கடந்த ஜூலை மாதம் படாடோபமாக நடைபெற்ற ஒரு அரசு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத்திட்டம். இத்திட்டப்படி ஆண்டு வருமானம் 72000க்கு கீழ் இருக்கும் மக்கள் சில உயிர்காக்கும் சிகிச்சைகளை செய்து கொள்ள முடியும். இத்திட்டத்தின் கீழ் வருபவர்கள் சுமார் 75 லட்சம் குடும்பங்கள் அடங்கும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது. இதில் அரசின் 12 நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்ட 35 லட்சம் உறுப்பினர்களும் ஆண்டு வருமானம் 72000க்கு கீழ் உள்ள குடும்பங்களும் அடங்கும். இதற்கான செலவு ஆண்டுக்கு 517.307 கோடி ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு இத்தொகை ஸ்டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனம் என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்படும். இந்நிறுவனம், இதன் பயனாளிகளுக்கு ஒரு அடையாள அட்டைகொடுக்கும். இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அதற்கான கட்டணத்தை ஸ்டார் நலவாழ்வு காப்பீட்டு நிறுவனம் திரும்பக் கொடுக்கும். இத்திட்டப்படி 4 வருடங்களில் குடும்பம் ஒன்று ரூ1 லட்சம் வரை சிகிச்சை பெற அனுமதிக்கப்படும்.

கடமையிலிருந்து வழுவிச் செல்லும் அரசு:

முதலாவது அம்சம், மக்கள் நல்வாழ்வை பாதுகாப்பது அரசின் கடமையாகும் என்ற கருத்தில் ஏற்பட்ட மாற்றம். இந்த கடமையை லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இயங்கும் ஒரு காப்பீட்டு நிறுவனத்திடம் அவுட்சோர்ஸ் செய்வது என்பது ஏற்க முடியாதது. தன்னிடம் உள்ள கட்டமைப்பை பயன்படுத்தி நல்வாழ்வு சேவைகளை இலவசமாக வழங்கும் வாய்ப்பு அரசிற்கு அதிகமாக இருக்கும் போது காப்பீட்டுப் பாதையை அரசு ஏன் தேர்ந்தெடுக்கிறது என்ற கேள்வி எழுகிறது. உலகமயமாக்கல் கொள்கைகளின் அடிப்படை கூறுகளான, அரசு பொருளாதாரத்திலிருந்து விலகியிருத்தல், சேமநல நடவடிக்கைகளை அரசு கைவிடல், தனியார்மயமாக்கல் ஆகியவற்றிலிருந்து மக்கள் நல்வாழ்வு மட்டும் விலக்களிக்கப்பட்டிருப்பதாக உலக வங்கி போன்ற நிறுவனங்களே கூறியுள்ளன. கனடா, ஃபிரான்ஸ் போன்ற முதலாளித்துவ நாடுகளில் கூட அனைத்து மக்கள் நல்வாழ்வுச் செலவுகளும் அரசே செய்கின்றது. கியூபா போன்ற சோசலிச நாடுகளில் சோசலிச குடியரசு அமைக்கப்பட்ட தினத்திலிருந்து மக்கள் நல்வாழ்வுச் செலவை முழுமையாக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால் சோசலிச குடியரசு என்று தன்னை கூறிக் கொள்ளும் இந்தியாவில் நல்வாழ்வுச் செலவில் 90 சதவீதத்தை மக்கள் தங்கள் கைப்பணத்திலிருந்து செலவிடும் அவல நிலைதான் உள்ளது. இதனால், உலகிலேயே மிக அதிகமாக தனியார்மயப்படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுச் சேவைகளைக் கொண்ட நாடு இந்தியா என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டது. இது சுதந்திரப் போராட்டத்தின் அடிப்படை கோஷங்களில் ஒன்றான எல்லோருக்கும் நல்வாழ்வு என்பதிலிருந்து விலகிச் செல்வதாகும். சுதந்திரம் பெற்றபின்பு அமைக்கப்பட்ட போரே கமிட்டி பரிந்துரையின் அடிப்படை அம்சமான காசு இல்லை என்ற காரணத்திற்காக யாருக்கும் மருத்துவம் மறுக்கப்படக் கூடாது என்பதை மறுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. முதலில் காப்பீட்டுத் திட்டம் மூலம் அரசே காசு கொடுப்பதாகவும், பிறகு காசு கொடுப்பதையும் பற்றாக்குறையாக்கி (தற்போதும் அதுதான் நிலைமை) இறுதியில் காசு கொடுப்பதை அறவே நிறுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் படிப்படியாக செல்லும் போக்கே காப்பீட்டுத் திட்டப் பாதை. அரசிற்கும் மக்கள் நல்வாழ்விற்கும் சம்பந்தமில்லை, அவரவர்கள் மருத்துவச் செலவை அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனோநிலையை பண்பாட்டு ரீதியாக உருவாக்கும் நோக்கம் கொண்டதே காப்பீட்டுப் பாதை மூலமாக நல்வாழ்விற்காக திட்டமிடுவது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

