எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி எப்படியாவது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு கம்பளம் விரிப்பது என்பதில், இந்திய அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

மான்சான்டோ, சின்ஜென்டா போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு, பாடுபடும் பணியாளராக இந்திய அரசு ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த ஏப்ரல் 22 - 2013 அன்று, ஒரு சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் முன் வைத்துள்ளது.

“புவியைக் காப்போம், மண் வளம் போற்றுவோம்” என்ற முழக்கத்தை புவிநாளில்(Earth day) காலையில் அறிக்கையாக வெளியிட்டுவிட்டு, அதன்பிறகு, நாடாளுமன்ற மக்களவையில் மண்ணை மலடாக்கும் ஏற்பாட்டுக்கான, இந்த சட்ட முன்வடிவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி முன்வைத்தார். இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம் – 2013(Bio Technology Regulatory Autority of India Act 2013) என்ற சட்டத்தின் முன்வடிவே அது.

கடந்த 2006 தொடங்கி, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வடிவங்களில் இந்த சட்ட முன்வடிவு, முன்வைக்கப்பட்டு உழவர்களிடமும், நுகர்வோரிடமும், அறிவியலாளர்களிடமும் சில எதிர்க்கட்சிகளிடமும் எழும்பிய கடும் எதிர்ப்பின் காரணமாக அவ்வப்போது பின்வாங்கப்பட்டு வந்தது.

பி.ட்டி கத்தரி பயிருக்கு ஏற்பிசைவு வழங்கியதையொட்டி, இச்சிக்கல் பெரிதாக வெடித்தது. அதனைத் தொடர்ந்து, இந்திய அரசின் வேளாண்மைத்துறை, ”மரபீனி மாற்ற உயிரிகள் – வாய்ப்புகளும் சிக்கல்களும்” என்ற பொருள் குறித்து ஆய்வு செய்ய, ஒரு நாடாளுமன்ற நிலைக்குழுவை நிறுவியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் ஆச்சார்யா தலைமையில், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டு அமைக்கப்பட்ட இந்த நிலைக்குழு, கடந்த 2012 ஆகத்து 9 அன்று அளித்த ஆய்வறிக்கை மிகச்சிறப்பு வாய்ந்த அறிக்கையாகும். குறிப்பாக, வாசுதேவ் ஆச்சார்யாவின் கடும் உழைப்பும் பங்களிப்பும் இதில் முக்கியமானது.

ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கள ஆய்வு நடத்தி, உலகின் பல நாடுகளிலும் மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்து நடந்துள்ள ஆய்வுகளை பரிசீலித்து 506 பக்க விரிவான அறிக்கையை இந்தக்குழு அணியப்படுத்தி அளித்தது.

”இப்போதையத் தேவை உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையமல்ல. பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் ஆணையம் தான். விரிவான ஆய்வு ஏதுமின்றி பிறப்பிக்கப்படும் உயிரித் தொழில்நுட்ப ஆணையச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்” என்று இந்நிலைக்குழு அரசிற்கு தெளிவான பரிந்துரை அளித்தது.

ஒருமித்த பரிந்துரையை அளித்த இக்குழுவில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர்.

ஆனால், இப்பரிந்துரையை ஆய்வு செய்யாமலேயே குப்பைக் கூடையில் வீசும் வகையில், இப்போது உயிரித் தொழில்நுட்ப ஆணையச் சட்டத்தை இந்திய அரசு முன்வைத்துள்ளது.

ஏற்கெனவே, பல கட்டங்களில் முன் வைக்கப்பட்ட உயிரித் தொழில்நுட்ப ஆணைய சட்ட வரைவுகளில் மேம்போக்கான சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளனவே அன்றி, மற்றபடி சாரத்தில், மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட பழைய சட்டமே இப்போது முன் வைக்கப்பட்டுள்ளது.

பி.ட்டி. பருத்தி பயிரிட்டப் பகுதிகளில் பெருகிவிட்ட உழவர்களின் தற்கொலைச் சாவுகளும், பி.ட்டி. கத்தரி குறித்து எழுந்த கடுமையான எதிர்ப்பும் சேர்ந்து பல மாநில அரசுகளை நிர்பந்தித்தது. அதன் காரணமாக, கேரளம், ஜார்கண்ட், ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் மரபீனி மாற்றுப் பயிர்கள் விற்பனை செய்வதோ, மரபீனி மாற்றுப் பயிர்களுக்கான கள ஆய்வுகள் மேற்கொள்வதோ கூடாது என தடை விதித்தன. இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமும் கூட, பி.ட்டி. கத்தரிக்கு தற்காலிகத் தடை விதித்தது.

