பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழீழத் தமிழர் திரு. செந்தூரன் தற்போது தமிழக அரசு நடத்தி வரும் ‘சிறப்பு முகாம்’களை கலைக்கக் கோரிக் காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வருகின்றார். 21 நாட்கள் கடந்த பின்னர், 20-08-2012 அன்று முதல் நீர் அருந்த மறுத்துப் போராட்டத்தை அவர் தீவிரப்படுத்தினார்.

நீர் கூட அருந்தாமல் நடைபெற்று வரும் செந்தூரனின் உண்ணாப்போராட்டம், கொஞ்சம் கொஞ்சமாக அவரது உயிரைக் குடித்து வருவதாக மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆனால், இரக்கம் சிறிதுமற்ற தமிழகக் காவல்துறை அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் கூட பெறமுடியாதவாறு இழுத்துச் சென்று மீண்டும் “சிறப்பு முகாம்“ சிறைக் கொட்டடியில் அடைத்தது.

அப்படி செந்தூரன் என்ன தான் குற்றம் செய்து விட்டார்?

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற தமிழீழ அரசின் நிர்வாகப் பிரிவில் திரு. செந்தூரன் பணிபுரிந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை சிங்கள உளவுத்துறை, இந்திய – தமிழக அரசுகளிடம் கைது செய்யக் கோரியது. சிங்கள அரசுக்கு அடிமைச்சேவகம் புரியும் தமிழகக் காவல்துறை அதன்படி, 2011ஆம் ஆண்டு ஏப்ரலில் உயிருக்கு பயந்து தமிழகம் தஞ்சம் புகவந்த அவரை, சூலை 14 அன்று கைது செய்தது. செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அவரை அடைத்தது.

கடந்த சனவரி 16 அன்று தமிழகக் காவல்துறையினர் அவரை கேரளா அழைத்துச் சென்றனர். அங்கு ஆஸ்திரேலியாவிற்கு ஈழஅகதிகளைக் கூட்டிச் செல்ல முயற்சித்தாக கூறி, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். 2 மாதங்கள் கேரளச் சிறையில் அடைக்கப்பட்ட திரு. செந்தூரன், கேரள நீதிமன்றத்தின் தலையீட்டால் மார்ச் 14 அன்று பிணை கிடைக்கப்பெற்ற விடுதலையானார்.

பிணை ஆணை வந்தும் அவரை 10 நாட்களுக்குப் பின், மார்ச் 23 அன்று கேரளச் சிறை நிர்வாகம் விடுவிக்க, வாசலிலேயே காத்திருந்த தமிழக காவல்துறை அவரை அங்கேயே கைது செய்தது. செங்கல்பட்ட முகாமில் அவர் மீண்டும் அடைக்கப்பட்டார்.

கடந்த சூன்-சூலை மாதங்களில், தம்மை விடுவிக்கக் கோரி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நடைபெற்ற ஈழஅகதிகள் உண்ணாப் போராட்டத்தில் கலந்து கொண்ட திரு. செந்தூரன் மற்றும் தோழர்கள், தமிழகக் குற்றப்பிரிவுக் காவல்துறை கொடுத்த வாக்குறுதியை நம்பி உண்ணாப் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், கொடுத்த வாக்குறுதியை தமிழகக் காவல்துறை நிறைவேற்ற முயற்சிக்காத நிலையில் மீண்டும் உண்ணாப் போராட்டத்தை நடத்த வேண்டுமென செங்கல்பட்டு முகாமில் திட்டமிட்டார். உடனடியாக அவரை பூந்தமல்லி சிறப்பு முகாமிற்கு மாற்றியது தமிழகக் காவல்துறை.

இதைக் கண்டித்த, கடந்த ஆகத்து 6 தொடங்கி அவர் பூந்தமல்லி சிறப்பு முகாம் சிறையிலேயே உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கி, இன்று 23 நாட்களைக் கடந்தும் போராட்டத்தை நிறுத்தாமல் வீரியத்துடன் தொடர்ந்து வருகின்றார்.

கடந்த 22.08.2012 அன்று செந்தூரனைப் பார்க்க இலங்கையிலிருந்து வந்திருந்த அவரது அத்தையையும், சித்தப்பாவையும் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். செந்தூரனது பட்டினிப் போராட்டத்தைக் கைவிடச்சொல்லி இவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். ஏற்கெனவே, செந்தூரனின் பட்டினிப் போராட்டத்தால் மனம் நொந்திருந்த அவரது அத்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் காலமானார். அத்தையின் உடலைக்கூடப் பார்க்க முடியாத கெடுபிடிகளுக்கு மத்தியிலும் செந்தூரனின் உண்ணாப் போராட்டம் தொடர்ந்தது.

சிறப்பு முகாம் எனப்படும் இச்சிறைக் கொட்டடிகளைக் கலைக்க கோரி, ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகளும் உணர்வாளர்களும் முற்றுகைப் போராட்டங்கள் நடத்தவே, செங்கல்பட்டு சிறையிலிருந்து 7 அகதிகளை தமிழக அரசு விடுவித்தது.

இருப்பினும், செந்தூரனின் கோரிக்கை நிறைவேறாத நிலையில், அவரது உண்ணாப் போராட்டம் தொடர்கிறது. செந்தூரனின் உயிரைக் காப்பாற்றக் கோரி, ம.தி.மு.க. சார்பில் சென்னை கட்சித் தலைமையகமான “தாய”கத்தில், உணர்வாளர்கள் பங்கேற்கும் தொடர் உண்ணாப் போராட்டமும் நடைபெற்று வருகின்றது.

Pin It