செங்காற்றுச் சூறாவளி செங்கிப்பட்டி பகுதியில் வீசுகிறது; அது தமிழ்த் தேசியத் சூறாவளி! இளைஞர் களைப் பற்றிக்கொண்ட இலட்சிய பஞ்சைப் பற்றிய நெருப்பு போல் விரைவில் பரவும்!

“எமது தேசம் தமிழ்த் தேசம்” என்று எழுதப்பட்ட செஞ்சட்டை அணிந்த தமிழக இளைஞர் முன்னணித் தொண்டர்கள் இரு பக்கம் அணி வகுத்து வர, பெருந்திரளாக மக்கள் பின் தொடர ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்களும், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு பழ. நெடுமாறன் அவர்களும், த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களும், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களும் மற்றும் முன்ன ணியினரும் தழல் ஈகி முத்துக்குமார் சிலையிலிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு தஞ்சை- திருச்சி நால்வழிச் சாலையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காட்சி கண் கொள்ளாக் காட்சி!

இந்தியாவின் எல்லா வகைத் துணையோடு சிங்கள இனவெறி அரசு ஈழத் தமிழ் மக்களை அழிக்கும் இனப் படுகொலைப் போர் நடத்திய போது, தமிழ் மக்கள் உயிரைக் காக்க போர் நிறுத்தம் கோரி 29.1.2009 இல் தீக்குளித்து தன்னுடலைக் கரிகட்டை யாக்கித் தமிழ் இனத்திற்கு ஒளி வழங்கிய தழல் ஈகி முத்துக்குமாரின் நான்காமாண்டு நினைவு நாள் நிகழ்வுகள் தஞ்சை மாவட்டம், சாணூரப் பட்டியில் தொடங்கிய போதுதான் மேற்சொன்ன அணிவகுப்பு நடந்தது.

தமிழ்நாட்டில் முதல் முதலாகத் திறக்கப்பட்ட முத்துக்குமார் சிலை தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் சாணூரப்பட்டியில் இருக்கிறது. சிலை திறக்கத் தடை போட்டது தமிழக அரசு. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதி சந்துரு அவர்கள் தடையை உடைத்து அனுமதி வழங்கிய சிலை அது!

நான்காமாண்டு நினைவு நாள் ஒரு நாள் முன்ன தாக 28.1.2013 அன்று கடைபிடிக்கப்பட்டது. சாணூரப்பட்டியில் புலவர் இரத்தினவேலவன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய நிலத்தில் முத்துக் குமார் சிலை நிறுவப்பட்டது. சிலைக்கு அருகே உள்ள அவரது இடத்தில் புதிய கட்டடம் எழுப்பியுள்ளார் இரத்தினவேலவன். ஒன்றின் பெயர் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மாளிகை. அதனை ஐயா பழ. நெடுமாறன் திறந்து வைத்தார்கள். அடுத்ததன் பெயர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மாளிகை. அதனை திரு வைகோ அவர்கள் திறந்து வைத்தார்கள்.

மாலை அணிவித்தல், மாளிகை திறத்தல் ஆகிய நிகழ்வுகளை முடித்துக்கொண்டு பொதுக் கூட்ட மேடை நோக்கி வந்த தலைவர்களுக்கு சாணூரப்பட்டி ஊராட்சி மன்றத்தின் ஊராட்சித் தலைவர் கண்ணகி நந்தகுமார் தலைமையில் வரவேற்புக் கொடுத் தார்கள். அடுத்து புலவர் இரத்தின வேலவன் அவர் தம்பி ரெங்கராசு ஆகியோர் இல்லத்தில் வரவேற்புக் கொடுத்தார்கள்.

த.இ.மு. தோழர்களின் அணிவகுப்புக்கு முன்னர் காவிரி தப்பாட்டக் குழுவினர் எழுப்பிய போர்ப்பறை முழக்கம் அதிரச் செய்தது. பறை இசைக் குழுவினர்க்கு முன்னால் குடந்தை வீரவிளையாட்டுக் குழுவினரின் சிலம்பாட்டம், சுருள் வீச்சு போன்ற போர்க் கலைகள் பெருங்கூட்டத்தை ஈர்த்தது.

ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட தலைவர்கள் மேடையேறிப் பார்த்த போது அந்தப் பட்டிக்காட்டில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் வெள்ளம் கண்ணுக் கெட்டிய தொலைவு வரை தெரிந்தது. செஞ்சட்டைச் சீருடை அணிந்த தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.

