மாவீரன் முத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்க நாளை ஒட்டி, இப்புதிய வெளியீடு வெளிவருகிறது. விலை: ரூ.10/- நூல் கிடைக்குமிடம்: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 44-1, பசனைக் கோயில் தெரு, முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை – 17. பேச: 044-24348911.

அந்நூலிலிருந்து ....

“உன் பெயர் என்ன?”

“முத்துக்குமார்”

“உன் கட்சி என்ன?”

“நான் தமிழன்”

“உன் சாதி என்ன?”

“நான் தமிழன்”

கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் 75 விழுக்காடு தீக்காயத்துடன் கிடந்த முத்துக்குமாரிடம் 29.1.2009 அன்று காவல்துறையினர் கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு முத்துக்குமார் அளித்த விடைகளும் மேலே உள்ளவை.

இலங்கைச் சிங்களவெறி அரசுக்கு படைக்கருவிகள், படையாட்கள், நிதி, பன்னாட்டு அரசியல் ஆதரவு திரட்டல் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து தமிழ் ஈழ மக்களைக் கூட்டங் கூட்டமாகக் கொலை செய்வதில் பங்கெடுத்த இந்தியாவைக் கண்டித்து முத்துக்குமார் தீக்குளித்தார். அவர் முன்வைத்த 14 கூறுகளில் மேற்கண்ட கண்டனமே முதன்மையானது.

முத்துக்குமாரைத் தொடர்ந்து 17 பேர் ஈழத்தமிழர்களைக் காக்கத் தீக்குளித்து உயிரீகம் செய்தனர்.

1. திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி இரவி (2.2.2009)

2. சீர்காழி இரவிச்சந்திரன் (7.2.2009)

3. சென்னை அமரேசன் (8.2.2009)

4. கடலூர் தமிழ்வேந்தன் (18.2.2009)

5. சென்னை சிவப்பிரகாசம் (21.2.2009)

6. சிவகாசி கோகுலகிருட்டிணன் (25.2.2009)

7. வாணியம்பாடி சீனிவாசன் (1.3.2009)

8. பெரம்பலூர் எழில் வளவன் (5.3.2009)

9. க டலூர் ஆனந்த் (15.3.2009)

10. அரியலூர் இராசசேகர் (17.3.2009)

11. புதுக்கோட்டை பாலசுந்தரம் (22.3.2009)

12. சிவகாசி மாரிமுத்து (22.03.2009)

13. கரூர் சுப்பிரமணி (23.04.2009)

14. திருப்பூர் சுப்பிரமணி

ஆகியோர் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்தனர்.

மலேசியாவில், 1. ஸ்டீபன் செகதீசன் (1.2.2009), 2. ராசா (7.2.2009), சுவிட்சர்லாந்தில் 3. முருகதாசன் (12.2.2009) ஆகியோர் தீக்குளித்து இறந்தனர்.

காலத்திற்குக் காலம் தமிழர்களை காவு கொள்ள இந்திய ஏகாதிபத்தியம் வாய்பிளந்து கிடக்கிறது. அவ்வாறு காவு கொள்ளப்பட்டவர்களில் ஒருவர் தாம் முத்துக்குமார்.

தமிழுக்காக தமிழ் இனத்திற்காகத் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டவர்கள் அனைவரையும் தமிழ் இனம் வாழும் வரை மறந்திருக்கக்கூடாது. அவர்களுள் முத்துக்குமார் ஈகம் முத்திரை பதிப்பதாக அமைந்தது.

சாவைத் தம் முன்னால் உட்கார வைத்துக் கொண்டு இறுதி அறிக்கை ஒன்றை முதல்நாள் அணியம் செய்து, அதை நகலெடுத்துத் திருமண அழைப்பிதழ் வழங்குவது போல் 29.1.2009 காலை 10 மணியக்கு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் கூடியிருந்தவர்களிடம் வழங்கிவிட்டு, பிளாஸ்டிக் குடுவையில் கொண்டு வந்திருந்த பெட்;ரோலை ஊற்றித் தலை முதல் கால் வரை குளித்து விட்டு தன் உடலை எரியூட்டிக் கொண்ட முத்துக்குமாரின் அறிவின் ஆழம், உணர்வின் அழுத்தம் ஆகியவை அவரது ஈகத்தை சிகரத்தின் உச்சிக்குக் கொண்டு போய்விட்டன. கல் நெஞ்சையும் கரைய வைத்த ஈகம் அது.

