சனநாயகத்தைப் பயன்படுத்திக் கொண்டு சர்வாதிகாரி ஆனவர்கள் உலகில் பல பேர். அவர்களில் முசோலினி, இட்லர் போன்றவர்கள் ஒரு வகையினர். சதாம் உசேன், கடாபி, இராசபட்சே போன்றவர்கள் இன்னொரு வகையினர். செயலலிதா, மாயாவதி, கருணாநிதி போன்றவர்கள் வேறொரு வகையினர்.

செயலலிதா, மாயாவதி, கருணாநிதி போன்றவர்கள் சதாம் உசேன் போலவும் மம்மர் கடாபி போலவும் சர்வாதிகாரிகளாக உருவாக முடியாமைக்குக் காரணம், அவர்களுக்கு வரம்புக்குட்பட்ட மாநில அதிகாரங்கள் மட்டும் இருப்பதாகும்.

அந்த வரம்புக்குட்பட்ட மாநில அதிகாரங்களை வைத்துக்கொண்டு அவர்கள் நடத்தும் சர்வாதிகார அரசியல், குடும்ப அரசியல் மிகக் கொடுமையானதாகும். புதிதாக தோன்றும் குட்டிக் கட்சி நிறுவனர்களும் இவர்களைத் தங்களுக்கான முன்மாதிரி வடிவங்களாக எடுத்துக் கொண்டு குட்டி சர்வாதிகாரி ஆகிவிடுகிறார்கள்.

செயலலிதா இப்பொழுது தம் கட்சியினருக்கு ஓர் உறுதி மொழி முழக்கத்தை உருவாக்கித் தந்துள்ளார். அ.இ.அ.தி.மு.க.வின் இளைஞர் பாசறையினரும், இளம் பெண்கள் பாசறையினரும் நடத்தும் பொதுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் அக்கூட்டத்தில் உள்ள அனைவரும் இந்த உறுதிமொழியை எழுந்து நின்று உரத்து முழங்கி ஏற்றுக் கொண்டபின், மற்ற நிகழ்ச்சிகளைத் தொடங்க வேண்டும்.

அந்த உறுதி மொழி வருமாறு:

“அ.இ.அ.தி.மு.க.வினுடைய நிரந்தரப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசின் மாட்சிமை பொருந்திய முதலமைச்சர், இலட்சியம், தொண்டு, தியாகம் ஆகியவற்றின் மொத்த உருவமாகத் திகழும் இதய தெய்வம் தங்கத்தாரகை புரட்சித் தலைவியின் சீரிய சிந்தனையில் உதித்த அ.தி.மு.க. இளைஞர்கள் - இளம்பெண்கள் பாசறையில், எங்களை உளப்பூர்வமாகக் இணைத்துக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடனும் அஞ்சாத உறுதியுடனும் ஆளுமைத் திறனோடும் கழகப் பணியாற்றுவோம். அ.தி.மு.க.வின் கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றிக் கழக மாண்புகளைப் பேணிக்காத்து அ.தி.மு.க. வளர்ச்சிக்கு உணர்வோடும் உத்வேகத்தோடும் தொடர்ந்து உழைப்போம்.

புரட்சித் தலைவி மீது மாறாத பற்றோடும் விசுவாசத்தோடும் திகழ்ந்து அ.தி.மு.க. இளைஞர்கள் - இளம் பெண்கள் பாசறையின் போர் வீரர்களாக/வீராங்கனைகளாக இலட்சிய வேட்கையோடு மக்கள் பணி ஆற்றுவோம்.

தந்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த வடிவமாகத் திகழும் புரட்சித்தலைவியின் கொள்கைகளை எந்நாளும் காப்போம். பாசறையின் பணிகளுக்கு எங்களை முழுமனதோடு அர்ப்பணிக்கிறோம். நாங்கள் எத்தகைய தியாகத்துக்கும் தயார், தயார் என்று உளமார உறுதி கூறுகிறோம்”

முதலமைச்சர் செயலலிதா ஒப்புதலுடன் அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை இது. (தினத்தந்தி, சென்னைப் பதிப்பு, 07.10.2012).

