மாநில திராவிடர் கழக இளைஞரணி மாநாடு இராசபாளையத்தில் 4.5.2013 அன்று நடந்துள்ளது. அதில் 20 தீர்மானங்கள் போட்டுள்ளனர். இருபதாவது தீர்மானம் தமிழ்த் தேசியத்தை புறக்கணிக்கக் கோரும் தீர்மானம். அதன் ஒரு பகுதி வருமாறு:

“இந்நிலையில், தமிழ்த் தேசியம் எனும் போர்வையில் தந்தை பெரியார் அவர்களையும் திராவிடர் இயக்கத்தையும் கொச்சைப்படுத்துவதோடு அல்லாமல் பார்ப்பனர்களையும் தமிழர்கள் எனும் போர்வையில் ஊடுருவச்செய்வதும், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பைக் கைவிட்டும் ஜாதி முறைகளைக் காப்பாற்றியும் வரும் போக்கினை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழினப் பெருமக்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.’’

வளர்ந்து வரும் தமிழ்த் தேசியத்தைக் கண்டு, இந்திய தேசியம் பேசுவோர் மட்டுமல்ல, ஆரியப் பார்ப்பனிய சக்திகள் மடுமல்ல, இனத்திரிபுவாதிகளான திராவிடர் கழகத்தினரும் பதற்ற மடைந்துள்ளார்கள். மேற்கண்ட திர்மானமே இதற்குச் சான்று.

தமிழ்த் தேசியம் பேசும் நாம் பெரியாரைக் கொச்சைப்படுத்தவில்லை. அவரது கருத்துகளைத் திறனாய்வு செய்கிறோம். பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, வர்ணசாதி எதிர்ப்பு, பெண்விடுதலை, சமத்துவ சமூகப் பார்வை ஆகியவற்றில் பெரியாரின் கருத்துகளையும் களப்போராட்டங்களையும் நன்றியோடு நினைவு கூர்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால் அவர் தமிழினம், தமிழ்மொழி, திராவிடர் ஆகியவை பற்றிக் கூறியுள்ள பிழையான கருத்துகளையும் வரையறுப்புகளையும் எதிர்க்கிறோம் என்பதைவிட அவற்றைக்கைவிடக் கோருகிறோம்.

கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் பெரியார் என்பதற்காக ஒரு போதும் அவரை அயலாராகத் த.தே.பொ.க. கருதியதில்லை. பிறப்பை வைத்து அவரை திறனாய்வு செய்யவில்லை. பெரியாரை மட்டுமின்றி, வரலாற்றுப் போக்கில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் குடியேறித் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டு வழிவழியாக வாழும் தெலுங்கு, கன்னடம், உருது, சௌராஷ்ட்டிரம் போன்ற மொழி பேசும் மக்களையும் அயலாராகப் பார்க்காமல், மண்ணின் மக்களாகவே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முன் வைக்கும் தமிழ்த் தேசியம் கருதுகிறது.

1956 நவம்பர் 1-இல் தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்ட பின் தமிழ்நாட்டில் குடியேறிய வெளிஇனத்தாரைத்தான் அயலாராகத் த.தே.பொ.க. வரையறுக்கிறது. அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோருகிறது.

பெரியாரை வணிகச் சின்னமாக்கி, திராவிடர் கழகத்தையும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்திக் கொண்டிருக்கும் தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியாரியலைக் கருத்தியல் தளத்தில் வளர்க்க சிந்தனை எதையும் வழங்கவில்லை. தமது இந்தப் பலவீனத்தை மறைப்பதற்காக, “சொந்த புத்தி வேண்டாம், பெரியார் தந்த புத்தி போதும்” என்று ஒரு சொலவடையை உருவாக்கி உலவிட்டார்.

இந்தப் பொன்மொழி மூலம் தமது தத்துவ மலட்டுத்தனத்தைப் பெரியாரியலின் மலட்டுத்தனமாக மாற்றினார்.

ஒரு தத்துவ ஆசானை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோர், ஆசானின் கருத்துகளை அடுத்த தலைமுறைக்கு ஏற்றதாக தகவமைக்க வேண்டும். அவ்வாறு காரல் மார்க்சுக்கு லெனின், மாவோ போன்றவர்களும், காந்திக்கு வினோபா, செயப்பிரகாசர், குமரப்பா போன்றவர்களும் அமைந்தார்கள். வீரமணியோ, பெரியாரின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் சீடராகவே செயல்பட்டு வந்துள்ளார்.

