அண்மையில், ஹீரோ - ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பான இருசக்கர வாகனத்திற்காக, அச்சு ஊடகங்களில் விளம்பரம் ஒன்று வெளியானது. அதில், ஒரு குடும்பத்தின் அப்பா பெயர் ஷிவ்ராம் அய்யர் என்றும், மகள் பெயர் சௌம்யா அய்யர் என்றும், அவர் பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தின் பெயர் ஸ்ப்ளெண்டர் அய்யர் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பிறப்பின் அடிப்படையில், மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் சாதியை அருவறுத்து, வேரோடு ஒழிக்க வேண்டுமென நாம் போராடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், பார்ப்பன சாதியினர் பெருமை போற்றும் வகையில், இவ் விளம்பரம் வெளிவந்திருந்தது. இது, சாதி மறுப்பாளர்களுக்கிடையே மட்டுமின்றி, எளிய மக்களிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமூக ஊடகங்களில், குறிப்பாக முகநூலில் இது குறித்து கண்டனங்கள் பரவலாக எழுந்ததன் காரணமாக, மறுநாளே அந்த விளம்பரம் ‘அய்யர்’ என்ற சாதிப் பெயர் நீக்கப்பட்டு, ‘குமார்’ என மாற்றப்பட்டது.

இதே போல, கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பரில், சென்னை சோழிங்கநல்லூரில் செயல்படும் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பேபால் நிறுவனம், தனது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்திய போட்டிகளில் ஒவ்வொரு குழுவிற்கும், ஒவ்வொரு மாநிலங்களிலுமுள்ள மேல் சாதியினரின் பெயர்களை குறிக்கும் வகையில், 'அய்யர்ஸ் ஆஃப் தமிழ்நாடு’, 'பானர் ஜீஸ் ஆஃப் வெஸ்ட் பெங்கால்’, 'பட்டேல்ஸ் ஆஃப் குஜராத்’ எனப் பெயரிட்டது.

“நாகரிகமற்ற கிராமத்தினர் தான் சாதியை கடைப்பிடிப்பார்கள்” என பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டிருந்த பொய்யை உடைத்து நொறுக்கும் வகையில், நன்கு படித்து, நல்ல சம்பளத்தில் பணியிலுள்ளவர்களிடம் இருந்த சாதிவெறியை இது எடுத்துக்காட்டியது. இவ் விழாவிற்கு, தமிழகத்தில் எழுந்த கடும் கண்டனங்களை அடுத்து, அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டு கடிதம் வெளியிட்டது.

உலகம் வியக்கும் வகையில், தஞ்சையில் பெருங்கோயில் எழுப்பிய மாமன்னன் இராசராசச் சோழன் எந்த சாதி என சுவரொட்டி வழியே பட்டிமன்றமே நடக்கிறது.

ஆரியத்தால், தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப் பட்ட வர்ணசாதிப் பிரிவி னையான சாதி, இடஒதுக்கீடு போன்ற உரிமைகளைப் பெறவேண்டி மட்டுமே அடையாளப்படுத்தப்பட வேண்டிய சாதி, தேர்தல் அரசியலில் முக்கிய இடத்தை அடைந்த போது, அதன் இருப்பு புதிய வீரியம் கொண்டது. எனினும், வட மாநிலங்களில் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை வைத்துக் கொள்ளும் பழக்கம் இன்றும் பெருமளவில் நடைமுறையில் உள்ளதைப் போல், தமிழகத்தில் நடப்பதில்லை.

ஆனால், அண்மைக் காலமாக தமிழ்ச் சமூகத்தில், ஒழிக்கப்பட வேண்டிய சாதி வெவ்வேறு வகைகளில், “பெருமிதக் கலாசாரம்” என்ற பெயரில் மீண்டும் அடையாளப்படுத்தப்படுவது தொடர்கிறது.

அயலார் அதிகமாகக் கோலோச்சும் தமிழ்த் திரைத் துறையில், கவுதம் மேனன், இராசீவ் மேனன் என சாதிப் பெயரை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு செயல்படும் ஆண்களுக்குப் போட்டியாக, அண்மையில் தமிழ்ப் படங்களில் நடித்துவரும் சில அயல் இனத்து நடிகைகள் தங்கள் பெயருக்குப் பின்னால் தங்களது சாதிப் பெயரைக் குடும்பப் பெயர் என்ற வகையில் சேர்த்துக் கொள்வதைப் பெருமை யாகக் கருதுகிறார்கள்.

சமீரா ரெட்டி, நவ்யா நாயர், மேகா நாயர், லட்சுமி மேனன், பார்வதி ஓமன குட்டன், ஜனனி அய்யர், அபர்னா பிள்ளை, மேக்னா நாயுடு, ஸ்வேதா மேனன், ஸ்வாதி சர்மா... என்று ஒரு பெரிய பட்டியலே இதற்குச் சான்றாக அளிக்கலாம்.

தமிழ் இயக்குநர்கள் சேரன், பாலா போன்றோர் இவ்வாறு பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை வைக்கக்கூடாது என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் “அவன் இவன்“ திரைப்படத்தில் நாயகியாக நடித்த, ஜனனி அய்யர் சற்றும் தயங்காமல், தன் பெயருக்குப் பின்னால் வைத்திருக்கும் அய்யர் என்ற தனது சாதிப் பெயரைத் தான் ஒரு போதும் நீக்கப்போவதில்லை என்று அறிவித்தார். ஏற்கெனவே இதே கருத்தை சமீரா ரெட்டியும் சொல்லியிருக்கிறார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது.

தனது குடி அரசு இதழில் தனது பெயருக்குப் பின்னாலிருந்து ‘நாயக்கர்’ என்ற தனது சாதிப் பெயரை நீக்கி அறிவிப்பு வெளியிட்ட பெரியார் குறித்த படத்தை ஆந்திராவில் வெளியிடும் போது, ‘ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’ என சாதிப் பெயரோடு வெளியிட்டால் தான் ஓடும் என விளக்கம் சொன்னார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே,பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரை எழுதி விட்டு அதைக் குறுக்குக் கோடு கிழித்து அடித்துவிடுவது என முடிவு செய்தார் வீரமணி.

சாதிப் பெயர் சூட்டிக் கொள்ளும் இப்புதியப் போக்கு தங்களைச் சாதி அடிப்படையில், அடையாளப்படுத்துவதற்கானதாகத் தெரியவில்லை. மாறாக, அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடாகவும் படித்த- அறிவுள்ள மற்றும் சமூகத்தில் வாழ்க்கைத்தரத்தில் மேம்பட்ட மக்கள் கொள்ளும் திமிரின் மற்றுமொரு வடிவமாகவுமே காணப்படுவதாகத் தெரிகிறது.

படித்தவர்கள் அறிவுள்ளவர்கள் மனிதநேயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் உயர்வு தாழ்வை வெறுக்க வேண்டும்.

Pin It