2009- இலக்கியத்திற்கான நோபல் பரிசு 

இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ருமேனியாவின் பெண் எழுத்தாளர் ஹெர்தா மியுல்லருக்குக் கிடைத்துள்ளது. ஹெர்தா ருமேனியாவில் வாழ்ந்த ஜெர்மன் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர். 56 வயதான ஹெர்தா 1982ம் ஆண்டு "நீடரஞ்சென்" என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். ருமேனியாவில் ஜெர்மன் மொழிபேசும் மக்கள் வாழும் ஒரு சிறிய கிராமத்தின் துயரம் மிகுந்த வாழ்க்கையைத் தெளிவாக எழுதியமைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ருமேனியாவில் அக்காலத்தில் ஆட்சியிலிருந்த கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக எழுதப்பட்ட கதைகள் அவை. 

"கவிதையில் கவனம் செலுத்தி மனந்திறந்த உரை நடையில் எழுதப்பட்டது. உடைமைகளைப் பறிகொடுத்தவர்களைப் பற்றி இயற்கைக் காட்சிகளின் வர்ணனைகளோடு தொகுப்பு உள்ளது" என்று சுவீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது. 14 லட்சம் டாலர் பரிசளிக்கப்பட்டுள்ளது. இது சுமார் ஏழு கோடி ரூபாயாகும். இப்பரிசு வரும் டிசம்பர் மாதம் சுவீடிஷ் அகாடமியால் வழங்கப்படவுள்ளது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுவதில் இவர் 12வது பெண்மணியாவார். 

ருமேனியாவில் செசஸ்குவின் கம்யூனிஸ்ட் ஆட்சியால் தொடர்ந்து துன்பமிழைக்கப்பட்ட குடும்பம் எங்களுடையது என்கிறார் ஹெர்தா. அவரது தாயார் ரகசிய போலீசாருக்கு உளவு சொல்ல மறுத்ததற்காக அவரை சோவியத் உழைப்பு முகாமுக்கு ஐந்தாண்டுகள் அனுப்பப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டார் என்று ஹெர்தா கூறியுள்ளார். தன்னையும் சித்ரவதை செய்ததாகவும், அதன் விளைவாகவே தனது கதைத் தொகுப்புப் பிறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

1989ம் ஆண்டு ருமேனிய அதிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதிபர் செசஸ்கு சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்பாகவே 1987ல் தனது கணவருடன் வெளியேறி பெர்லின் நகருக்குக் குடிபெயர்ந்து விட்டார் ஹெர்தா. தனது கிராம வாழ்வில் செசஸ்கு ஆட்சியின் ஊழல்கள், முறைகேடுகள், ஒடுக்குமுறைகள் பற்றியே தனது கதைகளில் எழுதியிருக்கிறார். தனது சொந்த நாட்டிலேயே ஒரு அந்நியரைப் போல வாழ்ந்த சோகத்தையும் விவரித்துள்ளார். இதுவரை நாவல்களுக்கே நோபல் பரிசு கிடைத்துள்ளது. இம்முறை ஒரு சிறுகதைத் தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. "பச்சைப் பிளம்சுகளின் பூமி" என்ற இவரது நாவல் பிரபலமானதாகும். 

சுவீடிஷ் அகாடமி அவ்வப்போது கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கி வருகிறது. போரிஸ் பாஸ்டர்நாக் முதல் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. நோபல் பரிசுக் குழுவினரின் தேர்வுகள் புதிரானவை. இந்த ஆண்டு உலக சமாதானத்துக்கான பரிசுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவைத் தேர்வு செய்துள்ளது. அவர் அண்மையில்தான் பதவிக்கு வந்தார். இன்னும் சமாதானத்துக்கான அவரது நடவடிக்கைகளே துவங்காத நிலையில் ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளது விந்தைதான்! 