தமது கட்சியினர், தம்மை நிரந்தரப் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உறுதி மொழி எடுக்க வேண்டும் என்று நிபந்தனையிடுகிறார் செயலலிதா. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சி அ.இ.அ.தி.மு.க. அவ்வாணையத்தின் விதிமுறைப்படி ஒரு கட்சி முறையாக உள்கட்சித் தேர்தல் நடத்தி, ஒவ்வொரு முறையும் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். செயலலிதா கட்டளையிட்டுள்ள உறுதி மொழி அவரை “நிரந்தரப் பொதுச் செயலாளர்“ என்று கூறுகிறது. அ.இ.அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் என்பது, ஒருமனதாக செயலலிதாவைத் “தேர்ந்தெடுப்பதற்கான” ஒரு சடங்கு தவிர வேறன்று என்பதை ஒளிவு மறைவின்றி செயலலிதா கூறியுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. கட்சியினர் “புரட்சித் தலைவி மீது மாறாத பற்றோடும் விசுவாசத்தோடும்” இருக்க வேண்டும். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் ஒட்டுமொத்த ஒரே வடிவம் செயலலிதா மட்டுமே! ஆனால அம்மூன்று தலைவர்களின் கொள்கை என்ன என்பது ஒரு வரியில் கூட அந்த உறுதி மொழியில் இடம் பெறவில்லை. செயலலிதாவை வாழ்நாள் சர்வாதிகாரியாக ஏற்றுக் கொள்வது தான் அத்தலைவர்களது கொள்கையின் சாரமோ?

இப்பாசறை இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் “எத்தகையத் தியாகத்திற்கும் தயார், தயார்” என்று உறுதி மொழி ஏற்க வேண்டும் என்கிறார் செயலலிதா. எந்தத் தியாகத்திற்கும் தயார் என்பது எந்த வன்முறைக்கும் தயார் என்பதன் முகமூடிச் சொல்லாடலோ?

இட்லரின் நாஜிப்படையின் உறுதி மொழி போல் உள்ளது செயலலிதாவின் இளைஞர் பாசறைகளின் உறுதிமொழி!

இதற்கு முன், அண்மையில் தம் கட்சியினர்க்கு ஒரு கட்டளை வெளியிட்டிருந்தார் செயலலிதா. அதில் தமது கட்சியின் சுவரொட்டி, சுவரெழுத்து, தட்டி விளம்பரங்கள், பதாகைகள் எதிலும், பெரியார் அண்ணா, எம்.ஜி.ஆர், செயலலிதா படங்கள் தவிர வேறு யார் படத்தையும் போடக் கூடாது என்று கூறியிருந்தார்.

அ.இ.அ.தி.மு.க.வினர் பெரும்பாலும் பெரியார், அண்ணா படங்கள் போடுவதில்லை. மிகச் சிறிய அளவிற்கு ஒரு மூலையில் எம்.ஜி.ஆர். படம் போடுவார்கள். செயலலிதா படம் மிகப்பெரிய அளவில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.

அ.இ.அ.தி.மு.க.வில் தம் முகம் தவிர பிறர் முகம் மக்கள் மனதில் பதியக் கூடாது என்று ஓர் உளவியல் உத்தியை செயல்படுத்துகிறார் செயலலிதா. விளம்பரத் தட்டிகளில் பலர் படங்கள் இடம் பெறும் போது போட்டி, பொறாமை, புறக்கணிப்பு என்று புகார்கள் வருவதால், அ.இ.அ.தி.மு.க.வினர் தங்கள் படங்களையோ மேற்படி மூவர் தவிர்த்த மற்றவர் படங்களையோ போடக் கூடாது என்று கட்டளையிட்டார். இந்த விவரம் தெரியாமலோ, ஆர்வக் கோளாறு காரணமாகவோ, மற்றவர் படங்கள் போடப்பட்ட தட்டிகளில் உடனுக்குடன் அம்முகங்கள் மீது தாள் ஒட்டி மறைக்கிறார்கள்.

ஒரே முகம், ஒரே தலைவர் படிமம் மட்டுமே, மக்கள் மனதிலும் தம் கட்சித் தொண்டர்கள் மனதிலும் பதிய வேண்டும். அந்த ஒரே முகம், ஒரே தலைவர் செயலலிதா மட்டுமே என்பது அவரது உளவியல் உத்தி. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை என்ற அளவில் அ.இ.அ.தி.மு.க.வில் வேறு தலைவர் உருவாகிவிடக் கூடாது. தமக்கு கீழே உள்ளவர்கள் அனைவரும் கடைநிலைத் தொண்டர்கள் மட்டுமே என்ற வரம்பை ஒவ்வொருவரும் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இத்தனையும் செய்கிறார்.

