட்ப நேர்த்தியை மறந்துவிட்டு, படத்தின் உள்ளடகத்தில் மூழ்கிப் போனேன். அந்தளவுக்கு இந்தப் படத்தில் அரிய தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, செங்கொடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதையொட்டி, இருளர் சமூகம் என்றைக்கும் அனுபவித்து வரும் வேதனைகளைப் பதிவு செய்த விதத்தில் இந்தப் படத்தை முக்கியமான வரலாற்றுப் பதிவாகக் கருத வேண்டியிருக்கிறது” என பேசினார்.

கருத்துரை வழங்கிய தோழர் திருமுருகன் காந்தி, “தமிழர்களுக்கான ஊடகங்கள் இங்கே இல்லாத நிலையில் இதுபோன்ற தரமான ஆவணப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசர, அவசியம்” என்றார். இயக்குநர் ம.செந்தமிழன், “இது போன்ற ஆவணப்பட முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். வெறுமனே பார்த்து விட்டு செல்லாமல், முடிந்தவரை இந்த ஆவணப்பட குறுந்தகடுகளை வாங்கி விழாக்களில், நிகழ்ச்சிகளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். இதுபோன்ற ஆவணப்படங்கள் வணிகரீதியில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

நிறைவில், ஆவணப்பட இயக்குநர் திரு. வே.வெற்றிவேல் சந்திரசேகர் ஏற்புரை வழங்கினார். இப்படத்தை ஊக்குவிக்கும் விதத்தில், விழா மேடையிலேயே தோழர் பெ.மணியரசன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் படத்தின் நூறு குறுந்தகடுகளுக்கானத் தொகையை படக்குழுவினரிடம் வழங்கினார்கள்.

நிறைவாக ஏற்புரையில் ஆவணப்படத்தின் இயக்குநர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் “சுதந்திர இந்திய வரலாற்றில் சமூக நோக்கத்துக்காக தற்கொலை செய்து கொண்ட முதல் பெண் செங்கொடி. இதுவே அந்தப் பெண்ணைப் பற்றிய ஆவணப்படத்தை எடுக்க என்னைத் தூண்டியது” என்றார். ஆர்.ஜே. இன்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திரு. மு.நியாஸ் அகமது நன்றி நவின்றார். அரங்கம் நிரம்பிய தமிழின உணர்வாளர்கள் குறுந்தகடுகள் வாங்கிச்சென்றனர்.

இந்த ஆவணப்படம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு 9994155339 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பிரான்சில் ஆவணப்பட வெளியீட்டு விழா

செங்கொடியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வையோட்டி பிரஞ்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு வருகிற 25.08.2012 அன்று மாலை 3.30 மணியளவில் ரொக்கன்ரோ (தொடர்வண்டி நிலையம் அருகில்) மணித உரிமை சதுக்கத்தில் “இப்படிக்கு தோழர் செங்கொடி” ஆவணப்படம் வெளியீடப்படுகிறது.

சிதம்பரத்தில் விற்பனை இயக்கம்

தோழர் செங்கொடியின் முதலாம் ஆண்டு நினைவுநாளான 28.8.2012 அன்று சிதம்பரத்தில் ஆவணப்பட விற்பனை இயக்கம் நடைபெற்றது. தோழர்கள் கு.சிவப்பிரகாசம், ஆ.குபேரன், சுப்பிரமணியசிவா உள்ளிட்ட தோழர்கள் இன உணர்வாளர்களைச் சந்தித்து “இப்படிக்கு தோழர் செங்கொடி” பட ஒளித்தகடுகளை விற்பனை செய்தனர்.

Pin It