ஈழம் குறித்து அக்கறையற்றிருந்தோரையும் அக்கறை கொள்ளச் செய்தது. அவர்களுக்கும் இன உணர்வு+ட்டியது.

தமிழினத்தின் இருள் நீக்கத் தன்னையே சுடராக்கித் தீக்குளித்த முத்துக்குமார், திலீபனும் மில்லரும் சேர்ந்து உருவானவனாகக் காட்சியளித்தான்!

ஈகியரை, நாம் போற்றுவது மூன்று வகையில் அமைய வேண்டும். ஒன்று அந்த ஈகியரைப் போன்ற இலட்சிய உறுதியும் அர்ப்பணிப்புணர்வும் நமக்கும் வேண்டும் என்று உணர்வு பெறுவது. இரண்டு, அவர்கள் இலட்சியத்திற்காகத் தம்முயிரை ஈந்தார்களோ அந்த இலட்சியத்தை அடையச் சரியானதிசையில் போராடுவது. மூன்று, அவர்களின் ஈகத்தின் பெருமையை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வது.

தங்கள் தங்கள் அடையாளத்தை அறிமுகப்படுத்திக் கொள்ள முத்துக்குமார் முக அடையாளத்தைப் பயன்படுத்துவோரும் இருப்பார்கள். முத்துக்குமார் புகழ்பாடும் ஓசைக்குள் முத்துக்குமாரின் உயிரான கொள்கைகளை மூழ்கடித்துக் கொன்றுவிடக் கூடாது.

முத்துக்குமாரின் உயிர்க் கொள்கைகள் யாவை? அவரின் தீக்குளிப்பு அறிக்கையிலிருந்து நாம் பின்வருவனவற்றை அவரின் வரையறுப்புகளாகவும் உயிர்க் கொள்கைகளாகவும் கருதலாம்.

வரையறுப்புகள்

1. ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமெனில், இந்தியா, சிங்கள அரசுக்குப் போர் உதவி புரிவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் பேரெழுச்சி கொண்டு போராடி, இந்திய அரசு எந்திரம் தமிழ்நாட்டில் செயல்பட முடியாதவாறு செய்ய வேண்டும் என்று முத்துக்குமார் கருதினார்.

“தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் இளைஞர்களே” என்று தலைப்பிட்டு எழுதிய பத்திகளில் அவர் பின் வருமாறு கூறுகிறார்.

“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களைத் தங்கத்தட்டில் வைத்துத் தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில் மத்திய அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்;ர் மக்களுக்கு அடையாளம் காட்டுவது தான். இதை மட்டுமாவது செய்யுங்கள.; மற்றதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.”

தமிழகம் கொந்தளித்தது, நடுவண் அரசின் செயல்பாட்டை முடக்கினால் தான் போர் நிறுத்தம் வரும் என்ற முத்துக்குமார் வரையறுப்பு மிகச்சரியானது. ஆனால் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் ஆதரவுக் கட்சிகளும் பல அமைப்புகளும் இந்திய அரசிடம் போர் நிறுத்தக் கோரிக்கை வைத்துப் பேரணி, கருப்புக்கொடி ஊர்வலம், கடையடைப்பு, மனிதச் சங்கிலி நடத்தின.

இந்திய அரசின் அலுவலகங்களை நோக்கி இவ்வமைப்புகள் செல்லவே இல்லை.

