ஒரு தொழிற்சங்கம் போலவும், ஓர் அரசியல் கட்சி போலவும் ‘சாதி’ செயல்படும் காலமிது. இக்கால “அமைப்பு” வடிவத்தை அது பெற் றுள்ளது.

அமைப்பு வடிவத்தில் செயல்படும் போது அதனதன் மக்கள் தொகை எண்ணிக்கை என்பது கூடுதல் முகாமை பெறுகிறது. ஏனெனில் அமைப்பு என்பது கூட்டு வலிமையின் வடிவம்.

கணிசமான மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட சாதிகள் தங்கள் செல்வாக்கை சமூகத்தின் மீது கூடுதலாகச் செலுத்த விரும்பு கின்றன; முனைகின்றன. ஒடுக்கப்பட்ட வகுப்புச் சாதிகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட வகுப்புச் சாதிகளிலும் கணிசமான மக்கள் தொகையோ அல்லது அதிகமான மக்கள் தொகையோ கொண்ட சாதிகள் இருக் கின்றன.

இச்சாதிகள் அமைப்பு வடிவம் பெறக்காரணங்களாக இருந்தவை, அவற்றுக்கும் மேலே உள்ள சாதிகளின் ஆதிக்கம், புறக்கணிப்பு, ஒடுக்கு முறை போன்றவையே!

ஆனால், அவை இக்கால அமைப்பு வடிவம் பெற்றபின், தங்களின் மக்கள் தொகை வலிமையைக் கொண்டு, சமூகத்தில் கூடுதல் செல்வாக்குப் பெற விரும்புகின்றன.

இவ்வாறான செல்வாக்குப் போட்டியில், சிறுபான் மையாகவும், மிகச்சிறுபான்மையாகவும் மக்கள் தொகை கொண்ட ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகள் ஓரம் கட்டப்பட்டு ஒதுக்கப்படுகின்றன.

சில சாதிகளுக்கிடையே நடக்கும் செல்வாக்குப் போட்டியாலும், சிறுபான்மைச் சாதிகள் ஓரங்கட்டப்படுவதாலும் சாதிக் காழ்ப்புணர்ச்சிகள் தொடர்கின்றன. சமூக நல்லிணக்கம் ஏற்படாமல் போகிறது.

அரசியல் கட்சிகளைத்தன்னல சக்திகள், தலைமையிலிருந்து கிளை வரை ஆக்கிரமித்துக் கொள்வதைப் போல், சாதி அமைப்புகளையும் தன்னல சக்திகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இவ்வாறான தன்னல சக்திகளுக்குத், தன்சாதியின் அதிக மக்கள் தொகை ஒரு கைமுதலாய்ப் பயன்படுகிறது. பொருள் மூலதனமில்லாத கைமுதலாய் சாதி பயன்படுகிறது.

ஆதிக்க சாதியினர்க்குப் பேரளவில் பயன்பட்டு வரும், “சாதி” என்ற கைமுதல், இப்போது சனநாய கத்தில், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்ததன்னல சக்தி களுக்கும் ஓரளவு பயன்படுகிறது.

இதனால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வகுப்புகளில் வலுவாக உள்ள சாதிகளைச் சேர்ந்த தன்னல சக்திகள் தங்கள் சாதி அமைப்பின் வலுவைப் பயன் படுத்தி, கட்டப்பஞ்சாயத்து, அரம்பத்தனம், அடியாள் வேலை போன்ற வற்றில் ஈடுபட்டு, பொருளீட்டு வது, பிரபலம் பெறுவது, அரசியல் பதவிகள் பெறுவது என்று, நெறியற்ற வேலைகளில் இறங்கு கின்றன.

அறிவு வளர்ச்சி, பண்பு வளர்ச்சி போன்றவற்றில் அக்கறை செலுத்துவதை விட ஆள் பலத்தில் மட்டும் நம்பிக்கை வைத்து, செயல்படுகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர் களைப் போலவே, வலுவுள்ள சாதிகளின் அமைப்புத் தலைவர் களும், ஊழல் புரிவது, கை யூட்டுப் பெறுவது, போலி உறுதிமொழிகளைக் கொடுப்பது, சந்தர்ப்பவாதிகளாய்ச் செயல்படுவது போன்றவற்றில் தாராளமாக ஈடுபடுகின்றனர்.

