வரலாற்றுச் சக்கரத்தை முன்னோக்கி உருட்டிவிடும் வலிமை மாணவர்களின் கைகளுக்கு எப்போதும் உண்டு. இது உலகெங்கும் அறியப்பட்ட உண்மை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை பல்வேறு இக்கட்டான காலங்களில் தமிழர்களின் மானம் காத்தவர்கள் மாணவர்கள். 

இப்போது ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இராசபட்சே- பொன்சேகா கும்பலை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தத் தமிழக மாணவர்கள் களமிறங்கியுள்ளனர். 

இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு, ஈழத்தில் 2008- 2009 இல் நடத்திய இன அழிப்புப்போரை இன்று நினைத்தாலும் திக்கென்று நெஞ்சில் தீப்பற்றிக் கொள்கிறது. துப்பாக்கிச் சூடில்லாத பாதுகாக்கப்பட்ட வலயம் என்று வரச்சொல்லி, அங்கு வைத்து அன்றாடம் ஆயிரம், பல்லாயிரம் என ஈழத்தமிழர்களை குண்டு போட்டுக் கொன்றனர். 2009 மே பதினெட்டாம் நாள் போர் முடிந்தது. என்று அறிவித்தப்பின் பச்சிளம்பாலகன் பாலச்சந்திரனை 19.5.2009 அன்று சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். 

இந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு சென்னை இலயோலாக் கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் சாகும் வரை பட்டினிப்போர் என்று அறிவித்து தொடங்கி வைத்த உண்ணாப்போராட்டம், தீயைப் பற்ற வைத்து விட்டது. தமிழகமெங்கும் மாணவர்கள் போராடுகிறார்கள். 

கள்ளமறியா வெள்ளை உள்ளத்துடன் மாணவர்கள் போராடுகிறார்கள். ஈழத்தில் “ தமிழினத்தை அழித்த இராசபட்சேவைத் தூக்கிலிடு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்து, உலகமே தமிழ் ஈழத்தை அங்கீகரி, சிங்களர்களோடு சேர்ந்திருப்பதா பிரிந்து போவதா என்பதை முடிவு செய்ய ஈழத்தமிழர்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்து, ஐ.நா. மன்றத்தின் தலைமையின் கீழ் புலனாய்வுக் குழு அமை” என்பன போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்புகிறார்கள். 

கூவும் குயில்களின் கூட்டத்திற்குள் கோட்டான்கள் புகுந்தது போல் காங்கிரசுக் காரர்களும் தி.மு.கவினரும் போராடும் மாணவர்களிடையே புகுந்து, திரிபு வேலை செய்கிறார்கள். டெசோ தீர்மானத்தை ஆதரித்துப் போராடுவதாக ஊடகங்களிடம் கூறுங்கள் என்று மாணவர்களிடம் மந்திரம் போடுகிறார்கள். ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று போராடுவதாக அறிவியுங்கள் என்று கூறி மாணவர்களைக் குழப்பி விடுகிறார்கள். 

அமெரிக்கத் தீர்மானம் என்ன வலியுறுத்துகிறது என்ற செய்தி தெரியாத போதே, கடந்த பிப்ரவரியிலிருந்து, அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்மென்று டெசோ தீர்மானம் போட்டது. 

மார்ச்சு மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்கத் தீர்மானம் என்னவென்று தெரிந்து விட்டது. அதில் சிறு சேர்க்கையுடன் 9.3.2013 அன்று அதிகாரப்படி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தில் உள்ள செய்திகளும் வெளிவந்துவிட்டன. 

தமிழ் இன அழிப்பிற்குத் தலைமை தாங்கிய இராசபட்சே, அவன் தம்பி கோத்தபய இராசபட்சே உள்ளிட்ட கொலைக்கும்பல், தங்களுக்குக் கீழப்படிதல் உள்ள அதிகாரிகளைக் கொண்டு போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது விசாரணை நடத்த வேண்டும். அதன் இராசபட்சே கும்பல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இராசபட்சே கும்பல் அனுமதித்தால்., ஐ.நா. மனித உரிமை ஆணைய அதிகாரிகள், இதற்கு சிங்கள அதிகாரிகளுக்கு உதவிகள் செய்யாமல்; அறிவுரை வழங்கலாம். 