காப்பீடு என்றொரு தொழில்:

இரண்டாவது அம்சம், காப்பீட்டு திட்டம் செயல்படும் முறை பற்றியது. இது லாபமீட்டும் தொழிலாக நடத்தப்படுகிறது. ஒவ்வொருவரும் செலுத்தும் பிரீமியத்தைக் கூட்டினால் கிடைக்கும் மொத்தத் தொகையில், ஒரு சில பயனாளிகள் நோய்வாய்ப்பட்டால், அவர்களுக்கு மட்டும், அதிகபட்சமாக காப்பீடு செய்யப்பட்ட தொகை வழங்கப்படும். இதில் காப்பீட்டு நிறுவனத்தின் லாபமும், இயங்கு செலவும் கழித்தது போக மீதியுள்ளவையே பயனாளிக்கு கொடுக்க முடியும். ஒரு கட்டத்தில் பயனாளிகளின் விண்ணப்பங்கள் அதிகரித்தால் பிரீமியம் தொகையை உயர்த்த வேண்டும். நமக்கு கூட கடந்த சில ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களுக்கு 150 ரூபாய் பிரீமியம் செலுத்திய நிலையில் விண்ணப்பங்கள் அதிகரித்ததன் விளைவாக தற்போது 600 ரூபாக்கு மேல் பிரீமியம் செலுத்துவதை நினைவிற் கொள்ள வேண்டும். இதுதான் காப்பீட்டுத் தொழிலின் அடிப்படை. இந்த அடிப்படையிலேயே ஸ்டார் காப்பீட்டு நிறுவனமானது 35 சதவீதத்தை லாபமாகவும் இயங்கு செலவாகவும் தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள 65 சதவீதத்தையே மக்களுக்கு வழங்குகிறது. இந்த 65 சதவீதத் தொகையானது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அவர்களின் லாபம், விளம்பரச் செலவு, ஆடம்பரங்கள் வல்லுனர்களுக்கு கொடுக்கும் அதீதமான ஆலோசனைத் தொகை போக மக்களுக்கு உண்மையாகப் போய்ச் சேரவேண்டிய தொகை எவ்வளவு என்று நம்மால் ஊகிக்க முடியும். அரசு செலவிடும் 517.307 கோடியில், நான்கு ஆண்டுகள் ஒப்பந்தப்படி 2069.204 கோடியில் பத்து சதவீதம் மக்களுக்கு பயனுள்ளதாக மாறினாலேயே ஆச்சரியம்தான். மீதமுள்ள 1800 கோடி தனியாருக்கு கைமாறுவது தவிர்க்க முடியாதது.

காப்பீட்டு நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளை அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மட்டுமே பயனாளி சிகிச்சை பெறமுடியும். அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டண வார்டுகளை இதில் சேர்ப்பதற்கு அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் இதில் பெருந்தொகை தனியார் நிறுவனங்களுக்கே செல்லும். இதே தொகையை அரசு தன்னுடைய நல்வாழ்வு கட்டமைப்பின் மூலம் நேரடியாக செலவழித்தால் பலன் பன்மடங்கு இருக்கும் என்பது கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெறாத உயர்நிலைப் பள்ளி மாணவன் கூட கூறமுடியும். ஒரு குடும்பத்திற்கு 4 வருடத்திற்கு உயர்சிகிச்சைக்கு ஒரு லட்சம் போதுமா?