அந்தந்த சாதியில் உள்ள நேர்மையாளர்கள் தன்னல சக்தி களின் இத்தீய குணங்களை எதிர்த்தால், “அரசியல்கட்சியில் அடுத்த சாதிக்காரன் தலைமை யை ஏற்று அவனது ஊழல் களையும் அரம்பத்தனங்களை யும் பொறுத்துக் கொள்கிறீர் கள்; சொந்த சாதிக்காரன் செய்தால் மட்டும் எதிர்ப்பீர் களா” என்று மடக்குகிறார்கள். “ஊழல்கறை படிந்த அடுத்த சாதித் தலைமையா, சொந்த சாதித் தலைமையா? எதை ஏற்கிறீர்கள்” என்று கேட்கிறார்கள். ஒருபகுதி மக்கள், “இவ்வ ளவு காலம் அடுத்த சாதிக் காரன் தலைமையில் அவன் ஊழலை சகித்துக் கொண் டோம். இப்போது நம்ம சாதிக் காரன் ஊழலை சகித்துக் கொள்வோம்” என்று மனநிறை வடைகிறார்கள். ஆனால் அந்த சாதியில் உள்ள மறுபகுதி மக்கள் இந்தப் போக்குகளை எதிர்க்கிறார்கள்.

தன் சாதிக்காரர் தவறுகளை சகித்துக் கொள்வது என்ற மன நிலை பிறசாதிக்காரர் தவறு களையும் தடுக்காது. “அவரவர் பங்கிற்கு ஊழல் புரிவோம்” என்ற உளவியலை வளர்க்கும். ஊழல், நெறிதவறிய பொது வாழ்வு என்ற சமூகக் குற்றங்கள் விரிவடையவும், ஆழமாகப் புரையோடவும் மட்டுமே இம் மனநிலை வழிவகுக்கும்.

மக்கள் தொகையில் மிகவும் சிறுபான்மையாய் உள்ள ஆதிக்க சாதியினர், மக்கள் தொகையில் பெரும்பான்மையாய் உள்ள சாதியினரைப் பல நூறு ஆண்டுகளாக, அடிமைப் படுத்தியது எப்படி? ஒடுக்கி வருவதெப்படி? அவர்கள் தங்களின் அறிவாற்றலால் பெரும் பான்மை மக்களை அடிமைப் படுத்தினார்கள். அவர்கள் தங்களின் அறிவாற்றலைத் தன்னலத் திற்கும், வஞ்சக சூழ்ச்சி களுக்கும் பயன்படுத் தினார்கள். பெரும் பான்மை எண்ணிக்கை கொண்ட மக்கள் வரலாற்றுப் போக்கில் அறிவாற்றலில் பின் தங்கி, ஏமாளிகளானார்கள்.

தன்னல வஞ்சக சூழ்ச்சிக்கான அறிவாற்றலை முறியடிக்க, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பொது நலத்தில் அக்கறை கொண்ட அறிவாற்றல் வளர வேண்டும். வஞ்சகம், சூழ்ச்சி ஆகியவற்றைப் புரிந்து கொள்ளும் அறிவாற்றல் பெற வேண்டும். அனைத்துத்துறை அறிவிலும் முன்னேற வேண்டும், அதிகம் கற்க வேண்டும் என்ற தாகம் வேண்டும். வெறும் ஆள்பலத்தை நம்பிச் செயல் பட்டால் கடைசியில் நெறி கெட்ட செயல்கள் மூலம் தனிநபர் வளர்வது மட்டுமே மிஞ்சும். சமூகம் வளராது; சமத் துவம் பெறாது.

எந்த நிலையிலும் ஒழுக்கத்தை முதலிடத்தில் வைக்க வேண்டும். ஒழுக்கம் தவறினால் எல்லாம் தவறிப் போகும்.

மதுவருந்திச் சீரழிவதில் மிகப்பெரும்பான்மையோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தாம். மிகப் பெரும்பான்மை என்று கூறுவது மிகப்பெரும்பான்மை விகி தத்தில் என்ற பொருளில்!

