தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கத் தொடங்கியதுள்ளது. சென்னை தவிர்த்த, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 10 மணி முதல் 14 மணி நேர அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடிக்கிறது. அதிக நேரம் மின்வெட்டு அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் சமாதானம் கூறுகிறது.

சிறு தொழில்கள், தறிப் பட்டறைகள், சிறு உதிரி பாகத் தொழிற்சாலைகள் என தமிழக மக்களின் தொழில்கள் நசிந்து போயுள்ளன. சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் விசைத்தறி உள்ளிட்ட ஜவுளித் துணி உற்பத்தி முழுமையாக முடங்கியுள்ளது. வேளாண் சாகுபடி நடைபெறுகின்ற தமிழக மாவட்டங்களில், மின் மோட்டார்களை இயக்க முடியாமல் உழவர்கள் தவிக்கின்றனர். மாநிலம் முழுவதும் உற்பத்தியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். தாய்மார்கள் வீட்டில் பகல் நேரத்தில் சமையல் செய்ய முடியாத அளவிற்கு வெக்கையால் தவிக்கின்றனர்.மின்சாரம் இல்லாத்தைப் பயன்படுத்தி திருட்டுகளும் நடைபெறுகின்றன.

இரவு நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்படுவதைக் கண்டித்து, தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மின்துறை ஊழியர்களுடன் மோதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அருகிலுள்ள பொன்னேரியில் 25.09.2012 அன்று மின்துறை ஊழியர் ஒருவர் மின்வெட்டு காரணமாக கடுமையாகத் தாக்கப்பட்டார். இவற்றுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய தமிழக அரசோ வாய் மூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளது.

நமது ஓட்டுகளைத் திருடிய அரசியல் திருடர்கள், இன்று மின்வெட்டின் வழியாக கொள்ளைத் திருடர்களுக்குத் தான் உண்மையில் வாழ்வளித்துள்ளனர்.

கடும் மின்வெட்டைத் தொடர்ந்து, தமிழக மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் தற்போது மின் உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான பற்றாக்குறை 4000 மெகா வாட்டாக உயர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

உலகமயப் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கி வரும் அரசு, கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த சூழலிலும் கூட, இம்முதலாளிய நிறுவனங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்க முன்வரவில்லை. ஆனால், பொது மக்கள் பகலில் விளக்கை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் மக்களை அறிவுறுத்தி அறிக்கை விடுகின்றது.

தமிழகத்தின் தினசரி மொத்த மின்சார தேவையான 12,500 மெகாவாட்டில், தற்போது சற்றொப்ப 8,500 மெகாவாட் மின்சாரம் தான் கிடைக்கின்றது. தமிழகத்தின் எதிர்காலத் தேவையை உணர்ந்து, தமிழ்நாட்டு மின்சார வாரியத்தின் மூலம் புதிய உற்பத்தித் திட்டங்களை இயக்கி, மின் ஆற்றலைப் பெருக்க முன் வராத தி.மு.க. – அ.தி.மு.க. அரசுகள், வேண்டுமென்றே அதிக விலைக்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் மின்சாரம் பெறுவதை மட்டும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இவற்றின் விளைவாக, 1975களில், சற்றொப்ப 95 விழுக்காட்டு கிராமங்களுக்கு மின்சாரத்தை பகிர்ந்தளித்து இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக விளங்கிய தமிழ்நாடு மின்சார வாரியம் இன்றைக்கு திவாலாகும் நிலையில் உள்ளது.

தனியார் நிறுவனங்களுடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்து கொண்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சுகமாய் வாழ, தமிழ்நாடு மின்சார வாரியமோ பெரும் கடன் சுமையில் சிக்கி, திவாலாகும் நிலையில் பரிதாபமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. அரசு பதவியேற்ற போது, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் 53,000 கோடி என தெரிவிக்கிறார், தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் (ஆதாரம்: தி இந்து, 24.09.2012).