மூன்றாவதாக, 1 லட்சம் காப்பீட்டுத் தொகை நோயாளிகளுக்கு உரிய பலனளிக்குமா என்பது. உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு 4 வருடத்திற்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான செலவில் ஒரு லட்சம் மட்டும் ஸ்டார் காப்பீட்டு நிறுவனம் வழங்கும். இத்திட்டத்தின் கீழ் 51 நோய்களை உள்ளடக்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மற்றவைகளுக்கு கிடையாது. இருதய சிசிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிக்சை உள்ளிட்ட நோய்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் பட்டியலில் விடுபட்ட நோய்கள் ஏராளம். பட்டியலில் உள்ள நோய்களுக்கான சிசிச்சையளிப்பதற்கே வேறு சில ஆய்வு சிகிச்சைகள் தேவைப்படுகிறது. இதற்கும் இத்திட்டத்தில் இடம் இல்லை. உதாரணத்திற்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சைக்கு இத்திட்டம் உதவாது. இருதய அறுவை சிகிச்சைக்கு மட்டுமே இது உதவிடும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் ஆஞ்சியோ ஆய்வு இத்திட்டத்தின்படி செய்து கொள்ள முடியாது. இதைத்தவிர தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நோய்களான சர்க்கரை வியாதி, இரத்த அழுத்த நோய் ஆகியவற்றிற்கான சிகிச்சையை இத்திட்டத்தின் மூலம் பெற முடியாது.

இந்த 51 நோய்களிலும் சிகிச்சைக்குப்பின் செய்ய வேண்டிய சிகிச்சைக்கான செலவீனங்களும் இதில் அடங்காது. இந்த 51 நோய்களுக்கும் சிகிச்சைக்கான செலவு ஒரு லட்சத்திற்குள் முடிந்துவிடும் என்ற உத்தரவாதமும் கிடையாது. ஒரு லட்சத்திற்கு மேல் ஆகும் கூடுதல் தொகையை நோயாளி தனது சொந்த பணத்திலிருந்துதான் செலவு செய்ய வேண்டும். அதற்கான வசதி ஆண்டுக்கு 72000 ரூபாய் வருமானம் ஈட்டும் குடும்பத்தில் எப்படி இருக்க முடியும்? சிகிச்சை பெறும் ஒரு சிலர் அரசை
வாழ்த்துவதை ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். இத்தகைய நடவடிக்கைகள் இத்திட்டத்தின் வெற்றி என்ற தோற்றத்தை உருவாக்க உதவுமே தவிர உண்மையான வெற்றியை இது பிரதிபலிக்காது. சிகிச்சையையும் துவக்கி நடுவிலும் கைவிட முடியாமல் கடனாளியாகும் நிலைக்கே இவர்கள் தள்ளப்படுவார்கள். ஒரு குடும்பத்தில் சராசரியாக 5 பேர் என்று கணக்கிட்டால் (கணவன், மனைவி, பெற்றோர் மற்றும் ஒரு குழந்தை) கூட உயிர்காக்கும் உயர் சிகிச்சை தேவைப்படுபவர் நான்கு ஆண்டுகளில் ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் இருந்தால், அவர் கண்டிப்பாக இத்திட்டத்தின் கீழ் பலனடைய முடியாது. இன்றைக்கு இருக்கும் விலைவாசி நிலமைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் ஒருலட்சத்திற்குள் செய்துவிட முடியும் என்பது சற்றுக் கடினமான விஷயம்தான். இத்திட்டம் ஜூலை 2009இல் அமலுக்கு வந்தது 2012ஆம் ஆண்டு சிகிச்சை பெறுபவர் அன்றுள்ள விலைவாசி நிலமையில், இத்திட்டம் யானைப்பசிக்கு சோளப்பொறி என்ற நிலையை அடைந்துவிடும். நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட முடியுமா?

