தினமணி (20.10.2012) நாளேட்டில் “கோயில்களில் தமிழ்; காந்திஜி கூறியது என்ன?”என்ற தலைப்பில் திரு. வா.க.சுந்தராஜன் அவர்கள் எழுதி வெளிவந்த கட்டுரையைப் பார்த்தேன்.

அதில், “பிராந்திய மொழியில் வழிபாடுகள் ஓதப்படுவதோ அல்லது மொழி பெயர்க்கப்பட்ட வாசகங்களோ போதுமானது என்ற மன நிறைவு ஏற்படின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பயப் பக்தியுடன் ஓதப்பட்டு தூய்மை மெருகேறிய சமஸ்கிருத மொழி சுலோகங்களின் புனிதத் தன்மை குறைந்துவிடும்” என்று காந்திஜி தமது நவஜீவன் என்ற வாராந்திர இதழில் குறிப்பிட்டதாக ஒரு மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.

இது மிக வேடிக்கையானது. ஏனெனில் காந்திஜியே இதற்கு நேர்மாறாக தனது கருத்தை இன்னோரிடத்தில் கூறி இருக்கிறார். திரு.ரோமெய்ன் ரோலந்து எழுதிய நூலை “வாழ்விக்க வந்த காந்தி” என்ற தலைப்பில் மொழிபெயர்த்த புகழ்பெற்ற எழுத்தாளரான திரு ஜெயகாந்தன் அந்நூலில் பக்கம் 41-இல் காந்திஜி கூறியதாகக் குறிப்பிட்ட தாவது:

“ வேதங்களுக்கு ஏதோ பிரத்யேகமான தெய்வீகத்தன்மை இருப்பதாக நான் நம்பவில்லை, பைபிளும், குரானும், ஜெண்ட் அவஸ் டாவும் நமது இந்து வேதாகமங்களுக்கு இணை யான தெய்வாம்சம் பொருந்தியவை. இந்து தர்மம் ஒரு ஸ்தாபன ரீதியான சமயம் அல்ல. உலகை உய்விக்க வந்த எல்லா தீர்க்கதரிசனங்களையும் வழிபட இந்து தர்மத்தில் இடமுண்டு. கடவுளை அவரவர் சுதர்மத்திற்கு ஏற்ப வழிபடச் சொல் கிறது இந்து தர்மம்.”

 இதைப் போன்று காந்திஜியின் கருத்துகள் பல பதிவாகி இருக்கின்றன. ஆனால் அவை இந்துக்களால் அவர் காலத்திலேயே ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதைக் கட்டுரையாளர் கவனத்தில் கொள்ள வேண்டும். காந்திஜி ஆலயங்களில் ஹரிஜனங்கள் நுழைவிற்குப் பாடு பட்டவர். இந்துக்களால் போற்றப்படும் காசித்தலத்தில் கண்ட நடவடிக்கைகளையும் குப்பை களையும் சாடியவர்.

அவரே கூறியதாக மேற் கூறிய ஜெயகாந்தனின் மொழி பெயர்ப்பு நூலில் பக்கம் 40-ல் குறிப்பிட்டிருப்பது கவனத்திற் குரியது:

“சமய நெறியை ஒரு மந்திரக் கவசம் மாதிரி அணிந்து கொண்டு அதன் புனிதத்தின் பெயரால் அதன் தீமைகளைக் கவனிக்காமல் நான் விடமாட் டேன். வேதங்களிலும், உப நிஷத்சாஸ்திரங்களிலும் எனக்கு விசுவாசம் இருக்கிறது. அதன் பொருள்: அவற்றில் கூறப்பட்ட ஒவ்வொரு சொல்லையும் தேவ வாக்காகக் கொள்ள வேண்டும் என்ப தில்லை. எனது ஆத்ம சக்திக்கும் பகுத்தறிவிற்கும் ஒவ்வாததாக இருக்கும் கூளங்கள் பெரிய ஞான பொக்கிசமாக இருந்தா லும் அதற்கு கட்டுபட நான் மறுக்கிறேன்”

எனவே வடமொழி வேதங் களைப் பற்றியும், அவற்றின் புனிதத் தன்மைப் பற்றியும் அவர் என்ன கருத்துக்கொண் டிருந்தார் என்பது மிகத் தெளி வாகத் தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால் இதன் காரணத்தினாலேயே இந்துத் தீவரவாதிகளின் கோபத்திற்கு அவர் இரையாகிச் சுடப்பட்டு இறந்து போனார்.

