அமெரிக்காவின டென்னீஸ் மாநிலத்தைச் சேர்ந்த 58 அகவையிலான மூதாட்டி, கெய்ல் ஓவன்ஸ். இவர் 26 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை கூலிப்படை மூலம் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.

தனது கணவர் தம்மை அடித்துத் துன்புறுத் தியதாலும், இடைவிடாது பாலியல் தொந்தரவுகளை கொடுத்ததலும் தான் அவரை கொலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, என அப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தம் கணவர் தமக்கு இழைத்த இழிசெயல்கள் தமது இரண்டு குழந்தைகளுக்கும் தெரியக் கூடாது என்று கருதிய ஓவன்ஸ், வெளியாள் ஒருவரைக் கொண்டு அவரை கொலை செய்ததாக நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இதற்காக அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

தாம் செய்த தவறை எண்ணி மனந்திருந்திய கெய்ல் ஓவன்ஸ், சிறையில் ஏனைய சிறைவாசிகளுக்கு பணிவிடைகள் செய்தார். அவரது நற்பணி களின் மூலம் மற்ற சிறைவாசிகளுக்கு எடுத்துக் காட்டாகவும் அவர் விளங்கினார். சிறைக்குள் ஓவன் சின் உதவிகளைப் பெற்றவர்கள், விடுதலையான பின் ஓவன்சின் விடுதலைக்காக குரல் கொடுக்கத் தொடங்கினர். இந்நிலையில், ஓவன்சின் பரிதாப நிலையை உணர்ந்த, டென்னீஸ் மாநிலத்தின் அப்போதைய ஆளுநர் பில் பிரீடெசன் ஓவன்சுக்கு விதிக்கப்பட்ட சாவுத் தண்டனையை 2010ஆம் ஆண்டு வாழ்நாள் தண்டனையாகக் குறைத்து ஆணையிட்டார்.

அமெரிக்காவில் வாழ்நாள் தண்டனை கைதிகள் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால் நன்னடத்தை காரணமாக 26 ஆண்டுகள் ஆன நிலையிலேயே, சிறையில் வாடிய கெய்ல் ஒவன்ஸ் இம்மாதம் விடுதலை செய்யப் பட்டார்.

சாவுத் தண்டனைக்கு எதிராகப் போராடிய அம்மூதாட்டியின் போராட்டம் இறுதியில் வென்றது!

Pin It