இப்போது முன் வைக்கப்பட்டுள்ள, உயிரித் தொழில்நுட்ப சட்ட வரைவு சட்டமாக்கப்பட்டால், மேற்கண்டத் தடைகள் தானாகவே நீங்கிவிடும். ‘வேளாண்மை’ என்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது. இருந்த போதும், வேளாண்மை தொடர்பான மாநில அதிகாரத்தில், ஏற்கெனவே இந்திய அரசு குறுக்கிட்டு வருகிறது. இப்போது பிறப்பிக்கப்படும் உயிரித் தொழில்நுட்ப சட்டம், மாநில அதிகாரத்தை இன்னும் வெட்டிக் குறுக்கி சிதைக்கிறது.

இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டத்தின் பிரிவு 4(1), அனைத்து அதிகாரங்களையும் குவித்துக் கொண்ட உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் ஒன்றை நிறுவ வகை செய்கிறது. மாநில அரசுகளையும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட இந்திய அரசின் பிறத்துறைகளையும் மேலாண்மை செய்யும் சர்வாதிகார நிறுவனமாக, இந்த ஒழுங்காற்று ஆணையம் இருக்கப் போகிறது என்பதை இச்சட்ட முன்வடிவைப் படிக்கிற யாரும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஆணையத் தலைவர், இரண்டு நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் ஆகிய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நிறுவனமாக இந்த ஒழுங்காற்று ஆணையம் இருக்கும் என இவ்வரைவின் விதி 5 குறிப்பிடுகிறது.

ஒவ்வொரு மாநில அரசும் இந்த ஒழுங்காற்று ஆணையத்துக்குப் பணிந்து சேவை செய்ய, “மாநில உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று மதியுரைக்குழு” ஒன்றை நிறுவ வேண்டும் என்பதை இச்சட்டத்தின் விதி 35(1) கூறுகிறது. இந்த மதியுரைக்குழு ஒழுங்காற்று ஆணையத்துக்கு இணைப்பு முகமையாக(Nodal agency) அம்மாநிலத்தில் செயல்பட வேண்டுமென இவ்விதி பணிக்கிறது.

அதாவது, மாநில அரசுகள் பயிர்கள் மற்றும் விதைகள் தொடர்பான வேளாண்மைத் தறை அதிகாரத்தை இழப்பது மட்டுமின்றி இந்திய அரசின் இந்த ஒழுங்காற்று ஆணையத்திற்கு சேவை செய்யும் அமைப்பாக, தாழ்ந்து போக வேண்டும் என்பதே இச்சட்டம் விதிக்கும் நிலை.

இதுவரை, மரபீனி மாற்ற உயிரிகள் தொடர்பான வெளிக்கள ஆய்வுகளுக்கும், வணிக வகைப் பயன்பாட்டுக்கும் அனுமதியளிக்கும் அதிகாரம் “மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழு”(Genetic Engineering Aறிறிroval Committee - GEAC) என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த ஏற்பிசைவுக்குழு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து, மெலிதான ஒருசில கட்டுத் திட்டங்களையாவது விதித்து வந்தது. அவற்றில் ஒன்றாகத்தான், பி.ட்டி. கத்தரிக்கு, தற்காலிகத் தடையும் வழங்கியது.

இந்தச் சிறு சிராய்ப்பு கூட, மான்சாண்டாவுக்கோ, சின்ஜென்ட்டாவுக்கோ வந்துவிடக் கூடாது என்பதில் தில்லி அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. எனவே, உருவாகப்போகும் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் இந்திய அரசின் அறிவியல் – தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் உள்பிரிவாக உள்ள உயிரித் தொழில்நுட்பத் துறைக்கு உட்பட்டதாக அமைக்கப்படுகிறது. உயிரித் தொழில்நுட்பத் துறையே, வேளாண்மையிலும் மருந்துத்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் நவீன உயிரித் தொழில்நுட்ப உத்தியான மரபீனி மாற்ற உயிர்களை இந்தியாவில் பரப்புவதே, தமது துறையின் முதன்மையான நோக்கம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இதன் கீழ், மரபீனித் தொழில்நுட்ப நிறுவனங்களை கட்டுப்படுத்தும் ஒழுங்காற்று ஆணையம் நிறுவப்படுகிறது என்றால், அதுவே சட்டநெறிக்கு எதிரானது. இந்த ஒழுங்காற்று ஆணையம், மரபீனி மாற்ற உயிர்கள் தொடர்பான எதையும் ஒழுங்கு படுத்தாது என்பதையே இது காட்டுகிறது.