அவரே கூறியிருப்பது போல, அதாவது வேதத்தில் கூறப் பட்டுள்ள ஒவ்வொரு சொல் லையும் தேவ வாக்காகக் கொள்ள வேண்டும் என்ப தில்லை என்பது அவரது கருத் துகளுக்கும் பொருந்தும், அதன் படி அவர் கூறியதாகக் கருதப் படும் ஒவ்வொரு சொல்லையும் தேவ வாக்காகக் கொள்ள வேண்டும் என்பதில்லை. காரணம், காந்தி தூய்மையான ஆன்மிகவாதியாய் இருந்த ஓர் அரசியல்வாதிதானே தவிர தமிழில் உள்ள பக்தி இலக்கி யங்களிலும், தமிழகக் கோயில் தொடர்பான ஆகமங்களிலும் துறை போன அறிஞர் அல்லர்.

இனி, இக்கட்டுரையில் காணும் பிறகருத்துகளும் உண்மை வலிவு இல்லாதன என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

1. கோயில் வழிபாடுகளில் தமிழ் மட்டும்தான் வேண்டும் என்று ஊடுருவ சிலர் முனைந் துள்ளனர் என்கிறார் கட்டுரை யாளர். தமிழகக் கோயில்களின் வழிபாட்டில் ஊடுருவியது வட மொழி என்பதுதான் உண்மை. சிலர் முனைந்துள்ளனர் என் பதும் தவறு. தமிழன் கட்டிய தமிழகக் கோயில்களில் வட மொழியைத் தக்கவைத்துக் கொள்ள நினைப்பவர்கள் தாம் எண்ணிக்கையில் சிலர்.

2. பண்டைய தமிழ் மன் னர்கள் கோயில் வழிபாடுகளில் தமிழே வேண்டுமென்று முயற் சித்ததில்லை என்று கூறுகிறார் கட்டுரையாளர். தமிழகத்தில் உள்ள கோயில்கள் எல்லாம் தமிழால் பாடல் பெற்றவையே தவிர ஒன்று கூட வடமொழிப் பாடல் பெற்றதல்ல. இதுவே அவரது கருத்து உண்மையல்ல என்பதற்குத் தக்க சான்று. அத் துடன் பண்டைய மன்னர் களில் தம் ஆளுகையில் உள்ள கோயில்களில் எல்லாம் வட மொழியில்தான் வழிபாடு நடக்க வேண்டும் என்று விதித் ததாகவோ கல்வெட்டோ அல் லது பட்டயமோ ஒன்று கூட இல்லை என்பதே உண்மை.

3. சங்க காலத் தமிழ்ப் புலவர் களோ சைவ சமயத் திருக்குர வர்கள் நால்வருமோ யாரும் வட மொழி வழிபாட்டை ஆட்சே பித்ததாகத் தகவல்கள் இல்லை என்கிறார் கட்டுரை யாளர். சங்க காலத்தில் கோயில் களில் வட மொழி வழிபாடே இல்லாததால் அவர்கள் வட மொழி வழிபாட்டை ஆட்சே பிக்கத் தேவை ஏது?

