திராவிடத்தின் சமூகவியல் மற்றும் அரசியல் பிறப்பின் அகவை நூறாண்டு களுக்குட்பட்டதே என்பதை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டுத் திராவிடர்கள் அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். திராவிட மாநிலங்களான ஆந்திர, கர்நாடக, கேரளம் ஆகியவற்றில் அதைக் கொண்டாட நாதி கிடையாது. தமிழகத் திராவிடர்கள் நூற்றாண்டு விழாக் கொண்டாடிக் கொள்வதில் நமக்கு எதிர்ப்பேதுமில்லை. ஆனால் அவர்கள் தமிழர்களை, தமிழ்த் தேசியத்தை வம்புக்கிழுப்பதுதான் சிக்கலை உண்டாக்குகிறது.

பெரியார் திராவிடர் கழகத்தின் புரட்சிப் பெரியார் முழக்கம் (14.04.2012) ஏடு “பா.ஜ.க.வின் தமிழ்த் தேசியம்” என்ற தலைப்பில் ஒரு துணுக்குத் திறனாய்வு வெளியிட்டுள்ளது. அதைப் பெரியார் தி.க. பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் எழுதியுள்ளார்.

“சாதி எதிர்ப்பு – பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்புகளைப் புறந்தள்ளி விட்டு மொழி அடிப்படையில் முன்வைக்கப்படும் தமிழ்த் தேசிய முழக்கத்தில் பா.ஜ.க.வினரும் பங்கேற்கத் தயாராகவே இருக்கிறார்கள்” என்று அக்கட்டுரை கூறுகிறது.

சாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு ஆகியவற்றைப் புறக்கணித்ததுதான் தமிழ்த் தேசியம் என்று பெரியார் தி.க தோழர்களுக்கு யார் சொன்னார்கள்? தூற்றுவதற்குத் தோதாகத் தாங்களே ஒரு வாதத்தை சோடித்துக் கொள்வதா?

ஐயாயிரம் ஆண்டுகளாக ஆரியத்தையும், பார்ப்பனியத்தையும் எதிர்த்த வரலாறு தமிழ் மொழியில், தமிழர் வரலாற்றுச் சின்னங்களில் பதிவாகியுள்ளது. இப்பொழுதும் தமிழ்த் தேசியம் உறுதியாகவும், “நான் நாட்டால் இந்தியன்” என்று குழப்பாமலும், ஆரியத்தையும், பார்ப்பனியத்தையும், இந்தியத் தேசியத்தையும், இந்துத்துவாவையும் எதிர்த்து வருகிறது.

நூற்றாண்டு விழாக் கொண்டாடும் திராவிடக் கட்சிகள்தாம் பார்ப்பனிய பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து, ஆரியத்தின் அரியணையை அனுமன் போல் தாங்கின.

பா.ஜ.க.வினரும் தமிழ்த் தேசியத்தில் பங்கேற்கத் தயாராகவே இருக்கிறார்கள் என்று எதை வைத்துப் பெரியார் தி.க. கூறுகிறது? இதோ அவர்கள் கூற்று:

“மதுரை மாவட்டம பா.ஜ.க. தலைவர் ராஜரத்தினம் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கன்னியாகுமரியிலிருந்து தமிழன்னை சிலை மதுரைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படவிருக்கிறது. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பா.ஜ.க.வால் தான் முடியும் என்பதோடு, தமிழ் உணர்வு கலந்த தேசியமே தமிழக பா.ஜ.க.வின் பார்வை என்பதைத் தெளிவு படுத்தவே இந்த ஏற்பாடு என்று கூறியுள்ளார்” (குமுதம் ரிப்போர்ட்டர், 08.04.2012).

குமுதம் ரிப்போர்ட்டர் ஏட்டில் வந்த இச்செய்தியை வைத்துத்தான் பா.ஜ.க.வின் தமிழ்த் தேசியம் என்று தலைப்பிட்டு விட்டது பெரியார் முழக்கம்.