ஆனால் அரசமைப்புச் சட்டம், செயலலிதாவின் இந்த நோக்கத்திற்குச் சில இடையூறுகளை உண்டாக்குகிறது. அதிகாரமுள்ள அமைச்சர் பதவிகளை தன் கட்சிக் காரர்களுக்கு வழங்குமாறு அது கட்டாயப்படுத்துகிறது. எனவே அவர் அமைச்சர்களை அமர்த்துகிறார். ஆனால் அதில் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர்களை அடிக்கடி வீட்டுக்கனுப்புகிறார்; அல்லது வேறு வேறு துறைகளுக்கு மாற்றி விடுகிறார். “நீங்கள் ஏன் கைப்பொம்மைகளே” என்று அவர்களை உணரச் செய்கிறார். மற்றவர்களும் அவ்வாறு புரிந்து கொள்ளச் செய்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற 16 மாதங்களில் 12 தடவை இவ்வாறு அமைச்சர்களைப் பந்தாடியிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக செயலலிதாவின் கைத்தடிபோல் செயல்பட்ட சட்டப்பேரவைத் தலைவர் செயக்குமார் அப்பதவியிலிருந்து விலகும் படியான நெருக்கடி தரப்பட்டது.

அரசமைப்புச் சட்டம் வழங்கும் அதிகாரங்களைப் பயன்படுத்திக் கூட அ.இ.அ.தி.மு.க.வில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்று யாரும் அடையாளமோ செல்வாக்கோ பெற்றுவிடக் கூடாது என்பதில் செயலலிதா மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். இட்லர் கூட இப்படி நடந்து கொண்டதில்லை.

இட்லர் செர்மானிய தேசிய வெறி கொண்டவன். உலகில் செர்மானிய தேசிய இனத்தை, ஆதிக்க நிலையில் வைக்க வேண்டும் என்பது அவனது திட்டம். அவனது இந்த இனவெறித் திட்டத்திற்கு எதிராக இருந்த கம்யூனிஸ்டுகளையும் யூதர்களையும் படுகொலை செய்தான்; கொடுஞ்சிறைகளில் அடைத்தான். ஆனால் தன் கட்சியில் தன்னைத் தவிர வேறு யாரும் தலைவராக வளரக் கூடாது என்று அவன் நினைத்த தில்லை.

ஒரு முறை இட்லரைக் கொலை செய்ய அவன் எதிரிகள் முயன்றார்கள். அக்கொலை முயற்சியிலிருந்து தப்பிவிட்டான். அதன் பிறகு இட்லர் செர்மானிய நாடாளுமன்றத்தில்(மூன்றாவது ரீச்ஸ்டாக்) பேசும் போது இந்தக் கொலை முயற்சியைக் கண்டித்தான். அப்போது அவன் கூறினான்:

“என்னை கொலை செய்வதன் மூலம் எங்கள் கட்சியை அழித்து விட முடியாது. நான் கொலை செய்யப்பட்டால், எங்கள் கட்சிக்கு கோயபல்ஸ் தலைமை தாங்குவார். கோயபல்ஸ் கொலை செய்யப்பட்டால், கோயரிங் தலைமை தாங்குவார். கோயரிங் கொலை செய்யப்பட்டால் அடுத்து ஒருவர் தலைமை தாங்குவார். எனவே எங்கள் கட்சியின் பயணத்தை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது”.

இட்லர் கூட தனக்குக் கீழே மக்களின் செல்வாக்குப் பெற்ற அடுத்த நிலைத் தலைவர்கள் வளர வாய்ப்பளித்தான். அவர்களை நம்பினான். ஆனால் செயலலிதாவுக்குத் தமது அதிகாரப் பேராசையைத் தவிர தேசிய இன வகைப்பட்ட கொள்கைகளோ, சமூகத் தத்துவங்கள் சார்ந்த கொள்கைகளோ இல்லாததால், தமக்குப் பிறகு தமது கட்சியின் இருப்பு பற்றிய கவலையோ, வளர்ச்சிப் பற்றிய அக்கறையோ இருப்பதாகத் தெரியவில்லை.

