கர்நாடகத்தைப் பொறுத்தவரை, காவிரிச் சிக்கல், தண்ணீர்ச் சிக்கல் அல்ல, இனச் சிக்கல்.

27.09.2012 அன்று கன்னட இனவெறி அமைப்பான “கன்னட ரட்சண வேதிகே”வைச் சேர்ந்தவர்கள், ஓசூருக்கு உரிமைக்கோரி ஓடிவந்தார்கள். அவர்களை அத்திப் பள்ளி அருகே இரு மாநிலக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஆனால் தமிழ்நாட்டிலிருந்து யாரும், தமிழகம் இழந்த பகுதிகளான கொள்ளேகாலம், கோலார் தங்கவயல் ஆகியவை தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்ற முழக்கம் எழுப்பிக் கொண்டு அப்பகுதிகளுக்குச் செல்வதில்லை.

காலம் காலமாகக் கர்நாடகத்தில் வாழ்ந்து வரும் தமிழ்மக்கள் இப்பொழுது உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அஞ்சிக் கிடக்கிறார்கள். அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை என்ன ஆகுமோ என்ற கவலையில் இருக்கிறார்கள். திருவள்ளுவர் சிலையை சுற்றிக் காவல் துறையினரை நிறுத்தியுள்ளது கர்நாடக அரசு.

1991 திசம்பரில், காவிரிச் சிக்கலை முன்வைத்து, கன்னடர்கள் தமிழர்களைத் தாக்கினர்; இனப்படுகொலை செய்தனர். வணிக நிறுவனங்களைச் சூறையாடினர். இரண்டு இலட்சம் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்திற்கு ஓடிவந்தனர். அந்த அவலம் மீண்டும் அரங்கேறுமோ என்று குலைநடுங்கிக் கிடக்கின்றனர்.

அப்போது அங்கு முதலமைச்சராய் இருந்தவர் பங்காரப்பா. அவர் காங்கிரசுக்காரர். காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை, உச்சநீதிமன்ற ஆணைப்படி, இந்திய அரசு, தனது அரசிதழில் 11.12.1991 அன்று வெளியிட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரித்து, பங்காரப்பா கர்நாடகத்தில் முழுஅடைப்பு நடத்தினார். அந்த முழு அடைப்பைப் பயன்படுத்திக் கொண்டு, கன்னடர்கள், கர்நாடகத் தமிழர்களை வேட்டையாடினர்; சூறையாடினர்.

இப்பொழுதும், உச்சநீதிமன்றக் கட்டளை இட்ட பிறகு இந்தியப் பிரதமர் காவிரி ஆணையத்தைக் கூட்டினார். 2004-இல் பிரதமரான மன்மோகன்சிங் ஒன்பதாண்டுகளாகக் காவிரி ஆணையத்தைக் கூட்ட மறுத்து வந்தார். காவிரி ஆணையத்தின் தலைவர் பிரதமர் தான். உச்சநீதிமன்றம் கட்டளையிட்ட பின் வேறு வழியின்றி, மன்மோகன் சிங் 19.09.2012 அன்று ஆணையத்தைத் கூட்டினார். செப்டம்பர் 30 வரை, 137 ஆ.மி.க.(டி.எம்.சி.) தண்ணீரைக் கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அது திறந்து விட வில்லை.

பருவமழை உரியவாறு பெய்யாத காலத்திற்கு என்று பற்றாக் குறைகால நீர்ப்பகிர்வுக் கோட்பாடு ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளது. அக்கோட்பாட்டின்படி, கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய நீரை, 20.09.2012 முதல் 24 நாள்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஆ.மி.க. வீதம் திறந்துவிட ஆணையிடுமாறு பிரதமரிடம் தமிழக முதல்வர் செயலலிதாவின் கோரிக்கையை ஏற்காமல் ஒருநாளைக்கு ஒரு நொடிக்கு 9 ஆயிரம் கன அடி (3/4 ஆ.மி.க.) தண்ணீர் திறந்து விடும்படி கூறினார்.

கர்நாடக முதல்வர் செகதீசு செட்டர் ஒரு சொட்டுத் தண்ணீரும் தர முடியாது என்று உறுமிவிட்டு, ஆணையக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்து விட்டார். அந்த ஆணைய முடிவு உச்சநீதிமன்ற ஆணைக்கு நிகரானது. கர்நாடக முதல்வருக்கு இந்தத் துணிச்சல் எங்கிருந்து வந்தது? இந்திய அரசு தொடர்ந்து தமிழினத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருவதை அறிந்த நிலையிலிருந்தும், கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாட்டிற்கும் தமிழினத்திற்கும் எதிராக ஒன்று திரண்டு கொள்வதிலிருந்தும் அவருக்கு அந்தத் துணிச்சல் வந்தது. அவரது வெளிநடப்பை, பிரதமர் கண்டிக்கவும் இல்லை.

