கலைஞர் காப்பீடு

ஏழை எளியோர் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முதலில் அமல் படுத்தப்பட்டது. ஆந்திரமநிலத்தில்தான். பிறகு தமிழ்நாட்டில் அதனை நடைமுறைக்கு கருணாநிதி (2009)ல் கொண்டு வந்தார். இத்திட்டம் நேரடியாக செயல்படுத்தப்படாமல் ஒரு தனியார் நிறுவனத்திடம் தாரை வார்க்கப்பட்டது.

குடும்பத்திற்கு ஒரு இலட்சம் என்ற முறையில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தொகையானது மொத்தமாகக் காப்பீட்டு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. இந்தத் திட்டம் மக்களுக்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதை விட தனியார் மருத்துவமனைகளை வாழவைக்க வந்த திட்டமாகவே செயல்பட்டது.

காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு மக்கள் பயன் பெற்றனர் என்றாலும், அதிலுள்ள குறைகளே அதிகம். அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவ மனைகள், அரசு மருத்துமனைகளிலும் இத்திட்டம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் செயல் பட்டு வந்தது.

காப்பீட்டு நிறுவன மருத்துவக் குழு, மனித வளக் குழு, மாவட்ட திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (DC) தொடர்பு அலுவலர் (LO) கண்காணிப்புக் குழு (VIGI LANCE) ஆகியோர் இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்டனர். இதற்கான தொடர்பு அலுவலர் ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருப்பார். இவரது பணியானது, மருத்து வமனையில் தவ்று நடக்காமல் கண்காணிக்க வேண்டியதுதான்.

காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற வரும் மக்களை மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ அலைக்கழிக்கவும், கடுமையாக நடந்து கொள்ளவும் செய்கின்ற னர். இத்திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால் அனுமதி பெற்ற பின்னரே சிகிச்சையளிக்க வேண்டும். அவசர சிகிச்சை கொடுக்க வேண்டுமானால் நிறுவனத்திடம் தெரிவித்த பின் அவர்கள் அவசர எண் தருவார்கள். இணையத்தளம் மூலமாக பின்னர் அனுமதி வாங்கிக் கொள்ளலாம்.

மருத்துவமனைகள் தரம் பிரிக்கப்பட்டு, அதற்குத் தகுந்தாற் போல் அறுவை சிகிச்சைக்கானத் தொகை வழங்கப்படும். முதல் தரம் கொண்ட மருத்துமனைக்கு ரூ.20,000/-, இரண்டாம் தர மருத்துவமனைக்கு ரூ.14,000/-, மூன்றாம் தர மருத்துவமனைக்கு ரூ.10,000/- என வழங்கப்படும்.

இக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன் அடைந்தவர்களிடம் விசாரித்தால் அவர்களிடம் மேலதிக பணம் வசூலிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.

இத்திட்டத்தில் அனைத்தும் இலவசமாக அளிக்க வேண்டும் என்பதே அறிவிப்பு. ஆனால் மருத்துவர்களோ, மக்களிடம், அறுவை சிகிச்சைக்கு மட்டுமே அரசுத் தரப்பிலிருந்து பணம் தரப்படும். மற்ற செலவுகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படி பணம் கட்டத் தவறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாமதம் செய்கிறார்கள். அதற்கு ரசீது ஏதும் கொடுப்பதில்லை.

எங்களால் துளியும் பணம் கட்ட முடியாது எனக்கூறும் ஏழை நோயாளிகளிடம் அம்மருத்துவர்கள், அரசு மருத்துவமனைக்கு வாருங்கள், அனைத்தையும் இலவசமாக செய்து தருகிறோம் என்றும் கூறுகின்றனர். காரணம், அவர்கள் அரசு மருத்து மனையில் வேலை பார்ப்பவராக இருப்பதேயாகும்.

சில அரசு மருத்துவமனையிலும் இத்திட்டம் அமலில் உள்ளது. ஆனால் மக்களோ, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதையே பெரிதும் விரும்புகின்றனர். அரசு மருத்துவமனையில் சுகாதாரமின்மை, நோய் பரவும் சூழல், காக்க வைக்கும் தன்மை போன்றவைகளே இதன் காரணம்.

அவர்கள் கேட்ட மொத்த பணத்தையும் கட்டினாலும் தரமற்ற சிகிச்சை தான் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது. உதாரணமாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய ஊசியை பல முறை பயன்படுத்துகின்றனர்.