தஞ்சை- புதுக்கோட்டை - திருச்சி மாவட்டங்கள் சந்திக்கும் பகுதி செங்கிப்பட்டிப் பகுதி. அப்பகுதிக் கிராமங்களிலிருந்து திரளாக மக்கள் வந்திருந்தனர். வேடிக்கை பார்க்க வந்தவர்கள் அல்லர். விவரங்களை அறிந்துகொள்ள, விவாதங் களில் ஈடுபட வந்தவர்கள் அவர்கள்! விலை பெற்று வந்த வாடகை மனிதர்கள் அல்லர். நிலைமை மாறவேண்டும் என்ற நினைப்புடன் வந்தோர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு பொதுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். புலவர் இரத்தின வேலவன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ம.தி.மு.க.வின் பூதலூர் ஒன்றியச் செயலாளர் திரு இரா. நந்தகுமார், தலைமைக் கழகப் பேச்சாளர் திரு வி. விடுதலைவேந்தன், மாவட்டச் செயலாளர் திரு. உதயகுமார், தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு அய்யனாபுரம் சி.முருகேசன், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, ம.தி.மு.க. துணைபொதுச் செயலாளர் திரு துரை.பாலகிருஷ்ணன், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட் ராமன், த.தே. பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு பழ. நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு வைகோ ஆகியோர் எழுச்சிமிகு உரையாற்றினர்.

இந்திய வரைப்படத்தில் தமிழகம் நீடிக்குமா? வைகோ ஆவேசம்

 “முத்துக்குமார் தீக்குளித்தது ஒரு முக்கியமான நேரம். இந்திய அரசின் முப்படைகளின் உதவியோடு தமிழ் ஈழமக்கள் மீது சிங்கள இனவெறி அரசு போர் தொடுத்தது. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், மருந்துகள் உணவுப் பொருட்கள் கொண்டு வந்த 14 கப்பல்களை சர்வதேசக் கடல் பரப்பில் இந்தியக் கப்பல் படையின் உதவியோடு சிங்களக் கப்பல் படை மூழ்கடித்தது. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டது. முல்லைத் தீவு எதிரியின் கையில் விழுந்து விட்டது. அடுத்துக் கிளிநொச்சி மீது பகைவன் போர் தொடுக்கப் போகிறான் என்ற ஆபத்தான நிலையில்தான் போரை நிறுத்த, தன்னுடைய உடலை நெருப்புக்குத் தந்து தமிழகத்தில் ஒரு பேரெழுச்சியை உருவாக்கத் தீக்குளித் தான் முத்துக்குமார். தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற் பட்டால்தான் டில்லிக்கு அச்சமும் நடுக்கமும் உருவாகும் எனக் கருதி இந்திய வல்லாதிக்க மையமான சாஸ்திரி பவன் முன் தீக்குளித்தான் முத்துக்குமார்.

பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து போர் நிறுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்; இலங் கைக்கு ஆயுத உதவி செய்யாதீர்கள் என்று கேட்டேன். அவர், நாம் ஆயுதந்தரவில்லை எனில் சீனா ஆயுதம் தரும். ஆகவே, நாம் ஆயுதம் தரு வதை நிறுத்த முடி யாது. போர் நிறுத்தமும் கோரமுடியாது என்றார்.

இப்போது இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தமிழகத்தைத் தவிர, இந்தியாவின் ஏனைய பகுதிகளில் சிங்கள இராணுவத்திற்குப் பயிற்சி தருவோம் என்கிறார். அப்படி என்றால், தமிழ் நாடு இந்தியாவில் இல்லை என்று முடிவெடுத்து விட்டீர்களா?

இப்போது மணியரசன் மட்டும்தான் தனித் தமிழ்நாடு கேட்டு வருகிறார். அது போல் எல்லோரும் கேளுங்கள் என இந்திய சர்க்காரே வழிவகுத்துக் கொடுக்கிறது. இந்திய தேசியப் பாதுகாப்புச் சட்டங் களைக் கண்டு அஞ்சுகின்றவர்கள் மணியரசன் மேடையில் இருக்க முடியாது. இதே போக்கில் போனால் இந்தியா சுதந்திர தின நூற்றாண்டு விழா கொண்டாடும் போது, இந்திய வரைப்படத்தில் தமிழ் நாடு இருக்காது.

திரு பழ.நெடுமாறன்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஈழ விடு தலைப் போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தாதது வேதனை அளிக்கிறது.