அறிவு வளர்ச்சி, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றில் அக்கறை செலுத்தாத சமூகத்தை, அவற்றில் அதிக அக்கறை செலுத்தும் சமூகங்கள் எளிதில் ஆதிக்கம் செலுத்தும்.

சாதி ஆதிக்கத்தை ஒழிக்கப் போராடும் அதே வேளை, அனைத்து சாதிகளையும் கொண்ட சமூகத்தில், நல்லிணக்கம் நிலவ வேணடும் என்று எண்ண வேண்டும். மனிதர்கள் சமூகமாக சேர்ந்து வாழ்வது கருணையினால் அன்று; தவிர்க்க முடியாத தேவையினால்!

சமூகமாகச் சேர்ந்து வாழும் தேவை, விலங்குகளை விடவும் மனிதர்களுக்கே அதிகம் உள்ளது. காரணம் என்ன? இக்காரணத்தைக் கண்டறிய ஒரு வினாவைக் கேட்டாக வேண் டும்.

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறு பாடென்ன? பலர் பளிச்சென்று சொல்லும் விடை “பகுத்தறிவு” என்பதாகும். துல்லியமான விடை அது வன்று. உணவுப் பழக்கம் தான் அடிப்படையான வேறுபாடு என்கிறது மார்க்சியம்.

விலங்குகள், இயற்கையில் இருப்பவற்றை அப்படியே உண்கின்றன. இயற்கையான உணவுப் பொருட்கள் கிடைக்காத போது அழிந்து விடுகின்றன. மனிதர்கள் இயற்கையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்து உண்கிறார்கள்; “உற்பத்தி” என்பது தான் மனிதர் களுக்கும் மற்ற விலங்கினங் களுக்கும் இடையே உள்ள அடிப்படையான வேறுபாடு.

உணவுக்கான உற்பத்தி எப்படி நடக்கிறது? உழைப்பின் மூலம் நடக்கிறது. உழைப்பைச் செலுத்துவதற்கு அடிப்படைத் தேவைகள் யாவை? இயற்கையாய் உள்ள நிலம், அதில் உற்பத்தியில் ஈடுபடத் தேவையான கடப்பாரை, மண்வெட்டி, கலப்பை போன்ற கருவிகள். கருவிகள் மட்டும் போதுமா? போதாது. கலப்பையை இழுக்க மாடுகள் தேவை. இவை மட்டும் போதுமா? சகமனிதர்களின் உழைப்பு தேவை!

நிலம், கடப்பாரை, மண் வெட்டி, கலப்பை போன்றவை உற்பத்திக் கருவிகள். உற்பத்திக் கருவிகளும் உழைப்பைச் செலுத்தும் மாடுகளும் மனிதர்களும் சேர்ந்தவை உற்பத்தி சக்திகள்.

உற்பத்தியில்லாமல் மனித வாழ்க்கையில்லை. உழைப்பில்லாமல் உற்பத்தி இல்லை. நிலம், கருவிகள், மாடுகள், மனிதர்கள் உள்ளிட்ட உற்பத்தி சக்திகள் இல்லாமல் உழைப்பில்லை.

பழைய காலத்தில் ஒரு மா அதாவது 33 செண்ட் நிலத்தில், தவச(தானிய) உற்பத்தி செய்வ தாக வைத்துக் கொள்வோம். இந்தச் சிறிய நிலப்பரப்பில், கம்பு, கேழ்வரகு, வரகு, நெல் முதலியவற்றில் ஏதாவதொரு தவசம் உற்பத்தி செய்ய வேண் டும். இதைத் தனியாக ஒரு மனிதரோ அல்லது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களோ உற்பத்தி செய்துவிட முடியுமா? முடியாது. மண்வெட்டி, கலப் பை, களைக்கொத்து போன்றவற்றைச் செய்து கொடுக்க வெவ்வேறுவகை உழைப்பாளிகள் தேவை. எங்கோ ஒர் இடத்தில் இரும்புத் தாதுக்களை எடுத்து, இரும்பாக்கித் தர எவ்வளவோ பேர் உழைத்திருப்பார்கள். அந்த இரும்பைக் கொழுவாக்கித் தர வேறு உழைப்பாளிகள் உழைத்திருப்பர். மரக்கலப்பை செய்து தர தச்சர் உழைக்கிறார். மரக்கலப்பையில் கொழுவைப் பொருத்த கொல்லர் உழைக்கிறார். இத்தனை பேர் உழைப்பிற்குப் பின்னரே கலப்பை கிடைக்கிறது.