மேற்படி செவ்வியில் இராசரத்தினம் குறிப்பிடுவது தமிழ்த் தேசியத்தை அன்று. தமிழ் உணர்வு கலந்த தேசியம்; இதன் பொருள் தமிழ் உணர்வுகலந்த இந்தியத் தேசியம் என்பதாகும். பா.ஜ.க.வினர், காங்கிரசுக் கட்சியினர், கம்யூனிஸ்ட்டுக் கட்சியினர் ஆகியோர் “தேசியம்” என்று பேசினால் அது இந்தியத் தேசியத்தை மட்டுமே குறிக்கும். அவர்கள் ஒரு போதும் தமிழ்த் தேசியம் என்ற சொற்கோவையை ஆதரவு நிலையில் இருந்து பேசியதில்லை. அவர்கள் பார்வையில் தமிழகம் ஒரு பிராந்தியமே!

தமிழ் உணர்வு கலந்த தேசியம் என்று இந்தியத் தேசியத்தைக் கூறியதை வைத்து எவ்வளவு வேகமாகத் திரிபு வேலை செய்கிறது புரட்சிப் பெரியார் முழக்கம்!

“இத்தகைய ஊடுருவல் ஆபத்துகள் நேர்ந்துவிடக் கூடாதே என்ற காரணத்தால் தான் பெரியார் “திராவிடர்” என்ற பெயரைத் தேர்வு செய்து தமிழின விடுதலையை முன்னெடுத்தார். தமிழ்த் தாய், இந்துத்துவ பார்ப்பன சக்திகளுக்கும் தமிழ்த் தேசிய சக்திகளுக்கும் ‘தாயாகி’ விட்ட போது, அவரது புதல்வர்கள் சகோதர பாசத்துடன் குடும்பம் நடத்திவிடக் கூடாது என்பதே நமது கவலை”, என்கிறது பெரியார் முழக்கம்.

பெரியார் தி.க. ஏட்டுக்குத் தமிழ் மொழியைப் பற்றி எத்தனை நையாண்டி! எவ்வளவு நக்கல்! ஆம், தமிழ்த் தேசியர்களாகிய நாங்கள் தமிழ்த் தாயின் புதல்வர்கள்தாம்! நீங்கள் யார்? உங்கள் தாய் யார்?

எங்கள் முகவரி தமிழ், தமிழர்! உங்கள் முகவரி என்ன?

தமிழ், தமிழர் என்றால் பார்ப்பனியமும், பா.ஜ.க.வும் ஊடுருவிவிடுமாம்! திராவிடர் என்றால் அவற்றால் ஊடுருவ முடியாதாம். அதனால் “பெரியார் திராவிடர் என்ற பெயரைத் தேர்வு செய்தாராம். இனப் பெயர், பிறப்பின் வழி வருவதா? ஒருவரால் தேர்வு செய்து கொள்ளப் படுவதா?

உலக மானிட இயல் அறிஞர்கள் (Anthroறிologists), மரபியல் ஆய்வாளர்கள்(Race Researchers), தேசிய இனச் சிந்தனையாளர்கள்(Exறிerts on National Question) யாருக்கும் தெரியாத ஒரு வரலாற்றுக் கண்டு பிடிப்பைப் பெரியார் தி.க. செய்திருக்கிறது. ஒருவர் தனது இனம் எது என்பதை அவர் விருப்பதிற்கேற்ப தேர்வு செய்து கொள்ளும் உரிமையே அது. எவ்வளவு பெரிய ஆராய்ச்சி! “இனம்” என்று வந்து விட்டால் அது பிறப்பின் அடிப்படையில் மட்டும் தான் தீர்மானிக்கப்பட வேண்டும். இதுவே சமூக அறிவியல்!

ஓர் உண்மை, திராவிடர்கள் வாயாலேயே வெளிவந்து விட்டது. திராவிடர் என்பதற்கும் இனப் பிறப்பிற்கும் எந்தத் தொடர்புமில்லை. பெரியார் தமது சமூகவியல், அரசியல் வசதிக்கேற்ப அச் சொல்லைத் தேர்வு செய்து கொண்டார். அவ்வளவே! அதாவது, காய்கறிச் சந்தையில் விரும்பிய காய்கறியைத் தேர்வு செய்து வாங்குவதைப் போல, மொழிச் சந்தையில் ஆரியத்தின் சமற்கிருதக் கடையில் மட்டுமே விற்பனைக்கிருந்த “திராவிட” என்ற சொல்லைத் தேர்வு செய்து வாங்கியிருக்கிறார் பெரியார்!