தம் கட்சியிலோ மற்றவர் வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாதவராய் உள்ள ஒரு தலைவர், பிற கட்சிகளை, போட்டிக் கட்சிகளை, எப்படி சகித்து கொள்வார்? அவற்றை எப்படி நடத்துவார்?

தமிழக சட்டப் பேரவையை முதல்வர் செயலலிதா எப்படி நடத்துகிறார்? எதிர்க் கட்சிகள் அடங்கி ஒடுங்கி “அம்மா” மனம் கோணாமல் பேசினால் உள்ளே இருக்கலாம். இல்லையேல் வெளியேற்றப்படுவர். தன்னலவாதியான கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தொடங்கிய சட்டப்பேரவை சனநாயக மறுப்பு, செயலலிதா ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட பாசிச உள்ளடக்கம் கொண்டுவிட்டது.

கருணாநிதி முதல்வராக இருந்தால் செயலலிதா சட்டப் பேரவையில் கண்ணியக் குறைவாக நடத்தப்படும் நிலை உள்ளது. செயலலிதா முதல்வராக இருந்தால் சட்டப் பேரவையில் கருணாநிதி கண்ணியக் குறைவாக நடத்தப்படும் நிலை உள்ளது. இப்பொழுது முதன்மை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள விசயகாந்தை ஒரு கூட்டத் தொடர் முழுவதற்கும் உள்ளே நுழைய முடியாதபடி சட்டப் பேரவையிலிருந்து வெளியேற்றச் செய்தார் செயலலிதா. அவ்வாறு அவரின் கைத்தடியாகச் செயல்பட்ட பேரவைத் தலைவர் செயக்குமாரின் கதியும் அதோ கதி ஆனது.

முதல்வர் செயலலிதா முன்னாள் முதல்வர் கருணாநிதி முதன்மை எதிர்க்கட்சித் தலைவர் விசயகாந்த் ஆகிய மூவரும் ஒரு சேர சட்டப் பேரவையில் அமர்ந்து தமிழகத்தில் முதன்மைச் சிக்கல்களாக உள்ள முல்லைப்பெரியாறு சிக்கல் பற்றியோ, காவிரிச் சிக்கல் பற்றியோ மீனவர் தாக்கப்படுவது பற்றியோ கூடங்குளம் அணு உலை பற்றியோ மூன்று தமிழர் தூக்குத் தண்டனை பற்றியோ பாலாற்று சிக்கல் குறித்தோ பேசும் நிலை இல்லை.

இந்த மூவரும் நாகரிக மனிதர்கள்தாம். காட்டுமிராண்டி அல்லர். ஆனாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர்கள் சட்டப்பேரவையில் ஒன்றாக உட்கார்ந்து கடமையாற்றும் பண்பில்லா மூடர்கள் ஆகிவிட்டார்கள்.

“அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கள் பண்பில்லா தவர்” என்றார் வள்ளுவப் பெருந்தகை. தமிழ்நாட்டின் நாகரிகத்தை பண்பாட்டை, பன்மைத் தன்மையைக் கடைபிடிக்கும் பக்குவத்தைக் கருணாநிதியும் செயலலிதாவும் கேவலப்படுத்தி விட்டார்கள். மாற்றார் நகைக்கும் இழிநிலைக்குத் தமிழ்நாட்டைத் தள்ளிவிட்டார்கள்.

புதிதாக சட்டப் பேரவைத் தலைவராக திரு. தனபால் பதவி ஏற்றபோது முதலமைச்சர் செயலலிதா உதிர்த்த சனநாயகக் கருத்துகள் மனனம் செய்து ஒப்பு விக்கப்பட்ட உதட்டு ஒயிலாட்டம் தவிர உள்ளத்திலிருந்து வந்தவை அல்ல.

“வீணையிலிருந்து சரியான இசை வர வேண்டுமென்றால் அதனுடைய தந்திகள் அதாவது வீணையின் நரம்புகள் இறுக்கமாகவும் இல்லாமல் தளர்வாகவும் இல்லாமல் நடுநிலையுடன் இருக்க வேண்டும். அது போன்று, முக்கியமாக விளங்குவது நடுநிலைமை”.