எனக்கும் வைகோவுக்கும் மணியரசனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழர் நலன் சார்ந்த விஷயங்களில் நாங்கள் ஒன்று பட்டு நிற்போம். இதுதான் அரசியல் நாகரிகம்; தமிழர் பண்பாடு. பெரியார், ராஜாஜி, காமராசர், ஜீவா ஆகி யோருக்கிடையே கருத்து மோதல்கள் இருந்தாலும் அவர்கள் மக்கள் பிரச்சனைகளில் இணக்கமாகவே இருந்தனர். அந்த நாகரிகம் இப்போது அழிந்து விட்டது.

தோழர் பெ. மணியரசன்

முத்துக்குமாரின் ஈகத்திற்கு நன்றி செலுத்தவும், அவர் விட்டுச் சென்ற மரண சாசனத்திற்கு உயிர் கொடுக் கவும்தான் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்து கிறோம். இப்பொழுதுள்ள பதவி அரசியலுக்கு மாற்றாக புதிய மாற்று அரசியலை உருவாக்குங்கள் மாணவர்களே, இளைஞர்களே, வழக்கறிஞர்களே என்று கேட்டுக் கொண்டான் முத்துக்குமார்!

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1964 இல் தீக்குளித்து மடிந்த கீழப்பழூர் சின்னசாமி தொடங்கி முத்துக்குமார், செங்கொடி என எவ்வளவு பேர் தில்லி ஏகாதிபத்தியத்தால் தீக்குளித்து இறந்தார்கள். 1965 மொழிப்போரில் முந்நூறுக்கும் மேற்பட்டோர் காங்கிரசு ஆட்சியின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானவர்கள். இந்திய கடலோரக் காவல் படையின் துணையுடன் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றது. அடித்துக் கொன்றது. சுண்டைக்காய் சிங்களநாடு. இதெல்லாம் போதாதென்று ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்களின் உயிரைக் குடித்ததும் இந்தியாதான். இந்தியாவைப் பாரதமாதா என்கிறனர். பாரத மாதாவாக ஓர் அழகான பெண்ணுரு வத்தை ஓவியர்கள் வரைந்துள்ளார்கள் அந்த ஓவியத் தைப் பார்க்கும் போதெல்லாம் தமிழர்களின் குருதி குடித்த இரத்தக் காட்டேரியாகவே எனக்குப் படுகிறாள்.

முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டத்தை ஒரு நாள் முன் தள்ளி சனவரி 28இல் நடத்துகிறோம். அண்ணன் வைகோ அவர்களும் ஐயா நெடுமாறன் அவர்களும் ஏற்கெனவே வேறு நிகழ்ச்சிகள் ஒப்புக் கொண்டிருந் ததால், அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு நாள் முன்னதாக நடத்துகிறோம்.

த.தே.பொ.க. தமிழ்நாடு விடுதலை கோரும் இயக்கம். அந்தந்தக் கட்சிக்கும் தனித் தனி இலக்கு இருக்கும். ஆனால் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில், ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் நாம் இணைந்து போராட வேண்டும். அதற்காக யாரும் யாருடைய இலக்கை யும் விட்டுவிட வேண்டியதில்லை. இந்தப் பார்வையைத் தான் த.தே.பொ.க. கொண் டுள்ளது.

ஏற்கெனவே, ம.தி.மு.க., தமிழர் தேசிய இயக்கம், த.தே.பொ.க. ஆகியவை மற்ற அமைப்பு களுடன் சேர்ந்து, மூன்று தமிழர் உயிர்காக்க, ஈழத்தமிழர் துயர் துடைக்க, கூடங்குளம் அணு உலையை மூடு எனப் பல போராட்டங் களை நடத்தி வருகிறோம். உடனடிக்கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் ஒத்த கருத்துள்ளவற்றில் நாம் கூட்டுப் போராட்டம் நடத்துவது தேவை.

பொதுக்கூட்டம் சரியாக இரவு 9.55 மணிக்கு முடிந்தது. இறுதியாக தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு நன்றி யுரை கூறினார்.

தமிழகமெங்கும் தழல் ஈகி முத்துக்குமார் நிகழ்வுகள்

இந்திய - சிங்கள அரசுகள் கூட்டாக நடத்திய தமிழீழ இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி, 2009 சனவரி 29 அன்று, சென்னையிலுள்ள இந்திய அரசின் வருமான வரித்துறை அலுவலகமான சாஸ்திரிபவன் வளாகத்தில் தீக்குளித்து உயிரீகம் செய்த மாவீரன் முத்துக்குமாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் 29.01.2013 அன்று தமிழக மெங்கும் கடைபிடிக்கப் பட்டது.