சமூக வளர்ச்சியில், மொழியும், தேசிய இனமும் வகிக்கும் பாத்திரத்தை சமூக அறிவியல் வழியில் பெரியார் ஆய்வு செய்யவில்லை. உலகின் முதல் அறிவுச் சமூகம் தமிழ்ச் சமூகம் என்பதையும் அவர் அறியவில்லை. இன்று நாம் பேசும் சமூக சமத்துவம், நிகரமை - பொதுமை ஆகியவற்றின் அக்காலக் கருத்தியலாக “அறம்’’ என்ற கோட்பாட்டைப் பண்டைத் தமிழர்கள் உருவாக்கிப் போற்றியதையும் பெரியார் தெரிந்து கொள்ளவில்லை. இக்கருத்துகள் சங்க இலக்கியங்களில், திருக்குறளில் இன்ன பிற நூல்களில் இருப்பதையும் பெரியார் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே அவர், தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார். இவ்வாறு கூறியதன் வழியாகத் தமிழர்களையும் காட்டுமிராண்டிகள் என்று கணித்திருந்தார் என்று தெரிகிறது.

பெரியாரின் இப்பிழையான கணிப்புகளை வீரமணி போன்ற படிப்பாளிகள் சரி செய்திருக்க முடியும். பெரியாரை மறுக்காமலே, பெரியாரியலைத் தகவமைத்திருக்க முடியும். தேசிய இனம், மொழி குறித்து மறுமலர்ச்சிக் காலத்திலும் அதற்குப் பின்னரும் தோன்றிய ஐரோப்பிய இலக்கியங்களை, சமூக அறிவியல் நூல்களைக் கற்று வீரமணி போன்றவர்கள் பெரியாரியலைத் தகவமைத்திருக்க முடியும். ஆனால் அவர் புதியது படைக்கும் ஆற்றல் அற்றவராய், இருந்ததால் சொந்தபுத்தி வேண்டாம் என்று மற்றவர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

நடைமுறை அனுபவங்களைக் கொண்டும், நூல்களைக் கொண்டும் பலவற்றைக் கற்றுக் கொண்டவர் பெரியார். பெரிதும் நடைமுறை அனுபவங்களைச் சார்ந்திருந்தார். அதனால் அவர் கோட்பாடுகளையும் கருத்தியல்களையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தவில்லை. அவரது பகுத்தறிவுவாதம், விஞ்ஞானத்தை மட்டும் நம்புவதாக இருந்தது. கி.பி.17 ஆம் நூற்றாண்டில் இவ்வாறான விஞ்ஞான வழிபாட்டுடன் கூடிய பகுத்தறிவுவாதம் ஒரு கருத்தியலாக ஐரோப்பாவில் உருவானது.

பெரியார் இன்றிருந்தால் கூடங்குளம் அணு உலையை ஆதரிப்பார் என்று ஊகிக்க வாய்ப்புண்டு. ஆனால் தோழர்கள் கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் கூடங்குளம் அணுஉலையை எதிர்க்கின்றனர். இவ்விருவரும் செய்வதுதான் சரி. இவர்கள் பெரியாரியலை இத்துறையில் காலத்திற்கேற்பத் தகவமைக்கும் முயற்சியில் உள்ளனர்.

பெரியார் அனுபவவாதத்தைக் கடைபிடித்தார். அனுபவவாதம் (EMPIRICISM) என்பது பெரிதும் பட்டறிவையும் உற்றறிந்ததையும் சார்ந்து செயல்படுவது. இது கோட்பாடுகளையும் கருத்தியல்களையும் சார்ந்து செயல்படாது. பட்டறிவும் கருத்தியல் அறிவும் (IDEOLOGY) இணையும் போதுதான் ஒப்பீட்டளவில் சரியான முடிவுகளுக்கு வரமுடியும். மேலும் புதிய கருத்தியல்களை உருவாக்க முடியும்.

பெரியாரின் அனுபவவாதம், ஆரியப் பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்த்தது. ஆரிய இனத்தை எதிர்த்தது. ஆனால் தனக்குரிய இனக்கருத்தியலை அது உருவாக்கத் தவறியது. “எனக்கு இனப்பற்று, மொழிப்பற்று, தேசப்பற்று கிடையாது” என்றார். இனப்பற்று இல்லாத போது ஆரிய இன எதிர்ப்பு மட்டும் ஏன் வந்தது? இந்த முரண்பாடு பெரியாரின் அனுபவவாதச் செயல்களில் இருக்கத்தான் செய்யும்.