செயலலிதா பேச்சை நம்பி பேரவைத் தலைவர் தனபால், நடுநிலையோடு செயல்பட்டு எதிர்க்கட்சிகளுக்கு சனநாயக வாய்ப்புகளை வழங்கினால் அவர் பதவிக்கு ஆபத்தல்லவா வந்துவிடும். தனபால் அவர்களுக்குத் தெரியும் தலைவியின் இயல்பு! அதற்கேற்ப நடந்து கொள்வார். சட்டப்பேரவை சனநாயகம் பற்றி செயலலிதா பேசுவதை எதனுடன் ஒப்பிடுவது!

“உண்மையை உரைப்பவர்களாகவும், உரிமைக்குக் குரல் கொடுப்பவர்களாகவும் மாற்றாரை மதிக்கும் தன்மை கொண்டவர்களாகவும் ஞாயத்துக்குத் தலைவணங்கு கிறவர்களாகவும் உறுப்பினர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும்” என்று பேசியுள்ளார்.

எந்த உண்மையை உரைப்பது? உலகத்தின் ஒரே மேதை புரட்சித் தலைவி அம்மாதான்! இந்தியாவின் ஒரே மனித தெய்வம் இதய தெய்வம் அம்மாதான் என்ற “உண்மையை” உரைக்க வேண்டும் என்பது தானே செயலலிதாவின் அறிவுரை! இவ்வாறு சட்டப்பேரவையில் அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களும் உறுப்பினர்களும் பேசுவதைக் காது குளிரக் கேட்டு, கண் குளிரப் பார்த்து, வாய்நெளியப் புன்னகை புரிபவர்தாமே செயலலிதா!

இப்புகழ்ச்சி சொற்கள் அண்டிப் பிழைக்கும் அற்பத்தனத்தின் உளவியல் சார்ந்தது என்பதைப் புரிந்து கொண்டு, அவ்வாறு பேசுவதைக் கண்டு அருவருக்கும் நாகரிகம் என்றைக்காவது செயலலிதாவுக்கு இருந்ததுண்டா?

உரிமைக்குக் குரல் கொடுப்பவர்களாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்கிறார். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான அடிப்படை சம்பளமும் அகவிலைப்படியும் உயர்த்தப்பட வேண்டும் என்று பேசும்பொழுது மட்டும் தான், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுக்குள் சண்டைச்சரவு இல்லாமல் ஒருமித்த குரலில் பேசுகிறார்கள். மற்ற நேரங்களில் நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்படுவது போல், தமிழக சட்டப்பேரவையில் பேச்சுரிமை அனுமதிக்கப்படுகிறதா? இல்லை. இல்லவே இல்லை.

மாற்றாரை மதிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார் செயலலிதா?

முந்தைய ஆட்சியாளர்களை விமர்சிக்காமல், ஏதாவது ஒரு திட்டத்தை அல்லது தீர்மானத்தை முன்மொழியும் வழக்கம் செயலலிதாவிற்கும் இல்லை. அவர் கட்சியினர்க்கும் இல்லை. இந்த பாணியை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி தான்! கருணாநிதியின் பண்புக்குறைவான அணுகுமுறையிலிருந்து மாறுபட்ட உயர் பண்பாளர் அல்லர் செயலலிதா!

தன் கட்சியில் சர்வாதிகாரியாக உள்ளவர் மாற்றாரை மதிக்கும் மனநிலை பெறவே முடியாது. எண்ணங்களின் இணைப்பிற்கும், இயைபிற்கும் ஓர் உளவியல் தொடர்ச்சி இருக்கிறது.

கொடநாட்டில் ஓய்வெடுத்தார் செயலலிதா என்று எழுதினாராம் கருணாநிதி. அதற்கு அவர் மேலும் முரசொலி ஏட்டின் ஆசிரியர், வெளியீட்டாளர் மீதும் வழக்கு! ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இதழ்கள் மீது அடுக்கடுக்கான அவதூறு வழக்கு! மருத்துவர் இராமதாசு மீது அவதூறு வழக்கு! அமைச்சர்கள் தங்களின் உறவினர்களின் செல்வாக்குக்கு உட்பட்டு செயல்படுகிறார்கள் என்று கூறினால் அதற்கு இதழ்கள் மீது வழக்கு! எத்தனை எத்தனை மானநட்ட வழக்குகள்; அவதூறு வழக்குகள்! அரசுப்பணத்தை அள்ளிக் கொடுத்து, அரசு சார்பில் இந்த அவதூறு வழக்குகள் புனையப்படுகின்றன.

