உண்மை ஒன்று சொல்வேன்-5

தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் சமோசா கடைகளையும், பானிப் பூரி கடைளையும் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. டெல்லி, மும்பை தெருக்களில் இந்தளவுக்கு அதிரசம், அரிசி முறுக்கு, இட்லி கடைகள் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. தமிழன் தன் மரபு உணவுப் பழக்கங்களை மறந்து போனது வேதனையானது. அப்போதெல்லாம் உள்ளூர் திருவிழா, பொங்கல், தீபாவளி (!) பண்டிகை நாள்கள் நெருங்க, நெருங்க உற்சாகம் பற்றிக் கொள்ளும். “என்னென்ன பலகாரம் செய்யலாம்” என வீட்டுப் பெண்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவார்கள்.

கால் நீட்டி அமர்ந்து வியர்க்க விறுவிறுக்க முறுக்கு, அதிரசம், எள் உருண்டை, ரவா லட்டு என பலகாரங்கள் தயாராகும். ஊர்க்கதை பேசிக் கொண்டே அடுப்பு முன் அமர்ந்திருக்கும் உறவுப் பெண்களின் முகங்கள், அவ்வடுப்புப் புகை ஊடாக இன்னும் என் நினைவில் நிழலாடுகின்றன. எள் உருண்டையின் வாசனை தெரு முனை வரை மூக்கை துளைக்கும். தகரப் பெட்டிகளில் காகிதங்களை இட்டு அதில் முறுக்கை நிரப்பி வைத்துக் கொள்வோம். தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, திடீர் ஞாபகமாக வீட்டுக்குள் நுழைந்து, முறுக்கை எடுத்து வாய் நிறைய அள்ளிப் போட்டுக் கொண்டே விளையாட்டைத் தொடர்வோம்.

பண்டிகை முடிந்து பள்ளிக்குச் செல்லும் போது முடிந்தவரை தின்பண்டங்களை அள்ளிப் போட்டுக் கொள்வோம். பள்ளி செல்லும் வழியெங்கும் வாயில் பலகாரங்களை குதப்பிக் கொண்டே செல்வோம். வகுப்பறையில் பாட வேளையில் எங்கோ யாரோ மாணவன் கமுக்கமாக வாய் வைத்துக் கடித்த முறுக்கின் சத்தம் கேட்டுவிட.. அப்புறம் என்ன? ஆசிரியரின் பிரம்புதான் பேசும்!!

அப்போதெல்லாம் நொறுக்குத் தீனி, பலகாரங்கள் என்பதெல்லாம், வீட்டுத் தயாரிப்பதுதான். பொங்கலுக்குத் தயாரிப்பது எப்படியும் மூன்று நான்கு மாதங்களுக்குத் தாங்கும். வீட்டுக்கு வரும் உறவினர்கள் கடைகளில் வாங்கி வரும் பலகாரங்கள் எண்ணெய் ஒட்டிய காக்கி நிற பொட்டலங்களில் இருக்கும். இவற்றை ஏக்கத்துடன் பார்த்தபடியே உறவினர்களை வரவேற்பது இன்னும் என் நினைவிலிருக்கிறது. வீட்டிலிருக்கும் கடைக்குட்டியைத் தேடிப்பிடித்து அந்தப் பலகாரப் பொட்டலங்களை உறவினர்கள் தருவது வழக்கம். அந்த வகையில் நான் ரொம்பவும் கொடுத்த வைத்தவன்!!

இன்றைய சூழலைப் பார்க்கிறேன். பண்டிகை நாள்களில் தொலைக் காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டே, என் அம்மா குலாப்ஜா மூன் செய்கிறாள். முறுக்கு, அதிரசம், எள் உருண்டை எல்லாம் அனேகமாக அம்மாவே மறந்திருப்பாள் என்று நினைக்கிறேன்.