ஆரிய இனம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆரிய இனம் வர்ணாசிரம தர்மத்தை சமூகத்தில் திணிக்கிறது. எனவே பெரியார் ஆரிய இனத்தை எதிர்த்தார். இது அவரது பட்டறிவு அவர்க்குத் தந்த ஆதிக்க இன எதிர்ப்புக் கருத்தாகும். ஆனால் மனித குல வரலாற்றில் இனம், தேசிய இனம், இன முரண்பாடுகள், தேசிய இன விடுதலை ஆகியவை பற்றிய கருத்தியல்களை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, தமக்கு இனப்பற்று கிடையாது என்றார்.

அதே அனுபவவாதத்தின் அடிப்படையில், தமிழ் இனம் இந்தியாவில் இருந்தால், தில்லி ஆட்சியின் கீழ் இருந்தால் வர்ணாசிரமத் தர்மத்தைத் தமிழினத்திலிருந்து நீக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். 1973 செப்டம்பர் 17 விடுதலை ஏட்டின் பெரியார் பிறந்த நாள் மலரில் சுதந்திரத் தமிழ்நாட்டை வலியுறுத்தி எழுதினார் பெரியார்.

தில்லி ஆட்சியின் கீழ் இருக்கும் வரை தமிழர்கள் தாசி மக்களாகத்தான் இருக்க முடியும். எனவே சுதந்திரத் தமிழ்நாட்டிற்காகப் போராட வேண்டும் என்று தமது பிறந்த நாள் செய்தியாக அக்கட்டுரையில் எழுதினார். ஆனால் அதே 1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 இல் பெரியார் காலமானர்.

பெரியார் கொண்டு வந்து விட்ட இடம் தனித்தமிழ்நாடு இலட்சியம்! அவர்க்குப் பின் திரு வீரமணி போன்ற தலைவர்கள் தனித் தமிழ்நாடு, தமிழ்த்தேசியம், தமிழ் மொழிப்பற்று, தமிழ் இன வரலாற்றுப் பெருமிதங்களை உட்செரித்துப் புதிய பெருமிதங்களைப் படைக்க முனைதல் என்ற திசையில் இயங்கி பெரியாரியலை தகவமைத் திருக்க முடியும். வளர்த்திருக்க முடியும். அப்போக்கில் ஆரியம் படைத்த பெயரான திராவிடத்தை, தமிழின மறுப்புக் கருத்தியலை கை நழுவ விட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

தமிழ்நாடு விடுதலை இலட்சியத்தைப் பரப்பவும் அடையவும் கரடுமுரடான பாதைகளைக் கடந்தாக வேண்டும். பெரியார் ஈட்டித்தந்துள்ள பெரும் பீடம் இருக்கிறது. கொலுமண்டபத்தில் கூடி நின்று போற்றி பாடப் பல்லாயிரக் கணக்கானோர் இருக்கின்றனர். ஆட்சி பீடத்தில் யார் இருந்தாலும் பெரியார் நிறுவனத்தின் மீது ஆதரவு காட்டுவர்; ஆட்சி பீடத்தை அனுசரித்துப் போகும் பாதையை பெரியாரே காட்டியுள்ளார். சொகுசுகள் சூழ்ந்துள்ள இந்தப் பாதையை ஒதுக்கி விட்டு, தனித் தமிழ்நாடு பற்றி கடைசிக் காலத்தில் பெரியார் வலியுறுத்திய கரடுமுரடான பாதையில் ஏன் செல்ல வேண்டும் என்று வீரமணி அவர்களும் அவருடைய தோழர்களும் எண்ணியிருக்கக் கூடும்.

பார்ப்பனர் எதிர்ப்பு, பகுத்தறிவுப் பரப்புரை, இட ஒதுக்கீடு என்ற அளவில் பெரியாரியலை வரம்பிட்டுக் கொண்டனர்.

