சூதாட்டமும் விபச்சாரமும் ஐ.பி.எல். மட்டைப் பந்து போட்டிகளின் பிரிக்க முடியாத உறுப்புகள் என்பதை அம்பலப்படுத்தும் வகையில், கடந்த 2010ஆம் தமிழர் கண்ணோட்டம் மே இதழில், ஐ.பி.எல். குறித்த கட்டுரைக்கு, ‘சூதாட்டம் + விபச்சாரம் = ஐ.பி.எல்’ என்று தலைப்பிட்டிருந் தோம். இது எந்தளவிற்கு சரி என்பதை நடைமுறை நிகழ்வுகள் உணர்த்துகின்றன. 

ஐ.பி.எல். அணி விளையாட்டு வீரர்கள் பலரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதும், அணி வீரர்களை தமது கைக்குள் போட்டுக் கொள்ள சூதாடிகள் விலைமாதுகளைப் பயன்படுத்தியதும், அவற்றுக்கு அணி உரிமையாளர்களே உடந்தையாக இருந் ததும் தற்போது அம்பலமாகியுள்ளது.

ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத்சண்டிலா, அங்கீத்சவான் ஆகிய மூன்று ஆட்டக்காரர்களையும், அவர்களை வைத்து சூதாடிய சூதாடிகளையும் டெல்லி மற்றும் மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, சென்னை, மும்பை, ஹைதராபாத் மாநகரங்களில் பல இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு சூதாடிகள் பலர் கைது செய்யப் பட்டனர்.

இதன் உச்சமாக, இந்திய மட்டைப்பந்து விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவரும், ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான சென்னை அணியின் உரிமையாளருமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முதலாளி சீனிவாசனுக்கு, இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனிவாசனின் மருமகன், குருநாத்மெய்யப்பன், சென்னை ஐ.பி.எல். அணியின் தலைமை செயல் அதிகாரியாக அறியப்பட்டவர். அவர் மும்பையில் கைதான சூதாடிகளுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தது, கண்டறியப்பட்ட நிலையில், அவரை மும்பை காவல்துறையினர் நேரில் வரவழைத்து, கைது செய்தனர். இவரது கைதுக்குப் பின்னர், பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனுக்கு இதில் தொடர்பிருக்குமோ என காவல்துறை வட்டாரத்தில் ஐயம் எழுந்துள்ளது. சென்னை ஐ.பி.எல். அணியை போட்டியை விட்டே நீக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக் கின்றன.

ஐ.பி.எல். மட்டைப்பந்து போட்டிகளை பல்லாயிரம் கோடிகள் புரளும் சூதாட்டக் களமாக உருவாக்கிய அதன் முதல் ஆணையரான லலித் மோடி, 2009ஆம் ஆண்டு பினாமி பெயரில் தமக்கென சில அணிகளை வாங்கிக் கொள்ள ஆசைப்பட்டு அம்பலமானார். 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்றதை முன்னிட்டு ஐ.பி.எல். போட்டிகளை தள்ளி வைக்க நடுவண் அரசு கோரிய போது, அரசுக்கே சவால்விடும் வகையில் அப்போட்டிகளை தென்னாப்பிரிக்காவில் நடத்திக் காட்டியவர்தான் இந்த லலித்மோடி.

ஆனால், அப்பொழுதெல்லாம் அதை கண்டு கொள்ளாத இந்திய அரசு, தன்னுடைய அமைச்சரவையில் அங்கம் வகித்த சசிதரூர் இந்த சூதாட்டக்களத்தில் பங்குதாரராக பணியாற்றியது அம்பலமானபிறகுதான், லலித்மோடியை ஒப்புக்கென்று விசாரித்தது.

விசாரணையின் போது லலித்மோடி, கோடிக்கணக்கில் ஊழல் செய்தது அம்பலமான பிறகும் கூட, அவரை கண்துடைப்புக்காக கைது செய்த நடுவண் அரசு, பின்னர் அவர் இலண்டன் தப்பிச் செல்லும் வரை வேடிக்கை பார்த்தது.

ஐ.பி.எல். விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னர் நடத்தப்படும் சொகுசு விருந்துகளில், போதைப் பொருட்கள் பகிரப்படுவதும, ‘வீரர்’ களுக்கு விலை மாதர்களை அளிப்பதும், பலமுறை அம்பலப்பட்டதுதான். தற்போது கூட, ஸ்ரீசாந்த் கைதான அறையில், ஒரு விலைமாது உடனிருந்ததை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. சூதாடிகள் பலரும், விளையாட்டு வீரர்களை தமது விருப்பத்தின் பேரில் விளையாட, விலைமாதுக்களையே அனுப்பினோம் என வாக்குமூலங்கள் அளித்துள்ளனர். இவ்வாறு, ஐ.பி.எல். போட்டிகளின் மூலம் விபச்சாரம் வளர்க்கப்படுகிறது.

