2012 மார்ச்சு 15 பிற்பகல் 3.40 மணிக்கு புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் காவேரி உணவகத்தின் முன்னாள் காரில் வந்து இறங்கினார் என்.ராம். இந்திய மாணவர் சங்கம் (SFSSSFI) ஏற்பாடு செய்திருந்த “கையூட்டுச் செய்தி” குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் வந்திருந்தார். கூட்டத்தில் பெருமளவு மாணவர்கள் இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் குரலெழுப்பினார்கள்:

“இனப்படுகொலை செய்த ராஜபக்சேவின் கைகூலி என்.ராம் ஒழிக! ஊடகத்துறை பாசிசவாதி என். ராம் ஒழிக!.”

மாணவர்கள் ராமை நோக்கி ஆவேசமாக எழுப்பிய முழக்கங்கள் இவை. ராமின் முகத்தில் அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. கண்டிப்பாக அவர் இந்த "வரவேற்பை" தன் வாழ்நாளில் மறக்கவே மாட்டார்.

ராம் பேசத் தொடங்கும்வரை மாணவர்கள் முழக்கமும் தொடர்ந்தது. முழக்கமிட்ட மாணவர்கள் அரங்கிற்குள் நுழைவது முதலில் தடை செய்யப்பட்டது. ஆனால் மற்ற மாணவர்கள் தலையிட்டுப் பேசிய பின்பு அவர்களும் அனுமதிக்கப்பட்டார்கள். இந்திய அச்சு ஊடகங்களில் நிலவும் பிரச்சனைகளை விவரிக்கையில் ராமின் பேச்சுத் திறமை அபாரமாக இருந்தது. இன்றைய அச்சு ஊடகங்கள் சிறு விசயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து பெரிதுபடுத்திவிட்டு, உடனடி கவனம் கோரும் பிரச்சனை எதையும் புறந்தள்ளி விடுவதாக அவர் பெரிதும் வருந்தினார். இதழியலில் தனக்குள்ள தகுதிகளையும், அவரது ‘இந்து’ நாளிதழில் இருப்பதாக கூறிக் கொள்ளும் ‘நேர்மையையும்’ நிரூபிக்கும் முயற்சியில், ஊடகச் செய்தியின் தரத்தை அவர் வரையறை செய்ய முயன்றார். தேர்தல் குறித்த செய்திகள் மோசமாக இருந்தாக அவர் ரொம்பவே வருந்தினார்.

அன்மையில் சில மாநிலங்கள் நடைபெற்ற தேர்தல்களில் விதிமுறைகள் மீறப்பட்டதைக் குறிப்பிட்டார். பெருமுதலாளிகளும் ஊடகத் துறையினரும் கூட்டுச் சேர்ந்துள்ளதையும், அதிகார மையங்களாகத் திகழும் முதலாளிகளால் “கையூட்டு செய்தி” வாயிலாக இலஞ்சத்தின் ஆட்சி நிறுவப்படுவதையும் சொல்லி அவர் ஒப்பாரி வைத்தார். கூடவே ‘இந்து’வின் ‘மகாத்மியத்தை’ உறுதி செய்து கொள்வதற்காக பெரும்பான்மை மக்கள் பாதிக்கும் சமூக-பொருளாதாரப் பிரச்சனைகளை எழுதும் இதழியலாளர்களின் ‘அஞ்சாமை’யைப் பாராட்டினார்.

வட அமெரிக்காவினால் தொடுக்கப்பட்ட ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களைப் போன்ற சர்வதேசப் பிரச்சனைகளைக் குறித்துப் பேசுகையில், சர்வதேச ஊடகங்கள் போரை எதிர் கொண்ட முறையை அவர் விமர்சித்தார்.

ஊடக நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமான கருத்தினைப் பரப்ப அதிகாரத்திலிருப்போரோடு எப்படி கூட்டாகச் செயல்பட்டன என்று விளக்குவதற்கு அவர் சாம்ஸ்கியின் “ஒப்புதலை உற்பத்தி செய்தல்” என்ற கோட்பாட்டைக் குறிப்பிட்டார். இப்படியெல்லாம் அலங்காரமாக உரையாற்றிய அவர், இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்ட மனித குலத்திற்கு எதிராக கொடுமைகளைப் புரிவதற்கு ராஜபக்சேவிற்கும் இந்திய அரசுக்கும் “ஒப்புதலை உற்பத்தி செய்து” அளித்ததில் இந்து நாளிதழ் ஆற்றிய பங்கினை மட்டும் வசதியாக மறந்து வட்டார்.