பெரியாருக்குப் பின் வந்த புதிய தலைமுறையினர் தமிழின வரலாறு, தமிழர் அறிவின் சிறப்பு, தமிழர் அறம், மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், ஈழ விடுதலைப் போர் தரும் படிப்பினைகள் என பல வகைக் கருத்தியல்களையும் ஓரளவு கற்று, நடைமுறை அனுபவங்களையும் கொண்டு “தமிழ்த் தேசியம்’’ என்ற கருத்தியலை வளர்த்து வருகின்றனர். தமிழ்நாட்டின் விடுதலை முழக்கம், தமிழ்த் தேசியத்தின் உயிர் நாடியாக உள்ளது.

இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஆரியப் பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, சமத்துவப்பொருளியல் கொள்கை, பெண் விடுதலை, சூழலியல் பாதுகாப்பு எனப் பலவகை ஆயுதங்களைத் தாங்கியதாகப் புரட்சிகரத் தமிழ்த் தேசியம் களத்தில் இறங்கியுள்ளது. புரட்சிகரத் தமிழ்த் தேசியத்தை முன் வைப்போர் தேர்தலில் பங்கேற்பதில்லை. பணம் பதவி விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாதவர்களைத் தமிழ்த் தேசிய புரட்சிக்குத் திரட்டி வருகிறது.

புரட்சிகரத் தமிழ்த் தேசியத்தின் முன்னேற்றத்திற்குத் தடை கற்களைத் திராவிடம் என்ற பெயரிலும், பெரியாரியம் என்ற பெயரிலும் திராவிட இயக்கத்தினர் போடுகின்றனர். இந்திய ஏகாதிபத்தியத்துடன் நேர்முக மாகவோ அல்லது மறைமுகமாகவோ திராவிடத்தார் உறவு வைத்துக் கொண்டுள்ளனர்.

அது மட்டுமின்றி தெலுங்கர், கன்னடர், மலையாளி, தமிழர் ஆகிய நால்வருக்கும் ஒற்றைத் திராவிடக் கோவணம் கட்டி விடுகின்றனர். தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தங்களைத் திராவிடர்கள் என்று அம்மாநிலங்களில் கூறிக்கொள்வதுமில்லை. தமிழர்களைத் தங்களின் இன உடன் பிறப்புகளாகத் கருதுவதுமில்லை. அம்மூவரும் தமிழர்களைப் பகைவர்களாகவே கருதுகிறார்கள்.

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோர் ஆரிய இனக் கலப்பாலும், ஆரிய மொழிக் கலப்பாலும் உருவான இனங்களாவர். எனவே அவர்கள் சமற்கிருத மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆரியப் பார்ப்பனர்களுடன் உடன் பிறப்பு உறவு கொண்டுள்ளனர். ஆனால் தமிழர்களைத் தங்களின் போட்டியாளர்களாகக் கருதுகிறார்கள்.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகியவற்றில் தமிழகத்திற்குள்ள உரிமைகளைப் பகையுணர்வுடன் மறுக்கிறார்கள். அவர்களை எல்லாம் சேர்த்துத் திராவிடம் பேசுகிறது பெரியாரியம். எனவே பெரியாரியத்தை - இம்முனையில் மறுக்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு ஏற்படுகிறது.

பால் தயிரான பிறகு, அத்தயிர் மீண்டும் பாலாகாது என்பது போல், தமிழரிலிருந்து பிரிந்த தெலுங்கர், கன்னடர், மலையாளி முதலானோர் மீண்டும் தமிழர் களின் உடன் பிறப்புகளாக முடியாது என்றார் மொழி ஞாயிறு பாவாணர். பாலையும் தயிரையும் ஒன்றாகக் கலந்து திராவிட மோர்க் கடைவது தமிழினத்திற்குத்தான் இழப்புகள் தரும். எனவே, தமிழினத்தைத் தன்னழிவுப் பாதைக்கு அழைக்கும் திராவிடக் கருத்தியலை தமிழ்த் தேசியர்கள் எதிர்க்கின்றனர்.

பெரியாரியலில் உள்ள இச்சிக்கலுக்கு இன்றையப் பெரியாரியல் சிந்தனையாளர்கள் தக்க விடை காண வேண்டுமே தவிர, தமிழ்த் தேசியதைப் பகைச் சிந்தனையாகக் கருதக் கூடாது.

திராவிடர் என்றால் அதில் பார்ப்பனர் வரமாட்டார்; தமிழர் என்றால் அதில் பார்ப்பனர் வந்து சேர்ந்து விடுவார் என்று ஒரு வரலாற்றுப் புரட்டை திராவிடர் கழகம்நீண்ட காலமாகச் சொல்லி வருகிறது. திராவிடர் என்பதிலும் பார்ப்பனர் வருவார்; தமிழர் என்பதிலும் பார்ப்பனர் வருவார்.