பள்ளி செல்லும் குழந்தைகளின் நொறுக்குத் தீ பெட்டிகளில் (ஸ்நேக்ஸ் பாக்ஸ்) ‘குர்குரே’வை நிரப்பித் தருபவர்களே நம்மில் அதிகம்! என் வீட்டு உரிமையாளரின் பேத்தி, தினமும் இரண்டு பொட்டலங்கள் ‘லேஸ்’ இல்லாமல் பள்ளிக்குச் செல்வதில்லை. அவள் வயது மூன்று!! (குர்குரேவும், லேஸ்-ம் பன்னாட்டு நிறுவனங்களின் நொறுக்குத் தீனிகள். அவற்றை அதிகமாகத் தின்பதால் உடன் பருமன், வயிற்றுக் கோளாறுகள், நீரிழிவு நோய் வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்)

எதிர் வீட்டிலிருக்கும் ஆட்டோ ஓட்டுநர் தினமும் காலையில் சவாரிக்குச் செல்லும் போது தன் எட்டு மற்றும் ஆறு வயது மகள், மகனை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, ஒரு சுற்று சுற்றிக் கொண்டு வந்து விடுவார். ஏறும் போது வெறுங்கையோடு சென்ற அந்தக் குழந்தைகளின் கைகளில் ஆட்டோவில் இருந்து இறங்கும் போது குர்குரே பொட்டலங்கள் இருப்பதை இன்று காலை கூட என்னால் பார்க்க முடிந்தது!

இந்தக் கால குழந்தைகளுக்கு அரிசி முறுக்கும், எள் உருண்டையும், அதிரசமும் என்னவென்றே தெரியாதோ? மேற்படி இந்தப் பலகாரங்கள் எல்லாம் இப்போது பணக்காரர்களும், பெரும்பணக்காரர்களும் செல்லும் பன்னாட்டு பல்பொருள் அங்காடிகளில் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ்) நூறு கிராம் பொட்டலங்களாக அடைத்து விற்பனை செய்வதை அண்மையில் பார்த்தேன். அந்தப் பொட்டலங்களைப் பார்க்கும் போது, 25 கிலோ கொள்ளவு கொண்ட தகரப் பெட்டிகளில் நிரம்பி வழியும் என் அம்மா சுட்ட அரிசி முறுக்கின் ஞாபகம் எனக்கு வந்து போனது.

அப்போதெல்லாம் சிறுமிகள் பருவமடைந்தால், அவர்களுக்குத் தனி கவனிப்புதான்! அவர்களுக்கென்றே விதவிதமான பலகாரங்கள் தயாரிக்கப்படும். பையன்கள் பார்த்து பொறாமையில் பொங்குவார்கள். பொட்டுளுந்து சோறு, உளுந்துக்களி, நல்லெண்ணெய் சேர்க்கப்பட்ட நாட்டுக்கோழி மூட்டை, சத்துமாவு உருண்டை என பருவடைந்த பெண்களுக்கு தின்னக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். உளுந்தும், நாட்டுக் கோழி மூட்டையும் (என்ன விலை கொடுத்தாலும் நகரங்களில் நாட்டுக் கோழி முட்டை கிடைப்பது அரிதாகிவிட்டது) பெண்களின் எலும்பு வளர்ச்சிக்கு ஏற்றது. பிற்காலத்தில் பெண்களின் தாம்பத்தியத்திய வாழ்வுக்கும், மகப்பேறுவிற்கும் இந்தப் பலகாரங்கள் மூலம் தேவையான சக்தி கிடைக்கின்றன அதனால்தான் கடந்த தலைமுறை வரை பெண்கள் மாதவிடாய் மற்றும் மகப்பேறு சிக்கல்கள் இன்றி வாழ்ந்தார்கள். இன்றைக்கு பருவமடைந்த பெண்களுக்கு சடங்கு செய்வது என்பது ஏறத்தாழ வழக்கொழிந்துவிட்டது. அதனால் தான் இன்றைக்கு மகப்பேறு மருத்துவரின் சத்து மாத்திரைகளை விழுங்காத மகளீரைக் காண்பது அரிது.

கம்பங்குழ் குடிப்பது அவமானமாகவும், பெப்சியும், மிரண்டாவும் பருகுவது கௌரவத்தின் சின்னமாகவும் மாறிப் போனது நவீன வாழ்க்கையின் சாபக்கேடு அன்றி வேறு என்ன? நம்முடைய மரபு அறிவை குழி தோண்டி புதைத்து விட்டு, எதைத் தின்னால் பித்தம் தெளியாது என்பதுதானே உண்மை!

(இன்னும் சொல்வேன்)

Pin It