நான்காவதாக இதில் அடங்கியுள்ள முக்கியமான விஷயம்: தனியார் காப்பீட்டு நிறுவனத்தை தெரிவு செய்தது. அதுவும் பன்னாட்டு காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனத்தை தெரிவு செய்தது. இந்த நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனங்கள் பயனாளிகளை எவ்வாறு ஏமாற்றி வருகிறது என்பதையே அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் மைக்கேல் மூர் தயாரித்துள்ளார். 2006இல் இவர் இயக்கிய சிக்கோ என்ற ஆவணப்படமானது, உலகின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இந்தப்படத்தை இயக்கும் யோசனை மைக்கேல் மூரின் மூளையில் உதித்ததும், நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனங்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் விபரங்களை மின் அஞ்சல் மூலமாக தனக்கு அனுப்புமாறு ஒரு விளம்பரத்தை கொடுத்த ஒரு மணி நேரத்திற்குள் 1100க்கும் அதிகமானோர் பதில் அனுப்பியிருந்தனர், 1 நாளுக்குள் 12000 பேரும் ஒருவாரத்திற்கு ஒன்னரை லட்சம் பேரும் மின் அஞ்சல் அனுப்பியிருப்பதாக மூர் கூறுகிறார். ஒவ்வொரு நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனத்திலும் சிகிச்சை பெற்றவர் அனுப்பும் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கென்றே விசேஷ அதிகாரிகள் செயல்படுகின்றனர். இந்த விசேஷ அதிகாரிகளில் ஒருவர் என்னுடைய செயல்பாடும், ஆண்டுச் சம்பள உயர்வும் நான் எவ்வளவு விண்ணப்பங்களை நிராகரித்திருக்கிறேன் என்பதிலும் எவ்வளவு தொகையை மறுத்திருக்கிறேன் என்பதைப் பொறுத்ததுதான் என்று வெளிப்படையாக கூறுகிறார்.

இத்தகைய தில்லுமுல்லுகளை சுட்டிக்காட்டிய பொழுது, இத்திட்டத்தின்படி அரசு செலுத்தும் பிரீமியம் தொகையில் 65 சதவீதத்தை கண்டிப்பாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது என்று அரசு தரப்பில் இருந்து பதில் வருகிறது. இவர்கள் வெளியிட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியலில் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளாகவே உள்ள நிலையில், இந்த 65 சதவீத செலவை எட்டுவதற்கு ஸ்டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனத்திற்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. எதிர்காலத்தில் ஒரு பெரிய மோசடி நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அரசு தரப்பிலும் இது போன்ற கேள்விகளுக்கு பதில்கள் வந்த வண்ணம் உள்ளது உதாரணத்திற்கு அரசு அலுவலர்களுக்கு இதே ஸ்டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனம் மூலம் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளதாகவும், இதுவரை அரசு ஊழியர்கள் 154.22 கோடி ரூபாயை பெற்றிருக்கிறார்கள் என்றும் இந்நிறுவனத்திற்கு அரசு செலுத்திய பிரீமியம் வெறும் 121.7 கோடிதான் என்றும் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 கோடி (விண்ணப்பத் தொகை - பிரீமியத் தொகை + இயங்கு செலவு) நஷ்டமடைந்திருப்பதாக அரசு தரப்பு கூறுகிறது. நடைமுறையில் நஷ்டமடைவதாக கூறும் வியாபார நிறுவனங்கள் கூறும் நஷ்டம் என்பது மதிப்பீட்டு நஷ்டம். வருமானம் மற்றும் செய்யப்பட்ட உண்மைச் செலவு இதற்கு இடையில் இருக்கும் நஷ்டமே பணநஷ்டம். ஒரு இயந்திரம் வாங்கினால் 30 சதவீதத்தை தேய்மானமாக செலவில் எழுதி விட்டாலும் நடைமுறையில் 30 சதவீதம் தேய வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் பண நஷ்டத்தில் ஒரு நிறுவனம் இயங்க முடியாது. காப்பீட் நிறுவனம் அடைந்ததாக அரசு கூறும் நஷ்டம் என்பது பண நஷ்டமாகும். இது ஒரு வியாபாரத்தில் நடைபெறவே முடியாது. எனினும் துணிச்சலாக இத்தகைய பதில்களை அரசு கூறிவருகிறது.

அரசே ஒரு காப்பீட்டு அமைப்புதான்:

ஐந்தாவது முக்கியமான அம்சம்: மக்கள் நல்வாழ்விற்கான அரசின் திட்டமிடல் பற்றிய கேள்வி. அரசு என்பது என்ன? அது மக்கள் அமைப்புதான். என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனுக்கு உடம்பு சரியில்லை என்றால் அதற்கான செலவில் எனக்கும் பொறுப்பு இருக்கிறது. ஏனென்றால் மனிதன் சமுதாயமாக வாழ்கிறவன். எனவேதான் ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்வு செலவை மொத்தமாக மதிப்பிட்டு அதற்காக திட்டமிடும் பொறுப்பு அரசிடமே உள்ளது. இதற்காக வரிவசூலிக்க அரசுக்கு உரிமை உண்டு. வரி செலுத்துபவர்களில் பலர் அவர்கள் செலுத்திய வரித்தொகையளவிற்கு சிகிச்சை பெற்றிருக்க வேண்டியதில்லை. எனினும் எனக்கு நோய் வந்தால் அரசு கவனிக்கும் என்ற உத்தரவாதமே, நோய் வருவதற்கான தடுப்பு அரணாக செயல்படும். இன்றும் கூட நாம் செலுத்தும் வரிகளில், செலுத்தப்பட்டதற்கான காரணத்தை நாம் அனைவரும் அனுபவிப்பது கிடையாது. எனினும் நாம் வரி செலுத்துகிறோம். அது நமது சமுதாயக் கடமை அது நமக்கு ஒரு பாதுகாப்பை தருகிறது.