இதழியல் கோட்பாடுகள் குறித்த ராமின் ஆழமான உரையை செவியுற்ற மாணவர்கள், அவரது கபட நாடகத்தைப் புரிந்து கொள்ளத் தவறவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்து நாளிதழ் வெளியிடும் செய்திகள் பற்றிய ராமின் தனிப்பட்ட நிலைபாடு என்ன என்று மாணவர்கள் கேட்கத் தொடங்கியவுடன் அந்த ‘உரை வீச்சாளர்’ பதில் சொல்ல முடியாமல் திணறினார். புன்னகை தவழ்ந்த அவரது முகம் சிவந்து பின்னர் உயிரிழந்து பரிதாபமாக மாறிவிட்டது.

இலங்கை அரசு நடத்திய போருக்கு அவர் உடந்தையாக இருந்தையும், சங்கராச்சாரியார்களைக் காப்பாற்ற விரைந்து செயல்பட்டதையும் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டபோது ராமால் தனது செயல்களை நியாப்படுத்த முடியாமல் போயிற்று. பெண்கள், சாதி, பாலியல் வல்லுறவு, படுகொலைகள் ஆகியவற்றைக் குறித்து படுகேவலமான கருத்துக்களை வெளியிட்ட சங்கரச்சாரியார்களுக்கு (2004 ஆம் ஆண்டு) வெளிப்படையாக வக்காலத்து வாங்கியதோடு பெங்களுர் எல்லையிலிருந்து சென்னை வரை அவர்களைப் பாதுகாப்பாக தன்னோடு அழைத்துவந்த செயலை அவர் ஏன் செய்தார் என்று மாணவர்கள் கேட்டார்கள். “நான் சங்கராச்சாரியர்களை வழிபடுபவன் அல்ல” என்ற ஒற்றை வரி பதில் கூறி தனது எல்லா செயல்களுக்கும் ஞாயம் கற்பிக்க முயன்றார் ராம். உடனே மாணவர்கள் அனைவரும் “ஆமாம், ஆமாம். அது தான் தமிழ்நாடு முழுக்க அனைவருக்கும் தெரியும்” என்று பதில் சொன்னார்கள்.

பாராளுமன்ற வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்ட இந்திய முஜாஹீதீன் “பயங்கரவாதிகள்” இருவர் பட்லா ஹவுஸில் போலி மோதல் படுகொலையில் கொலை செய்யப்பட்டதை ’இந்து’ நாளிதழ் ஞாயப்படுத்தியதைக் குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அதன் பிறகு மற்ற செய்தி ஊடக நிறுவன ஊடகங்களின் தவறுகளை வெளிப்படுத்த முயன்றபோது, அவரது ‘இந்து’ நாளிதழில் அவர் வெளிப்படுத்தும் நிலைபாட்டை மாணவர்கள் தோலுரித்துக் காட்டியபோது ராம் சங்கடத்தில் நெளிந்தார். ராமின் அத்துமீறல்களைப் பற்றி அதுவரை அறிந்திராத மாணவர்கள் பலரும் ‘நடுநிலை’ நாளேட்டின் ‘பேர்போன’ ஆசிரியரின் கேவலமான மறுபக்கத்தைக் கண்டு அதிர்ந்து போனார்கள். மற்ற மாணவர்களோடு சேர்ந்து கேள்விகளுக்கு பதில் சொல்லுமாறு அவர்களும் ராமை வற்புத்தினார்கள்.

ராஜபக்சே அரசின் ஊதுகுழுலாக ராம் செயல்பட்டதைக் குறித்து ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். “ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலூம் வடஅமெரிக்கா நிகழ்த்திய போரைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழ் இனப் படுகொலையின்- குறிப்பாக பொதுமக்கள் படுகொலைக்கும் பாலியல் வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டதில் உங்கள் பங்கினைப் பற்றிக் கூறுங்கள்” என்று அந்த மாணவர் கேட்டார். மாணவரின் கேள்விக்கும் பதில் கூற முடியாமல் அவர் மாணவர்களைப் பார்த்து, “நீங்கள் யாராவது இலங்கைக்குச் சென்றிருக்கிறார்களா?” என்று கேட்டார். ஒருவேளை அவர் தான் மட்டுமே இலங்கை சென்று வந்தவர் என்று நினைத்திருக்கக் கூடும். அங்குள்ள வதை முகாம்களைக் கண்டு தனக்கு ஏற்பட்ட ‘அற்புதமான அனுபவத்தைக் குறித்து சுவையான பொய்களை ரசமாக எடுத்துச் சொல்லவும் நினைத்திருப்பார் போலும்! மாணவர்களில் ஒருவர் ‘நான் போயிருக்கிறேன்’ என்று பதில் சொன்னவுடன், “அப்படியா!” என்று கேட்டுவிட்டு தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து விட்டார்.