நோயாளிகள் குணமடைவதற்குள் வெளியில் அனுப்பிவிட்டு மறுபடியும் அதே மருத்துவமனையில் அல்லது வேறு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை செய்வார்கள். காரணம் காப்பீட்டுத் தொகை குறைவாகவே வருவதாகக் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகர் செய்து, அவர்கள் இது குறித்து மருத்துவ மனை யில் விசாரித்தால் பணம் வங்கியதற்கு ஆதாரம் இருக்கிறதா? இல்லையென்றால் அதை பற்றி பேசாதீர்கள் என்று கூறுகிறார்கள்.

செயலலிதா காப்பீடு

ஆட்சி மாறியதும் திட்டங்களும், அதன் பெயர்களும் மாற்றப்படுவது வழக்கம் முந்தைய ஆட்சியின் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தற்போது, தமிழக முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என மாற்றப்பட்டுவிட்டது. Star Weath and Alled Insurance நிறுனத்திடம் இவ்வொப்பந்தம் கொடுக்கப் பட்டுள்ளது. இவ்வமைப்பு MD India, Mediassit, TTk போன்ற தனியார் நிறுவனங்களிடம் இப்பணியை பகிர்ந்து கொண்டது. இத்திட்டமானது. இப்படி பல நிறுவனங்களிடம் கொடுப்பதன் நோக்கம் தான் என்ன?

இன்றைய இத்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு, ஆண்டுக்கு ஒரு இலட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. மேலும் முந்தைய ஆட்சியில் கொடுக்கப்பட்டிருந்த காப்பீட்டு அட்டை மாற்றப்பட்டுள்ளதன் காரணம், அதில் கலைஞரின் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளதே ஆகும். இதனையெடுத்து மீண்டும் புது அட்டை வழங்குவதன் மூலம் நம்முடைய பணம் விரயமடைகிறது.

நடைமுறையில் உள்ள திட்டத்தில், அதிகளவில் அறுவை சிகிச்சை செய்யும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதி வழங்கியுள்ளனர் தனியார் மருத்துவ மனைகளில் இத்திட்டம் செயல் பட்டு வந்தாலும், அவைகளுக்கு தரம் பிரிக்கப்பட்டு, அதற்கேற்றாற்போல் சிகிச்சை தொகையும் வழங்கப்படுகிறது. இதனால் சில மருத்துவமனைகள் முன்பு போல இத்திட்டத்தில் ஆர்வம் காட்டுவதில்லை.

முந்தைய திட்டத்திற்கு அனுமதி பெற்ற பின்னர் ஒரு சில மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளித்தனர். ஆனால் தற்போதைய திட்டத்தில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதி பெறுவதற்கு முன்பே இத்திட்டத்திற்கு தகுதியுடைய வராக இருந்தால் பணம் துளியும் கட்டத் தேவையில்லை என கூறுகின்றனர். ஆனால் நடைமுறையில் பணம் வசூலிக்கப்பட்டே வருகிறது.

முந்தைய திட்டத்தைவிட குறைவான தொகை ஒதுக்கப்படுவதோடு அல்லாமல், அதிகம் நாட்கள் மக்களை தங்க அனுமதிப் பதால் தங்களுக்கு இலாபம் இல்லை என்றும் அதனால் பணம் வசூலிப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனைக்கு, காப்பீடு அல்லாத சிகிச்சை முறைகளுக்கு ஏன் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதில்லை? இந்திய மருத்துவக் கழகம் பொதுவாக ஒவ்வொரு மருத்துவத்திற்கும் ஏன் கட்டணம் நிர்ணயம் செய்யக் கூடாது? அப்படி செய்தால் மக்கள் அதிகளவில் பயனடைவதோடு மட்டுமல்லாமல், உயிர்காக்கும் உன்னத சேவையான மருத்துவத்தின் பெயரால் செய்யப்படும் பகற்கொள்ளை வெகு வாக தடுக்கப்படும்! அதைவிட அரசு செலவு செய்யும் தொகையை அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கினால் இலவச மருத்துவம் ஏழைகளுக்கு எளிதாக கிடைக்கும். ஏழை மக்களுக்கான நியாயம் இனியாவது கிடைக்குமா?

Pin It