அதிகாரமில்லாததால் ஏடுகளுக்கு முன் தணிக்கை கொண்டுவராமல் இருக்கிறார் செயலலிதா!

தி.மு.க. டெசோ மாநாடு நடத்தத் தடை; மனிதச் சங்கிலி நடத்த அனுமதி மறுப்பு போன்றவை, அரசு எந்திரத்தை சொந்தக் காழ்ப்புணர்ச்சிகளுக்குப் பயன்படுத்தும் எதேச்சாதிகார நடவடிக்கைகளாகும். இந்தத் தடை, இனத்துரோகக் கட்சியான தி.மு.க.வுக்குத் தானே வந்தது என்று இனஉணர்வாளர்களும், சனநாயகவாதிகளும் ரசிக்கக் கூடாது. தி.மு.க.வின் செயல்பாடுகளுக்குத் தடைகள் என்பது மற்றவர்களுக்கும் விரிவடையும் என்ற எச்சரிக்கைத் தேவை. தி.மு.க.வுக்குக் கூட சனநாயக உரிமையை மறுக்கக்கூடாது என்ற உயர் பண்பு வேண்டும்.

மனித குலக் கொலைக்களமான கூடங்குளம் அணுஉலைக் களத்தை மூடுமாறு வலியுறுத்திப் போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் மீது எவ்வளவு கொடிய அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளார் செயலலிதா!

மணப்பாட்டில் அந்தோணி ஜான் என்ற அப்பாவித் தமிழரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அறப்போராட்டம் நடத்தும் மக்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி, தடியடி நடத்தி எவ்வளவு அட்டூழியம் புரிந்தார்கள்! ஏராளமான உழைக்கும் மக்களைத் தமிழகத்தின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்துள்ளார்கள். இடிந்தகரைப் பகுதி உழைக்கும் மக்கள் 56 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். மக்கள் நேயப் போராட்டம் நடத்தும் சு.ப.உதயக்குமார், புட்பராயன் உள்ளிட்டோர் மீது எத்தனை தேசத்துரோக வழக்குகள்!

முதலமைச்சரைப் பார்த்து மனுக்கொடுக்க கூடங்குளம் பகுதியிலிருந்து சென்னைக் கோட்டைக்கு வந்த பள்ளிக் குழந்தைகளைப் பார்க்கவும் மறுத்தார் செயலலிதா!

கூடங்குளத்தில் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையைக் கண்டித்து 10.09.2012 அன்று சென்னை நந்தனம் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்த போது அங்கு சென்ற மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியைக் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கித் தளைப்படுத்தினார்.

கடந்த ஆண்டு பரமக்குடியில் ஈகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில், காக்கைக் குருவிகளைச் சுடுவதுபோல், உழைக்கும் மக்கள் ஆறுபேரைச் சுட்டுக் கொன்றனர் காவல்துறையினர். செயலலிதாவின் சர்வாதிகார மனப்பான்மை காவல்துறையினர் கட்டுப்பாடில்லாமல் உரிமைப் பறிப்பு, உயிர்பறிப்பில் ஈடுபடத்தூண்டுகிறது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை மடியில் கனமுள்ள கட்சி; வழியில் அச்சத்துடன்தான் நடக்கும். ஊழல் பெருச்சாளிகளின் கூடாரம். குடும்ப அரசியலின் குகை! அது அடுத்த தேர்தலை எதிர்பார்த்துக் கிடக்குமே தவிர, சனநாயகப் பறிப்புகளை எதிர்த்துப் போராடாது. போர்க்குணம் இழந்த சர்க்கஸ் யானை அக்கட்சி!

மனிதச் சங்கிலிக்குத் தடைவிதித்தால், அந்த உரிமைப்பறிப்பை எதிர்த்துப் போராடாது தி.மு.க. கருப்புச்சட்டை அணிந்து, வீதிகளில் துண்டறிக்கை கொடுக்கும். அக்கட்சி ஆட்சியும், அ.தி.மு.க. ஆட்சிபோல் உரிமைப்பறிப்புகளில் ஈடுபட்டது தானே!

ஆட்சியில் உள்ளோர் எதிர்க்கட்சியின் உரிமைகளைப் பறிப்பது இயல்பு தானே என்று தி.மு.க.வினரின் மனம் அமைதி அடைந்துகொள்ளும்.

