தலைமைச் செயலகம், தமிழக சட்டப் பேரவைக் கட்டடம் ஆகியவற்றில் தமிழகப் பண்பாட்டிற்கேற்ற வடிவமைப்புகள் இருக்கும் என்று முதல்வர் கருணாநிதி சொல்கிறார். அப்படி என்ன இருக்கும்?

கட்டி முடித்தபின்தான் தெரியும். அந்தக் கட்டட வடிவமைப்பைச் செய்தவர் வெளிநாட்டுக்காரர், வேலை செய்பவர்கள் ஒப்பந்தக்காரர் தொடங்கி சுமை தூக்குவோர் உட்பட அனைவரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

சோனியா காந்தியும் செயலலிதாவும் சிரித்துப் பேசி நலம் விசாரித்துக் கொண்டதில் ஏதாவது உள்நோக்கம் இருக்குமா?

காரியமில்லாமல் சிரிப்பை விரையமாக்க மாட்டார்கள் செயலலிதாவும் சோனியாவும்.

மும்பையில் தானி ஓட்டுநர் உரிமம் பெற அந்நகரத்தில் குறைந்தது பதினைந்து ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும் என்று மராத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பது சரியா?

மிக மிகச் சரி. அது போன்ற விதிமுறைகளைத் தமிழக அரசும் கொண்டு வரவேண்டும்.

மும்பையில் தானி ஓட்டுநர் உரிமம் பெற மராத்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியை எதிர்ப்புக் கிளம்பியதும் இந்தி, மராத்தி, குசராத்தி மொழிகளில் ஒன்று தெரிந்திருந்தால் போதும் என்று மராட்டிய முதல்வர் அசோக் சவான் மாற்றிக் கொண்டது சரியா?

சரியில்லை. ஆனாலும் அந்தத் திசையில் அடியெடுத்து வைத்துள்ளார்கள்.

மும்பையில் தானி ஓட்டுநர் உரிமத்திற்குப் புதிய நிபந்தனைகள் போட்டதை முலாயம் சிங், லல்லு, நிதிஷ்குமார் போன்றோர் கடுமையாக எதிர்க்கிறார்களே?

ஏமாந்தவன் விழித்துக் கொண்டால் ஏமாற்றியவனுக்கு எரிச்சல்தானே வரும்.

தமிழக அரசு அனுமதிக்க உள்ள பி.டி. கத்தரிக்காய் மான்சான்டோ நிறுவனத்தின் உற்பத்தி அன்று. தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கேற்ப தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் உருவாக்கியது. எனவே எதிர்க்க வேண்டாம் என்கிறார் வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். அது பற்றி?

வெளியார் தயாரித்த நஞ்சல்ல நாங்கள் தயாரித்த நஞ்சு என்கிறார் வீரபாண்டியார். யார்தயாரித்தாலும் நஞ்சு நஞ்சுதானே!

ஆனால் வீரபாண்டி ஆறுமுகம் தந்திரமாக உண்மையை மறைத்துப் பேசுகிறார். மரபீனி மாற்று கத்தரிக்காய் (ம.மா கத்தரிக்காய்)உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பத்தை மான்சான்டோவிடமிருந்துதான் தமிழக வேளாண் பல்கலைக் கழகம் வாங்கியுள்ளது.

எனவே தமிழ் நாடு அரசின் ம. மா கத்தரிக்காய் பூச்சித் தாக்குதலைத் தாங்காமல் பி.டி. பருத்தியைப் போல் விளைச்சல் பாதிப்பு ஏற்படும். பயிரிடுவோரைக் கடனாளி ஆக்கும்.

ம.மா. கத்தரிக்காய் எதுவாக இருந்தாலும் அதைச் சாப்பிட்டால் நோய்கள் உண்டாகும். மலட்டுத் தன்மை ஏற்படும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

எனவே வீர பாண்டியாரின் ம.மா. கத்தரிக்காய் சந்தைக்கு வந்தால் அவற்றை விற்பனையாகாமல் தடுக்கும் பொறுப்பு மனித இனத்தை நேசிக்கும் அனைவர்க்கும் இருக்கிறது.