சங்கம் மருவிய பிற்காலமாம் சிலப்பதிகாரக் காலத்திலேயே சேரன் செங்குட்டுவன் கோயி லைப் புனித நீராட்டியதைக் "கடவுள் மங்கலம் செய்தான்" என்று தான் சிலப்பதிகாரம் தூய தமிழில் கூறுகிறதே ஒழிய “கும்பாபிஷேகம் செய்தான் என்று கூறாததே இதற்கு வலிய சான்று. இது 1.2.2009 ஆம் நாளிட்ட தினமணியில் கூட வந்திருக்கிறது. மற்றும் தொல் காப்பியக் காலத்திலேயே சான் றுகள் மலிந்து கிடக்கின்றன. தொல்காப்பியம் ரிக் வேதத்திற்கு முந்தியது என்பது 22.8.2010 ஆம் நாளிட்ட தினமணியிலேயே வந்துள்ளதையும் கட்டுரை யாளர் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அவ்வளவு ஏன்? தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய 14- ஆம் நூற்றாண் டினர் என்று கருதப்படும் பரத் வாஜ கோத்திரத்தவர் ஆகிய நச்சினார்க்கினியரே தொல்காப் பியம் ரிக் வேதத்திற்கு முந்தியது என்று தமது உரையில் குறிப் பிட்டிருக்கிறார். அப்படியா னால் அந்தத் தமிழன் வழிப் பட்டது தமிழிலா? அல்லது வடமொழியிலா? என்பதை அருள் கூர்ந்து கட்டுரையாளர் சிந்திக்க வேண்டுகிறேன்.

4. பிற மாநிலத்தவர் அவரவர் தாய்மொழில்தான் வழிபட வேண்டும் என்று வாதிடுவ தில்லை எனக் கட்டுரையாளர் கூறுகிறார். தமிழகத்தில்தான் பன்னூறு கோயில்களும் அவற் றைப் பாடிய பரவிய சைவத் திருமுறைகளும், வைணவர் களின் நாலாயிரத்திரட்டும் உண்டு. அதனால்தான் தமிழக அரசின் முத்திரையில் கோயி லை வைத்தார்கள். அதைப் போன்று பிற மாநிலத்தில் இல்லை. அத்துடன் அற்புதம் விளைவித்த பக்திப் பனுவல் களும் பிற மாநிலத்தில் இல்லை. அதனால் அவர்களுக்குத் தாய் மொழில் வழிபட வேண்டும் என்ற அக்கறையே ஏற்பட வாய்ப்பில்லை என்பதைக் கட்டு ரையாளர் கவனிக்கத் தவறி னார். கொண்டை உள்ளவள் பூ வைத்துக் கொள்கிறாள். அவ் வளவுதானே!

5. தமிழ்நாட்டில் சென்ற நூற்றாண்டின் இறுதிவரை இந்தப் பிரச்சினையே எழ வில்லை என்கிறார் கட்டுரை யாளர். இதுவும் வரலாற்று உண்மைக்கு மாறானது. "அச வில் செழுந்தமிழி வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல” வந்து அவதரித்தவர் சம்பந்தர் என்று பாடிப் பதிவு செய்திருக் கிறார் சேக்கிழார். சம்பந்தர் வந்த நூற்றாண்டு சென்ற நூற் றாண்டின் இறுதியா? 12 ஆம் நூற்றாண்டின்அரங்கர் கோயில் வழிபாட்டு முறைகளை வகுத்து “கோயிலொழுகு” எழுதிய இரா மானுஜர் திருப்பாவை சேவை யையும் அரையர் சேவையையும் புகுத்தி எழுதினாரே அது சென்ற நூற்றாண்டின் இறுதியா?

6. ஆட்சிலிங்கம் என்பவர் கூறியதாகக் கட்டுரையாளர் இப்படி மேற்கோள் காட்டு கிறார்: "மனத்துக்கேற்ப பூஜை முறைகளில் தமிழைப் புகுத்தி விட்டால் காலப் போக்கில் மூல மும் வழக்கொழிந்து சிதைந்து மொத்தமும் வீணாகி விடும் அபாயம் உள்ளது”.