சுற்றுச்சூழல் துறை, வேளாண்மைத் துறை, மருந்துத் துறை போன்ற பல துறைகளிடம் இன்றைய நிலையில் மரபீனித் தொழில்நுட்பத்தில் கோலோச்சும் நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டிய நிலையுள்ளது. இதனால், மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் தங்கள் மரபீனி மாற்ற விதைகளை சந்தைக்குக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. மான்சாண்டோ நிறுவனத்தின் கொள்ளைக்கு, எந்த சிறுத் தடங்கலும் வரக்கூடாது என்பதில் மன்மோகன் சிங் அரசு கவனமாக இருக்கிறது. எனவே, வேறு எந்தத் துறையின் அனுமதியும் இன்றி இந்த ஒழுங்காற்று ஆணையத்தின் அனுமதி பெற்றாலே போதும், மரபீனி மாற்ற விதைகளை சந்தைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று இச்சட்டவிதி 18 வரையறுக்கிறது. இதற்கிசைய நடப்பிலுள்ள, மருந்து மற்றும் புனைவுப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006 போன்றவற்றின் விதிகள் முற்றிலும் மாற்றியமைக்கப்படுகின்றன.

மரபீனி மாற்று உயிரிகளைப் பொறுத்த அளவில், உணவு, மருந்து, வேளாண்மை போன்ற அனைத்துத் துறைகளையும் விட இந்த ஒழுங்காற்று ஆணையமே மேலாதிகாரம் கொண்டதென்று விதி 81 வரையறுக்கிறது.

அதாவது, மான்சாண்டோ, சின்ஜென்டா போன்ற நிறுவனங்கள் ஒற்றைச் சாளர இசைவு பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த ஒழுங்காற்று ஆணையத்தின், உத்தரவின் மீது மேல் முறையீடு செய்வதற்கு, உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்(Bio Technology Regulatory aறிறிellate Tribunal) ஒன்றை நிறுவ, இச்சட்டத்தின் அத்தியாயம் 11 வகை செய்கிறது. இம்மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம், பெரிதும் கேள்விமுறையற்ற நிறுவனமாக அமைக்கப்படுகிறது. இத்தீர்ப்பாயத்தின் ஆணையை எதிர்த்து, எந்த உயர்நீதிமன்றத்திற்கும் செல்ல முடியாது. உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே செல்ல முடியும். அதுவும், தீர்ப்பு வந்த மூன்று மாதங்களுக்குள் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். உச்சநீதிமன்றமும், இத்தீர்ப்பாயத்தின் ஆணைகள் அனைத்தையும் மேலாய்வு செய்ய முடியாது. மிகவும் வரம்புக்குட்பட்ட வகையில், சட்டநெறிகள் பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பது பற்றி மட்டுமே உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும். பிரச்சினையின் தன்மைக்குள்(Merit) தலையிட முடியாது.

இந்நாட்டின் சட்டதிட்டங்கள் எதிலும் பெருமளவு சிக்கிவிடாத திறந்த வெளிச் சந்தை, விதை நிறுவனங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது.

இவ்வளவு கொடுமையான சட்டத்தை பலமுறை பின்வாங்கிய பிறகும், இந்திய அரசு மீண்டும் கொண்டு வர முயல்வதற்கான காரணம், அமெரிக்காவுடன் மன்மோகன் சிங் அரசு செய்து கொண்ட ஒரு ஒப்பந்தம் தான். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2005, சூலை 18ஆம் நாள் அன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ்-உடன் செய்து கொண்ட பல ஒப்பந்தங்களில், இந்திய – அமெரிக்க அறிவுசார் முன்முயற்சி (Indo-US Knowledge Initiative) என்ற ஒப்பந்தம் முக்கியமான ஒன்று.

இதன்படி, பல துறைகளில், வட அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமை இந்தியாவில் நிலைநாட்டப்படும் என உறுதியளிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் 1. வேளாண் ஆய்வு மற்றும் கல்வி, 2. வேளாண் பொருள் பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல், 3. புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், 4. நீர் மேலாண்மை ஆகிய முக்கியக் கூறுகளைக் கொண்டது.

இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்த, இந்தியாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் பேராளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களைக் கொண்ட அறிவு வாரியம்(Knowledge Board) நிறுவப்பட்டுள்ளது. மான்சாண்டோ, வால்மார்ட் பிரதிநிதிகள் இதில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிறுவனங்களுக்கு சேவை செய்ய துறை தோறும், புதிய புதிய சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. ஒப்பந்தத்தின், மூன்றாவது கூறாகக் கூறப்பட்டுள்ள புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில், மரபீனி மாற்றத் தொழில்நுட்பமும் ஒன்று. அதற்கான சட்டம் தான், உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம்.

இதற்கு முன்னர், 2009 வரை முன் வைக்கப்பட்ட சட்ட முன் வடிவுகளை விதைச்சட்டம் போன்ற பிற சட்டங்களையும், விரிவாக ஆய்வு செய்து தான், வாசுதேவ் ஆச்சார்யா குழு அரசுக்கு அறிக்கையளித்தது.

ஏற்கெனவே செயல்பட்டு வரும், மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழு(GEAC) முறையான ஆய்வின்றி, அவசர அவசரமாக மரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி வழங்கியதை, வாசுதேவ் ஆச்சார்யா குழு மட்டுமின்றி வேறு சில அமைப்புகளும் அம்பலப்படுத்துகின்றன.

இவற்றுள், புஷ்பா பர்காவா என்ற புகழ்பெற்ற மூலக்கூறு உயிரியலாளர் உச்சநீதிமன்றத்தில் அளித்த சாட்சியம் முக்கியமானது.

ஆந்திராவில், பி.ட்டி. பருத்தி விதைகளைத் தின்ற ஆடுகள் தொகை தொகையாக மடிந்து வீழ்ந்தன. இது பி.ட்டி. நுட்பம் குறித்தே கேள்விகளை முன் கொண்டு வந்தது. இதன் மீது பல பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. அவ்வாறான வழக்கு ஒன்றில், பர்காவா உச்சநீதிமன்றத்தில் அளித்த சாட்சியம் முக்கியமான ஒன்று. அவர் கூறுவதாவது:

“ஆடுகள் சாவுக்கு பி.ட்டி. பருத்தி இலைகள் காரணமல்ல; பருத்திக்கு அடிக்கப்பட்ட, பூச்சுக் கொல்லிகளில் இருந்த சயனைடு மற்றும் நைட்ரைட் நஞ்சுகளேக் காரணம் என்று ஏற்பிசைவுக்குழு வாதம் செய்கிறது. தன்னுடைய இந்த முடிவுக்கு ஆந்திர அரசின் கால்நடைத்துறை ஆய்வறிக்கை, உத்திரப்பிரதேசம் இசாத் நகரில் உள்ள இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிலைய ஆய்வறிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் காட்டுகிறது. ஆனால், இந்த இரண்டு ஆய்வறிக்கைகளுமே அவ்வாறு கூறவில்லை. ஏற்பிசைவுக்குழு பொய் சொல்கிறது. ஹைட்ரஜன் சைனைடு எச்சங்களோ, கரிம பாஸ்பேட்டுகளோ நைட்ரைட்டுகளோ, க்ளைமோ சைடுகளோ பி.ட்டி. இலைகளில் இல்லை என்று தான் இந்த ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல, இறந்த ஆடுகள் மீது நடத்தப்பட்ட உடற்கூறாய்வில் இந்த நச்சுகள் புலப்படவில்லை. எங்களுடைய ஆய்வகம், வேதியியல் ஆய்வகம் மட்டுமே ஆகும். அதனால் பி.ட்டி. நச்சு குறித்த உயிரி வேதியியல் ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்பட முடியவில்லை என்று இந்த அறிக்கைகள் கூறின. ஆனால், இதை அப்படியே நேர்மாறாக மாற்றி, மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழு, பொய்யான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது” என்று பர்காவா சாட்சியம் கூறினார்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏற்பிசைவுக்குழுவே, மான்சாண்டோவுக்கு சேவை செய்வதற்கு, இவ்வளவு பித்தலாட்டம் செய்கிறதென்றால், நேரடியாக உயிரித் தொழில்நுட்பத்துறையின் அதிகாரத்தின் கீழ் வைக்கப்படும் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம், எந்தளவு நடுநிலையோடு செயல்படும் என்பது மிகப்பெரியக் கேள்விக்குறி.