செயலலிதா திராவிடப் பிரிவொன்றுக்குத் தலைமை தாங்குகிறார். அவர்க்கு சமூக நீதிகாத்த வீராங்கனை பட்டம் கொடுத்தார் வீரமணி.

ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டு, தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு வாழும் பார்ப்பனர்கள் தமிழர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது இயல்பே. திராவிடம் என்பது ஆரியர்களின் உருவாக்கம் என்பதால், தென்னாட்டில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழும் பார்ப்பனர்கள் தங்களைத் திராவிடர்களாகக் கூறிக் கொண்டனர். கௌசீக கோத்திரத்தைச் சேர்ந்த பார்ப்பனரான திருஞானசம்பந்தரை திராவிடச்சிசு என்றனர். மட்டைப்பந்து வீரர் ராகுல்திராவிட் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகம் சென்ற பார்ப்பனக் குடும்பத்தவர். மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரி பேராசிரியரான மணிதிராவிட் பார்ப்பனரே! பார்ப்பனர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வர் என்பதற்கான நிகழ்காலச் சான்றுகளாவர் இவ்விருவரும்.

மிக மிகச் சிறுபான்மையாய் உள்ள பார்ப்பனர்கள் தங்களைத் தமிழர்கள் என்று கூறிக் கொள் வார்கள் என்பதற்காகத்தாங்கள் பிறந்து வளர்ந்த தமிழினத்தையே மறுக்கும் வியத்தகு தத்துவம் திராவிடஇயலுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க முடியும். மூட்டைப் பூச்சியைக் காரணம் காட்டி வீட்டைக் கொளுத்தி விட்டது போல் வரலாற்றுப் பெருமிதங்கள் பல படைத்த உலகின் முதல் மாந்த இனமான தமிழினத்தை மறுக்கும் செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். பெருமைமிகு தமிழினத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இந்தத் தன் இழிவை எதிர்க்காமல் கொஞ்சுவார்களா?

தெலுங்கு, கன்னடம், மலை யாளம், ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழகத்தில் வாழ்வோர் “தமிழர்” என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அதற்காகத்தான் தமிழரைக் கைவிட்டு திராவிடரை ஏற்கிறோம் என்று சொன்னால் இதைவிடக் கொடிய தமிழினத் துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

சமூக அறிவியலுக்கும் தமிழினத்திற்கும் பொருந்தாத “திராவிட இனக்கொள்கையைத் திணிப்பவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர, இக்கொள்கையை எதிர்க்கும் தமிழ்த் தேசியர்கள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளத் தேவை இல்லை.

திரு வீரமணி அவர்கள் ஈழத் தமிழர்களை - ஈழத் திராவிடர் என்று ஏன் அழைக்கவில்லை? அவர் தம்மைத் “திராவிடர் தலைவர்” என்று அறிவிக்காமல் “தமிழர் தலைவர்’’ என்று அழைத் துக் கொள்ள அனுமதிப்பது ஏன்? “ஊருக்குத்தானடி உபதேசம் அது உனக்கும் எனக்கும் இல்லையடி’’ என்ற பாணியா?

தமிழ்த் தேசியத்தைப் புறக்கணிக்கத் தூண்டும் இராசபாளையம் தீர்மானத்தில் தமிழர் என்ற சொல்லையும் திராவிடர் என்ற சொல்லையும் மாற்றி மாற்றிப்போட்டுக் குழப்புகிறார், ஏன்? திராவிடர் என்ற ஒரே வரையறுப்பில் நிற்க வேண்டியது தானே! “திராவிடர்” என்று சொல்வது இன வரையறுப்பின் படியும் தேசிய இனவரையறுப்பின் படியும் சரியில்லை என்ற உறுத்தல் அவர்களுக்கே இருப்பதல்தானே, திராவிடர், தமிழர் என்ற சொற்களை மாற்றி மாற்றிப் போட்டு சமாளிக்கிறார்கள்!

மேற்படித் தீர்மானத்தில் அவர்கள் சொல்கிறார்கள்:

“திராவிடர் என்ற வரலாற்றுரீதியான இனச்சொல் ஆரியர் - பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புக் கான குறியீடாகக் கொள்ளப்பட்டு வெற்றியும் காணப்பட்டு வருகிறது.”

