கல்வி உதவித்தொகை?

கல்விஉதவித்தொகை என்பது என்ன? தகுதியான மாணவர்களுக்கு, பொருளாதாரக் குறைபாட்டால், அவர்களது படிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக, அரசு மற்றும் அறக்கட்டளைகள் தருகின்ற ஒரு உதவியே கல்வி உதவித் தொகை என்பதாகும். அது பயிற்சியில் சேருகின்ற அத்தனைபேருக்கும் கிடைப்பது அல்ல.

மேலும் முக்கியமான செய்தி ஒன்றினை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றுபயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் வணிக நிறுவனங்களாகவே உள்ளன. அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைப்பது இல்லை; அல்லது இவை எந்த ஒரு அறக்கட்டளையாலும் சமுதாய பணிக்காக நடத்தப் படுவதும் இல்லை. அப்படி இருக்கும் போது இவர்கள் எப்படி உதவித் தொகை தர முடியும்?

மேலும் ஸ்காலர்ஷிப் பெறுவதற்காக இவர்கள் நடத்துகின்ற தேர்வுகளும், வழிமுறைகளும் கேலிக் குரியவையாகும். இவர்கள் நடத்துகின்ற தேர்வுகளில் கேட்கப்படும் சில கேள்விகள் :

இந்தியாவின் தலைநகரம் எது?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் யார்?

எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்?

இப்படித்தான் இருக்கின்றன.

இத்துடன் 90% மதிப்பெண் பெற்றிருந்தால் 90% உதவித் தொகை; 75% மதிப்பெண் பெற்றிருந்தால் 75% மற்றும் 50% குறைவாக உள்ளவர்களுக்கு 40% உதவித்தொகை தரப்படு வதாகவும் அறிவிக்கின்றனர்.

அதாவது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் குறைந்த பட்சம் 40% உதவித்தொகை உண்டு என்பதுஉறுதியாகிறது. இதனால் கணினியின் அடிப்படை பற்றி அறிந்து கொள்வதற்கான பயிற்சிக் கட்டணமாக இவர்கள் நிர்ணயித்துள்ள 20 ஆயிரம் ரூபாயில் 8 ஆயிரம் ரூபாய் ஸ்கா லர்ஷிப் போக மீதம் ரூபாய் 12 ஆயிரம் கட்டணம் செலுத்தினால் போதும்; அதையும் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் கட்டினால் போதும் என்கின்றனர்.

கணினி வரைகலையில் அனிமேஷன் பகுதியில் இந்த மோசடி இன்னும் பெரிய அளவில் உள்ளது. தங்களது பயிற்சி கட்டணமான ஒன்றரை லட்சத்தில் சுமார் 80 ஆயிரம் ஸ்காலர்ஷிப் போக மீதி ரூபாய் 70ஆயிரம் கட்டினால் போதும்; இதையும் மாதத் தவணையில் கட்டலாம் என்று தெரிவிக்கின்றனர். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அல்ல; எண்பதாயிரம் ரூபாய் கிடைக்கின்றது (ஸ்காலர் ஷிப் என்ற பெயரில்) என்பதால் எந்தவித கேள்வியும் கேட்காமல் பணத்தைக் கட்டி விடுகின்றனர். இதுவே இன்று பெருமளவில் நடைபெறு கின்றது.

சமீபத்தில் நமது நண்பர் ஒருவரின் துணைவியாருக்கு ஏற்பட்ட அனுபவத்தைத் தெரிவித்தே ஆக வேண்டும். இது வேடிக்கையானது மட்டுமல்ல கவலைக்குரியதும் கூட. அவர் ஒரு நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகளாக பணிபுரிந்த நிலையில் அதிலிருந்து விருப்பு ஓய்வு பெற்றார். கையில் சுமார் 1.5 லட்சம் பணம் கிடைத் துள்ளது. வேறு வேலை செல்லுவதற்காகவும், தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அடிப்படை கணினிபயில வேண்டும் என்று ஒரு பயிலகத்திற்கு சென்றுள்ளார். அவர்களிடம் தன்னுடைய நிலையை ஒளிவு மறைவு இல்லாமல் கூறி விட்டார். அடுத்து நடந்தது தான் கொடுமை.

