கொலைக்களமான கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் அறவழிப் போராட்டங்களின் உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு, கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப இந்திய அரசு அனுமதியளித்திருப்பதைக் கண்டித்து இந்திய விடுதலை நாளான ஆகத்து 15 அன்று கூடங்குளம் - இடிந்தகரைப் பகுதிகளில் மக்கள் கருப்புக் கொடி ஏற்றி, இந்திய சனநாயகத்திற்கு சவ ஊர்வலமும் நடத்தினர்.

தமிழ் மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்த இந்திய அரசின் போக்கைக் கண்டித்து ஆவேச முழக்கங்களுடன் கருப்புக் கொடி ஏந்தி நடந்து வந்தனர் அப்பகுதி இளைஞர்களும் மாணவர்களும். இதனைத் தொடர்ந்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தலைவர்கள் முனைவர் சு.ப. உதயக்குமார், புஷ்பராயன் உள்ளிட்ட போராட்டக் குழுவினர் மீதும், சற்றொப்ப 2000 பொதுமக்கள் மீதும் காவல் துறையினர் இந்தியக் கொடி அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தனர். இது அறவழியில் போராடி வரும் இப்பகுதி மக்கள் மீதுப் போடப்பட்ட 274ஆவது வழக்காகும். சுதந்திர இந்தியா அடிமை தமிழினத்திற்கு அளித்துள்ள அடுத்த பரிசு இது.

ஆகத்து 16 அன்று அணு உலையை எதிர்த்து இடிந்தகரையில் நடைபெற்று வரும் 367ஆம் நாளது தொடர் உண்ணாப் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்வதையொட்டி மாபெரும் மக்கள் மாநாடு நடைபெற்றது.

காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் விதித்திருந்த 144 தடை உத்தரவையும் மீறி இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ.இராசு, இயக்குநர் ‘பாலை’ ம.செந்தமிழன், ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் தோழர் நீலவேந்தன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் மீதும், 3000 பொது மக்கள் மீதும் மீண்டும் காவல்துறை வழக்குப் பதிந்தது.

“கூடங்குளம் மக்கள் போராட்டம், இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் ஒரு வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறது. வருங்காலத்தில் கூடங்குளம் அணுஉலையை மூடுவதற்கான பெரும் புயல் உருவாவதற்கான அடித்தளத்தை இப்போராட்டம் போட்டுள்ளது. அணு உலைக்கு எதிராக மட்டுமின்றி மற்ற மற்ற உரிமைகளுக்காக ஞாயங்களுக்காக போராடுவோர்க்கு ஓர் உந்து விசையும் போராட்ட வடிவமும் இப்போராட்டத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. கூடங்குளம் அணு உலை இழுத்து மூடப்பட்டு நாம் வெற்றி பெரும் வரை தொடர்ந்து போராடுவோம்! போராட்டக்களத்தை விரிவுபடுத்துவோம்!” என கூடங்குளம் மக்கள் போராளிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட தமது அறிக்கையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கூறினார்.

இப்பெரும் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்றும் தோள் கொடுத்த துணை நிற்கும் என்றும் போராளிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாதுப் போராடும் கூடங்குளம் - இடிந்தகரை மக்களை பாராட்டுவோம்! போர்க்குணம் பெறுவோம்!

Pin It