வரலாற்று ரீதியான சொல் என்கிறார்களே, எந்த வரலாற்றில் “திராவிடர்” என்ற சொல் இருக்கிறது? உறுதியாகச் சொல்வோம், தமிழர் வரலாற்றில் தங்களைத் திராவிடராகச் சொல்லிக் கொண்ட நிகழ்வு சங்ககாலத்திலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரை இல்லை. ஆரியவரலாற்றிலும் நூல்களிலும்தான் “திராவிட” என்ற சொல் இருக்கிறது.

சரி, ஆரியத்தின் தயவினால் பத்தரை மாற்றுத் தங்கமாக, “திராவிடம்” என்ற “இனமானச் சொல்” வீரமணியார்க்குக் கிடைத்த பின் மாற்றுக் குறைந்த சொல்லான “தமிழர்” என்பதையும் அதே தீர்மானத்தில் சொல்லிக் கொள்வதேன்?

“தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் தளங்களில் அனைத்து உரிமைகளுக்காகவும் பாடுபட்டு வந்ததும், பாடுபட்டு வருவதும், பாடுபடப் போவதும் தந்தை பெரியார் அவர்களின் அடிப்படைக் கொள்கையும் இயக்கமுமேதான் என்பதை இம்மாநாடு பிரகடனப் படுத்துகிறது.” என்கிறது அத்தீர்மானம்.

எதிலும்உறுதியற்ற இரட்டை நிலைபாடு காரணமாக, திராவிடர்-, தமிழர் என்ற இரண்டு சொற்களுக்கிடையே ஊசலாடுகிறது திராவிடர் கழகம்.

தமிழ்நாடு என்று கூறிவிட்டு, பெரியாரைப் பின் பற்றி அதன் விடுதலை பற்றிப் பேசாமல், “தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளுக்காகவும் போராடும்” என்கிறது தீர்மானம். நாங்கள் தமிழ்த் தேசியம் போல் தனித் தமிழ்நாடு கேட்கவில்லை; அனைத்து உரிமைகளுக்காகவும் போராடுவோம் என்று பொது வாகத்தான் சொன்னோம்’’ என்று இந்திய ஏகாதிபத்தியத்திற்கு சாடை காட்டுகிறதோ தீர்மானம்?

இந்திய தேசியத்தைப் புறக்கணிப்பீர் என்று திராவிடர் கழக இளைஞரணி தீர்மானம் போட வில்லை. மாறாக “தமிழ்த் தேசியத்தைப் புறக்கணிப்பீர்’’ என்று தீர்மானம் போட்டிருக்கிறது. இவர்கள் சுயமரியாதைக்காரர்களாம்! தன் இனத்தை அடையாளம் காணமுடியாதவர்கள் தனது மரியாதையை அடையாளம் காண முடியுமா? அடிமைப்பட்டுக் கிடக்கும் தன்னினத்தின் விடுதலைக்குப் போராடாமல் அந்த இனத்தின் சுயமரியாதையை மீட்டிடமுடியுமா?

பெரியாரும் திராவிடர் இயக்கமும் போராடியதால்தான் தமிழர்கள் கல்வி பெற முடிந்தது, வேலை பெற முடிந்தது என்கிறது அத்தீர்மானம். தமிழ் மக்கள் கல்வி கற்க பெரியார் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஆனால் அவர்க்கு முன் தமிழர்களில் கற்றவர்களே இல்லை எனற அளவுக்குச் சென்றுதான் பெரியாரை பாராட்ட வேண்டும் என்று கருதக்கூடாது. “சென்னை புத்தகச் சங்கம்’’ என்ற புத்தகக் கண்காட்சி சென்னை பெரியார் திடலில் 18.4.2013 அன்று தொடங்கிய போது, அதில் பேசிய வீரமணி அவர்கள், பெரியார் பிறக்க வில்லையென்றால் தமிழர்களுக்குக் கல்வி அறிவுக் கிடைத்திருக்காது என்றார். (தினத்தந்தி,- மாலை மலர்)

திராவிடர் இயக்கத்திடம் நாம் கேட்பது, பெரியாரைக் கடவுள் ஆக்காதீர். பகுத்தறிவுப் பக்தி மார்க்கத்தைப் பரப்பாதீர்! பெரியார் பிறப்பதற்கு முன்னால், தமிழர்கள் அறிவும் மானமும் அற்ற விலங்குக் கூட்டமாக இருந்தார்கள் என்று பேசி தமிழினத்தை இழிவுபடுத்தாதீர். தமிழினத்தின் வரலாறே பெரியார் பிறந்ததிலிருந்துதான் தொடங்குகிறது என்பது போல் பாசிசப் பரப்புரை செய்யாதீர்.