அங்கிருந்த ஊழியர் இவருக்கு கொடுத்துள்ள அறிவுரை: நீங்கள் 15 வருட அனுபவம் உள்ளவர்; சாதாரண பயிற்சி எடுக்க வேண்டாம்; இன்று அனிமேஷன் துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு நிறைய வாய்ப்பு உள்ளது; குறைந்தது 20 ஆயிரம் சம்பளமும் தருவார்கள்; எனவே நீங்கள் அனிமேஷன் பயிலுங்கள்; ஒரு வருட கால பயிற்சி உள்ள இதில் நாங்கள் 8 மென் பொருட்களில் உங்களுக்கு பயிற்சி தருகிறோம். இதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம்; ஆனால் உங்களைப் போன்ற அனுபவம் உள்ளவர்களுக்காக 60 ஆயிரம் மட்டுமே வாங்குகின்றோம். அதுவும் இந்த ஒரு வாரம் மட்டுமே, எனவே வாய்ப்பைத் தவறவிடாமல் உடனே சேருங்கள். எங்கள் பயிற்சியும் உங்கள் அனுபவமும் சேர்ந்து உங்களுக்கு ஒரு நல்ல எதிர் காலத்தைக் கொடுக்கும்

இப்படி ஒரு உரையாடலை கேட்ட பிறகு அவர் என்ன செய்திருப்பார் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். பயிற்சி எல்லாம் முடித்த பிறகு அவர் நம்மை சந்தித்த போது தெரிவித்தது தான் இதில் உச்சக்கட்ட காட்சியாகும்? எனக்கு எட்டு அப்ளிகேஷன்களின் பெயர் தெரியும்; ஆனால் செயல்முறையாக அவர்கள் சொல்லி கொடுத்தது எதுவும் புரியவில்லை; நான் மீண்டும் உங்களிடம் பயில வேண்டும். நான் ஏற்கனவே அங்கு பயிற்சி கட்டணம் செலுத்திவிட்டதால் எனக்கு இலவசமாக உங்கள் பயிலகத்தில்சொல்லிக் கொடுங்கள் என்றார்.

இவர்போல பல நபர்கள் நம்மிடம் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதன் விளைவே இந்தக் கட்டுரையாகும். மற்றவர்களைப் பற்றி நாம் வருத்தப்படவில்லை. ஆனால் இன்று கணினி வரைகலைப் பகுதிக்கு ஏராளமான நபர்கள் பணிக்கு தேவை என்ற நிலையில், பயிற்சி முடித்து கையில் ஒரு சான்றிதழுடன் வருபவர்களின் தரம் நம்மை கவலைக்கு உள்ளாக்குகிறது. பொருள், நேரம் அனைத்தையும் செலவு செய்து ஒன்றும் இல்லாமல் இருக்கும் இவர்களைப் போன்றவர்கள் இனியும் உருவாகக் கூடாது என்பதே நமது விருப்பம்.

எப்படி தெரிவு செய்வது?

இத்தனை குழப்பங்கள், தொல்லைகள் நிறைந்ததாக உள்ள இந்த கணினி பகுதியில் பயிற்சி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? பயிலகத்தை எப்படி தேர்ந்தெடுப்பது? இவை போன்றவற்றிற்கு விடை காண முயற்சிக்கலாம்.

கணினி பயிற்சி பெற விரும்புபவர்கள் முதலில் தங்களுக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். கணினியின் அடிப்படை, அலுவலக பயன்பாட்டிற்கான எம்.எஸ்.ஆபீஸ், கணினி வரைகலை, அனிமேஷன், வலைதள பக்க வடிவமைப்பு என்று எந்தப் பகுதியில் பயிற்சி வேண்டும் என்பதை சரியான முறையில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். இதில் நீங்கள் அதிக நேரத் தையும், சரியான ஆலோசனை களையும் பெற்று முடிவு செய்ய வேண்டியது அவசியம்.

அடுத்து எந்த ஒரு பயிற்சியைப் பெறுவதற்கும் அடிப்படைத் தகுதி என்று ஒன்று தேவை என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் சேருகின்ற பயிலகத்தில் அது பற்றிக் கூறவில்லையென்றாலும் உங்கள் மனதில் இதனை பதிய வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட அடிப்படைத் தகுதி உங்களிடம் இல்லையென்றால் முதலில் அதனைப் பெறுவதற்கான வழியை காணுங்கள்; அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு கணினி பயிற்சிக்குப் போகலாம்.

