களப்பிரர்களும் பல்லவர்களும் தமிழ் நாட்டில் பிரமதேயம், தேவதானம் என்ற பெயரில் வடக்கேயிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஆரியப்பார்ப்பனர்களுக்கு இலவயமாகவும் வரியில்லாமலும் நிலம் கொடுக்கும் பழக்கத்தை வேரூன்றச் செய்து வளர்த்து வந்தார்கள். களப்பிரர்கள் கன்னடர்கள் என்றும் பல்லவர்கள் தெலுங்கர்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

 இப்பொழுது ”திராவிடம் காக்கும் செம்மல்” தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் பத்மா சுப்ரமணியம் என்ற பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த நாட்டிய நாயகிக்கு மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிப்புலத்தில் ஐந்து ஏக்கர் நிலம் இலவயமாகக் கொடுத்து பழைய பிரமதேய முறையைப் புதுப்பித்துள்ளார். 

 நாட்டியம், கூத்து, நாடகம் அனைத்தும் சமற்கிருதத்திலிருந்தே தமிழ்நாட்டிற்கு வந்தவை என்றும் பரத முனிவரின் நாட்டிய சாத்திரத்தைப் பார்த்தே இளங்கோவடிகள் நாட்டியம் குறித்த நுட்பங்களை சிலப்பதிகாரத்தில் சேர்த்தார் என்றும் கூறிவரும் பத்மா சுப்பிரமணியம் - அத்திசையில் மேலும் மேலும் ஆய்வு என்ற பெயரில் பார்ப்பனியம் - சமற்கிருதம் ஆகியவற்றின் ஆதிக்கக் கருத்துகளை இட்டுக் கட்டிப் பரப்ப தமிழ் மண்ணில் பரத முனிவர் ஆசியப் பண்பாட்டு மையத்தைத் தொடங்குகிறார். அதற்குத்தான் இலவயமாக நிலம் கொடுத்துள்ளார் முதல்வர். 

 அந்த நிலம் மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை பெருமாள் கோயிலுக்குச் சொந்தமானது. அக்கோயில் இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்தது. 

 17.10.2010 அன்று பட்டிப்புலத்தில் பத்மா சுப்பிரமணியம் தொடங்கும் பண்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் கருணாநிதி. அதற்கு முன்பாக, 14.10.2010 அன்று மேற்படி, நில ஒப்படைப்பை நீக்க வேண்டும் என்றும், அடிக்கல் நாட்ட முதல்வர் செல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் பெ. மணியரசன் ஓர் அறிக்கை கொடுத்தார். அதன் சுருக்கம் : 

 செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மேற் கண்ட நோக்கத்திற்காக பத்மாவுக்கு மேற்படி இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனால் அவர்க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி, பரதமுனிவர் பெயரால் அமையவுள்ள அந்த மையம் ஆரியப் பண்பாட்டைத்தான் பரப்பும் என்று தமிழறிஞர்கள் கூறியதை ஏற்று, செயலலிதா கொடுத்த அனுமதியை நீக்கினார். 

 இப்பொழுது அதே முதல்வர் கருணாநிதி பரதமுனிவர் பெயருடன் ஒட்டு வேலைத் தந்திரமாக இளங்கோ அடிகள் பெயரையும் சேர்த்துக் கொண்ட பத்மா சுப்பிரமணியத்தின் “பரதா - இளங்கோ ஆசியப் பண்பாட்டு நிறுவனத்திற்கு” அந்த ஐந்து ஏக்கர் நிலத்தை ஒப்படைத்துள்ளார். ஏன் இந்தக் குட்டிக்கரணம்? 

 பத்மா சுப்பிரமணியம் எப் பொழுதும் தமிழ்ப் பண்பாட்டு மரபையும் வளத்தையும் மறுத்து அவைஅனைத்தும் சமற்கிருதத்திலிருந்து வந்தவை என்று வாதாடக் கூடியவர். மதுரையில் 1981ல் நடந்த 5 ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் “இளங்கோ அடிகள் பரத முனிவரிடமிருந்து கூத்துக் கருத்துகளைப் பெற்றுத் தான் சிலப்பதிகாரத்தில் எழுதினார்.” என்று பேசி “ஆய்வுரை” வழங்கிய போது அங்கிருந்த நீதிபதி மகாராசன், முனைவர் சாலை இளந்திரையன், முனைவர் இளவரசு உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலர் எதிர்த்துப் பேச, அந்த அம்மையார் பாதியிலேயே உரையை முடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார். 

 இப்பொழுது தந்திரமாக இளங்கோ என்ற பெயரை ஒப்புக்குச் சேர்த்துக் கொண்டு இளங் கோவடிகள் குறிப்பிடும் கூத்து இலக்கணங்களையும் தமிழரின் நாட்டிய மரபையும் மறுத்து நாட்டியக் கலை ஆரியத்திற்கே உரியது என்ற ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த இந்த நிறு வனத்தைத் தொடங்குகிறார். 

 பரத முனிவர் என்ற பெயரில் ஒருவர் இருந்ததே இல்லை என்றும் தமிழின் கூத்துக்கலை இலக்கணங்களை சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துக் கொண்ட ஆரியர்கள் பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரம் என்று பெயர் மாற்றிக் கொண்டார்கள் என்றும், தமிழறிஞர்களும் ஆய்வாளர்களும் கூறியுள்ளனர். 

 பத்மா சுப்பிரமணியத்தின் பரத முனிவர் நிறுவனத்திற்கு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அரசு நிலத்தை ஒப்படைக்கக் கூடாது என்றும் அதற்கான அம்மையாரின் முயற்சிக்கு எந்த வகையிலும் துணைபோகக் கூடாது என்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Pin It