அந்நேரத்தில் ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ என்ற பெயரில் கூட்டாகச் செயல்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் தி.க., தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகியவை தஞ்சை விமானப்படைத் தளத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தின. 300 பேர் கைதாயினர். அடுத்து இந்திய அரசின் வருமானவரி அலுவலகங்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தின. த.தே.பொ.க.வும் த.தே.வி.இ.யும் இந்திய - சிங்கள அரசுகளின் கொடி எரிப்புப் போராட்டம் நடத்தின. இந்திய அரசின் படை வாகனங்களைப் பெரியார் தி.க., ம.தி.மு.க., பி.யூ.சி.எல்., மற்றும் இனஉணர்வாளர்கள் தன்னெழுச்சியாக மறித்தார்கள். இவையன்றி, சாஸ்திரிபவனை இளைஞர்கள் சிலர் இழுத்துப் பூட்டி விட்டனர். இன்னும் இதுபோல் பல நடவடிக்கைகள் தன்னெழுச்சியாக சிறுசிறு அமைப்புகளால் நடத்தப்பட்டன.

மேற்கண்ட அமைப்புகள் தங்கள் வலிமைக்கேற்ப இப்போராட்டங்களை நடத்தின. பெரும் செல்வாக்குப் படைத்த தலைவர்களின் கீழ் செயல்படும் கட்சிகள் நடுவணரசை முடக்கும் போராட்டங்களை நடத்தவில்லை.

இந்தியாவைத் தோலுரித்துக் காட்டுகிறார் முத்துக்குமார்: “அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாகப் பசப்புகிறது இந்தியா. ஆயுதத்தளவாடங்களும் உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர,இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த இலட்சணத்தில் தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்ஞ் வேலிக்கு ஓணான் சாட்சி!”

இருபத்தாறு அகவை இளைஞர் முத்துக்குமார் இந்தியாவைப் பற்றி எவ்வளவு துல்லியமாகப் புரிந்து வைத்துள்ளார்! தமது தீக்குறிப்பு அறிக்கையின் முகப்பிலேயே இந்தியாவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திவிட்டார் அவர்.

“வந்தாரை வாழவைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும் சேட்டன் என்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ”ஆம்” என்றோ “இல்லை” என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் நியாயமனதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே, ஏன் திருட்டுத்தனமாகச் செய்ய வேண்டும்?”

தமிழ்நாட்டு இளைஞர்களும் மாணவர்களும் முத்துக்குமார் இந்தியாவைப்பற்றி செய்துள்ள மேற்கண்ட வரையறுப்பை நெஞ்சில் ஏந்த வேண்டும்.

இந்தியா ஓர் ஏகாதிபத்தியம் என்பது முத்துக்குமார் வரையறுப்பு. அது நூற்றுக்கு நூறு சரி.

இந்தியாவானது தமிழ்த்தேசிய இனம் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் இறையாண்மையைப் பறித்து வைத்துள்ள ஏகாதிபத்தியம். இத் தேசிய இனங்களின் இயற்கை வளங்களையும் வரி வருமானங்களையும் சுரண்டுகின்ற ஏகாதிபத்தியம். தனக்கு வெளியே உள்ள சிறு சிறு தேசங்களையும் தேசிய இனங்களையும் தனக்குக் கீழ்ப்படுத்தி வைத்துக் கொள்ள முனையும் ஏகாதிபத்தியம்.

இலங்கையைத் தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் திணித்துக் கொள்வதற்காக சிங்கள இனவெறி பு+தத்திற்குத் தமிழ் இனத்தை நரபலியிட்டது இந்திய ஏகாதிபத்தியம். தமிழக மீனவர்கள் 450 பேரையும் அப்பு+தத்திற்கு நரபலி கொடுத்தது.

தமிழ்நாட்டில் இருந்தாலும் ஈழத்தில் இருந்தாலும் தமிழர்களை இந்தியா பகையினமாகவே கருதுகிறது. காவிரி உரிமை பறிக்கும் கன்னடர்களுக்கும் முல்லைப் பெரியாறு உரிமை பறிக்கும் மலையாளிகளுக்கும் மறைமுகத் துணைவன் இந்தியாதானே!

தமிழ் இன உணர்வின் அரிச்சுவடி, இந்திய ஏகாதிபத்தியத்தை அடையாளம் கண்டு அதை வெறுக்கும் உணர்வாகும்.

ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானைப் பலவீனப்படுத்துவதற்காக, அதை உடைத்து வங்காள தேசத்தை உருவாக்க வேண்டிய அரசியல், இராணுவத் தேவை இந்தியாவுக்கு இருந்தது. எனவே இந்திராகாந்தி கிழக்குப் பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி போரிடச் செய்து வங்காள தேசத்தை உருவாக்கித் தந்தார். அப்படி இலங்கையை உடைத்து ஈழ தேசத்தை உருவாக்கும் தேவை இந்தியாவுக்கு ஏற்படவில்லை.

மாறாக, ஈழம் அமைந்துவிடாமல் தடுக்கும் தேவையே இந்திய ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்டது.

சிங்களர் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள். சிங்கள மொழி சமஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழி. இதற்கு நேர்மாறாகத் தமிழர்கள் ஆரிய இனத்தைக் காலம் காலமாக எதிர்த்து வந்த பகை இனத்தார். தமிழ் மொழி சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துப் புறங்கண்டு வெற்றி பெற்ற மொழி.

எனவே      சிங்களர் சில வேளை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் சீனாவுடன் உறவு கொண்டாலும் “மனம் பேதலித்த மைந்தராகவே” சிங்களரைக் கருதி இந்தியா அவர்களை அரவணைக்கும். அவர்கள் மனம் திருந்தி மீண்டும் இந்திய உறவுக்குள் வருவர் என்று எதிர்பார்க்கும்.

தனி ஈழம் அமைந்தால் அது இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் காவல் அரணாக விளங்கும் என்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் திரும்பத் திரும்பச் சொன்னாலும் இந்தியா அதை ஏற்கவில்லை. பிரபாகரனைப் பகைவனாகவே கருதியது. காரணம் பிரபாகரன் பிறந்த இனத்தின் மீது அவ்வளவு பகை கொண்டுள்ளது இந்தியா.

நம்பவேண்டியது சிங்களனையா அல்லது தமிழனையா என்ற வினா எழுந்தால் எப்போதும் இந்தியா சிங்களனையே நம்பும். எதிர்க்க வேண்டிய உடனடிப் பகைவர்கள் சீனர்களா அல்லது தமிழர்களா என்ற வினா எழுந்தால் இந்தியா தமிழர்களையே முதலில் எதிர்க்கும்.

தமிழர்க்கும் ஆரியர்க்குமான இந்தப் பகை உணர்வு நான்காயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது. சிந்து வெளியிலிருந்து கிளிநொச்சி வரை அப்பகையும் போரும் தொடர்கின்றன.

ஆகவே, இராசீவ் காந்தியின் அரை வேக்காட்டு அணுகுமுறையால்தான் எல்லாம் கெட்டுவிட்டது. இந்திராகாந்தி இருந்திருந்தால் தனி ஈழத்தைப் பிரித்துக் கொடுத்திருப்பார் என்று கருதுவது மிகமிகப் பிழையானது. இந்த அணுகு முறை தமிழக இளைஞர்களை ஏமாளிகளாக்கி, அவர்களைப் படுகுழியில் தள்ளிவிடும். காட்டில் யானையைப் பிடிக்கப் படுகுழிகளை வெட்டி அதை மறைக்க அக்குழிகள் மீது யானை உண்ணும் இலைதழைகளைப் போட்டு மூடி வைக்கும் செயல் போல் ஆகிவிடும், நேரு பெருமையையும் இந்திரா பெருமையையும் பேசுவது.

ஈழப் போரில் இந்தியா தமிழ் இனத்தைத் தோற்கடித்துள்ளது. இந்தியாவைத் தமிழினம் தோற்கடிக்கும் வரை அந்தக் காயம் ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் ஒவ்வொரு தமிழச்சி நெஞ்சிலும் ஆறக் கூடாது; ஆறாது.