நடிகைகளும் தினமலரும்

புவனேஸ்வரி என்ற நடிகையைக் காவல்துறை விபச்சார வழக்கில் கைது செய்தது. தன்னையே போலீஸ் தொடர்ந்து கைது செய்வதால் கொந்தளித்த அந்த நடிகை நான் மட்டும்தானா இதைச் செய்கிறேன் - யார் யாரெல்லாம் இந்தத் தொழில் செய்கிறார்கள் என்ற பட்டியலைப் பத்திரிகையாளர்களிடம் கூற - தினமலர் அதை செய்தியாக வெளியிட்டது. இதைக் கண்டித்து நடிகர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தது. போலீஸ் தினமலர் செய்தி ஆசிரியர் லெனினைக் கைது செய்தது. பத்திரிகையாளர் சங்கம் இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தது. லெனின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இவற்றுக்கெல்லாம் காரணம் போலீஸ்தான். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் "இரண்டு வேளைச் சோற்றுக்காக விபச்சாரம் செய்த பெண்களைப் போய் கைது செய்யலாமா?" என்று கேட்டிருக்கிறார். நியாயமான கேள்விதான். கூடவே அவர் விபச்சாரம் பண்ணும் பெண்களை மட்டும் கைது செய்யும் போலீஸ் விபச்சார ஆண்களை ஏன் கைது செய்வதில்லை என்று கேட்டிருக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு விபச்சாரம் செய்யும் கவர்ச்சி நடிகையை ஏன் கைது செய்யவில்லை என்றும் கேட்டிருக்க வேண்டும். 

நமது தமிழக முதல்வர் நீண்டகால சினிமாக்காரர், பத்திரிகையாளர். அவரது ஆட்சியில் ஒரு பத்திரிகை ஆசிரியரை அலுவலகத்திற்குள் நுழைந்து கைது செய்ததை அவரே  கண்டித்திருக்க வேண்டும். அவரது முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் செல்வம் போலீசால் கைது செய்யப்பட்ட போது கொந்தளித்த கலைஞர் இப்போது மவுனம் காப்பது ஏன் என்று புரியவில்லை. தினமலர் மறுநாளே வருத்தம் தெரிவித்த பின்பும் கைது ஏன் என்பதும் புரியவில்லை. 

சினிமா நடிகர், நடிகைகள் பத்திரிகைகளால் பிரபலமடைவதும், அவர்களால் பத்திரிகைகள் பிரபலமாவதும் வாடிக்கை. எனவே, இந்த மோதல் தேவையற்றது. வறுமையால் பாலியல் தொழிலில் ஈடுபடுவோரைக் கைது செய்யும் போலீஸ் என்றாவது நட்சத்திர ஓட்டல்களை எட்டிப் பார்த்ததுண்டா? முதலாளித்துவ அரசியல் பிரமுகர்களும், பீடங்களில் இருப்போரும் இந்தப் பெண்களைப் பயன்படுத்துவது தெரியாதா? போலீஸ் இதற்கு உடந்தையாக இருப்பது தெரியாதா? அதிகார வர்க்கத்திடமும், ஆட்சியாளர்களிடமும், பெரிய மனிதர்களிடமும் காரியம் சாதிப்பதற்காக நடக்கும் செயல்களைக் கணக்கெடுக்க முடியுமா? 

நாம் வாழுவது ஆணாதிக்க சமூகத்தில் என்பதை மறுக்க முடியாது. சினிமா பெண்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதை சினிமாக்காரர்கள் உணர வேண்டும். நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுக் கேவலப்படுத்தி வருவதை பத்திரிகைகளும் உணர வேண்டும். 

இலங்கை அரசின் அட்டூழியங்கள்

இலங்கை ராணுவத்தின் 60வது ஆண்டு விழாவின் போது தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா பேசினார். கடந்த 34 மாதப் போரில் 22 ஆயிரம் விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், 9 ஆயிரம் புலிகள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

கடந்த மூன்றாண்டுகளில் இலங்கை ராணுவத்தின் பலம் 1.16 லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கையின் தமிழ் டாக்டர்கள் எல்டிடிஇயுடன் இணைந்து பணியாற்றியவர்கள் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரே நிபந்தனை அனைத்து டாக்டர்களும் உடனே அரசு டாக்டர்களாக வேலையில் சேர வேண்டும் என்பதுதான். 