உலகமயப் பன்னாட்டு முதலாளிகளுடன் கூடிக் குலவிய இந்திய அரசு, 1998இல், ‘மின்சார ஒழுங்குமுறைச் சட்டம்’ எனவும், 2003இல் ‘மின்சார சட்டம்’ எனவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக புதிய சட்டங்களை இயற்றி, மக்களுக்கென பெரிய அளவிலான புதிய மின் உற்பத்தித் திட்டங்களை, மின்சார வாரியங்கள் நிறுவ மறைமுகத் தடை விதித்தது. தனியார் மின் உற்பத்தியையும், அதன் கட்டணக் கொள்ளையையும் ஊக்குவித்தது.

தற்போது, கட்டுமானத்திலுள்ள சிறிய அளவு மின் திட்டங்களின் ஆற்றல் முழுவதுமாக வெளிப்பட்டால் கூட, எதிர்காலத் தேவைக்கேற்ப தற்போதைய மின்வெட்டு சிக்கலை சரி செய்ய முடியாத அளவிற்கு மின் நிர்வாகத்தை, ஆளும் அ.தி.மு.க. அரசும், ஆண்ட தி.மு.க. அரசும், சரிவிகிதமாய்ச் சீர்குலைத்துள்ளன.

தமிழகத்தை நீர் முற்றுகையில் தவிக்கவிட்டிருக்கும் அண்டை மாநிலங்களாலும், பருவமழைப் பொய்த்துப் போனதாலும் தமிழக நீர் மின்சார உற்பத்தி கடுமையாகப் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. குந்தா, பைக்காரா, அப்பர் பவானி பகுதிகளில் செயல்படும் நீர்மின் திட்டங்கள் மூலமாக 2,223 மெகாவாட் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைப்பதோ 450 மட்டுமே. திருநெல்வேலி, பல்லடம், பொங்கலூர் பகுதிகளை சேர்ந்த காற்றாலை மூலம் 4 ஆயிரம் மெகாவாட் கிடைக்க வேண்டும். ஆனால், அதில் 150 தான் கிடைக்கிறது.

வழக்கமாக ஆண்டுதோறும் மே, சூன், சூலை, ஆகத்து மாதங்களில் தான் தென்மேற்குப் பருவ மழையின் காரணமாக, காற்றாலை மின் உற்பத்தியில் அதிகமாக மின்சாரம் கிடைக்கும். ஆனால், பருவமழைப் பொய்த்துப் போனதால் அதில் முழுமையான உற்பத்தியை எட்ட முடியவில்லை என்றும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மின்சாரத்தை பகிர்ந்தளிக்கும் மின்கட்டுமானங்களை முறைப்படுத்த முடியாததன் விளைவாகவும், தரமற்றக் கம்பிகளை வாங்குவதால் மின் சாரக்காப்பு (INSULATION) குறைவாக இருப்பதாலும் நடைபெறும் மின் கசிவின் மூலம் விரையமாகும் மின்சார இழப்பும் இதுவரை சரி செய்யப்படவில்லை.
 
இவை மட்டுமின்றி, தமிழக அரசின் அனல் மின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள் மூலமும், தனியார் காற்றாலைகள் மூலமும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்ததும் தற்போதைய மின்வெட்டுக்கு முக்கியக் காரணமாக விளங்குகின்றது. உற்பத்தியாகின்ற காலங்களில் காற்றாலை மின்சாரத்தை மின்கலங்களின் (பேட்டரிகளில்) தற்காலிகமாக சேமித்து வைத்து பின்னர் விநியோகம் செய்கிற கட்டமைப்புகளும் உருவாக்கப்படவில்லை. “காற்றடிக்கவில்லை. எனவே கரண்டும் வரவில்லை” என கைவிரிப்பதற்கு இங்கு ஒரு மின்சார அமைச்சர் இருக்கிறார்.

இவை போதாதென்று, இந்திய அரசின், நடுவண் மின் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்குக் கிடைத்து வந்த குறைந்த அளவிலான மின்சாரமும் தற்போது, படிப்படியாகக் குறைக்கப்பட்டு மிகக்குறைந்த அளவே கிடைக்கின்றது. கடந்த 21.08.2012 அன்று, நடுவண் மின் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 2,481 மெகா வாட்டில், 1,539 மெகா வாட் மட்டுமே கிடைத்தது (ஆதாரம்: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 21.08.2012).