இளம் வயதிலேயே இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான் முத்துக்குமார் ஈழப் போர் என்பது தமிழ் இனத்தின் மீது இந்திய ஏகாதிபத்தியம் நடத்தும் மறைமுகப் போர் என்றார். முத்துக்குமார் 29.01.2009 அன்று தீக்குளித்து மாண்டார். அப்போது அவர் தீக்குளித்ததன் நோக்கம், தம்முடைய ஈகத்தைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டில் மக்கள் எழுச்சி உருவாகும், இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நெருக்கடிகள் ஏற்படும். அதன் விளைவாய், சிங்கள அரசு ஈழத்தில் பேர் நிறுத்தம் செய்ய இந்தியா தலையிடும். ஈழத்தமிழ் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பது தான்.

முத்துக்குமார் தீக்குளிப்பு, அடுத்தடுத்து பதினாறு பேர் தீக்குளிக்கும் அளவில் உணர்ச்சி நெருப்பைப் பற்றவைத்தது. தமிழ்நாட்டு மக்களும், அதன் பிறகுக் கூடுதலாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் இந்திய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்படாதவாறு முடக்கும் அளவிற்குப் போராட்டங்கள் வளரவில்லை. இந்தியா மேலும் மேலும் தீவிரமாக, ஈழத்தமிழர் அழிப்புப் போரை முடுக்கிவிட்டது. ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்தது.

முத்துக்குமார் தீக்குளிப்பிற்குப் பின் மூன்றரை மாதங்கள் பலநாட்டு ஆயுத, அரசியல், நிதி உதவியுடன் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி மிகக் கொடூரமாகப் போர் புரிந்தது சிங்கள அரசு, பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்களை அழித்தது.

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் ஏற்றி வந்த 14 கப்பல்களை இந்தியக் கப்பற்படை உதவியுடன் சிங்களக் கப்பற்படை சர்வதேசக்கடலில் தடுத்து அனைத்து ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டது அல்லது கடலில் மூழ்கடித்தது.

ஆயுதங்கள் இன்றி, விடுதலைப்போரை தொடர்ந்தனர் புலிகள். கடைசியில் பலநூறு புலிப்படையினரும் முக்கியத் தளபதிகளும் கொல்லப்பட்டனர். விடுதலைப் போர் குருதி வௌ;ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.

இப்படி ஒரு முடிவு ஏற்படும் என்பதை முத்துக்குமார் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். இப்படியான முடிவு ஏற்படாமல் தடுக்கவே, தன்னை எரித்துக் கொண்டு, போராட்டத்தீயை வளர்த்து விட்டார்.

ஆனால் அப்படி ஒரு முடிவு ஏற்பட்டுவிட்டது. இப்போது தமிழக இளைஞர்கள், மாணவர்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது முக்கியம்.

மாணவர்கள், இளைஞர்களிடமிருந்து புதிய தலைவர்கள் உருவாகி வர வேண்டும் என்று முத்துக்குமார் தம் இறுதி அறிக்கையில் வேண்டுகோள் வைத்தார்.

“இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால் அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குங்கள்” என்று மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருக்கும் வேகமும் மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும் என்றார். ஆள்பலம், பணபலம், அதிகாரவெறியை உடைத்து எறியுங்கள் என்றார்.

சாதி, மத வேறுபாடுகளை எரித்து விடுங்கள் என்று நெருப்பில் நின்று சொல்லிச் சென்றார் முத்துக்குமார். அவரைப் போற்றுவோர் நெஞ்சில் மறந்தும் சாதி வேறுபாடு தலைகாட்டக் கூடாது.

வரலாறு படைக்கப் பிறந்தவர்கள் நாம் என்ற எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு, செயல்பட்டு இளைஞர்கள் மாணவர்களில் இருந்து புதிய போராளிகளும், புதிய தலைவர்களும் உருவாக வேண்டும். அதுவே ஈகி முத்துக்குமார்க்கு செலுத்தும் சிறந்த வீரவணக்கம்.

தமிழீழம் வெல்லட்டும்! தமிழ்த்தேசம் மலரட்டும்!

- பெ.மணியரசன்

Pin It