இந்த வகையில் அரசே ஒரு காப்பீட்டு அமைப்புதான். எனினும் ஏற்றத்தாழ்வான வருவாய் ஈட்டும் மக்கள் கூட்டத்திடம் எல்லோரும் சரிசமமாக அனைத்து விஷயங்களுக்கும் வரி செலுத்துங்கள் என்று வலியுறுத்தமுடியாது. யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை அன்றைக்குள்ள சூழ்நிலையில் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இந்த கருத்தோட்டத்தில் ஒரு தலைகீழ் மாற்றம் உலகமயமாக்கல் கட்டத்தில் ஏற்பட்டு விட்டது. நான் ஏன் அடுத்தவனுக்காக செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மக்களின் ஆழ்மனதில் பதிய வைத்த பண்பாட்டு வேலையை உலகமயமாக்கல் செய்துவிட்டது. ஒவ்வொருவரும் மக்கள் கூட்டத்திடமிருந்து தனி நபர்களாக்கப்பட்டுள்ளனர். கூட்டமாக பயன்படுத்தும் மேஜை தொலைபேசியானது, ஒருவர் மட்டுமே பயன்படுத்தும் கைபேசி பண்பாட்டிற்கு உலகமயமாக்கல் கொண்டுவந்து விட்டது. ஆகவே பயனாளி மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கோட்பாடு நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்தக் கோட்பாட்டை மக்கள் நல்வாழ்விற்குள் நடைமுறையில் புகுத்த முடியாது. அப்படிச் செய்தால் மனிதனின் அடிப்படை மனிதாபிமான உணர்வு கேள்விக்குள்ளாக்கப்ட்டுவிடும். அப்படியும் புகுத்தினால் மக்கள் கூட்டமே அழிய நேரிடும்.

இந்த முரண்பாட்டைபும் லாப நோக்கத்திற்காக பயன்படுத்தும் படைப்பாற்றல் புத்தி உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு இருப்பதால்தான் நல்வாழ்வு காப்பீட்டு அமைப்புமுறை உருவாக முடிந்தது. இது மக்கள் நலனில் அரசின் கடமையை சுருக்கிவிடும் வேலையை செய்து வருவதால், அத்துணை காரணங்களுக்கும் அடித்தளமாக விளங்குவது உலகமயமாக்கலும் லாபவெறியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய காரணங்களினால் சமூக உணர்வு படைத்தவர்கள் தனது கடமைகளிலிருந்து நழுவிச் செல்லும் அரசை அதனுடைய பாதையில் திரும்பப் பயணிப்பதற்கு நிர்ப்பந்திக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வை காப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டு பாதையானது அரசு தன்னுடைய கடமையிலிருந்து வழுவிச் செல்வதையே பிரதிபலிக்கிறது. காப்பீட்டுப் பாதையும் எதிர்காலத்தில் ஒரு பெரிய மோசடி நடக்கவிருப்பதற்கான அறிகுறி உள்ளப் பாதை என்பதாலும் மக்கள் நல்வாழ்வு மோசமடைவதை தடுக்கத் திராணியற்றது என்பதாலும் இத்தகைய நடைமுறைகள் உடனடிப் பலனை மட்டும் வைத்து தீர்மானிக்காமல் நீண்டகால அடிப்படையில் பலன்தராது என்பதால் கடுமையாக எதிர்ப்பதற்கு சமூக ஆர்வலர்கள் முன்வரவேண்டும். அரசினுடைய நலத்திட்டம் என்று இது அங்கீரிக்கப்பட்டு விட்டதால், இதை விமர்சித்தால் நாம் தனிமைப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் இதை எதிர்க்கும் எண்ணத்திலிருந்து பின்வாங்குவதை பொறுப்புள்ள எதிர்கட்சிகளும் தவிர்க்க வேண்டும்.

Pin It