அ.இ.அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் நீண்டகாலமாக அண்டிப்பிழைக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். ‘இதயதெய்வம்’ அம்மாவிடம் ஒருவரைப் பற்றி ஒருவர் கோள்மூட்டி விட்டு, குற்றச்சாட்டுகளை அடுக்கிக்காட்டி, ஆதாயங்களை அடைந்து கொள்ளலாம் என்று கருதும் கவலைப் பிள்ளைகள்.

உட்கட்சிச் சனநாயகம் வெளிச்சம் படாமல் எதேச்சாதிகார இருட்டிலேயே வளர்ந்தவர்கள் அ.இ.அ.தி.மு.க.வினர். சனநாயகம் என்ற வெளிச்சம் அவர்கள் கண்களைக் கூசவைக்கும்; வெளிச்சம் வந்தால் கண்களை மூடிக் கொள்வார்கள்.

வரலாற்றில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு அ.இ.அ.தி.மு.க.வினரின் சனநாயகக் குருட்டுத் தன்மையைப் புரிய வைக்கும். பிரஞ்சுப் புரட்சி காலத்தில், எதேச்சாதிகாரம் செய்த 16ஆம் லூயி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று முழங்கிப் போராடிய மக்களைப் பாரீசு நகரில் பாஸ்டில் என்ற இடத்தில் பாதாள இருட்டறைகளில் அடைத்து வைத்தான். 16ஆம் லூயியை சிறைப்பிடித்த போராளிகள் பாஸ்டில் சிறையை உடைத்துக் கைதிகளை விடுதலை செய்தனர். வெளியே வந்த அவர்கள் முதல் முறையாக சூரிய வெளிச்சத்தைப் பார்த்தார்கள். அவர்கள் கண்கள் கூசின. கண்களைத் திறக்க முடியவில்லை. மீண்டும் பாஸ்டில் சிறைக்குள் ஓடினார்கள்.

சிறைப்பட்டுக் கிடந்த பாஸ்டில் சிறையாளிகளைப் போல் அ.இ.அ.தி.மு.க.வினர் உட்கட்சிச் சனநாயகம் இன்றி சர்வாதிகார இருட்டில் வாழப் பழகிக் கொண்டவர்கள். சனநாயக வெளிச்சம் அவர்களது கருத்துகளைக் கூசச் செய்யும்.

அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல தேர்தல் கட்சிகள், ஆட்டுமந்தை, மாட்டுமந்தை போல் தங்களுக்கான ஓட்டுமந்தையை உருவாக்கிப் பாதுகாப்பதில் தான் கவனம் செலுத்துகின்றன.

“நாம் ஒட்டு மந்தைகளாக வைக்கப்பட்டுள்ளோம்; மக்களுக்காகக் கட்சி என்ற கொள்கையை மாற்றி கட்சிக்காக மக்கள் என்று உருவாக்கிவிட்டார்கள். அந்த மாய வலையில் சிக்கிக் கொண்டோம்” என்ற உண்மை நிலையை மக்கள் உணர வேண்டும்.

செயலலிதா அறிமுகப்படுத்தும் நாஜி பாணியிலான உறுதிமொழியை பெரும்பாலான கட்சிகள் எதிர்க்கமாட்டா. அந்த பாணியைத் தம் கட்சியில் பழக்கப்படுத்தவே விரும்பும்.

மாற்று அரசியல் தேவை. மாற்று அரசியலுக்கு மாற்றுக் கருத்தியல் தேவை. தமிழ்த் தேசியமே சரியான மாற்றுக் கருத்தியல். சனநாயகப் பண்பு, பன்மைத் தன்மையை ஏற்கும் பக்குவம், அறம் ஆகியவை தமிழர்களின் மரபுச் செல்வங்களாகும்.

அ.இ.அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைமைச் சர்வாதிகாரத்தை எதிர்ப்பது மட்டுமின்றி மற்ற கட்சிகளின் ஒற்றைத் தலைமைச் சர்வாதிகாரத்தையும் குடும்பத்தலைமைச் சர்வாதிகாரத்தையும் புறக்கணித்துக் கூட்டுத் தலைமைத் தமிழ்த் தேசியம் வளர்ப்போம்!

- பெ.மணியரசன்

Pin It