கடந்த சூலை மாதத்தில், வட மாநிலங்களில் ஏற்பட்ட மின் கட்டமைப்பு பாதிப்பைத் தொடர்ந்து, இந்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நடுவண் மின் கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்தது. இம்மாற்றங்கள் காரணமாக தமிழகத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என தமிழக அரசு, நடுவண் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய நடைமுறைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இடைக்காலத் தடை உத்தரவும் பெற்றது. இவ்வழக்கு, செப்டம்பர் 14-ஆம் நாள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடுவண் அரசின் புதியக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன. இதன் விளைவாகவும் தமிழக மின்வெட்டு அதிகரித்தது.

மின்வெட்டால் மக்கள் கொதிப்புற்றுள்ள நிலையில, செயல்பட முடியாத நிலையில் தவிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை ஒழுங்குப்படுத்தவும், செம்மைப்படுத்தவும் முயலாமல் நிர்வாகத் திறனற்றுத் திணறுகிறார் தமிழக முதல்வர் செயலலிதா.

தமிழக முதல்வர் செயலலிதாவை “நிர்வாகத் திறன் படைத்தவர்” என ஊதிப் பெருக்கி வந்த பார்ப்பனிய ஊடகங்கள், இன்று ஓசையின்றி அடங்கிக் கிடக்கின்றன. கூடங்குளம் மின்சாரம் வேண்டும் என்றும் அவை கூச்சலிடுகின்றன.

ஏற்கெனவே இருளில் தவிக்கும் தமிழகத்தின் மின்தேவையோ, ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், எதிர்காலம் குறித்த ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை செயல்படுத்துவதைத் தான் ஓர் அரசு தனது திட்டமாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் மின்சார உற்பத்தி முழுவதையும் தனியாரிடம் விற்றுவிட்டு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கவே அரசு விரும்புகின்றது.

தமிழக மின்வாரியத்திற்கு மின்சாரம் விற்றுவந்த பல்வேறு தனியார் அனல் மின் நிறுவனங்கள் தங்கள் மின் உற்பத்தியை செயற்கையாக குறைத்துக் கொண்டும் மின்சார வழங்கல் அளவை வெட்டியும், கூடுதல் விலை கேட்டும் பலவகை நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. இப்போதைய மின் தட்டுபாடு நிலையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு அழுத்தம் கொடுக்கின்றன.

இந்நிறுவனங்களை வலியுறுத்தியும், எஸ்மா சட்டம் பாயும் என அச்சுறுத்தியும் மின்சாரம் பெற வேண்டிய முதலமைச்சர் செயலலிதா, அதற்கு மாறாக அந்நிறுவனங்களுடன் சேர்ந்து கூட்டுக்கொள்ளையில் ஈடுபடவே ஆர்வம் காட்டுகிறார். நிலவும் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி அந்நிறுவனங்களின் மின்சாரத்திற்குக் கூடுதல் விலை வழங்கி, அதில் யூனிட்டுக்கு 50 பைசா வீதம் தரகுப் பணம் பெறுவதிலேயே அவரது கவனம் குவிந்துள்ளது.

தமிழக மின் வாரியத்தை முறைப்படுத்துதலும், தமிழகத்திலேயே உற்பத்தியாகும் நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கேப் பெறுவதும் தான் இன்று உடனடியாக தமிழக மின்வெட்டைப் போக்க உதவும். பொத்தாம் பொதுவில் மத்தியத் தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் கோருவது சிக்கலைத் தீர்க்க உதவாது. பக்கத்து மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறுவதற்கு போதிய அளவு திறனான மின் பாதைகள் இல்லை என தமிழக மின்வாரியம் அறிவித்திருப்பதையும் கவனத்தில் கொண்டால், நெய்வேலி மின்சாரம் பெறுவதன் இன்றியமையாமை தெளிவாகப் புரியும்.

இதற்கு செயலலிதா அரசுக்கு அரசியல் உறுதிப்பாடும், நிர்வாகத் திறமையும் தேவை. இவை இல்லாததே இப்போது நிலவும் தாறுமாறான, கடும் மின்வெட்டுக்கு முதன்மைக் காரணமாகும்.

Pin It