இச்சிக்கல் குறித்து, வாசுதேவ் ஆச்சார்யா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்தது. பி.ட்டி. கத்தரிக்கு, ஏற்பிசைவு வழங்கிய போது, மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழுவுக்கு இணைத் தலைவராக(Co-chariman) இருந்த முனைவர் அர்ச்சுளா ரெட்டி அவர்களிடம் இந்த நிலைக்குழு சாட்சியம் பெற்றது.

தனது சாட்சியத்தில் அர்ச்சுளா ரெட்டி, மரபீனி மாற்று விதைக் கம்பெனிகள் ஆட்சியாளர்கள் மூலமாக, கொடுத்த கடுமையான அழுத்தம் காரணமாகவே, தாங்கள் உரிய ஆய்வின்றி, அவசர அவசரமாக பி.ட்டி. கத்தரிக்கு இசைவு வழங்கினோம் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

ஏற்பிசைவுக்குழு பி.ட்டி. கத்தரிக்கு அனுமதி வழங்கியதில், பித்தலாட்டம் செய்வதற்கென்றே திட்டமிட்டு கே.கே. திரிபாதி, மதுரா ராய், வசந்தா முத்துசாமி, பி.சசிகரன், பி.ஆனந்தகுமார், திலீப்குமார் ஆகிய மான்சாண்டோ ஆட்களைக் கொண்ட வல்லுநர் குழுவை நியமித்துக் கொண்டது என்பதை தில்லியிலிருந்து வெளிவரும் டவுன்டுஎர்த்(DownToEarth) ஏடு ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியது. (காண்க: Down To Earth, 2009 December 16-31).

வாசுதேவ் ஆச்சார்யா குழுவும் நாட்டின் உயராய்வு மையங்கள், மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கையாள் அறிவாளர்களால் நிரப்பப்பட்டுள்ளதை சான்றுகளோடு காட்டி இடித்துரைத்தது. அது மட்டுமின்றி, இந்த நாடாளுமன்ற நிலைக்குழு, ஐ.நா. மேற்கொண்ட “பன்னாட்டு வேளாண் அறிவியல் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சி மீளாய்வு”(International Assessment of Agricultural knowledge, Science and Technology develoறிment) அறிக்கையை மிக விரிவாக மேற்கோள் காட்டி விவாதிக்கிறது.

இந்த மீளாய்வு அறிக்கை, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பல்துறை அறிஞர்களைக் கொண்டது. அமெரிக்கா, கனடா, ஐரோப்பியா, பிரேசில், ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் கள ஆய்வுகளையும், பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு அணியப்படுத்தப்பட்ட ஆய்வறிக்கை அது. மரபீனி மாற்ற உயிரிகள் ஆபத்தானவை என்றும், இந்த ஆபத்தின் அளவு அறுதியிட்டு அளக்கப்படவில்லை என்றும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இவற்றையெல்லாம் காரணமாக எடுத்துக்கூறி, பொதுவாக மரபீனி மாற்ற உயிரிகள் பொதுவாக வேண்டாம், குறிப்பாக வேளாண்மைத் துறையில் வேண்டவே வேண்டாம் என நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்திக் கூறுகிறது.

நாடாளுமன்றமே நியமித்த அனைத்துக்கட்சி நிலைக்குழுவின் அறிக்கையில் கூறியுள்ளவற்றை, கொஞ்சமும் எதிர் கொள்ளாமலேயே போகிற போக்கில் புறந்தள்ளிவிட்டு மான்சாண்டோ - சின்ஜென்டாவுக்கு ஆதரவான உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டத்தை தடித்தனமாக இந்திய அரசு முன் வைக்கிறது.

மரபீனி மாற்று விதைகள், இவ்வளவு கேடானவை என்று தெரிந்த பிறகும் அனுமதிக்கப்படுவது, உழவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும், மக்களின் உடல் நலத்தைக் கெடுக்கும். மண்ணையும் நீரையும் நஞ்சாக்கும். உணவு இறையாண்மையை சிதைக்கும். மான்சாண்டோவின் காலடியில் மண்ணின் மக்களை வைக்கும்.

எனவே, இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம் – 2013ஐ உழவர்களும், அறிவியலாளர்களும் அக்கறையுள்ள எதிர்க்கட்சியினரும் ஒன்றுபட்டு எதிர்த்து, வரைவு நிலையிலேயே இதை மண்ணில் புதைத்துவிட வேண்டும்.

Pin It