 “மனித உரிமை ஆணையர் மற்றும் தொடர்புடைய சிறப்புச் செயல் பாட்டாளர்கள் இலங்கை அரசுடன் கலந்துரையாடி, அதன் ஒப்புதல் பெற்று மேலே கண்ட நடவடிக்கைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு அறிவுரையும் தொழிநுட்ப உதவியும் வழங்கலாம்” Encourages the office of the high commissioner for human rights and relevant special procedures mandate holders to provide, in consultation with and with the concurrence of the government of Srilanka, advice and technical assistance on implementing the above mentioned steps

மேலே கொடுக்கப்பட்டிருப்பது அமெரிக்கத் தீர்மானத்தின் அதிகாரப்படியான சொற் றொடர்கள் இத்தீர்மானம் திருடனைக் காவல்துறை அதிகாரியாக்குகிறது. கொலை காரனை நீதிபதியாக்குகிறது. மனித குலத்திற்கெதிராகக் குற்ற மிழைத்தவனை மதிப்பு மிக்கக் குடியரசுத் தலைவராக ஒப்பனை செய்கிறது. 

இந்த அமெரிக்கத் தீர்மானம் இலங்கை அரசு அமைத்த கற்றுக் கொண்ட படிப்பினைகளுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணையம்( எல். எல். ஆர்.சி.) விசாரித்துக் கண்டறிந்தவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி இராசபட்சே கும்பலுக்கு வேண்டுகோள் வைக்கிறது. 

அந்த எல்.எல். ஆர்.சி தனது விசாரணை அறிக்கையில் “இலங்கை அரசின் ஆட்சித் தலைமையும் இராணுவத் தலைமையும் போர்க்குற்றம் எதுவும் புரியவில்லை; மனித உரிமை மீறல் எதையும் நடத்தவில்லை” என்று நற்சான்றளித்துள்ளது. அத்துடன், மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பை( விடுதலைப்புலிகளை) வீழ்த்தியதற்காக, இலங்கை அரசையும், இலங்கை இராணுவத்தையும் எல்.எல். ஆர்.சி. பாராட்டுகிறது. என்று அவ்வறிக்கை கூறியுள்ளது. 

இந்த அறிக்கையின்படி இராசபட்சே கும்பல் பாதுகாக்கப்படுவார்கள். கீழ்நிலை இராணுவ அதிகாரிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கவில்லை. போன ஆண்டு (2012) மார்ச்சு மாதம் இதே ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எல்.எல்.ஆர்.சி. தீர்மானத்தைச் செயல்படுத்தச் சொல்லி அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியது. அதைக் கடந்த ஓராண்டில் எள்ளளவும் சட்டை செய்யவில்லை இலங்கை அரசு. ஏனென்று கேட்கவில்லை அமெரிக்க அரசு ஐ.நா. மனித உரிமை மன்றமும் அமைதி காத்தது. 

இவ்வாண்டு மீண்டும் அதே பல்லவியை ராகத்தில் சிறுமாற்றம் செய்து பாடுகிறது அமெரிக்கா. 

 இத்தீர்மானத்தில் எந்த இடத்திலும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை (Genocide) எனக்குறிப்பிடவே இல்லை. இத்தீர்மானம் ஈழத்தமிழர்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு கருத்து வாக்கெடுப்பு நடத்த வகை செய்யப்படவில்லை. இத்தீர்மானம் கருத்து வாக்கெடுப்புக்கான எந்த எதிர்கால வாய்ப்புக்கும் இட்டுச் செல்லாது. உலகத்தில் போர்க்குற்றங்கள் அதிகம் புரிந்த ஒரே நாடு அமெரிக்காதான் வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் என அதன் போர்க் குற்றப்பட்டியல், மனித உரிமை மீறல் பட்டியல் நீள்கிறது. இராசபட்சே கும்பல் சீனாவுடன் கூடிக் குலாவுகிறது. அது அமெரிக்காவுக்கு எரிச்சல் ஊட்டுகிறது. இலங்கை அரசின் தலையில் இலேசாகத் தட்டி அதைச் சீனாவிடமிருந்து சற்றுத் தள்ளி நிற்க வைப்பதே அமெரிக்காவின் திட்டம். அதற்கான ஆயுதமாக ஈழத்தமிழர் இனப்படுகொலையை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்கிறது. 

சீனாவை விடத் தமிழர்கள் ஆபத்தானவர்கள் என்ற இனப்பகை பார்வை கொண்டது இந்திய ஏகாதிபத்தியம். அத்துடன் தமிழின அழிப்புப் போரில் கூட்டுகொலையாளியாக சிங்கள அரசுடன் சேர்ந்து செயல்பட்டது இந்திய அரசு. எந்தச் சிறு விசாரணையும் சிங்கள அரசின் மீது கூடாது என்று இந்தியா கருதுகிறது. இலங்கை அரசும் அமெரிக்கா அரசும் பேசி சமரசம் கண்டு வாக்கெடுப்புத் தேவைப்படாத ஒரு தீர்மானத்தை முன்வைக்குமாறு இந்தியா பரிந்துரைத்தது. அதற்கான ஏற்பாட்டை செய்ய அமெரிக்கத் தரகன் சுப்பிரமணியசாமியை அனுப்பியும் வைத்தது. இதில் இன்னும் (12.3.2013 வரை) இழுபறி நீடிக்கிறது. 

அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டுவதன் மூலம் இந்திய அரசுக்கு ஏவல் செய்கிறது தி.மு.க. முற்போக்கான கொள்கைகளில் தலையிட்டுக் குறுக்குச்சால் ஓட்டி, அவற்றைக் குழப்பிவிடுவது தி.மு.க.வுக்கு வாடிக்கையான ஒன்று. தனிநாட்டு விடுதலை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, வருணசாதி எதிர்ப்பு, பொதுவுடைமை ஆதரவு போன்ற முற்போக்கு முழக்கங்களை எழுப்பி அவற்றில் அரை குறைப்பார்களையும், திரிபான நிலைபாடுகளையும் திணித்து, பிறகு அவை அனைத்திலிருந்தும் பின் வாங்கி ஓடிவிட்டது தி.மு.க. அதே பாணியில் இப்போது ஈழத்தமிழர் சிக்கலில் புகுந்து குழப்புகிறது தி.மு.க. 

தமிழ் இனத்திற்கு வழிகாட்ட மூத்த அரசியல் தலைவர்கள் தவறிவிட்டார்கள். பதவி அரசியலைப் பகல் இரவா கனவுகண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் யாரும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைக்கும், ஈழத்தமிழர்களின் விடிவுக்கும் சரியான திசைகாட்ட முடியாது. அவர்களை நம்பிப் போராடினால் ஈகங்கள் வீணாகும். 1965 இல் தமிழ் மொழிகாக்க போர்க்களம் கண்டது தமிழ்நாடு மாணவத் தியாகி இராசேந்திரன் தொடங்கி 300 பேர்க்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பத்து பேர்க்கு மேல் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்தார்கள். ஆனால் அவ்வளவு பெரிய தியாகம் வீணானது. இந்தித் திணிப்பு தடுக்கப்படவில்லை. ஆங்கில ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை. தமிழ் முழுமையான ஆட்சி மொழி ஆகவில்லை. 

பணம், பதவி, விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத மாணவர் கூட்டம் இப்பொழுது பொங்கி எழுந்துள்ளது. இந்த எழுச்சி சரியான இலக்கு நோக்கிச் செல்லட்டும். தழல் ஈகி முத்துக்குமார் தமது இறுதி அறிக்கையில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். மாற்றுச் சிந்தனை, மாற்று அரசியல் வேண்டும் என்றார். 

  1. ஈழத் தமிழர் சிக்கலைப் பொறுத்தவரை, அங்கு நடந்த இனப்படுகொலை பற்றிய விசாரணையை(inquiry) ஐ.நா. மன்றம் அமைத்த தாருஸ்மான் தலைமையிலான மூவர் குழு முடித்து விட்டது. இன்றையத் தேவை அவ்விசாரணையிம் மீதான தற்சார்புள்ள பன்னாட்டுப் புலன் விசாரணைக் குழு( Independent International investigation) இப்புலன் விசாரணை முடிந்ததும் இராசபட்சே கும்பல் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை (Trial) நடைபெறவேண்டும். இதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றம் நிறைவேற்ற வேண்டும்.
  2. இன அழிப்பு நடத்திய சிங்களர்களுடன் சேர்ந்து வாழ்வதா பிரிந்து தனி நாடு அமைத்துக் கொள்வதா என்பதை முடிவு செய்யும் கருத்து வாக்கெடுப்பை ஈழத்தமிழர்களிடம் ஐ.நா. நடத்த வேண்டும்.
  3. தமிழ் ஈழத்தில் சிங்கள அரசின் பணயக் கைதிகள் போல் வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஐ.நா. வின் மேற்பார்வையின் கீழ, செயல் படும் இடைக்கால நிர்வாகத்தின் கீழ் துயர் துடைப்பு பணிகள் நடக்க வேண்டும். அவர்களுக்குரிய குடிமை உரிமைகள் செயல் படுத்தப்படவேண்டும்.

இவ்வாறான ஐ.நா. தீர்மானம் கோரி போராடுவோம்!

 மாணவர்கள் தங்களின் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வீதிக்கு வந்துள்ள இவ்வேளையில் தமிழ் மக்கள் மாணவர்களுடன் சேர்ந்து களம் காண்பார்கள்.                

Pin It