இலங்கை ராணுவம் அப்பாவிப் பொது மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட போர்க் குற்றங்கள் குறித்த கேள்விகளைத் தவிர்ப்பதிலும் முற்றிலுமாக உதாசீனம் செல்வதிலும் அவருக்கிருந்த ‘அசாத்திய திறமையைக் கண்டு மாணவர்கள் வாயடைத்துப் போயினர். கேள்விகளை அனாயாசமாக புறந்தள்ளி விட்டு, தமிழீழ் விடுதலைப் புலிகளின் அத்துமீறல்களைப் பற்றி நீண்டதோர் பிரசங்கம் செய்த ராம், இலங்கை அரசைச் செல்லமாகக் கடிந்து கொண்டு உரையை முடித்தார்.

இதனை ஏற்க மறுத்த மாணவர்கள், “வெட்கமில்லையா உங்களுக்கு?” என்று கோஷமிடத் தொடங்கினர். போர் முடிந்தபின் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த சிங்கள இரத்னா தமிழ் அகதிகள் முகாமிற்குச் சென்று வந்த மர்மத்தை உடைப்பதில் மாணவர்கள் முனைப்பாக இருந்தார்கள். அப்போதுதான் ராமின் தனித் திறமைகள் அருமையாக வெளிப்பட்டன. அனைத்துலக நிறுவனங்களின் நம்பகத் தன்மையை அறிந்த வல்லுனர் ராம்! ஐ.நா. சபை நம்பகத்தன்மை இல்லாத அனைத்துலக நிறுவனம் எனும் உண்மையை அவர் அப்போதுதான் வெளியிட்டார். இலங்கைப் போர்க் குற்றங்கள் மீதான ஐ.நா. அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் தான் இந்த ‘அரிய உண்மையை’ அவர் வெளியிட்டார். ஐ.நா. அறிக்கை கூறும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும் போர்க் குற்றங்களையும் அவர் முற்றிலுமாக நிராகரித்தார்.

இலங்கை அரசையும் தமிழினப் படுகொலையையும் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தாக்கி தொடர்ச்சியாக ராம் பேசிக் கொண்டே போன போது, மாணவர்கள் கோபத்தில் கொதித்துப் போனார்கள். தமிழர் உணர்வுகளைப் புண்படுத்தியதோடு ராம் திருப்தியடையவில்லை. அவர் காஷ்மீரிகளையும், இஸ்லாமியர்களையும் கோபப்படுத்தும் முயற்சியாக பிரவீன் சாமியைப் புகழ ஆரம்பித்தார். மதவாதம், போலி மோதல் கொலைகள் ஆகியவற்றைக் குறித்து ஒருதலைப் பட்சமாக ‘இந்து’ நாளிதழில் எழுதும் மூத்த இதழாளர் இந்த பிரவீன்சாமி. ‘இந்து’ நாளிதழ் எப்போதும் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிப்பதும், போலி மோதல் படுகொலைகளை ஞாயப்படுத்துவதும் ஏன் என்று கேட்டபோது, ராமின் மற்றுமொரு ‘தனித்திறன்’ வெளிப்பட்டது. ஆம்! திடீரென்று அவர் செவிடராகவும் ஊமையாகவும் மாறி விட்டார்! ஆனால் பொய்யான சப்பைக் கட்டுகளைவிட இந்த மௌனம் தான் இராமை நமக்கு நன்றாகத் தோலுரித்துக் காட் டியது.

“என்.ராம் ஒழிக! ‘இந்து’ பாசிஸ்ட், சங்கராச்சாரியின் கைக்கூலி ஒழிக! இலங்கை அரசின் கைக்கூலி இராம் ஒழிக!” போன்ற முழக்கங்கள் எங்கெங்கும் எதிரொலித்தன. கூட்டம் முடிந்தது. கடுமையான இந்தக் கேள்வி நேரத்துக்குப் பின்பு சோர்வுற்றுப்போன ராம், சிவந்த முகத்தோடும் சங்கடத்தோடும் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் புறப்பட்டார். “கையூட்டுச் செய்தி” குறித்த உண்மைகளை வெளிப்படுத்த வந்த என்.ராம், தன்னுடைய முகமூடி இங்கே கிழியப் போகிறது என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்!

(ஆதாரம்: ஃப்ராண்டியர், ஏப்ரல் 29 - மே 5, 2012 இதழ்)

Pin It