உழவர் முன்னணி வழக்கில் உயர்நீதி மன்றம் தீர்ப்பு

கடந்த 2011 29 இரவு- 30 விடியற்காலை கடலூரைத் தாக்கிய ”தானே” புயல் வரலாறு காணாத அழிவை உண்டாக்கி அம்மாவட்டத்தையே புரட்டிப் போட்டது. உழவர்களின் வேளாண்மை பேரழிவுக்கு உள்ளானது. இது போதாதென்று காவிரி நீர் கிடைக்காமை, தாறுமாறான மின்வெட்டு, உரம் உள்ளிட்ட இடு பொருள் இரண்டு மடங்கு விலை உயர்வு என அடுத்தடுத்து வந்த தாக்குதல்களால் தலை நிமிர முடியாமல் உழவர்கள் திணறினர்.

இந்நிலையில் இந்திய வேளாண்மை காப்பீட்டு நிறுவனம் தன்னிடம் காப்பிடு செய்திருந்த கடலூர் மாவட்ட உழவர்களுக்கு புயல் இழப்பீட்டுத் தொகையாக ஏறத்தாழ 30 கோடி ரூபாய் அறிவித்தது. பயிர்க்காப்பீட்டு முகவராக அம்மாவட்டம் முழுவதும் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. உழவர்களிடமிருந்து காப்பீட்டு தவணைத் தொகையை வசூலித்து வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தி, காப்பீட்டு நிறுவனம் தரும் இழப்பீடுத் தொகையை உழவர்களுக்கு தருவது இதன் பணிகள் ஒன்றாக உள்ளது. இதற்கு 2.5 விழுக்காடு சேவைக் கட்டணத்தையும் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து கிராமக் கூட்டுறவு வங்கி பெற்றுக்கொள்கிறது.

 “தானே புயல்” பாதிப்புக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்கிய பயிர்க் காப்பீட்டுத் தொகையை உழவர்களுக்கு வழங்காமல் உழவர்கள் பெற்ற கூட்டுறவுக் கடன்களுக்கு அத்தொகையை நேர் செய்து கொள்வது என தமிழக அரசின் கூட்டுறவுத் துறை முடிவு செய்தது. கடலூர் மாவட்ட நடுவண் கூட்டுறவு வங்கி மூலமாக கிராம வங்கிகளுக்கு இது தொடர்பான சுற்ற்றிகைகள் அனுப்பப்பட்டன வந்த காப்பீட்டுத் தொகையை பிடித்து வைத்துக் கொண்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது தமிழக அரசு.

கூட்டுறவுத்துறையின் இந்த உழவர் விரோத ஆணையை எதிர்த்து தமிழக உழவர் முன்னணி தொடர் போராட்டங்கள் நடத்தியதோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான பொது நல வழக்கும் தொடுத்தது. உழவர்முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி. ஆறுமுகம் மனுதாராக இருந்து தொடுத்த இவ்வழக்கில் தமிழக உழவர் முன்னணி சார்பாக வழக்குரைஞர் தோழர் அஜாய் கோஷ் நேர் நின்றார்.

இவ்வழக்கு உயர்நீதிமன்ற முதல் பிரிவில் 10.10.2012 அன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான அமர்வு கூட்டுறவுத் துறை ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. மூன்றுவாரக் காலத்திற்குள் பதிலுரை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு ஆணையிட்டது.

தமிழக உழவர் முன்னணி பெற்றுள்ள இந்த நீதி மன்ற ஆணை கடலூர் மாவட்டத்திலுள்ள 5 இலட்சம் உழவர்களுக்கு பயன் தரக்கூடிய ஒன்றாகும்.

Pin It