ஆணையக் கூட்டம் நடைபெறும் நாளில் கர்நாடக அணைகளில் மொத்தம் 90 ஆ.மி.க. தண்ணீர் இருந்தது. கர்நாடக அணைகளான கிருட்டிண ராசசாகர், ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகியவற்றின் மொத்தக் கொள்ளளவு 114 ஆ.மி.க. தான். அதில் 90 ஆ.மி.க. தண்ணீர் உள்ளது. இருப்பு மட்டுமின்றி, கூடுதலாக மழை நீர் கர்நாடக அணைகளுக்கு வந்து கொண்டுள்ளது.

கடைசியாகத் தமிழக முதல்வர் “ஒரு நாளைக்கு ஒரு ஆ.மி.க.வாவது கொடுங்கள்” என்று கேட்டார். அதையும் பிரதமர் ஏற்காமல் வு ஆ.மி.க. என்றார். ஆனால் கர்நாடக முதல்வர், ஒரு சொட்டுத் தண்ணீரும் தமிழ்நாட்டிற்கு இல்லை என்று சொல்லால் அறைந்து விட்டு வெளியேறிவிட்டார்.

இன்றையக் கர்நாடக முதல்வர் செகதீசு செட்டர் பா.ச.க. கட்சிக்காரர். அன்றைய முதல்வர் பங்காரப்பா காங்கிரசுக் கட்சிக்காரர். அப்போது இடைக்காலத் தீர்ப்பை இந்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டதை எதிர்த்தார் முதல்வர் பங்காரப்பா. முழு அடைப்பு நடத்தினார். இப்போது, செகதீச செட்டர், பிரதமர் 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடச் சொன்னதை எதிர்த்துக் கன்னட இனவெறி அமைப்புகளைத் தூண்டி முழு அடைப்பு நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

ஆம், 6.10.2012 அன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு! இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து! கன்னட இன வெறியர் வாட்டாள் நாகராசு முழு அடைப்பை அறிவித்துள்ளார்.

ஓசூருக்குள் நுழைந்து அடாவடித்தனம் செய்ய 27.092012 அன்று வந்த கன்னட ரட்சண வேதிகே அமைப்பின் தலைவர் செய்தியாளர்களிடம் கூறிய சொற்கள் கூரிய ஈட்டிகளால் தமிழர் நெஞ்சத்தைக் குத்தக் கூடியவை.

“காவிரியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட தமிழகத்துக்குத் தர முடியாது. தமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்துவிடக் கூறும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்”.

“காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரினால், கர்நாடகத்தில் தமிழ் நாளிதழ்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்போம். தமிழ்த் திரைப்படங்களையும், தமிழ்ச் சேனல்கள் ஒளிபரப்புவதையும் தடுப்போம்” – தினமணி, 28.09.2012.

ஆற்றுநீர்ச் சிக்கலை, இந்தியாவின் சட்ட திட்டங்கள்படி நீதிமன்றத்திலும், நடுவண் அரசிலும் முறையீடு செய்து, ஞாயம் கேட்டு வருகிறது தமிழகம். தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் கன்னடர்களுக்கு எதிராகவோ, பொதுவாகக் கர்நாடகத்துக்கு எதிராகவோ போராடவில்லை. ஆனால், ஆணையம் கூடிய 19.09.2012 தொடங்கித் தொடர்ந்து கர்நாடகத்தில் நடுவண் அரசுக்கு எதிராகவும், தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிராகவும் ரகளை செய்து வருகிறார்கள்.

ஆனால், 28 இலட்சம் ஏக்கர்க்குரிய பாசன நீரை இழந்துள்ள தமிழ்நாட்டில் உரிமை மீட்பிற்குரிய போராட்டங்கள் இல்லை. காவிரி ஆறு 12 மாவட்டங்களில் 2 கோடி மக்களின் வாழ்வாதாரத்துக்கு உயிர்நாடி. சென்னை முதல் இராமநாதபுரம் வரை உள்ள 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும் அதுவே!
உரிமைகளை மறுப்பவர்கள் போராடுகிறார்கள். உரிமையை மீட்க வேண்டியவர்கள் போராடவில்லை. கன்னடர்கள் இனத்தற்காப்புணர்ச்சியை இனவெறியாய் மாற்றி வேகம் கொள்கிறார்கள். நாமோ இனத் தற்காப்புணர்ச்சியே இன்றி உரிமைப் பறிப்புகளைக் கண்டு பதைக்காமல் இருக்கிறோம்.

