வெறும் 14 வயதான ஒரு இளம்பெண் மீது, மத தாலிபான்கள் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலின் காரணமாக பாகிஸ்தானில் மிகப்பெறும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது, தலையிலும் கழுத்திலும் குண்டிடடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்த இளம் பெண், பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அப்பெண், உடல்நிலை சரியாக மீண்டும் பாகிஸ்தான் திரும்பினால் அவரை மீண்டும் தாக்கிக் கொல்வோம் எனவும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

தாலிபான்கள் இப்படி வெறி கொள்ளும் அளவிற்கு, அப்பெண் செய்த செயல்தான் என்ன? பெண்கள் கல்வி பெற வேண்டுமென உறுதியுடன் குரல் கொடுத்துப் போராடியது தான் அவள் செய்த தவறு. அவள் பெயர் மலாலா யுசாப்ய்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வல்லரசு நட்த்தி வரும் ஆக்கிரமிப்புக்குப் போராடி வருபவர்கள்தாம் தாலிபான்கள் ஆனால் அவர்களது மத அடிப்படைவாதக் கோட்பாடு பெண்கல்விக்கு எதிரானது. இந்தத் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானியில் அமைந்த பாகிஸ்தான் பகுதிகளிலும் செயல்படுகின்றனர்.

பாகிஸ்தானின் கைபர் பாக்குந்வா மாகாணத்தில் பிறந்த மலாலா, பெண்கள் கல்வி கற்கக் கூடாதென தாலிபன் மத அடிப்படைவாதிகள் தடைவிதித்திருந்த சுவாட் பள்ளத்தாக்கில், மின்கோரா நகரின் பள்ளி ஒன்றில் படித்து வந்தவர்.

மலாலாவின் தந்தை கவிஞரும், பல பள்ளிகளை நடத்தும் கல்வி உரிமைப் போராளியுமான சியாவுதீன் யூசாப்ய் ஆவார். அவரிடம், பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் வலைப் பதிவுகளில், தாலிபன் ஆட்சிப் பகுதியிலிருந்து கல்வி கற்கும் பெண்கள் தமது வாழ்க்கை குறித்து எழுத வேண்டுமென கேட்டபோது, தமது பள்ளியில் படித்த மாணவி ஒருவரை அவர் எழுதுமாறு கூறினார். ஆனால், அம்மாணவியின் பெற்றோர் தாலிபான்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து எழுதுவதற்குத் தடை போட்டனர்.

அப்போது, தமது மகளான மலாலாவை அவர் தாலிபன் ஆட்சிப் பகுதியில் பெண்கள் கல்வி கற்பது குறித்து எழுதுமாறு பணித்தார். தனது 11ஆம் வயதில், அவ் வலைப் பதிவுகளில் எழுதத் தொடங்கிய மலாலா, பெண்கள் கல்வி பெறுவதன் அவசியங்கள் குறித்து எழுதினாள்.

2009 சூலை மாதத்தில், சுவாட் பள்ளத்தாக்கில் தாலிபன்களுக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக, மலாலாவின் குடும்பம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அகதியாக வாழ்ந்தனர்.

எழுதுவதோடு மட்டுமின்றி, சுவாட் மாவட்டத்தின், சிறுவர் சபையின் தலைவராகவும் செயல்பட்டு, பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவரது செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், பாகிஸ்தான் அரசு தேசிய இளைஞர் அமைதி விருதை அவருக்கு வழங்கியது. தாக்குத்தலுக்குள்ளான மலாலா மரணப்படுக்கையில் கிடந்தபோது, டச்சு அரசு அனைத்துலக சிறுவர் அமைதி விருதை அவருக்கு வழங்கியது. மேற்குலக நாடுகளும், ஊடகங்களும் மலாலாவைக் கொண்டாடுவதற்கு உள்நோக்கம் இருக்கக் கூடும் தாலிபான்களைத் தனிமைப் படுத்த இதை ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தக் கூடும்.

ஆயினும் மலாலாவின் போராட்டம் பெண்ணுரிமையில் அக்கறையுள்ள் அனைவரும் ஆதரிக்க வேண்டிய ஒன்றாகும்.

மலாலா மீது தாலிபான்கள் நடத்தியத் தாக்குதல், பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிராகக் கட்டுப்பாடுகள் விதித்தும், தாக்குதல்கள் நடத்தியும் வந்த தாலிபான்களின் அடிப்படை வாதத்திற்கு எதிரான எழுச்சியை பாகிஸ்தானிய மக்களிடம் தோற்று வித்துள்ளது. “நான் மலாலா” என தாங்கிய பதாகைகளுடன் பாகிஸ்தான் பெண்கள், தம் கல்வி உரிமைக்காக வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர்.

பல்கேரியாவில் அணு உலை குறித்து அமைக்க மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு

அணு உலை அமைக்க எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக, மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதை முடிவு செய்வோம் என அறிவித்துள்ளது பல்கேரிய அரசு.

பல்கேரிய நாடு, பெலின் என்ற நகரில் இரசியா உதவியுடன் 2000 மெகாவாட் அணு உலைகள் அமைக்க முடிவு செய்து, சற்றொப்ப, 925 மில்லியன் டாலர் செலவில் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தது. ஆனால், காலம் செல்ல செல்ல அணு உலைக் கட்டுவதற்கான செலவீனங்களும் கடுமையாக உயர்ந்து வந்தன.

இரண்டு அணுஉலைகளில் ஒன்று கட்டி முடிக்கப்பட்டு, இன்னொன்று கட்டப்பட்டு வந்த நிலையில், ஜப்பானின் புகுசிமா அணுஉலை விபத்து உலகளவில் தோற்றுவித்த அச்சம் காரணமாக, பெலின் பகுதி மக்களம் அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினர்.

அணு உலைக் கட்டுவதற்கான பெரும் நிதிச்சுமையையும், மக்களின் எதிர்ப்புணர் வையும் கருத்தில் கொண்ட அந்நாட்டு அரசு, கடந்த மார்ச் 2012இல் அணுஉலைத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

கடுமையாக உயர்ந்துவரும் மின்சாரத் தேவை மற்றும் அதற்கான செலவீனங்களைக் கருத்தில் கொண்ட அரசு, மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பளித்து, இயற்கை வாயுக்களிலி ருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டமாக அதை மாற்றி அறிவித்தது.

மேலும், பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போது, மக்களிடம் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, மக்களின் அனுமதியோடு அணு உலையை நிறுவலாம் என முடிவு செய்யப்பட்டது. 106 உறுப்பினர்களும், சட்ட வல்லுநர்களும் இதற்கு ஆதரவுத் தெரிவித்த நிலையில், வெறும் 7 பேர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனையடுத்து, வரும் 2003 சனவரியில் அணு உலை வேண்டுமா வேண்டாமா? என பல்கேரியாவில் பொது கருத்து வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.

Pin It