அகதிகளாய் வாழும் தமிழகர்களைப் பார்க்க அனைத்துக் கட்சிகளின் குழுவை அனுப்ப வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால், திமுக கூட்டணி எம்.பி.க்களை மட்டும் இலங்கைக்கு கலைஞர் அனுப்பினார். கேட்டால் இது சொந்தச் செலவு என்று நைச்சியம் பேசினார். தமிழக மீனவர்களின் வாழ்வை இலங்கை தொடர்ந்து அழித்து வருகிறது. கலைஞர் அனுப்பிய எம்.பி.க்கள் போனதால் கொடியவன் ராஜபக்ஷேயிடம் மாற்றமா வரப்போகிறது? இலங்கைத் தமிழர் மறுவாழ்வும், தமிழக மீனவர்களின் அன்றாடவாழ்வும் எப்போது சீராகும். மன்மோகனுக்கும், கலைஞருக்கும்தான் வெளிச்சம்! 

கிரீஸ் இடதுபக்கம்

ஐரோப்பியாவில் கிரீஸ் நாட்டில் முதன்முறையாக இடதுசாரி ஆட்சி அமைந்துள்ளது. பான் ஹிலனிக் சோசலிஸ்ட க்ட்சியின் தலைவர் பாபன்டிரு கிரீஸ் நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோசலிஸ்ட் கட்சி 43.9 சதவாக்குகள் பெற்று 300 தொகுதிகளில் 160ல் வெற்றி பெற்றுள்ளது. 

அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி கிரீசை கடுமையாய்ப் பாதித்துள்ளது. புதிய இடதுசாரிப் பிரதமர் கிரேக்க அரசைப் புனரமைப்பதில்தான் உடனடியாக இறங்கி வேண்டியுள்ளது. வரி ஏய்ப்பு, சட்டவிரோதக் குடியேற்றம், ஊழல்களை ஒழித்துக்கட்ட வேண்டியதும் பிரதான கடமையாக முன்னுக்கு வந்துள்ளது. நல்லதோர் உறுதியான, நிலையான தலைமை நாட்டுக்குக்கிடைத்திருப்பதாக பொதுமக்கள் நம்புகிறார்கள்.

நோபல் பற்றி.... 

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வை அர்த்தமுள்ளதாய் ஆக்கி தனது பெயர் நிலைக்கச் செய்ய வேண்டும். நாம் மறைந்த பிறகும் நாம் வாழ்ந்த வாழ்க்கை, சாதனைகளை பல தலைமுறைகளுக்கு நினைவில் நிற்க வேண்டும். நோபல் பரிசை அறிவித்த ஆல்பிரட் நோபலின் வாழ்க்கை அத்தகைய அர்த்தம் பொதிந்தது. 

நோபல் 1867ம் ஆண்டு டைனமைட் (வெடிமருந்து)டைக் கண்டுபிடித்தார். இதை அறிவித்த மறுநாள் ஒரு பத்திரிகை "ஆல்பிரட் நோபல் மரணமடைந்தார்" என்ற தவறான செய்தியை வேண்டுமென்றே வெளியிட்டிருந்தது. "மரண வியாபாரி மரணம்" என்று அந்தச் செய்திக்குத் தலைப்பிட்டிருந்தது. இதைப் படித்ததும் நோபல் கோபமடைந்து பத்திரிகையின் ஆசிரியரைத் தொடர்பு கொண்டார். இம்மாதிரித் தலைப்பிட்டு அவதூறு செய்ததற்காக அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் மன்னிப்புக் கேட்டுச் செய்தி வெளியிட வேண்டுமென்றார். ஆனால், ஆசிரியர் மறுத்துவிட்டார். 

பத்திரிகை ஆசிரியர், நோபலிடம் "மனிதர்களுக்கு மரணத்தையும் பேரழிவையும் தரும் ஒரு கண்டுபிடிப்புக்காக உம்மைப் பாராட்ட முடியாது. மரண வியாபாரி என்ற பட்டம் உமக்குப் பொருத்தமானதே" என்று கூறினார். இதைக் கேட்டதும் நோபல் அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு இதையே நினைத்து "நான் இறந்தபிறகு இந்த உலகம் என்னைப்பற்றி மரண வியாபாரி என்றுதான் நினைவில் கொள்ளுமா?" என்று பல நாட்கள் தூக்கமின்றித் தவிர்த்தார். பின்பு தன்னைப் பற்றிய இந்தக் கருத்தை உலகுக்கு மாற்றிக் காட்டும் முடிவுக்கு வந்தார். 