குசராத் உயர்நீதி மன்றம் இந்தி தேசிய மொழி இல்லை என்று கூறியிருப்பது பற்றி?

நூற்றுக்கு நூறு சரியான வரையறுப்பு. இந்திய அரசமைப்புச் சட்ட விதி 343 சமற்கிருத வரிவடிவிலான இந்தி இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக (Official Language) இருக்கும் என்று கூறுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின் தலைப்பு மொழிகள் (Languages) என்பது மட்டுமே. அந்த அட்டவணையில் இந்தி இருக்கிறது. தமிழ் இருக்கிறது. மற்ற மொழிகள் இருக்கின்றன. ஆனால் எந்த இடத்திலும் இந்தியைத் தேசிய மொழி என்று அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.

இந்தி தேசிய மொழி என்பதெல்லாம் இந்திய ஆட்சியாளர்கள் அனைத்திந்தியக் கட்சிகள் ஆகியோரின் புறம்போக்கு வர்ணனை தான்.

அதே போல் இந்தியாவைத் தேசம் என்றும் அரசமைப்புச் சட்டம் கூறவில்லை. அரசமைப்பு விதி 1இந்தியா அதாவது பாரதம் அரசுகளின் (States) ஒன்றியம் என்றே குறிப்பிடுகிறது.

இந்தியன் என்று ஒரு தேசிய இனம் இருப்பதாகவும் அரசமைப்புச் சட்டம் கூறவில்லை. இந்தியக் குடியுரிமை பற்றி மட்டுமே அது பேசுகிறது.

இவ்வாறு எத்தனையோ இந்திய தேசியப் பொய்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு வெளியே பேசப்படுகின்றன. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே மடியப் போவதுதான் இந்தியத் தேசியம்.

மு.க. அழகிரிக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் மீண்டும் மோதல் என்கிறார்களே?

உயிரினங்களின் தோற்றம் பற்றி ஆராய்ச்சி செய்து நூல் எழுதிய டார்வின், உயிரினங்கள் படிமலர்ச்சி (பரிணாம வளர்ச்சி) அடிப்படையில் பல்கிப் பெருகி வளருவதைப் பற்றிக் கூறினார்.உயிரினங்கள் பெருகிக் கொண்டே வந்தால் இந்த நிலக்கோளம். ஒரு கட்டத்தில் உயிரினங்களைத் தாங்க முடியாததாக ஆகிவிடாதா அவை நிற்பதற்குக் கூட இடமில்லாத நெருக்கடி தோன்றாதா என்று அவரிடம் சிலர் கேட்டார்கள். அதற்கு டார்வின் சொன்னார், “அவ்வாறான நெருக்கடி தோன்றாத வகையில் இயற்கையானது உயிரினங்களை ஓரளவுக்கு அவ்வப் போது அழித்து நிலக் கோளத்தைத் தகவமைத்துக் கொள்ளும். இந்தக் கோட்பாட்டிற்கு இயற்கைத் தேர்வு (Natural selection ) என்று பெயரிட்டார். அதைப் போல் தமிழகம் தாங்க முடியாமல் அழிந்து போவதைத் தடுக்கும் ஒரு இயற்கைத் தேர்வுதான் அழகிரி - ஸ்டாலின் மோதல்.

இயற்கைத் தேர்வு மோதல் இந்த இருவரோடு மட்டும் நிற்காது. கனிமொழிக்குத் தமிழ்நாட்டின் நடுமண்டலம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவரது தலைநகரம் திருச்சி என்றும் கூறுகிறார்கள். அண்மைக் காலமாக திருச்சி மாவட்டத்தில் நிறைய நிகழ்ச்சிகளில் கனிமொழி கலந்துகொள்கிறார். தி.மு.கவினர் ஆடம்பரமான வரவேற்புகளுக்கு ஏற்பாடுகள் செய்கிறார்கள். எனவே வருங்காலத்தில் இயற்கைத் தேர்வு மோதலில் கனிமொழியும் இடம் பெறுவார். ஏற்கெனவே அம்மோதலில் முரசொலிமாறன் குடும்பம் இருக்கிறது.

- நிகரன்

 

Pin It