அந்த ஒருமா நிலத்தை எத்தனையோ தலைமுறைக்கு முந்திய உழைப்பாளிகள் கண்டறிந்ருப்பர்; அதில் விதைக்க வேண்டிய தவசத்தையும், விதைக்கப்பட வேண்டிய பருவத்தையும் எத்தனையோ தலை முறைக்கு முந்திய மனிதர்கள் கண்டறிந்திருப்பார்கள். இவ்வாறான வேளாண்உற்பத்தி குறித்த தொழில் நுட்பங்களை அம்மக்கள் பேசும் மொழி பதிவு செய்து சேமித்து வைத்து அடுத்தடுத்த தலைமுறைக்கு எளிதாக நகர்த்தித் தருகிறது. இத்தனைக்கும் பிறகு பார்த்தால், உற்பத்தி என்பது, மொழி, முன்னோர்களின் அனுபவம், கண்டுபிடிப்பு, சகமனிதர்களின் உழைப்பு, ஒத்துழைப்பு ஆகிய வற்றில் தான் நடக்கிறது.

இதில் மொழி என்பது எந்தத் தனிமனிதனுக்கும், தனி வகையறாவுக்கும், தனிச் சாதிக்கும், தனி வர்க்கத்திற்கும் உரிய தன்று. அது ஒரு குறிப்பிட்ட இனச் சமூகத்திற்குப் பொதுவாக இருக்கிறது.

இக்காலத் தொழில்துறை உற்பத்தியை எடுத்துக் கொண்டால், அது எங்கெங்கோ உள்ள மனிதர்களின் உழைப்பின் இணைப்பாலும், ஒரு வளாகத்தில் செயல்படும் பல மனிதர்களின் உழைப்பாலும் நடக் கிறது என்பது எளிதில் விளங்கும். உணவு, உடை, உறையுள், நுகர்வுப் பண்டங்கள் ஆகிய அனைத்திலும் சமூகத்தின் கூட்டுழைப்பே உள்ளது.

இவ்வுண்மைகள் உணர்த் துவதென்ன? மனிதர்கள் சமூக மாகத் தான் வாழ முடியுமே தவிர, தனிமனிதர்களாக, தனிச் சாதியினராக, வாழமுடியாது. சாதி கடந்து மனிதர்கள் ஒரு வரை ஒருவர் சார்ந்துள்ளனர்.

அதேவேளை உலக மனிதர்கள் எல்லாம் ஒரே சமூகமாக, ஒரே நாடாக வாழ்வதில்லை. உற்பத்திக் கருவிகளுள் ஒன்றாக விளங்கும் மொழி, உதிரிகளாக வாழ்ந்த பழங்குடிகளை இணைத்து ஒரு சமூகமாக் கியது. ஒரு தேசிய இனமாக வடிவமைத்தது.

ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் சமூக வாழ்க்கை என்பது பெரிதும் ஒரு மொழி பேசும் மக்களைச் சார்ந்ததாக வரலாற்றில் உருவானது.

பிறமொழி பேசும் சமூகங்களோடு மனித வாழ்க்கை இணையவில்லையா எனில் இணைந்திருக்கிறது. அவ்விணைப்பு அடிப்படையான தன்று; தவிர்க்க முடியாததுமன்று. ஒரு மொழி பேசி, சேர்ந்தாற்போன்ற நிலப்பகுதியைத் தாயாகமாகக் கொண்டு வாழும் ஒரு தேசிய இனத்தின் சமூகச் சார்பு அடிப்படையானது; தவிர்க்க முடியாதது. எனவேதான் உலகில் தேசிய இனங்களின் அடிப்படையில் தனித் தனித் தேசங்கள் வரலாற்று வளர்ச்சியில் உருவாயின.