மைதானத்தில் நடைபெறுகின்ற ஐ.பி.எல். போட்டிகள் 30 விநாடிகள் தாமதத்திற்குப் பிறகு தான் தொலைக்காட்சிகளில் தெரிய ஆரம்பிக்கும். இந்த ஒளிபரப்பு இடைவெளியைப் பயன் படுத்திக்கொள்ளும் ஐ.பி.எல். சூதாடிகள், அதை மைதானத்தில் உள்ள தமது ஆட்களின் மூலம் முன்கூட்டியே என்ன நடைபெற்றது எனத் தெரிந்து கொண்டு, அந்த 30 விநாடிகளில் நடக்கும் நிகழ்வுகளில் ரன் எவ்வளவு, விக்கெட் எத்தனை என்பது வரை அனைத்தையும் வைத்து சூதாட்டம் நடத்துவார்.

இன்னொரு வகையில், விளையாட்டு வீரர்களிடம் எதை எதை செய்ய வேண்டும், எப்பொழுது ஆட்டமிழக்க வேண்டும், எப்பொழுது தவறாக பந்து வீச வேண்டும் என முன்கூட்டியே சூதாடிகள் நேரடியாக பேசி முடிவு செய்யும் ‘ஸ்பாட் பிக்சிங்’ என்ற முறையிலும் சூதாட்டம் நடைபெற்றுள்ளது.

பெரும் நட்சத்திர விடுதிகளில் நடைபெறுகின்ற இவ்வாறான சூதாட்டங்களில், பணவெறி பிடித்த முதலாளிகள் பலரும் பங்கேற்றுச் சூதாடுவதோடு மட்டுமின்றி, பணத்தாசையுடன் திரியும் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் சூதாடி பணமிழக்கின்றனர். பணமிழந்த விரக்தியில் உயிரையும் இழக்கின்றனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு, ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த, 19 அகவையான பொறியியல் கல்லூரி மாணவர் இரவிச்சந்திரா என்பவர், விசாகப்பட்டினம் நகரில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் 5 இலட்சம் தொகையை இழந்த நிலையில், அந்தக் கடனை அடைப்பதற்காக பக்கத்து வீட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் 12 அகவை மகனைக் கடத்திக் கொன்றான். தற்போது, அதே போன்று ருபாய் 30 இலட் சத்தை ஐ.பி.எல். சூதாட்டத்தில் இழந்து கடனாளியான, மும்பை மாநகரைச் சேர்ந்த எம்.பி.ஏ. மாணவர்கள் இருவர், 13 அகவையான தொழிலதிபர் மகன் ஒரு வரை, பணத்திற்காக கடத்திக் கொன்றுள்ளனர்.

24.04.2013 அன்று, ஹைதராபாத் மாநகரில், ஐ.பி.எல். சூதாட்டத்தில் ரூபாய் 50,000-தை இழந்த 30 அகவையான பூமையா என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 23.05.2013 அன்று ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷத்பூரைச் சேர்ந்த 23 அகவையான நித்தின்கிர்வால் என்ற இளைஞர், ஐ.பி.எல். சூதாட்டத்தில் பணமிழந்ததன் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்தது.

இவ்வளவு வெளிப்படையாக சூதாட்டம், விபச்சாரம், மோசடிகள் என அம்பலப்பட்டு நிற்கும் ஐ.பி.எல். போட்டிகளை தடை செய்ய முடியாதென 21.05.2013 அன்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுதான் வேடிக்கை.

மட்டைப்பந்து விளையாட்டையே தடை செய்ய வேண்டும் என்று நாம் கோரவில்லை ஐ.பி.எல். சூதாட்ட விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.

இந்நிலையில், மட்டைப் பந்துப் போட்டிகளின் போது நடக்கும் சூதாட்டத்திற்கு சட்டரீதியான அனுமதியைக் கொடுங்கள் என முதலாளிகளின் சங்கமான ‘பிக்கி’ (FICCI) யோசனைக் கூறியுள்ளது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஆண்டுக்கு 3 இலட்சம் கோடி புரளுவதாகவும், அதற்கு சட்ட அனுமதியளித்து ஒழுங்குபடுத்தினால் 20 ஆயிரம் கோடி வரி வருமானம் கிடைக்கும் என்று அதற்கு ஒரு நியாயம் கூறுகிறது. நாங்கள் நடத்தும் சூதாட்டத்தை அரசால் தடுத்துவிட முடியாது என சவால் விடும் செயல் இது.

இந்த வாதத்தை ஏற்றால் கற்பழிப்புகள் உள்ளிட்ட அனைத்து குற்றங்களையும் ஏற்று ஒழுங்குமுறை சட்டம் போட வேண்டிவரும்.

ஐ.பி.எல். அமைப்பையும், அதன் போட்டிகளையும் முற்றிலுமாக தடைசெய்வதே, இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

Pin It