கர்நாடகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்தியத்தேசியம் பேசும் அனைத்திந்தியக் கட்சிகள். அவை இன வெறியைத் தூண்டி விடுகின்றன. நடுவண் அரசில் வெளியுறவு அமைச்சராக உள்ள கன்னடரான எஸ்.எம். கிருஷ்ணா, காவிரி ஆணையம் கூடுவதற்கு முன்னால் 18.9.2012 அன்று கர்நாடகத்தில் கடும் வறட்சி உள்ளது. ஆணையம் கர்நாடகத்திற்கு பாதகமாக முடிவெடுக்காது எனக் கூறினார். இப்பொழுது காவிரி சிக்கல் தீர புதிய உத்தி தேவை என்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் யாரும் இவர் போல் நமக்காகப் பேசுவதில்லை. தமிழ்நாட்டில் பெரிதும் தமிழகக் கட்சிகள். இவை இனத்தற்காப்புணர்ச்சியை மழுங்கடித்து விட்டன.

“இந்தியத்தேசியம்”, “திராவிடத்தேசியம்” என்ற இரண்டு தமிழின விரோதக் கருத்துகளும் கைகோத்துக் கொண்டு தமிழ்நாட்டில் மட்டுமே முழு வீச்சில் செயல்பட்டுத் தமிழ் மக்களுக்குத் தமது சொந்த இன உணர்வும், தற்காப்புணர்வும் உரியவாறு வளராமல் தடுத்துவிட்டன.

இக்கட்சிகளில் உள்ள தமிழர்கள் தங்கள் தலைமையைத் தமிழினத் தற்காப்புப் போராட்டங்கள் நடத்த வலியுறுத்த வேண்டும். கர்நாடகத்தில் கன்னடர்கள் என்றும், கேரளத்தில் மலையாளிகள் என்றும், ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கர்கள் என்றும் சொந்த மண்ணுக்குரிய இன உணர்வுகள் வளர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் “இந்தியன்” என்றும், “திராவிடன்” என்றும் அயல் இன உணர்வுகள் வளர்க்கப்பட்டுள்ளன.

பட்டது போதும் தமிழர்களே! பாரத மாதா பலிபீடத்தில் தமிழர்களையும், தமிழர் உரிமைகளையும் பலி கொடுத்தது போதும் தமிழர்களே! கெட்டது போதும் தமிழர்களே, திராவிட இனவாதத்தால் வந்த கேடுகள், போதும் தமிழர்களே! உங்களின் உண்மை இனத்தை அடையாளம் காணுங்கள்! உங்களின் உண்மை முகத்தில் போலி முகமூடிகளை மாட்டிக் கொள்ளாதீர்கள்.

உலகம் விழித்துக் கொள்ளாத காலத்தில், விழித்துக் கொண்ட இனம் நம் தமிழினம். ஓடுகின்ற ஆற்றை மறித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரியில் கல்லணை கட்டியவன் உங்கள் பாட்டன் கரிகால் பெருவளத்தான். வெண்ணாறு வெட்டியவனும், காவிரிக்குக் கரை போட்டவனும் அவனே! அக்காலத்தில் கன்னடர்கள் வேளாண்மை வெளிச்சம் பெறாமல் புன்செய் பயிர் செய்து கொண்டிருந்தார்கள். கன்னடர்களுக்கு கழனித் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள்!

இன்று ஏன் வீழ்ந்து கிடக்கிறாய் தமிழினமே? உன் ஆற்றலை நீயே உணராமல் கிடப்பதேன்? இன்று நீ எழுந்துவிட்டால் உன்னை எதிர் கொள்ளும் ஆற்றல் எந்த இனத்துக்கு இருக்கிறது? இதோ பார் இளைஞர்கள் இனஉணர்வோடு திரண்டு வருகிறார்கள். புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள். புதிய எழுச்சி புறப்பட்டுள்ளது. காவிரிச் சிக்கல் இனச்சிக்கல் என்று புரிந்து கொள்! போராடு! வெற்றி நமதே!

Pin It