தமிழ்த் தேசியம் சாதியைப் பாதுகாக்கிறது என்று அத்தீர்மானத்தில் கூறியுள்ளார்கள் சாதி ஒழிப்பில் தீவிரம் காட்டுவது தமிழ்த் தேசியமே!

ஆரியத்தையும் பார்ப்பனியத்தையும் எதிர்த்த மூவாயிரம் ஆண்டு வரலாறு தமிழர்களுக்குச் சொந்தமானது. 19 ஆம் நூற்றாண்டில் வர்ணசாதி முறையையும் பார்ப்பனித்தையும் எதிர்த்து முழங்கி சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற நிகரமை (சோசலிச) சங்கத்தை உருவாக்கியவர் வள்ளலார். (1823 - 1874) 19 ஆம் நூற்றாண்டில் மார்க்க சகாய ஆசாரி என்ற தமிழறிஞர் பார்ப்பன புரோகிதரைப் புறக்கணிக்கும் திருமண முறைக்காக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, வாதம் செய்து வெற்றி பெற்றார்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பெரியார்க்கு முன்பே, பார்ப்பனியத்தை எதிர்த்துத் தத்துவச் சமர்புரிந்துவர் அயோத்திதாசப் பண்டிதர்.

பெரியார் பொதுவாழ்வில் அடியெடுத்து வைப்பதற்கு முன் 1905 ஆம் ஆண்டு, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் “பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும்’’ என்ற தலைப்பில் ஆரிய மேலாதிக்கத்தைச்சாடி மறைமலை அடிகள் உரையாற்றினார். இருபதாம் நூற்றாண்டில் ஆரியர்க் கெதிரான தமிழர் போராட்டத்தின் தொடக்கமாக, மறைமலை அடிகள் உரை அமைந்தது. அவர் 1916 இல் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் தமிழர் மறுமலர்ச்சிச் சிந்தனையின் தொடக்கம். பார்ப்பனப் புரோகிதர் நீக்கிய தமிழ்ச் சடங்கு முறைகள் சமற்கிருதம் நீக்கிய தூய தமிழ்நடை போன்ற வற்றின் தொடக்கம் மறைமலை அடிகளாரின் தனித் தமிழ் இயக்கம்! அவரிடமிருந்து திராவிட இயக்கம் எடுத்துக் கொண்டவை தாம் புரோகிதர் நீக்கிய திருமண முறையும், நல்ல தமிழ்ச் சொற் பொழிவுகளும்!

மனிதனை மனிதன் அடிமைப்படுத்தாத, மனிதனை மனிதன் சுரண்டாத பொதுவுடைமைத் தத்துவத்தை பெரியாருக்கு முன் தமிழ்நாட்டில் அறிமுகப் படுத்தியவர்கள் பாரதியார், திரு.வி.க., சிங்காரவேலர் ஆகியோர் ஆவர்.

ஓர் இனத்தின் மறுமலர்ச்சிக்கும் அதன் விடுதலைக்கும் போராட முன்வரும் இயக்கம் அந்த இனத்தின் வரலாற்றைச் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தனக்கு முன் மறுமலர்ச்சிக்கும் இன முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட சான்றோர்களின் வரலாற்றை அமைப்புகளின் வரலாற்றை மறைக்காமல் இளந்தலைமுறையினர்க்குச் சொல்ல வேண்டும்.

தமிழ்த் தேசியம் பெரியார் உள்ளிட்ட தனது முன்னோர்களின் சிறந்த பங்களிப்புகளை மறைக்காமல், சமகாலத் தமிழர்களுக்கு வழங்க திறந்த மனதுடன் முயல்கிறது. ஆனால் திராவிடர் இயக்கமோ, பெரியாரிலிருந்துதான் தமிழர்களின் வரலாறே தொடங்குவது போல் மூடுமந்திரம் செய்கிறது. அந்த மூடு மந்திர மனநிலையின் இன்னொரு வெளிப்பாடுதான் தமிழ்த் தேசியத்தை புறக்கணிக்கக் கோரும் அதன் தீர்மானம்!

Pin It