தமிழ்த் தேசிய இனம் இந்தியாவில் ஒரு காலனியாக அடி மைப்பட்டிருப்பதால் ஒரு தனித் தேசமாக இன்னும் அமையவில்லை. ஆயினும் அது ஒரு தனித்தேசிய இனம் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் தனித்த மொழி வழி மாநிலமாக இப்போது இந்தியாவில் உள் ளது.

தமிழ்த் தேசத்தில் உள்ள தமிழர்கள், பல சாதிகளில் இருந் தாலும், சாதிகள் அனைத்தும் தமிழ்த் தேசிய இனத்தில் ஊடும் பாவுமாய் இணைந் துள்ளன. நூலிழைகள் சேர்ந்திருந்தால் ‘துணி’ என்ற வாழ்வு பெறும்; பயன்பாட்டில் இருக்கும். நூலிழைகள் பிரிந்து விட்டால், அவற்றிற்குத் தனியே பயன் பாடோ வாழ்வோ கிடையாது. அதுபோலத் தமிழ்ச் சாதி ஒவ்வொன்றுக்கும் தனியே வாழ்வு கிடையாது. தமிழ்த் தேசிய சமூகத்தில் இணைந்திருக்கும் போதுதான் தமிழ்ச் சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இருப்பும் உண்டு; வாழ்வும் உண்டு. இது வரலாற்று விதி.

தமிழ்ச் சமூகத்தைப் புறக்கணித்து விட்டு, தன்சாதி குறித்து மட்டும் அக்கறைப் படுவது, சமூக அறிவியலுக்குப் புறம்பானது; தற்குறித் தனமானது.

தாங்கள் ஆண்ட பரம்பரை என்று தமிழ்ச் சாதிகள் ஒவ் வொன்றும் பேசுகின்றது. தமிழ்ச்சாதி ஒவ்வொன்றும் ஆண்ட பரம்பரை தான்! அதில் ஐயமில்லை.

அனைத்துச் சாதிகளின் உழைப்பும், ஒத்துழைப்பும் இணைப்பும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட சாதி ஆண்டதா? இல்லை. மன்னர்கள், படை வீரர்கள், படைத்தளபதிகள், பல சாதிகளிலும் இருந்திருக்கிறார்கள்.

இப்பொழுது தமிழ்ச் சாதிகள் அனைத்தும் சேர்ந்த தமிழினம் இந்தியாவில் அடிமை யாக இருப்பதை உணராமல், அந்த அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற தன்மான உணர்ச்சியில்லாமல், “நாங்கள் ஆண்ட சாதி ’’ என்று பெருமை பேசினால் அது கோமாளித்தனம்!

அடிமைத் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டு, “நாங்கள் ஆண்ட சாதி” என்று பேசுவதன் உட்பொருள் என்ன? “எங்கள் சாதி மற்ற தமிழ்ச் சாதிகளை ஆண்டது. எனவே இப்போது எங்களுக்கு முதலிடம் கொடுங்கள்” என்று கோருவதுதான் அதன் உட்பொருள்? பகிரங்கமாக வெளிப்படுத்தப்படாத ஆதிக்க எண்ணம்தான் இம்முழக்கத்தில் பதுங்கியிருக்கும் உண்மை!

தமிழினம் தன்னைத் தானே ஆண்டு கொண்ட இனம். அது நீண்ட காலமாக அடிமையாகக் கிடக்கிறது; “நாங்கள் ஆண்ட இனம்; சனநாயக முறைப்படி இப்பொழுது எங்களை நாங் களே ஆண்டு கொள்ள வேண் டும், எங்களுக்கு விடுதலை தா” என்று முழங்கினால் அதில் சமூக அறிவியல் இருக்கிறது; தன்மான உணர்ச்சி இருக்கிறது. சனநாயகக் கொள்கை இருக்கிறது. இவ்வாறான சமூக அறி வியல் கொள்கையும், சனநாயக உணர்ச்சியும் வந்துவிட்டால், தமிழ்ச்சமூகத்திற்குள பிறப்புவழி உயர்வு தாழ்வு என்பது மோசடி, வரலாற்று உண்மைக்கு முரண் என்ற உண்மை எளிதில் விளங்கிவிடும்.               

(தொடரும்)

Pin It