அந்நாள், தமிழீழ இன அழிப்புப் போரை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழீழ விடுதலை வேண்டியும் உயிரீகம் செய்த ஈகியர் அனைவரையும் நினைவு கூரும் நாளாகவும் கடைபிடிக்கப்படுகின்றது.

சென்னை

சென்னையில் தழல் ஈகி முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழீழ விடுதலைக் காகத் தீக்குளித்து உயிரீகம் செய்த 22 ஈகியரின் நினைவைப் போற்றும் வகையில், 22 அடி ஈகியர் நினைவுத் தூண் சென்னை கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் அமைக்கப்பட்டது. அங்கு 29.1.2013 காலை 9.30 மணயளவில், ஈகி முத்துக்குமாரின் தங்கை திருமதி தமிழரசி குடும்பத்தார் உள்ளிட்டு ஏராளமான ஈகியர் குடும்பத்தினர் திரண்டிருந் தனர்.

காஞ்சி மக்கள் மன்றம் சார்பில், தோழர்கள் மகேசு, ஜெசி ஆகியோர் தலைமையில் கொண்டு வரப்பட்ட ஈகியர் நினைவுச்சுடர் அங்கு ஏற்றப்பட்டது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு தி.வேல்முருகன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு வன்னியரசு, தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு அதியமான், தமிழர்நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலை வர்களும் தமிழின உணர்வாளர்களும் அங்கு வீர வணக்கம் செலுத்தினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, சென்னை நகர த.இ.மு. செயலாளர் தோழர் வினோத் உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர். இயக் குநர் புகழேந்தி தங்கராசு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.

தஞ்சை நகரம்

தஞ்சையில் தழல் ஈகி முத்துகுமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அண்ணா நகரில் 29.01.2013 காலை 9.00 மணியளவில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு மு.செல்வம் (திராவிடர் கழகம்) தலைமையேற்றார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், நகரச் செயலாளர் தோழர் இராசு. முனியாண்டி, விடுதலை வேந்தன் (ம.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர்), பாசுகர் (ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர்) ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர். செல்வம் (ம.தி.மு.க) நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து ஒருங்கிணைத்தி ருந்தார்.

மதுரை

புரட்சிக் கவிஞர் பேரவை சார்பில் 29.1.2013 அன்று மதுரை பெரியார் நிலையம் அருகிலுள்ள விக்டோரியா எட்வர்ட் மன்றத்தில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு நாள் மற்றும் தமிழீழ விடுதலை ஈகி முத்துக்குமார் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.

தோழர் அய். வெற்றிச் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் “மொழிப்போர் முதல் முள்ளி வாய்க்கால் வரை" என்ற தலைப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வின் தொடக்கத்தில் திரு அன்வர் சிங்கம் இயக்கிய “இழந்த நிலம்” குறும்படம் திரையிடப்பட்டது. புலவர் மறவர்கோ வரவேற்புரையாற்றினார். தோழர் கு.குணசேகரன் நன்றி கூறினார். பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற் றனர்.

சிதம்பரம்

சனவரி 29 தழல் ஈகி முத்துக்குமார் நான்காம் ஆண்டு நினைவு நாள் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் சிதம்பரத்தில் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.

சிதம்பரம் தெற்கு வீதி - சபாநாயகர் தெரு சந்திப்பில் 29-01-2013 செவ்வாய் மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தோழர் ஆசிரியர் மு.முருகவேல் தலைமை யேற்றார்.

“ ஈழத்தமிழர் இன்னுயிர் காக்க தன்னுயிர் தந்த ஈகிகளுக்கு வீரவணக்கம்..! வீரவணக்கம்!” - “முத்துக்குமார் மூட்டிய நெருப்பு, முள்ளிவாய்க்காலில் மூண்ட நெருப்பு, செங்கொடி மூட்டிய நெருப்பு, விஜயராஜை பற்றிய நெருப்பு அணையாது.. அணையாது..’’“தமிழ் இன பகைவர்களுக்கு கொள்ளி வைக்காமல் அணையாது” என்னும் நெருப்பு முழக்கங்களுக்கிடையே தழல் ஈகி கு.முத்துக்குமார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இனம் காக்க உயிர் நீத்த போராளிகளிக்கு மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டு ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோ தேவராசன், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செய லாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி தோழர் அமைப்பாளர் வே.சுப்பிரமணிய சிவா, தோழர்கள் மு.சம்பந்தம், சோ.கார்த்திகேயன், இரா. கலைக்கோவன், ஞா. விக்னேசுவரன், இரா. ராசேசுகுமார், ராமு, இரா.வேம்பரசி, ஆ.யவனராணி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Pin It