பின்பு தனது சொத்து முழுவதையும் குவித்து நோபல் தர்ம நிறுவனத்தை நிறுவினார். இப்போது நோபல் பரிசு வழங்குவதன் மூலம் உலகம் அவரது புகழ்பாடுகிறது. மரண வியாபாரி என்ற பெயரும் அடியோடு மறைந்து விட்டது. இன்று உலக அமைதிக்குப் பாடுபடுவோருக்கும், விஞ்ஞானம், கலைகள், இலக்கியம், பொருளாதாரம் ஆகியவற்றில் சாதனை நிகழ்த்திய பற்றி அறிஞர்களுக்கும் அவர் பெயரால் ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுகிறது. 

1873ல் நோபல் மறைந்தார். வெடிமருந்தைக் கண்டு பிடித்ததற்காக உலகம் தன்னை இகழ்ச்சியாகப் பேசி விடக் கூடாது என்பதே அவரது நோக்கமாக இருந்தது. அது இன்று அவருக்குப் புகழ்ச்சியாக மாறிவிட்டது. மனிதர்கள் தவறான செயல்களுக்காக ஒருபோதும் நினைக்கப்படக் கூடாது. 

ஊழல் துணை வேந்தர்கள்

கோவையில் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கோடிக் கணக்கில் சொத்துச் சேர்த்துவிட்டதாய் லஞ்ச ஒழிப்புத்துறை அம்பலப்படுத்தியது. அதன்பிறகு சத்தமே இல்லை. 

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசின் கவர்னரே நியமிக்கிறார். ஆனால் அவரிடம் மாநில அரசுதான் நியமனப்பட்டியலை தருகிறது. அதிலிருந்தே கவர்னர் நியமிப்பார். ஆனால் அண்மையில் கான்பூர் ஐஐடி தலைவர் அனந்தகிருஷ்ணன் பத்துக்கோடி, இருபது கோடி லஞ்சம் கொடுத்துத்தான் துணைவேந்தர் பதவிக்கு வருகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். அத்தனை கோடி லஞ்சம் கொடுத்து துணைவேந்தராக வருவோர் ஊழல் புரிந்து கொள்ளையடிக்காமல் என்ன செய்வார்கள்? ஏற்கெனவே கல்வி வியாபாரமாகிவிட்டது. துணைவேந்தர் பதவி ஏலம் விடப்படுகிறது. உருப்படுமா கல்வியும் கல்வி நிலையங்களும்? 

விஞ்ஞானிகளின் மூட நம்பிக்கை

புதையல் எடுப்பதற்கு நரபலி கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த மூட நம்பிக்கையில் விஞ்ஞானிகளும் விதிவிலக்கல்ல. ராக்கெட்டுகளையும், துணைகோள்களையும் விண்ணில் ஏவிட பூஜை புனஸ்காரங்கள் செய்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சக விஞ்ஞானியையே நரபலி கொடுக்க முயற்சித்துள்ளது உலகையே அதிரவைத்துவிட்டது. 

மத்தியப்பிரதேச ராணுவத் தளவாட ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த தலைமை விஞ்ஞானி காமேஷ்வர் ராவும், அவரது துணை விஞ்ஞானி பாஸ்கர் என்பவரும் தங்கள் ஜூனியர் விஞ்ஞானியை நரபலி கொடுக்க முயற்சித்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட ஜூனியர் விஞ்ஞானி குய்யோ முறையோ என்று கத்தி ஊரைக் கூட்டி உயிர்தப்பியிருக்கிறார். இந்தியாவில் விஞ்ஞானிகளுக்கே இதுதான் கதி என்றால் இங்கு மூடநம்பிக்கைகள் எப்போது ஒழியும் என்ற கேள்விதான் மிஞ்சுகிறது. 

- எஸ்.ஏ.பி.

Pin It