ஒர் இனம் என்பது, பிறப்பால் வருவதல்ல, தேர்வு செய்து கொள்வதால் வருவது என்ற பெரியாரின் கண்டுபிடிப்பைப் பின்பற்றித் தான் கருணாநிதி தமது இனத்தை “நாட்டால் இந்தியன்” என்று தேர்வு செய்து கொண்டார் போலும்! பலே! பலே!

திராவிடர் என்று சொன்னால் அதில் பார்ப்பனர்கள் வரமாட்டார்களாம்! கயிறு திரிக்கிறார்கள் திராவிடர்கள்! ஆரியக் கோத்திரமான கெளனிய கோத்திரத்தில் பிறந்த பார்ப்பனரான திருஞானசம்பந்தரை இன்னொரு ஆரியப் பார்ப்பனரான ஆதிசங்கரர் ‘திராவிட சிசு’ என்று அழைத்தாரே அது எப்படி?

திராவிடக் கட்சிகளில் ஒன்றான் அ.இ.அ.தி.மு.கவிற்கு பார்ப்பனப் பெண்மணியான செயலலிதா பொதுச் செயலாளர் ஆனது எப்படி? செயலலிதாவைத் திராவிடத்தாய் என்றும், திராவிடச் செல்வி என்றும் பெரியார் படம் போட்ட விளம்பரத் தட்டிகளில் அச்சிடுகிறார்களே அது எப்படி?

பார்ப்பன செயலலிதாவுக்கு சமூக நீதிகாத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்தாரே திராவிட வீரமணி அது எப்படி? அவருக்கு முன்னால் பார்ப்பன வகுப்பின் தலைவராகச் செயல்பட்ட இராசாசிக்கு மூதறிஞர் பட்டம் கொடுத்த்தே தி.மு.க. அது எப்படி?

பார்ப்பன செயலலிதாவுக்கு 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பெரியார் தி.க. வரிந்து கட்டிக் கொண்டு வாக்குக் கேட்டதே அது எப்படி?

எல்லாம் பெரியாரின் “தேர்வு” வழியைப் பின்பற்றித் தான் இவர்கள் இவ்வாறு செய்தார்கள். பார்ப்பனர்களுக்கு வாக்குக் கேட்பது திராவிடர்களுக்கு ஒன்றும் புதிதல்லவே!

1967 பொதுத் தேர்தலில் இந்திராகாந்தி என்ற பார்ப்பனப் பெண் பிரதமராக வேண்டும் என்பதற்காக, ஆர்.வெங்கட்ராமன் போன்ற பார்ப்பனர்களுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வாக்குக் கேட்டார் பெரியார்!

ஓர் உண்மையை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் பார்ப்பன ஊடுருவல் அல்ல! பார்ப்பனத் தலைமைக்குத் திராவிடர்கள் வலிந்து செய்த சேவைகள்! ஆனால் பார்ப்பனர்களோடும் பார்ப்பன நிறுவனங்களோடும் நீர் நெருப்புத் தொடர்பில்லாத நெறியாளர்கள் போல் பகட்டுப் பேச்சு பேசுவதில் திராவிடர்களுக்கு நிகர் திராவிடர்களே!

சமூக அறிவியல்படி ஓர் இனம் என்று எடுத்துக் கொண்டால் அதில் முற்போக்காளர்கள், சான்றோர்கள் பலர் இருப்பார்கள். அதே இனத்தில் பிற்போக்காளர்கள், கருங்காலிகள் பலர் இருப்பார்கள். உண்மையான இன உணர்வாளர்கள் தங்கள் இனத்தின் பிரதிநிதிகளாக முற்போக்காளர்களையும் சான்றோர்களையும் முன்னெடுப்பார்கள்.

ஒருவர் பிற்போக்காளர் அல்லது கருங்காலி என்பதற்காக அவர் பிறந்த இனம் மாறிவிடாது.

இராவணனும் வீடணனும் ஒரே இனத்தவரே! பிரபாகரனும் கருணாவும் ஒரே இனத்தவரே!

பெரியார் தி.க. சொல்வது போல், இனத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றால், இராவணன் வேறு இனம், வீடணன் வேறு இனம் என்று கூறிக் கொள்ளலாம். பிரபாகரன் வேறு இனம், கருணா வேறு இனம் என்று சொல்லிக் கொள்ளலாம். இந்த “ஆராய்ச்சி” வெளியே தெரிந்தால் உலக அறிஞர்கள், எப்படிச் சிரிப்பார்களோ!