எடுத்துக் காட்டாக எம்.எஸ் ஆபீஸ் பயில தட்டச்சு அடிப்படையாக தேவை; டேலிபயில அக்கவுண்டன்சி என்ற கணக்கியல் அறிந்திருக்க வேண்டும். கணினி வரைகலைப் பகுதிக்கு சிறிதளவாவது அச்சுத்துறை பற்றிய அறிவு தேவை. பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக்குப் போகும் போது, +2வில் நீங்கள் பயின்ற பாடத்திற்குத் தொடர் புடையதைத்தானே பட்டப் படிப்பில் தெரிவு செய்யவேண்டிய நிலை உள்ளது. இப்படி ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு அடிப்படை தேவை உள்ளது. உங்களது பகுதிக்கான அடிப் படை பற்றி அறிந்து கொள்ள முயற்சியுங்கள்.

கணினி பயிற்சி நிலையத்தை தேர்வு செய்வது பற்றி சிந்தியுங்கள்.முதலில் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இலவசம் என்று எதுவும் கிடையாது;கிடைக்காது.  ஏதேனும் ஒன்றிற்கு விலை கொடுத்தால் மட்டுமே மேலும் ஒன்று இணைப்பாகக் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் போது இரண்டுமே தரம் குறைவாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே முதலில் விலை மலிவாகவோ, இலவசமாகவோ கிடைக்க வேண்டும் என்பதை விட்டு, சரியான விலையில் சரியான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

கணினி பயிற்சிக்குக் கட்டணம் செலுத்தினால் இலவச மாகத் தரப்படும் லேப்டாப்புகளின் நிலை இப்படித்தான் இருக்கும். அதன் நினைவகத்திறன் உள்ளிட்ட அனைத்தும் அடிப்படை நிலை வேலைகளுக்கும் சரியாக பயன்படாத நிலையிலேயே இருக்கும்.

நீங்கள் தொடர்பு கொள்ளும் பயிலகத்தின் அனுபவம், அங்குள்ள ஆசிரியர்களின் தகுதி போன்றவற்றைஅறிந்து கொள்ள முயற்சியுங்கள். அந்தப் பயிலகங்களில், முந்தைய வகுப்புகளில் பயிற்சி முடித்த மாணவர்களின் பட்டியலை வாங்கி அவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்கள் அளிக்கும் பயிற்சியின் தன்மை பற்றி அறியுங்கள். தற்போது பயிற்சி முடிக்கும் நிலையில் உள்ளவர்களுடன் கலந்துரையாடப் பாருங்கள். பலருடன் நீங்கள் தொடர்பு கொண்டு பேசினால் உண்மை நிலவரம் தெரியும். இது தவறு இல்லை; காரணம் நாம் கொடுக்கும் பணத்திற்குத் தகுந்த பொருள் அல்லது  சேவை கிடைக்கின்றதா என்பதை ஆராய்ந்தறியும் உரிமை நமக்கு உள்ளது.

நாம் முன்பே சொன்னது போல ஸ்காலர்ஷிப் என்பது முற்றிலும் தவறான ஒரு வாத மே. மொத்த பயிற்சிக் கட்டணம் 20 ஆயிரம் ரூபாய்; அதில் 75% ஸ்காலர்ஷிப் போக மீதம் 5 ஆயிரம் கட்டினால் போதும் என்று ஒரு நிறுவனம் சொல்லுகின்ற  தென்றால், அவர்கள் கொடுக்கும் சேவையின் மதிப்பு அவ்வளவு தான். இதனைநன்கு மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுக்கும் கட்டணத்தைவிட அதிகமான சேவையை உங்களுக்கு அளிக்க அவர்கள் ஒன்றும் அறக்கட்டளை நடத்த வில்லை. இன்னும் சொல்லப் போனால், அறக்கட்டளைகள் மூலம் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் தான் அதிகமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

எனவே முதலில் உங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். சரியான பயிற்சி தேவை என்றால் அதற்கு சரியான கட்டணம் மட்டும் செலுத்த முயற்சியுங்கள். நீங்கள் ஒரு இலவசத்தை அல்லது சலுகையை எதிர்பார்ப்பதால் தான் பயிற்சி நிலையங்களும் கட்டணத்தை உயர்த்தி ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் சலுகை தருகின்றனர், தரமற்ற சேவையுடன்  சேர்த்து.

தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்தும் சரியான பயிற்சி நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை அறிந்து சேருங்கள். பேராசைப்பட்டு பெருநட்டம் அடையாதீர்கள்.

இந்தப் பரந்த உலகத்தில் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற திடமான நம்பிக்கையுடன், நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்.

Pin It