பூஜை என்பதே தமிழில் உள்ள வேர்ச் சொல் அடியாகப் பிறந்தது என்பதை ” History and Culture of the Indian People “ என்ற நூலில் எஸ்.கே. சட்டர்ஜீ என்ற பேரறிஞர் “வேதகாலம் (Vedic Age) என்ற பகுதியில் நிறுவி இருக்கிறார். அது வருமாறு:

"சமஸ்கிருதத்தில் பூஜா எனப்படும் சொல் தமிழ் மொழி யில் இருந்து வந்ததே. பூ செய் என்பதே பூஜை என வழங்கு கிறது. பூஜையே பின்னர் சமஸ் கிருதத்தில் பூஜா என்று ஆயிற்று”

இந்திய ஜனாதிபதியாய் இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களும் வேதத்தில் பூஜைக்கும், கோயிலுக்கும் இட மில்லை என்று தமது நூல்கள் பலவற்றுள் குறிப்பிடுகிறார்.

"தீயை வழிபடும் பார்ப்பான்" என்று பாரதியாரும் பாடியிருக் கிறார். எனவே சமஸ்கிருத மொழியைச் சொந்தம் கொண் டாடுபவர்களுக்கு பூஜையும் கோயிலும் கிடையாது என்பதே வரலாற்று உண்மை. இது இப்படி இருக்க மனத்துகேற்ப பூஜை முறைகளில் தமிழைப் “புகுத்தி”விட்டால் என்று கூறு வது வரலாற்றை இருட்டடிப்பு செய்வதாகும். காலப்போக்கில் மூலம் ஒழிந்து போகும் என்று கூறும் திரு ஆட்சிலிங்கத்திற்கு எது மூலம் என்பதே தெரிய வில்லை என்பது புலனாகிறது. அதனால்தான் வறிதே மூலம் என்று கூறினாரே ஒழிய அந்த மூலம் எது என்று கூறினாரில்லை என்க.

7. வடமொழி வேண்டும் என்பவர்களில் பெரும்பாலா னவர்களுக்கு அந்த மொழியே தெரியாது என்று கட்டுரை யாளர் மிகச் சரியாக ஒப்புக் கொண்டுள்ளார் என்பதே ஒரு ஆறுதலான செய்தி. தெரியாத மொழியே வழிபாட்டு மொழி யாக இருக்க வேண்டும் என்று அடம் பிடிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

இறுதியாக இது பற்றிய சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் இரண்டு கவனத்திற்குரியவை.

1.) கடவுளுக்குத் தமிழ் தெரி யாது; எனவே தமிழில் வழி பாடுகளை நடத்தக் கூடாது என்று 1998-ஆம் ஆண்டில் ஒருவர் வழக்கு தொடுத்தார். அதில் ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதைவிட அபத்தம் இருக்க முடியாது என்று கூறி வழக்கைத் தள்ளு படி செய்தனர்.

2.) எனது ஆசிரியப் பெருந் தகை, செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ. சத்தியவேல் முருக னாரை எதிர்த்து தருமபுர ஆதீன சீடர்கள் நால்வர் தமி ழில் குடமுழுக்குகள், வாழ்வியல் சடங்குகள் நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் தடைகோரினர். அந்த வழக்கு O.A.No: 678/2007 A.No. 4552/2007. 7.2.2008 இல் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் ஆகம விதிப்படி அமையாத கோயில் களில் தமிழில் குடமுழுக்கு ஆற்றலாம் என்றும், ஆகம விதிப்படி அமைந்த கோயில் களிலும் கோரிக்கையின் மீது தமிழில் குடமுழுக்கு செய்ய லாம் என்று உத்தரவிட்டது. இது தினமணி உள்பட எல்லா நாளேடுகளிலும் வெளியானது.

எனவே ஏற்கெனவே உயர் நீதிமன்றமே கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யலாம் என்று தீர்ப்பளித்துள்ள நிலையில் இப்பொழுது சிலர் இது பற்றி ஊடுருவ முனைந்துள்ளார்கள் என்று கட்டுரையாளர் கட்டுரையைத் தொடங்கி இருப்பது உண்மைக்கு எதிரான வேடிக்கை என்பதைத் தவிர வேறில்லை.

Pin It