தமிழ் இனத்தில் பிறந்தவர்களில் முற்போக்காளர்கள், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். அதே தமிழ் இனத்தில் பிற்போக்காளர்கள், பார்ப்பன ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அதைப் போலவே தமிழ் இனத்தில் தமிழ்த் தேசியர்கள் இருக்கிறார்கள்; இல்லாத இந்தியத் தேசியத்தை ஏற்போர் இருக்கிறார்கள்; இல்லாத திராவிடத்திற்கு வால் பிடிப்போர் இருக்கிறார்கள்.

கற்பனை இனமான திராவிடத்தில் அவரவர் கற்பனைப் படி ஆட்களை அமர்த்திக் கொள்ளலாம்! ஏனெனில் திராவிடர் என்பது இயற்கையான இனமல்ல, தேர்வு செய்து கொண்ட கற்பனை இனம். தமிழ் இனத்தில் ஒருவர் பிறப்பின் அடிப்படையில் இருக்கிறார்; கற்பனையின் அடிப்படையில் இல்லை.

பா.ஜ.க.வினர் தமிழ்த் தாய் ஊர்வலம் நடத்துகிறார்கள் என்றால், தமிழினத்தில் பிறந்துள்ள பார்ப்பனிய எதிர்ப்பாளர் என்ன செய்ய வேண்டும்?

பா.ஜ.க.வின் கபட வேடத்தை அம்பலப்படுத்த வேண்டும். பாரத மாதா பசனைக் குழுவினரான, பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்களான பா.ஜ.க.வினர், தமிழ்த் தாய் ஊர்வலம் நடத்துவது தமிழர்களை ஏமாற்றி ஆள்பிடிப்பதற்காக நடத்தும் நாடகம் என்று எடுத்துக் கூறித் தமிழர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.

இந்தி மொழிக்குத் தமிழை அடிமைப்படுத்துபவர்கள் தாம் பா.ஜ.க.வினர், என்ற உண்மையைத் தமிழர்களிடம் உரைக்க வேண்டும்.

அதை விடுத்து, தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் இழிவுபடுத்தக் கிடைத்த நல்வாய்ப்பென்று, பா.ஜ.க.வினரின் தமிழ்த் தாய் ஊர்வலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது பெரியார் தி.க!

பாசிசவாதியான இட்லர் தன்னை சோசலிசவாதி என்று கூறிக் கொண்டார். தனது கட்சிக்கு செர்மானிய தேசிய சோசலிஸ்ட் கட்சி என்று பெயர் சூட்டிக் கொண்டார். அதற்காக ‘சோசலிசம்’ என்ற கொள்கையை முற்போக்காளர்கள் கைவிட்டு விடுவதா? இட்லர் பயன் படுத்திக் கொண்டதால் சோசலிசம் என்ற கொள்கை ஊனமுடையது, உதவாக்கரை என்று கூற முடியுமா? பிற்போக்குவாதிகள், முற்போக்கு முழக்கங்களைத் திருடிப் போலியாகப் பயன் படுத்துவது காலம் காலமாக நடந்து வரும் சந்தர்ப்பவாதம் தான். இந்தியாவை சோசலிசக் குடியரசு என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்கிறது அந்தவரிசையில் தான் பா.ஜ.க.வும் “தமிழன்னை” ஊர்வலம் நடத்துகிறது.

தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுத் தொடர்ச்சியுடன் வளர்ந்து வந்த தமிழின உணர்ச்சியை அதே வழியில் மேலும் செழுமைப்படுத்தி வளர்ப்பதற்கு மாறாக கடந்த நூற்றாண்டில், இல்லாத திராவிடத்தைப் புகுத்திக் குறுக்குச்சால் ஓட்டியதால்தான் தமிழின உணர்ச்சி இங்கு சிதைவுற்றது.

திராவிடக் குறுக்குச்சால் ஓட்டப்படாததால்தான் ஈழத்தில் தமிழின உணர்ச்சி எழுச்சி பெற்றது. பெரியார் தி.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகளால், இப்போதும் ஈழத்தமிழர்களிடையே திராவிடக் குறுக்குச்சால் ஓட்ட முடியவில்லை. அக்கட்சிகள் கூட ஈழத்தமிழர் என்று தான் அழைக்கின்றன. ஈழத்திராவிடர் என்று அழைப்பதில்லை.

Pin It